மே தின விழா
பகுதி 1 · 1 / 3
மே தின விழா
பாட்டாளிப் பெருமக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை, இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை வழங்குகின்ற வாய்ப்பினைப் பெற்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.
இங்கே உரையாற்றிய நம்முடைய கழகத்தின் காவலர்கள், மற்றும் அமைச்சர் பெருமக்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மே தின விழாவின் சிறப்புகளையெல்லாம் எடுத்துக்கூறி, தி.மு.கழக தொடர்புடைய தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை இந்த விழாவை நடத்துவதற்கு எந்த அளவுக்குக் கடமையும், உரிமையும் பெற்றது என்பதை எடுத்து விளக்கியிருக்கின்றார்கள்.
இந்த மே முதல் நாளை தொழிலாளர் வர்க்கத்தினுடைய நாளாக மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் ஐரோப்பாவினுடைய வட பாகத்திலே உள்ள பல நாடுகள் - பழைய காலத்தில் பண்டிகை நாளாகக் கொண்டாடப்பட்டதும் உண்டு. ரோமாபுரியில் மே முதல் நாளில் தொழிலாளர்களுக்கான நாள் இது என்று சுட்டிக்காட்டப்படாத அந்தக் காலக் கட்டத்தில், பூக்களின் தேவதையாக வணங்குவதற்காக மே முதல் நாளைக் கொண்டாடி இருக்கின்றார்கள்.
இங்கிலாந்தில் மே முதல் நாளில் சிறுவர்களும், சிறுமியரும் அதிகாலை நேரத்தில் பூக்களைக் கையிலே ஏந்திக்கொண்டு ஓரிடத்தில் கூடி, ஒரு கம்பம் நட்டு அதற்கு (May Pole) “மே கம்பம்” என்று பெயரிட்டு மலர்க் கொத்துக்களை வண்ண வண்ண ரிப்பன்களை அந்தக் கம்பத்திலே கட்டி, அந்தக் கம்பத்தைச் சுற்றி சுற்றி நடனமாடுவார்கள்.
அமெரிக்காவில் அந்தக்காலத்தில் இந்த நாளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில், சிறு காகிதக் கூடைகளைச் செய்து அதிலே மலர்களை நிரப்பி, நண்பர்களுடைய வீட்டுக் கதவுகளிலே தொங்கவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்றைக்கும்கூட அந்த மகிழ்ச்சியிலே ஈடுபடுகின்றார்கள்.
எனவே, இந்த நாள் பல்வேறு நாடுகளில் உற்சாகத் திருவிழாவாக ஒரு பண்டிகை போல கொண்டாடப்பட்ட காலமெல்லாம் உண்டு. ஆனால், அந்தக் காலம் மாறி, இது பாட்டாளி வர்க்கத்தின் பெருநாளாகக் கொண்டாடுகின்ற ஒரு நாள் தோன்றியது. அந்த நாள்தான் எனக்கு முன்னால் பேசிய நண்பர்களெல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல் 1881-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7-ஆம் நாள் அமெரிக்காவிலே உள்ள - ரஷ்யாவிலே அல்ல, சீனாவிலே அல்ல - அமெரிக்காவிலே உள்ள தொழிற் சங்கங்களுடைய கூட்டமைப்பு நடைபெற்று: “1886 மே முதல் நாள் முதல் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை சட்டப்பூர்வமாக ஆக்கப்படவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தொடங்குவது என்று முடிவு செய்தது.
முடிவு செய்தது 1884-ஆம் ஆண்டு. போராட்டம் தொடங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு
1886. அதற்குப் பிறகு உலகமெங்கும் இந்தப் போராட்டத்தினுடைய சாயல் விழத் தலைப்பட்டு - குறிப்பாகவும், சிறப்பாகவும் சிகாகோ நகரத்தில் தொழிலாளத் தோழர்கள் இந்தப் போராட்டத்திலே தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி தூக்குக் கயிறுகளை முத்தமிடக்கூடிய துன்பத் துயரங்களை யெல்லாம் ஏற்றுக்கொண்டு, 1889-ஆம் ஆண்டு முதல் அந்த நினைவைப் போற்றுகின்ற வகையிலும், நினைவைப் போற்றுகின்ற நேரத்தில் தொழிலாளர் வர்க்கத்தினுடைய நெஞ்சில் நெருப்பை மூட்டுகின்ற வகையிலும், அந்த நெருப்பை மூட்டுகின்ற காரணத்தால் ஒரு புரட்சியை உருவாக்குகின்ற வகையிலும், அந்தப் புரட்சி தொழிலாளர்களுடைய வெற்றிப் புரட்சியாக மாற வேண்டும் என்பதற்கு அடையாளமாகவும், 1889-ஆம் ஆண்டு மே முதல் நாள் உலகமெங்கும் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டு - அதுவும் அமெரிக்கத் தொழிலாளர்களுடைய கூட்டமைப்பு இதனை அறிவித்து அந்த ஆண்டு முதல் உலகமெங்கும் இந்த நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது.
இங்கே பேசியவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல், இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த மே தினவிழா நம்முடைய தமிழகத்திலேதான் கொண்டாடப்பட்டது. தம்பி இரகுமான் தான் இங்கே குறிப்பிட்டதைப் போல் 1923-ஆம் ஆண்டு மே முதல் நாள் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மே தின விழா பகுத்தறிவுப் பகலவனாக, சிந்தனைச் சிற்பியாக நடமாடிக் கொண்டிருந்த மா. சிங்காரவேலர் அவர்களுடைய தலைமையிலேதான் அந்த விழா அன்றைக்கு நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திலேதான் சிங்காரவேலர் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். “மே தினத்தன்று ஊதியத்தோடு கூடிய விடுமுறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட
வேண்டும்” என்ற கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கோரிக்கை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அடியேன் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் நிறைவேறியது. திராவிட இயக்கத்திற்கும், மே தினத்திற்கும் மே தினம் என்று அடையாளத்திற்காகச் சொல்கிறேன், தொழிலாளர் வர்க்கத்திற்கும் எவ்வளவு தொடர்பு உண்டு என்பதை எனக்கு முன்னால் உரையாற்றியவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்திலேதான் மே தின விழா கொண்டாடப்பட்டது என்பது மாத்திரமல்ல.
இந்தியாவிலே தொழிற்சங்கம் கூட தமிழகத்திலேதான் அதுவும் சென்னை மாநகரத்திலே தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது.
பொதுவுடைமைப் பூங்காவாக திகழ்ந்த ரஷ்ய பூமிக்கு நம்முடைய மாபெரும் தலைவர் தந்தை பெரியார் தான் இந்தியாவிலேயே முதன் முதலாகச் சென்று சுற்றுப்பயணம் செய்து அந்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவைகளைத் தமிழகத்திலே கொண்டு வந்து பறைசாற்றிய அந்தப் பெருமையும் இந்த இயக்கத்திற்கு உண்டு, தமிழகத்திற்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டிலே ஒரு சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல முற்போக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உங்களுக்கு நினைவிருக்கும் - நான் ஏற்கனவே சட்டப் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை வேண்டும் என்ற தீர்மானம் 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தையும்கூட 60 ஆண்டுகளுக்குப் பிறகு 89-ஆம் ஆண்டு சட்டமாக்கிய அந்த வாய்ப்பு
எனக்குத்தான் கிடைத்தது - இந்த ஆட்சிக்குத்தான் கிடைத்தது என்பதை அறிவீர்கள். (கைதட்டல்)
அதே செங்கற்பட்டு மாநாட்டில், தொழிலாளர்களுக்காக ஒரு புரட்சிகரமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தொழிலாளர்கள் அவர்கள் ஆற்றுகின்ற பணிக்கு ஏற்பவும் அவர்களுடைய தேவைக்கு ஏற்பவும், ஊதியம் பெற்றாக வேண்டும். அந்த ஊதியத்தை அவர்களுக்கு வழங்கியாக வேண்டும்” என்ற தீர்மானம் மாத்திரமல்ல, அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த தென்னிந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் அன்றைய சுயமரியாதை இயக்க மாநாட்டில் அந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அந்த வேலை நிறுத்தத்தை அடக்குவதற்காக நடைபெற்ற, அடக்குமுறைகளை யெல்லாம் கண்டித்தும், 1929-ஆம் ஆண்டில் நடைபெற்ற செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்பு 1921-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி. இங்கே பேசப்பட்டது. பக்கிங்ஹாம் ஆலை. அந்த ஆலை ஏறத்தாழ 13 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட ஆலை. அந்தத் தொழிற்சங்கத்தின் தலைவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. - தமிழுக்குத் தென்றல் அவர். தொழிலாளர்களுக்காகப் புயலாக மாறக்கூடியவர். அந்தத் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வினுடைய தலைமையில் 13 ஆயிரம் பாட்டாளி மக்களும் 6 மாத காலம் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலை நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.
வெலிங்டன் பிரபு அன்றைக்கு கவர்னர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் காவலனாக லார்ட் வெலிங்டன் வீற்றிருந்த காலம். அவர் அந்தப் போராட்டத்தை எதிர்த்து ஒரு வழக்குப் போட்டது மாத்திரமல்ல, அந்த
அடிப்படையிலே அந்தப் போராட்டத்தின் தளநாயகன் திரு.வி.க. அவர்களை நாடுகடத்துகின்ற ஆணையைப் பிறப்பித்தார். அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த ஆட்சி நீதிக்கட்சியினுடைய ஆட்சி. சொல்லப் போனால் திராவிட இயக்கத்தினுடைய ஆட்சி. பனகல் அரசர் அன்றைய முதலமைச்சர். அப்பொழுதெல்லாம் பிரிமியர் - பிரதமர் என்று பெயர்.
இங்கே கட்டப்பட்டிருக்கிறதே பெரிய கட்டிடம் “பனகல் மாளிகை” இந்த சைதைத் தொகுதியினுடைய முகப்பில் - அந்தப் பனகல் மாளிகை என்ற பெயருக்குச் சொந்தக்காரர். அந்தப் பனகல் அரசர் அன்றைக்கு ஆட்சியின் தலைவராக இருக்கிறார்.
திரு.வி.க. நாடு கடத்தப்பட வேண்டுமென்று வெலிங்டன் பிரபு உத்தரவிடுகிறார். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் - வழித்தோன்றல்கள், முன்னோடிகள் நடேசனார், தியாகராயர் இவர்கள் இருவரும் ஆட்சியின் தலைவர் பனகல் அரசரைச் சந்தித்து “உடனடியாக நீங்கள் சென்று வெலிங்டன் பிரபு இடத்திலே கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களை நாடு கடத்தினால் அமைச்சரவை பதவி விலகும் என்று சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு அவர்களை வெலிங்டனுடைய மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அவ்வாறு பனகல் அரசர் - நீதிக் கட்சியினுடைய தலைவர் - நீதிக் கட்சியினுடைய முதல்வர், தியாகராயருடைய வேண்டுகோளை, டாக்டர் நடேசனாருடைய வேண்டுகோளை ஏற்று வெலிங்டன் பிரபுவைச் சந்திக்கிறார். “தொழிலாளர் போராட்டத்திற்காக, அதற்குத் தலைமை ஏற்றதாக திரு.வி.க.வை நாடு கடத்தக்கூடாது” என்று சொல்கிறார்.
அதை வெலிங்டன் மறுக்கிறார் “நீங்கள் மறுத்தால் நாங்கள் பதவியிலிருந்து விலகுவோம்.” என்று பனகல் அரசர் சொல்கிறார்.
உடனடியாக அந்த உத்தரவை வாபஸ் பெற்று “நீங்கள் பதவியில் இருங்கள். நான் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வை நாடு கடத்த மாட்டேன்” என்று அன்றைக்கு ஆங்கில ஏகாதிபத்தியம் வளைந்து கொடுத்தது என்றால் அதற்குக் காரணம் அன்றைய நீதிக்கட்சியினுடைய ஆட்சி.
அந்த ஆட்சியை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த தலைவர்கள் தியாகராயர், நடேசனார் போன்றவர்கள். அந்த வழிவந்த இயக்கம்தான் திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்.
