குறள் வழி நடப்பீர்
பகுதி 3 · 3 / 4
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் பாடிக் காட்டிய பிறகும், சாதிகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தச் சாதிகளை வீழ்த்துகின்ற பெரும் பணியினை இந்த இளமைக் காலத்திலே மாணவர்கள் மேற்கொண்டாக வேண்டும்.
இளமைக் காலம் கடந்து விடுமேயானால் அதற்குப் பிறகு உங்களையும் சாதிப் பிணி பற்றிக் கொள்ளும். இங்கே மாணவர்கள் என்ற ஒரு சாதி நீங்கள். இங்கே இருந்து வெளியே போனால், நாயுடுகளாக ஆவீர்கள்; ரெட்டியார்களாக ஆவீர்கள்; முக்குலத்தோராக ஆவீர்கள்; வன்னியர்களாக ஆவீர்கள்; செட்டியார்களாக ஆவீர்கள்.
ஆனால் இந்த மண்டபத்திலே கல்லூரியிலே நீங்கள் படிக்கின்ற காலகட்டம் இருக்கிறதே: நீங்கள் ஒரே சாதி - தமிழ்ச்சாதி. அந்த தமிழ்ச் சாதிக்கென்று ஒரு மொழி உண்டு. அந்த மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி; அந்த மொழிக்கு ஈடான மொழி உலகத்திலே இதுவரையிலே தோன்றியது கிடையாது. அந்த மொழியைப் போல வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்துத் தந்த மொழியும் வேறு எங்கும் கிடையாது.
அருமையான சங்க இலக்கியங்களைத் தந்திருக்கின்ற மொழி நம்முடைய மொழி. சங்க இலக்கியங்கள் நமக்குக் கருவூலங்களாகக் கிடைத்திருக்கின்றன என்றாலும் இங்கே பேசிய பேராசிரியர் ஒருவர் சங்க இலக்கியங்களைப் பற்றி குறிப்பிட்டு, அந்தச் சங்க இலக்கியங்கள் வளர இந்த தியாகராயர் கல்லூரி எதிர்காலத்திலே நான்காவது தமிழ்ச் சங்கமாக ஆகிட வேண்டும் என்று ஒரு காலத்திலே பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னதை நினைவூட்டி அந்தக் காலக்கட்டத்தை எதிர்
பார்ப்பதாகச் சொன்னாரே, நான்காவது சங்கம் தொடங்குவது இருக்கட்டும் மூன்று சங்கங்கள் நமக்குத் தந்திருக்கின்ற முத்தாரங்கள் எத்தனை? எத்தனை?
அவைகளை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அந்த மூன்று சங்கங்கள் நமக்குத் தந்திருக்கின்ற அரிய கருவூலத்தை நாம் பயன்படுத்தி இருக்கிறோமா?
நம்முடைய சங்க நூல்கள் தனித் தனிப் பாடலுடைய தொகுப்புகளாக இருந்தபோதிலும், ஒரே நூல்தான் ஒரே ஆசிரியரால் முதல் முதலாகத் தமிழகத்திற்குத் தரப்பட்ட நூல்.
அதுதான் திருவள்ளுவர் யாத்துத் தந்த திருக்குறள். சங்க இலக்கியங்களில் வழிந்தோடுகின்ற சுவை சாதாரணமானதல்ல. அந்த இலக்கியச் சுவையை நாம் எண்ணி எண்ணி இன்புறுதல்.
நான் சொன்னேனே பாலை நிலம் பற்றி - அது நிரந்தரமானதல்ல என்றாலும்கூட, முல்லை நிலத்திலேகூட ஏற்படக்கூடும். குறிஞ்சியிலேகூட கண்டிடக்கூடும். மருதத்திலேகூட ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டேனே, அந்தப் பாலை நிலத்தைப் பற்றி சங்ககால இலக்கியம் என்ன கூறுகிறது?
பாலையினுடைய வெப்பம் எப்படி இருக்கும் என்பதை சங்க காலத்துப் புலவன் விளக்குகிறான். கோடையினுடைய வெப்பத்தை விளக்க வடமொழியிலே ஒரு நூலின் சில வரிகள் உண்டு. சாகுந்தலத்தைத் தீட்டிய காளிதாசன் வருணிக்கிறான்! கோடையினுடைய வெப்பத்தை அவன் எழுதிக் காட்டுகிறான்.
பாம்பு ஒன்று, கோடையினுடைய வெப்பம் தாங்க முடியாமல் வயற்காட்டில் அங்கும் இங்கும் நெளிந்து
நெளிந்து ஓடி வரவே அதனுடைய உடல், வெப்பத்தால் தகிக்கிறது.
அப்படித் தகிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த நாகப்பாம்பு, தன்னுடைய வால் முனையை தரையிலே ஊன்றிக் கொண்டு, தன்னுடைய உடம்பு முழுவதையும் மேலே தூக்கி, தன்னுடைய உடம்பிலே வெப்பம் படாமல் படமெடுத்து நின்று ஆடிக் கொண்டிருக்கிறது.
வால்முனை மாத்திரம் தரையிலே ஊன்றப்பட்டிருக்கிறது. அந்த நேரத்திலே வெப்பம் தகிக்கின்ற காரணத்தால், நிழல்தேடி அலைகிறது ஒரு தவளை. அதற்கு எங்குமே நிழல் கிடைக்கவில்லை. அங்கே இருக்கிற பாம்பின் நிழலை, பாம்பின் நிழல் என்று அதற்குத் தெரியாமல், ஏதோ நிழல் கிடைத்தது என்று ஆறுதலாக தவளை, பாம்பின் நிழலுக்குக் கீழே வந்து உட்கார்ந்து கொள்கிறது. தவளைக்குத் தெரியவில்லை - தனக்கு நிழல் கொடுத்தது பாம்பு என்று.
பாம்புக்குத் தெரியவில்லை. தன்னுடைய ஆகாரம் தனக்குக் கீழே காத்திருக்கிற செய்தி - அதற்கும் தெரியவில்லை.
இப்படிப்பட்ட ஒரு உறவு - இப்படிப்பட்ட ஒரு நிலை - காளிதாசனுடைய சாகுந்தலத்திலே கோடையை வெளிப்படுத்துவதற்காக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் உதவி செய்கிறார்கள்.
ஆனால், சங்க காலத்துப் புலவன் பாலைக்கலி பாடுகிறான்.
இரண்டு மான்கள். ஆண்மான் ஒன்று; பெண்மான் ஒன்று; இரண்டும் கோடையினுடைய வெப்பம் தாங்க முடியாமல், இன்னல் அனுபவிக்கிற நேரத்தில் அங்கே ஆண்மான் என்ன செய்கிறது தெரியுமா? தானே அந்தக் கோடை வெப்பத்திலே நின்று கொள்கிறது! நின்று
கொண்டு பெண்மானை அருகிலே அமைத்து என்மீது கோடை சூரியனுடைய ஒளி விழுந்து அந்த நிழல் கீழே விழுகிறதல்லவா... அந்த நிழலில் நீ படுத்துக்கொள்!
“இன்னிழல் இன்மையால் வருந்திய மடப் பிணைக்கு தன் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை”
கொடிய வெம்மையால் வருந்துகின்ற பெண்மானுக்குத் தன்னுடைய நிழலையே கொடுக்கின்ற ஆண்மான் என்று சங்கப் புலவன் பாடிக் காட்டுகிறான்.
இந்தக் காலத்திலே ஆண் மான் - பெண் மானுக்கு அப்படி உதவ முடியுமா? (பலத்த சிரிப்பு)
ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது சங்கப் புலவன், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கோடையினுடைய வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்ற அந்தக் காட்சியை நமக்குக் காட்டுகின்றான்.
