உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மதுரை மத நல்லிணக்க மாநாடு

பகுதி 1 · 1 / 3

மதுரை மத நல்லிணக்க மாநாடு

மத நல்லிணக்கம் காணவும், மாநில உரிமைகளை நியாயமாகப் பெறவும், தீண்டாமை என்னும் தீயை அணைக்கவும் ஐந்து கட்சிகளைக் கொண்ட செயல் வீரர்கள் ஓடி ஆடி உழைத்து, மிகச்சிறப்பும், ஏற்றமும், எழுச்சியும் நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த மாநாட்டில் பல்லாயிரக் கணக்கில் குழுமியிருக்கின்ற உங்களை யெல்லாம் காணுகிற நல்ல வாய்ப்பு பெற்றமைக்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமையடைகிறேன். ஐந்து கட்சிகள் இன்றைக்கு ஒரே மேடையில்.

ஐந்து கட்சிகள்தாமா? போதுமா? என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நான் சொல்கிற பதில் கையிலிருப்பது ஐந்து விரல்கள்தாம்.(கைத்தட்டல்)

அந்த ஐந்து விரல்களையும் மடக்கினால் முஷ்டியாகும். முஷ்டி தீண்டாமையை, மதவெறியை, மாநில உரிமைகளைத் தடுகின்ற சக்திகளைக் குத்துகின்ற முஷ்டி. குத்தி வெற்றி பெறுகிற முஷ்டி. ஐந்து விரல்களும் மடங்கினால் முஷ்டியாகும். அடுத்தடுத்து கட்சிகள் வந்தால் பத்தானால் என்ன செய்வது? பத்து விரல்கள் இரண்டு குத்து. இந்த விபரீதங்களை

வீழ்த்துவதற்கு, தீண்டாமையை வீழ்த்துவதற்கு, மதவெறியை வீழ்த்துவதற்கு, மாநில உரிமைகளைப் பெறுவதற்கு அதற்கான கொட்டமாக மதுரை மாநகரில் இந்த ஐந்து கட்சிகளுடைய மாநாடு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மத நல்லிணக்கத்தைப் பற்றி எனக்கு முன்னால் பேசிய அனைவரும் வெகு விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மத ஒற்றுமையை வளர்க்கின்ற வகையில் Phool Walon Ki Sair என்று அழைக்கப்படுகின்ற பூக்காரர்களுடைய பேரணி ஒன்று ஆண்டுதோறும், புதுடெல்லியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தப் பேரணிக்குப் பெயர் அந்த மொழியில் சொல்ல வேண்டுமானால் பூல் வாலோன்கி சாயர். பூக்காரர் பேரணி ஒவ்வொரு ஆண்டும் புதுடெல்லியில் இப்போது நடத்தப்படுகின்றது. இந்த விழா மொகலாயர் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வருகின்ற விழாவாகும்.

டெல்லிக்கு அருகிலுள்ள மெஹரூலி என்ற கிராமத்தில் நடத்தப்படும் சரித்திரப் பிரசித்திப் பெற்ற இந்த விழா இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கருதியும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், பேரரசர் அக்பர் அவர்களால் (கி.பி. 1556-1605) துவக்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவில் முஸ்லிம்களும், இந்துக்களும் சகோதர உணர்வுடன் தங்களுக்கிடையில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல், மத ஒற்றுமையுடனும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு மிக ஒற்றுமையோடு இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்து கொண்டு விழா எடுப்பதைக் குலைத்திடும் வகையில், வஞ்சக எண்ணத்தோடு 1942-ஆம் ஆண்டு பிரித்தாளும்

சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேய அரசு அந்த விழாவையே தடை செய்தது. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருசேர எடுத்த விழாவை 42-ஆம் ஆண்டு வெள்ளைக்கார சர்க்கார் தடை செய்தது.

அதற்குப் பிறகு சுதந்திரம் பெற்றதும் 1961-ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமையினை மேன்மேலும் வளர்க்கக் கருதி தடை செய்யப்பட்ட அந்தப் பூக்காரர் பேரணிக்குப் புத்துயிர் ஊட்டினார்.

இந்துக்களும், முஸ்லிம்களும் அவரவர்களது மத உணர்வைப் பேணி, அவரவர் மத உணர்வுகளுடனேயே ஒற்றுமையாக இணைந்து கொண்டாடும் ஒரே விழா இந்த மலர்ப் பேரணி விழாவாகும்.

பழம் பெருமை மாறாமல், அதன் மரபுகள், முறைகள் அப்படியே இன்றைக்கும் அந்த விழாவிலே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

விழா நாளன்று இந்துக்களும், முஸ்லிம்களும் - முஸ்லிம்கள் தர்க்காவிலிருந்தும்; இந்துக்கள் காளி கோவிலில் இருந்தும் அணி வகுத்து ஒன்றாகச் சென்று இறைவனைப் பிரார்த்தித்து நலம் வேண்டுவார்கள்.

இந்து முஸ்லிம் இணைந்து செல்லும் இந்தப் பேரணியின் முன்னால் வனப்பு மிக்க வெல்வெட்டால் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய விசிறிகள் (பங்கா) எழிலோடு எடுத்துச் செல்லப்படும்.

இதைத் தொடர்ந்து கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடியே செல்வார்கள்.

இந்த மலர் விசிறிகள் புதுடெல்லி மெஹரூலியில் உள்ள அக்பர் காலத்திய முகலாயக் கோட்டைக்கு எடுத்து வரப்படுகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தங்கள் பங்காக்களையும், அதற்குரிய விசிறிகளையும் கலைக் குழுக்களையும் அனுப்பி பங்கேற்கச் செய்கிறார்கள். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் இறுதி நாளன்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

1961-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு பங்காக்கள் மற்றும் கலைக்குழுக்களை அனுப்பி, இந்த விழாவிலே பங்கேற்கச் செய்கின்றது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பங்காவுக்கும் கலை நிகழ்ச்சிக்குமென பெரும்பாலான ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன.

கடந்த ஆண்டுகூட இந்தப் பூக்காரர் பேரணியில், இரண்டு பங்காக்கள் எடுத்துச் செல்லப்பட்டு - அதிலும் குறிப்பாக மதுரையைச் சேர்ந்த டாக்டர் சோமசுந்தரம் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது.

இந்தக் கலை நிகழ்ச்சிக்கு மதுரை சோமசுந்தரத்திற்கு முதல் பரிசும், அந்தக் கலைக்குழுவை அனுப்பியதற்காக முதலமைச்சர் என்ற முறையிலே எனக்கு டெல்லி மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பாராட்டுக் கடிதமும் கிடைத்தது.

இந்த ஆண்டும் அக்டோபர் 11-ஆம் நாள் பூக்காரர் பேரணி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவிலே கலந்து கொள்ள இந்த ஆண்டும் கலைக்குழுவை அனுப்ப கோரிக்கை அனுப்பி நமக்கு அங்கிருந்து செய்தி வந்துள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று அந்தக் கலைக்குழுவை அங்கே அனுப்பவும் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பூக்காரர் பேரணியை நடத்தவும், அதற்கென்று தமிழக அரசின் சார்பாக 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதையும் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை இங்கே தெரிவிப்பதன் காரணம் அக்பர் காலத்திலேயே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்கிற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதற்காக இந்தப் பூக்கார விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அது இடைக்காலத்தில் வெள்ளைக்கார சர்க்காரால் தடை செய்யப்பட்டு, நேரு பெருமான் இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்த காலத்தில், 61-ஆம் ஆண்டு முதல் மேலும் தொடர்ந்து நடத்தப்பெற்று, இப்பொழுதும் நடைபெற்று வருகின்ற விழாவாகும்.

ஆனால், டெல்லியில் மாத்திரம் இந்த விழா நடத்தப் படுகின்றது. இந்தப் பூக்கார விழாவை ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் நடத்தவேண்டும். தமிழ்நாட்டில் சென்னைத் தலைநகரத்திலே மாத்திரமல்ல; மதுரை நகரத்திலும், திருச்சியிலும் நடத்தவேண்டும். இப்படி இந்துக்களும், முஸ்லிம்களும் மதவேற்றுமை இல்லாமல் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மன ஒற்றுமையுடன் பழகுகிற அந்த உணர்வு வளர்ந்திட வேண்டும்.

இன்றைக்குக் கூட பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு குறிப்பிட்டதைப் போல, விநாயகர் சதுர்த்தி விக்னேஸ்வரர் ஊர்வலம் பல இடங்களில் நடைபெற்ற நேரத்தில் நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். காயல்பட்டினம் - அது முஸ்லிம்கள் மாத்திரமே வாழ்கின்ற நகரம். நான் பலமுறை அந்த ஊருக்குச் சென்றிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் பெருமக்கள் அங்கு வாழ்கிறார்கள்.

அந்தப் பகுதியில் இன்றைக்கு விநாயகர் ஊர்வலம் சென்றபோது, முஸ்லிம் பெருமக்களும், தாய்மார்களும், பெரியோர்களும் அந்த ஊர்வலத்தை வரவேற்று மாலை மரியாதை செய்து தங்களது ஆதரவை, வரவேற்பை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

காயல்பட்டினத்தில் மாத்திரமல்ல. பழனியிலே அந்த விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், கோவையை அடுத்துள்ள பல்லடத்தில் இந்த விநாயகர் ஊர்வலம் வந்தபோது, அந்தப்பகுதியில் உள்ள கிறிஸ்துவப் பெருமக்கள், இஸ்லாமியப் பெருமக்கள், பெரியவர்கள், இளைஞர்கள் இவர்கள் எல்லாம் கூடி நின்று அந்த ஊர்வலத்தை வரவேற்று, வந்தவர்களோடு நல்ல முறையிலே பழகி, பாராட்டி மகிழ்ந்து களித்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.

இது சிலருக்கு கடவுளை வணங்கினார்களா? அந்த மதத்தின் கடவுளை வணங்கினார்களா? என்ற கேள்வி எல்லாம் எழுப்பக்கூடும். இரு மதத்தாரும் ஒரு கடவுளை வணங்கினார்கள் என்று அதை கருணாநிதி வரவேற்றுப் பேசலாமா என்று கேட்கக்கூடும்.

நான் நாத்திகன், ஆத்திகன் என்பதை இரண்டாவதாக வைத்து - நாத்திகரோ, ஆத்திகரோ அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்களே என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். விநாயகர் சதுர்த்தியை இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரவேற்று மகிழ்வதும், அதைப்போலவே அடுத்து ஒருநாள் இஸ்லாமியப் பண்டிகையில் இந்துக்கள் கலந்து கொள்கிற நிலைமை ஏற்படுவதும், முன்னுக்குப் பின் முரண் என்று யாராலும் கூற முடியாது.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோமே மத நல்லிணக்கம். அந்த நல்லிணக்கத்திற்கு ஏற்ற ஒரு வழி அது என்பதை இங்கே எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த மத நல்லிணக்கம் இன்று நேற்றல்ல, எத்தனையோ வேறுபாடுகளுக்கிடையே எப்படியெல்லாம் வளர்ந்து வலுப்பெற்றது என்பதை திரு.வி.க. அவர்கள்

முதல் பதிப்பு 2000