உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மே தின விழா

பகுதி 3 · 3 / 3

எனவே வாக்கெடுப்பு மூலம் அந்தந்த மாநிலத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தை (பலத்த கைதட்டல்) அனைவரும் கையொலி செய்வது மாத்திரமல்ல. கை உயர்த்தி வழி மொழிந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

(கூட்டத்தில் அனைவரும் கையை உயர்த்தி கையொலி எழுப்பி வழிமொழிந்தனர்.)

இந்த அருமையான மே தின விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த தம்பி கிட்டுவுக்கும், பகுதிச் செயலாளர் முருகனுக்கும் என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி மே தினத்தையொட்டி சில அரசியல் கருத்துக்களை எதிர்பார்த்து வந்திருப்பீர்கள். நீங்கள் மாத்திரமல்ல, பத்திரிகையாளர்களும் வந்திருக்கிறார்கள். எனவே சில அரசியல் கருத்துக்கள்.

மே தினத்தைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் வேறு சில கட்சிகளும், எப்பொழுதுமே உரிமை படைத்த கட்சிகள் அது, சி.பி.ஐ. கட்சியானாலும், சி.பி.எம். கட்சியானாலும் மற்றும் கம்யூனிஸ்ட் பேரியக்கங்கள் இதற்கு உரிமை கொண்டாட நியாயபூர்வமான நிலை படைத்தவர்கள்.

இங்கே பேசப்பட்டதே, தம்பி துரைமுருகன் சொன்னாரே, எஸ்.என்.பி. போராட்டம், நங்கவரம் போராட்டம், பேட்டை வாய்த்தலை போராட்டம் என்றெல்லாம் சொன்னாரே இவைகளெல்லாம் கருப்பா? சிவப்பா? என்றுகூட தெரியாத சில பிறவிகள் இன்றைக்கு மே தினம் கொண்டாடுகிறார்கள். கொண்டாடட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், அப்படிக் கொண்டாடுகிற நேரத்திலே வேண்டுமென்றே தி.மு.கழகத்தின் மீதும் தி.மு.கழக ஆட்சியின் மீதும் புழுதி வாரித் தூற்றுகிற காரியத்திலே ஈடுபட்டிருக்கிறார்களே; அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஜெயலலிதா அம்மையார் மே தினத்தையொட்டி இன்றைக்கு நடைபெற்ற ஒரு திருமணவிழாவிலே

பேசும்போது, கருணாநிதி ஏழைகளைக் கவனிப்பதே இல்லை. ஏழைகள் கருணாநிதியை மதிக்கவே மாட்டார்கள். ஏழைகள் “கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை” என்று இந்த ஏழைப்பங்காளர் - ஏழைப்பங்காளரோ அல்லது ஏழு பங்களாக்காரரோ (கைதட்டல்) அவர் சொல்கிறார்.

“கருணாநிதியை ஏழைகள் நம்பத் தயாராக இல்லை” நான்தான் ஏழைகளின் காவலன் என்று ஜெயலலிதா பேசியதைப் பத்திரிகைகளிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கிறார்கள். படித்துப் பார்த்தேன்.

இந்த ஏழைப் பங்காளரைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா?

ஏழைப் பங்காளர் அ.தி.மு.க. ஆட்சி, அ.தி.மு.க. கட்சி இவைகளெல்லாம் ஆட்சியிலே இருந்தபோதும், கட்சி செல்வாக்கோடு இருந்த காலத்திலும் அந்தக் கட்சிக்கு அவைத்தலைவராக இருந்த ஈ.வி.ஏ. வள்ளிமுத்து கோவில்பட்டியைச் சேர்ந்தவர். அருமை நண்பர், எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.தி.மு.க. கட்சியினுடைய அவைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தவர். அவர் திடீரென்று காலமாகிவிடுகிறார். நீண்ட காலம் வாழ்ந்தவர். திராவிட இயக்கத்தினுடைய ஆரம்ப காலத்திலே இருந்து, தந்தை பெரியார் காலத்திலே, அண்ணா காலத்திலே எங்களோடு எல்லாம் உறவாடி இந்த இயக்கத்தை வளர்த்தவர்.

அவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அ.தி.மு.க.வின் அவைத்தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்த அவர் கோவில்பட்டியிலே மரணமடைந்தார். ஏழைகளுக்காகப் பாடுபடக் கூடிய இந்த அம்மையார் சென்றாரா? அந்தக் கட்சியினுடைய சாதாரண நிலையிலே இருந்தவரா அவர். கட்சியின் அவைத் தலைவர். அவருடைய மறைவுக்கே செல்லவில்லை.

அதற்கு மாறாக சில வாரங்களுக்குப் பிறகு இங்கே ஆந்திரத்தில் சுப்புராம் ரெட்டி என்ற ஒரு கோடீஸ்வரர் மறைந்துவிடுகிறார். அவர் மறைந்த செய்தி கேள்விப்பட்டதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சிறப்பு விமானத்தில் - அரசாங்கத்திற்காக வாங்கி வைத்திருக்கிறாரே; 20 கோடி ரூபாயில் அந்தத் தனி விமானத்திலே ஏறிக் கொண்டு, அவரும் அவருடைய உடன் பிறவா...? இருவருமாக நெல்லூரோ அல்லது ஆந்திரத்திலே உள்ள வேறு ஓர் ஊருக்கோ சென்று சுப்புராம் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அந்த விமானத்திலே திரும்புகிறார்கள்.

சுப்புராம் ரெட்டி ஏழை பாவம். கோடீஸ்வர ஏழை. எனவே, அங்கே விமானத்திலே செல்ல முடிகிறது. ஆனால், கட்சியினுடைய அவைத் தலைவராக இருந்த வள்ளிமுத்து கோவில்பட்டியிலே மரணமடைகிறார். அங்கே செல்ல மனம் வரவில்லை.

அவ்வளவு ஏன்? பக்கத்திலே ஆலந்தூரிலே மோகனரங்கம் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். காலத்திலே ராஜ்ய சபாவிலே உள்ள அ.தி.மு.க. உறுப்பினர்களுக்குத் தலைவராக இருந்தவர். அப்பொழுது ஜெயலலிதாவும் அங்கே ஓர் உறுப்பினர். அவர் மாரடைப்பால் மரணமடைகிறார். எல்லோரும் செல்லுகிறார்கள். பக்கத்திலே ஆலந்தாருக்குத்தான். அந்த மோகனரங்கம் பெயரால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு கட்டிடத்திற்கே கூட பெயர் வைத்தார். அந்த அளவுக்கு அவரிடத்திலே எம்.ஜி.ஆருக்குப் பிரியம் உண்டு.

எம்.ஜி.ஆர். இல்லாத காலத்தில் - அவர் மறைந்தபிறகு மோகனரங்கம் மாரடைப்பால் காலமாகிறார்.

ஆலந்தார் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? ஆனால் ஆந்திராவுக்குச் சென்று அந்த கோடீஸ்வர பிரபுவினுடைய உடலிலே மலர்மாலை வைக்கின்ற

ஏழைப்பங்காளிக்கு ஆலந்தூர் சென்று மோகனரங்கத்திற்கு அஞ்சலி செலுத்த இயலவில்லை. அவ்வளவு ஏன்? அண்ணா சமாதிக்கு இந்த ஆண்டு செல்லவில்லையே? அதற்கே பினாமி நெடுஞ்செழியனைத் தானே அனுப்பி வைத்தார். நாவலர் நெடுஞ்செழியன் அதற்கும் பினாமியாகத்தானே பயன்படுத்தப்பட்டார்.

அந்த நாவலர் நெடுஞ்செழியன் என்ன பேச்சு பேசுகிறார். அந்த அம்மையாரிடத்திலே அருமையான பட்டங்களை யெல்லாம் பெற்றவர்! அம்மையார் ஜெயலலிதாவினுடைய திருவாய் மலர்ந்துளி அவர் உதிர்த்த அருஞ்சொற்களுக்கெல்லாம் இலக்கணமாக நிற்பவர். “உதிர்ந்த. . .”

மீதியை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். (கைதட்டல்) தெரு. . . பாக்கியை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் பட்டங்களைப் பெற்ற நாவலர் நெடுஞ்செழியன் சாபம் கொடுக்கிறார். “என்மீது கேஸ் போடுகிறாயா? உருப்படுவாயா?” என்று கேட்கிறார். வழக்கு இருக்கிறது நாவலர் நெடுஞ்செழியன்மீது, ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று அவர் தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துக்கொள்வாரேயானால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

என்ன வழக்கு? மற்றவர்கள் மீதாவது டி.வி. வழக்கு, டான்சி வழக்கு, நிலக்கரி வழக்கு, பங்களா வழக்கு, சொத்துச் சேர்த்த வழக்கு, இவர் வழக்கு செருப்பு வழக்கு, (பலத்த சிரிப்பு) கௌரவமாகச் சொல்கிறேன். காலணி வழக்கு. அதுவும் குழந்தைகளுக்குக் காலணிகள் அரசின் சார்பில் வாங்கிய வகையில் வழக்கு. அது ஓர் ஊழல். அந்த ஊழல் செய்த இந்திரகுமாரி 4 லட்சம் செருப்பு வாங்கவேண்டுமென்று சொன்னால், அதிலே அதிக ஊழல் செய்ய முடியாது என்பதற்காக 9 லட்சமாக வாங்கு என்று நீதியமைச்சர் கையெழுத்திட்ட வழக்கு.

இவர் “என் மீது வழக்கா? நீ உருப்படுவியா?” என்று கேட்கிறார். நான் சின்ன வயதில் கையிலே தமிழ்க்கொடி ஏந்திக் கொண்டு ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடு ஈதல்லவே என்று திருவாரூர் வீதியிலே கொடி பிடித்துச் சென்ற போது, என்னுடைய உற்றார் உறவினர்கள் எல்லாம் “இவன் உருப்படமாட்டான்” என்று சொன்னார்கள்.

நான் உருப்பட்டேனா இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். (கைதட்டல்)

இப்போது நாவலர் நெடுஞ்செழியன் சொல்கிறார். இவன் உருப்படவே மாட்டான். இவன் கட்சி உருப்படுமா? என்று. நான் என்ன கல்லால் கட்டி வைக்கப்பட்டவன் என்றா சொல்லிக்கொண்டிருக்கிறேன். யாரும் ஒரு காலத்திலே போகத்தான் போகிறார்கள். அப்பேர்ப்பட்ட அய்யாவே போய்விட்டார். அப்பேர்ப்பட்ட அண்ணாவே இல்லை. அப்பேர்ப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே இல்லை. அப்பேர்ப்பட்ட காந்தியடிகளே இல்லை. அப்பேர்ப்பட்ட நேருவே இல்லை. நீங்களும் நானும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறோம்.

நாவலர் நெடுஞ்செழியனைக் கேட்கிறேன். சாபமிடுவதுதான் இன்றைக்கு அரசியலா? ஆரூடம் கணியுங்கள் அது உங்கள் இஷ்டம். நான்கு தடவை ஆட்சிப் பொறுப்பில் இருந்துவிட்டோம். ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்கிறார்கள். ஏன் என்று கேட்டால், எல்லாம் கெட்டுப் போய்விட்டதாம்.

அண்ணாதான் அடிக்கடி ஒரு கதை சொல்வார். ஒரு வேடிக்கைக் கதை. ஆற்றிலே வெள்ளம், நரி ஒன்றை அடித்துக் கொண்டு போனதாம். அந்த நரி “உலகம் போச்சு, உலகம் போச்சு” என்று சத்தம் போட்டுக் கொண்டு போனதாம். கரையிலே இருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்துவிட்டு உடனே ஓடிப்போய் அந்த

நரியைக் கரை ஏற்றி “உலகம் போச்சு, உலகம் போச்சு என்றாயே. எங்கே போச்சு?” என்று கேட்டார்களாம். அதற்கு அந்த நரி “என்னை நீங்கள் காப்பாற்றாமல் இருந்திருப்பீர்களேயானால் இந்நேரம் உலகம் போயிருக்கும் - என்னைப் பொறுத்தவரையிலும் போயிருக்கும்” என்றதாம்.

அதைப் போல ஜெயலலிதா உலகம் போச்சு, உலகம் போச்சு என்று சொன்ன நரியைப் போல சட்டம் போச்சு சட்டம் போச்சு என்று சொல்லுகிறார். சட்டம் ஒன்றும் போய்விடாது. சட்டம் இருக்கும். நிரந்தரமாக இருக்கும். நீங்கள் சந்து பொந்துகளில் கொஞ்சநாள் நுழைந்து விளையாடிப் பார்க்கலாம். அதற்குச் சில வழக்கறிஞர்களுடைய வாதங்கள் பயன்படலாம். ஆனால், நீதி சாயாது. சாய்ந்தாலும் மதுரையிலே எப்படி நிமிர்ந்ததோ, அதைப் போல நீதி சாய்ந்தாலும் மதுரையிலே நிமிர்த்தி வைக்கப்பட்டதைப் போல நீதி நிமிர்த்தி வைக்கப்படும் என்பதைப் புரட்சிகரமான மே தின விழாவிலே ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கையாக அறிவிக்கின்றேன்.

1-5-98 அன்று மே தின விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000