மதுரை மத நல்லிணக்க மாநாடு
பகுதி 2 · 2 / 3
இளைஞர்களுக்கு... என்று எழுதிய ஒரு கட்டுரையிலே குறிப்பிடுகிறார்.
அவர் சொல்கிறார்: “தமிழன் யார்? தொன்று தொட்டுத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும், தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்து வாழ்வு பெற்றவரும் தமிழராவர் என்று கூறலாம். இவருள் சைவரிருக்கலாம்; வைணவரிருக்கலாம்; அருகரிருக்கலாம்; (அருகர் என்றால் சமணர்), புத்தரிருக்கலாம்; ஆத்திகரிருக்கலாம்; நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மட்டும் மறத்தலாகாது. ஈண்டுச் சங்கத்தார் காலநிலை நினைவிற்கு வருகிறது.
அவர் அனைவரும் ஒரு கொள்கை யுடையவரல்லர். அதாவது சங்கத் தமிழ்க்காலம், அந்த சங்ககாலம் நினைவுக்கு வருகிறது. சங்க காலத்திலே உள்ள அனைவரும் ஒரே கொள்கை உடையவர் அல்லர். அவருள் சைவர், வைணவர், அருகர், புத்தர், முதலியோர் இருந்தனர். அவரனைவரும் சகோதர நேயத்துடன் வாழ்ந்து போயினர். காரணமென்ன? அவர்தம் கருத்து, சமய வேற்றுமை மீதும், பிற வேற்றுமை மீதும், சென்றதில்லை. அவர் தம்மைத் தமிழர் - சகோதரர் - என்று எண்ணி, ஒருமையுள்ளங் கொண்டு, தமிழ்த் தாய்க்குச் சேவை செய்தனர்.
சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார் இவர் மூவரும் ஒரு சமயக் கொள்கையுடையவரா? இல்லை. ஒருவர் சைவர்; மற்றவர் அருகர்; இன்னொருவர் புத்தர்; இவர்களுக்குள் எத்தகைய ஆன்மநேய ஒருமைப்பாடு நிலைத்திருந்தது!
தமிழ் மாணாக்கர்களே! சிந்தியுங்கள். சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும், ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சேய்கள். ஆனால் அவர்கள் வெவ்வேறு சமய கொள்கையுடையவர்களாக வாழ்ந்தனர். அவரிடையே வெறி, பகை, பூசல் இருந்தனவா?
ஆன்ம நேயமன்றோ ஊடுருவியிருந்தது? உண்மைத் தமிழன்புக்கு முன், சிறு சிறு வேற்றுமைகளெல்லாம் ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போலாகும். அவரைப் போல ஏன் இக்காலத் தமிழர் வாழ்தலாகாது?” என்று இன்று இக்காலத் தமிழர்களைப் பார்த்துக் கேட்கின்றார். சங்க காலத்தில் இருந்து எவ்வளவோ வேற்றுமைகளுக்கிடையே இருந்து ஒற்றுமையோடு தமிழர்கள் வாழ்ந்தார்களே! அந்த வாழ்க்கையை இன்று எப்படி வாழ மறந்தார்கள்? என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.
கேட்கிறார்.
அவர் கேட்டு பல ஆண்டு காலமாகி விட்டது. ஆனால் இன்னமும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மேடையிலே நானும் மற்றும் நான்கு இயக்கங்களுடைய தலைவர்களும் இதைத்தான் இன்றைக்குக் கேட்கிறோம். இன்னமும் கிராமப்புறங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதே! இது நியாயந்தானா? என்று கேட்கிறோம். நாகரிகத்தின் வளர்ச்சிப் பகுதிகள் என்று குறிப்பிடுகிற நகர்ப்புறங்களில்கூட தீண்டாமை இன்னும் தீர்ந்தபாடில்லையே என்ன காரணம்?
என்று காரணத்தை அறிய விரும்புகிறோம். அதை வீழ்த்துவதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிதான் இந்த மாநாடு. மதுரையில் ஒரு மாநாடு நடத்தி விட்டால் மத நல்லிணக்கம் வந்து விடுமா? தீண்டாமை ஒழிந்துவிடுமா? மாநில அதிகாரங்கள் குவிந்துவிடுமா? என்று யாராவது கேட்பார்களானால் அதற்காகத் தொடங்காமலே இருந்துவிடலாமா என்ற கேள்வியைத்தான் நாம் கேட்க வேண்டும். நாம் தொடங்குவோம்; தொடங்குவோம் அதைத் தான் என்னுடைய அருமை நண்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் சங்கரய்யா இங்கே பேசும்போது குறிப்பிட்டார்.
“நான் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினேன், திரு. மூப்பனாரைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள்
எல்லாம் இணக்கமாக இருக்கிறார்கள்”, என்று சங்கரய்யா குறிப்பிட்டார். “எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சினையில் வெற்றி காண உங்கள் கொள்கையிலே வெற்றிகாண, பயணம் போவோம்” என்று குறிப்பிட்டார்கள். அந்தப் பயணத்திற்கு தி.மு.கழகமும் தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே உறுதிபட எடுத்துக் கூற விரும்புகிறேன்.
அவரே இங்கே எடுத்துச் சொன்னதைப் போல தி.மு.கழகம் என்கிற இந்த இயக்கம் திராவிட இயக்கத்தினுடைய ஒரு கூறு. தந்தை பெரியார் அவர்கள் சாதியை வீழ்த்த, மதவெறியை மாய்க்க போர்க்கோலம் பூண்டவர். அணுகுமுறையில் மாத்திரம் சிறு மாற்றங்களைச் செய்து கொண்டு எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் எங்களை வழி நடத்தியவர். எனவே எங்களைப் பற்றி இந்தப் பிரச்சினையிலே உள்ள கொள்கை உறுதியைப் பற்றி சங்கரய்யா அவர்களானாலும், நம்முடைய நல்லக்கண்ணு அவர்களானாலும், நம்முடைய வடிவேலு அவர்களானாலும், திரு.
மூப்பனார் அவர்களானாலும் மிக நன்றாக அறிவார்கள். எனவே உறுதியோடு நடைபோட உங்களோடு வரத் தயாராக இருக்கிறோம்.
மத நல்லிணக்க மாநாட்டோடு இணைக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு உரிமைகளைப் பற்றியும் மிகக் கடுமையாக வீராவேசமாக நம்முடைய தோழர் சங்கரய்யா அவர்கள் இங்கே முரசு கொட்டியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி கலைக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பயமுறுத்தப் படுகின்ற நேரத்திலே எழும்புகின்ற கோஷமல்ல - மாநில சுயாட்சிக் கோஷம்.
நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து, 1969-ஆம்
ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் சில வாரங்களுக்கெல்லாம் டெல்லிக்குச் சென்றேன். டெல்லியில் 69 மார்ச் திங்கள் 17-ஆம் தேதி - ஐம்பதுக்கு மேற்பட்ட இந்திய மாநிலங்களிலே உள்ள பல்வேறு பத்திரிகை செய்தியாளர்கள் - என்னைச் சந்தித்து உங்களுடைய தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடிச் சொல்வார்களே, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் - அதைப்பற்றி என்ன செய்யவிருக்கிறீர்கள் என்று கேட்டபோது - நான் அவர்களுக்கு அளித்த பதில்தான் - “மைய - மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து மைய அரசிலிருந்து மாநிலங்களுக்கு மாற்றப்படக் கூடிய அதிகாரங்களைப் பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றினை அமைப்பது பற்றி நான் ஆலோசித்து வருகின்றேன்”, என்று குறிப்பிட்டேன்.
குறிப்பிட்டது மாத்திரமல்ல; டெல்லியிலிருந்து திரும்பியவுடன் 1969 ஆகஸ்ட் 19-ஆம் நாள் டாக்டர் பி.வி.ராஜமன்னார் அவர்களைத் தலைவராகவும், டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் அவர்களையும், சந்திரா ரெட்டி அவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட மூவர் குழு ஒன்றை அரசின் சார்பில் அமைத்தேன்.
அந்தக் குழுதான் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும், என்னென்ன வகையிலே அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து ஒரு நீண்ட அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையை முரசொலிமாறன், இரா. செழியன் இருவர் தலைமையிலே இயங்கிய குழு ஆராய்ந்து அதை அமைச்சரவையிலே வைத்து விவாதித்து 1974-ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையிலே மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும், 356-வது பிரிவு,
அறவே அகற்றப்பட வேண்டும் அரசியல் சட்டத்திலிருந்து; என்ற இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்த போது அதை ஆதரித்த கட்சி அன்றைக்கு சட்டப் பேரவையிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.
இதிலே ஒரு வரலாற்று உண்மையை யாரும் மறந்துவிடக் கூடாது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தோழர் ரணதிவே தலைமையிலே நடைபெற்ற - அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக இருந்த அந்தக் காலக் கட்டத்திலே - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றிய கட்சிதான்.
அது மாத்திரமல்ல; இந்திய சுதந்திரத்திற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட - நேரு பெருமான் தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கையை ஒத்துக் கொண்ட கட்சிதான்.
அதற்குப் பிறகு சில மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு விட்டன. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருகின்ற அந்தக் கொள்கையிலே தளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் இன்றைக்குத் தமிழகத்திலே உருவாகி வளர்ந்து வருகிற - வளர்ந்து வந்திருக்கின்ற நம்முடைய மூப்பனார் தலைமையிலே உள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா தளமும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற இயக்கங்களாகும்.
74-ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையிலே இராஜமன்னார் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்து சட்டப் பேரவையிலே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் இதுதான்:-
“மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப்பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று - மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று 16.4.74 அன்று சட்டப் பேரவையிலே என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அன்றைய இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
அதற்கு முன்பே இராஜமன்னார் குழுவின் அறிக்கையை பிரதமர் இந்திரா காந்திக்கு 71-ஆம் ஆண்டு நான் அனுப்பி வைத்தபோது, அதைப் பெற்றுக்
கொண்ட பிரதமர் இந்திரா காந்தி 1971-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22-ந் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் -
Dear Thiru Karunanidhi,
I have received your letter of the 15th June with which you have sent me a copy of the report of the Centre-State Relations Inquiry Committee. Your Government will probably examine the recommendations of this report. As you know the Administrative Reforms Commission also went into the questions and has already submitted a report which is under our consideration. If the views of your Government on this matter are made available to us, they will also be taken into account.
These are important issue and we intend to consult all the Chief Ministers.
With regards,
Yours Sincerely,
(Sd.) INDIRA GANDHI.
