மதுரை மத நல்லிணக்க மாநாடு
பகுதி 3 · 3 / 3
அன்புள்ள திரு. கருணாநிதி,
நீங்கள் ஜூன் 15-ந்தேதி அனுப்பிய கடிதம் கிடைத்தது. மத்திய மாநில உறவுகள் ஆய்வுக் குழுவின் அறிக்கையின் நகல் ஒன்றைக் கடிதத்துடன் அனுப்பியுள்ளீர்கள். அறிக்கையின் பரிந்துரைகளை உங்களது அரசாங்கம் ஆய்வு செய்யுமென்று எண்ணுகிறேன். நிர்வாக சீரமைப்புக் குழுவும் இப்பிரச்சினை பற்றி ஆய்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அக்குழு அளித்துள்ள அறிக்கை எங்களது ஆய்வில் உள்ளது. இது குறித்து உங்கள் அரசின் கருத்துக்களையும் அனுப்பி வைத்தால் அவற்றையும் சேர்த்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
இவை முக்கியமான பிரச்சினைகள் என்பதால் எல்லா
முதலமைச்சர்களுடன் இதுகுறித்து கலந்து ஆய்வு செய்ய எண்ணியுள்ளோம்.
தங்கள் அன்புள்ள,
(ஒ) இந்திரா காந்தி.
என்று 71-ஆம் ஆண்டு எனக்கு பதில் அனுப்பினார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு சர்க்காரியா கமிஷன் குழு என்று மத்திய மாநில உறவுகளைப் பற்றி ஆராய்ந்திட ஒரு குழுதான் போடப்பட்டதே தவிர, அரசியல் சட்டத்திலே ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை அளிக்க வேண்டுமென்ற அந்தக் கொள்கையை நிறைவேற்ற இன்னமும் இடையிலே வந்த மத்திய அரசுகளும் சரி, இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசும் சரி முன்வரவில்லை என்பதுதான் நம்முடைய ஆதங்கம்.
அந்தக் காரணத்தினால்தான் இங்கே மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு என்ற தீர்மானங்களோடு மிக முக்கியமான மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமென்ற கருத்தமைந்த - மாநில சுயாட்சி என்கிற பெயரில் இல்லாவிட்டாலும் அந்தக் கருத்து அமைந்த தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி இருக்கிறோம்.
மாநிலங்கள் இன்றைக்கு எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
“நமக்கிருக்கிற கவலை எல்லாம் தூக்கமுடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான்.
மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்பது, அரசியலுக்கு நல்லது, காரியத்திற்கும் உகந்தது.
ஆனால் மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும், மாநிலங்கள் தத்தி தத்தி நடக்கும் அதிகாரம்தான் வைத்திருக்கும் என்றால் அது ஏற்கும் பொருத்தமுடையதல்ல.
மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால் மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டு விடாது.
நாட்டுப் பாதுகாப்பு தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்கு தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.
மக்களின் சுகதுக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர மத்திய அரசு அல்ல. ஆகவே வலிவான மத்திய அரசுதான் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பது தவறு. மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களே ஆனால் அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கிப் பாதுகாப்புப் போன்ற பெரிய விஷயங்களில் கோட்டை போய் விடுவார்களோ என்பதுதான் எங்கள் சந்தேகம்.
மேல் அதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்துள்ளது.”
என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அந்த அடிப்படையிலேதான் திராவிட முன்னேற்றக் கழகம் நடைபோடுகின்றது. அதற்கேற்ற வகையில்தான் இங்கே இந்த மாநாட்டில் ஒரு அருமையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதிலே ஆட்சிகளை நினைத்த போதெல்லாம் கலைக்கலாம் என்று மத்திய அரசு கொடுவாளைத் தூக்கிக் கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. இந்த ஆட்சிக் கலைப்புக்கு இருமுறை பலியானவர்கள் நாம். இந்த ஆட்சிக் கலைப்புக்கு முதல் முதலில் பலியானது கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில். இதுவரையில் 90க்கு மேற்பட்ட தடவை இந்த 356-வது அரசியல் சட்டப் பிரிவை வைத்து மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. எப்படியாவது சதம் அடித்து விடவேண்டுமென்று பார்க்கிறார்கள்.
அதற்கு இனி இடம் தரமாட்டோம் என்ற உறுதியை நாம் எடுத்துக் கொண்டாக வேண்டும்.
அதைப் போல 355-வது பிரிவை இஷ்டத்திற்கு பயன்படுத்த எண்ணுகிறார்கள். திடீர் திடீரென்று மாநிலங்கள் சரியாக இருக்கிறதா, சட்டம் ஒழுங்கு செம்மையாக இருக்கிறதா, என்று அறிய வேண்டும் என்று கூறி அதற்காக ஒரு குழுவை அனுப்புகிறார்கள். சரி, மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க மத்திய அரசு குழுவை அனுப்புகிறது. மத்தியில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்று பார்க்க ஒரு குழுவை யார் அனுப்புவது?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டாமா?
எனவே மாநிலத்தில் சரியாக ஆட்சி நடைபெறுகிறதா என்று பார்த்துக்கொள்கிற பொறுப்பும் மாற்றுகிற பொறுப்பும் மக்கள் மன்றத்திற்கு உண்டே தவிர மத்தியிலே உள்ள ஆட்சிக்குக் கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கின்ற மாநாடு தான் இந்த மாநாடு.
மாநிலங்களில் உள்ளவர்கள்தான் குற்றம் செய்பவர்களாக இருப்பார்கள், மத்தியிலே இருப்பவர்கள் எல்லாம் சுத்த சுயம்பிரகாசங்கள் என்று எண்ணுகின்ற நிலையிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். அதை இந்தத் தீர்மானம் இங்கே வலியுறுத்திச் சொல்கிறது.
கண்டவர்கள் எல்லாம் சொல்வார்கள் அதற்காக மாநில அரசைக் கலைக்கிறேன், கலைக்கிறேன் என்று அவர்களுக்கு ஆறுதல், எங்களுக்கு மிரட்டல் என்றால் இதை நாங்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆட்சிக்கு வந்தவுடன் நிலையான ஆட்சி என்று அறிவித்து மத்தியிலே இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்தவுடன் நடைபெறுகின்ற ஆட்சி நிலையான ஆட்சியா? ஒவ்வொரு நாளும் நிலை தடுமாறுகின்ற ஆட்சி. இந்த ஆட்சி நிலையான ஆட்சி என்ற பெயரோடு வந்தது.
இன்றைக்கு இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற பெயர் நிர்பந்தங்களுக்குப் பணிகின்ற ஆட்சி என்பதுதான் இன்றைக்கு இருக்கின்ற மத்திய ஆட்சிக்கு கிடைத்துள்ள பெயர்.
எலியும் தவளையும் காலைக் கட்டிக் கொண்டு உறவாடிய கதையைப் படித்திருப்பீர்கள். அந்தக் கதை இன்றைக்கு மத்தியிலே கூட்டணிக் கட்சி ஆட்சியிலே
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் ஜாக்கிரதையாக - எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத வெறிக்கு மக்கள் பலியாகாமல் காப்பாற்றவும், மாநில உரிமைகளை அழிப்பதற்கு மத்திய அரசு கொடுவாளைத் தூக்காமல் தடுக்கவும், தீண்டாமை வீழவும் சூளுரை மேற்கொள்வோம்.
29-8-98 அன்று மதுரையில் மத நல்லிணக்க மாநாட்டில் ஆற்றிய உரை
