உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

குறள் வழி நடப்பீர்

பகுதி 4 · 4 / 4

காளிதாசன், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே அங்கே அந்தக் கோடையினுடைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்ற காட்சியை நமக்குக் காட்டுகிறான்.

வாழ்க்கையோடு இணைந்திருக்கின்ற இலக்கியங்களை நம்முடைய தமிழ்ப் புலவர்கள் நமக்கு ஏராளமாகத் தந்திருக்கிறார்கள் - அப்படிப்பட்ட இலக்கியங்களைப் பெற்றிருக்கின்ற தமிழர்களாகிய நாம் தமிழ்ச் சமுதாயப் பெருங்குடி மக்களாகிய நாம், நமக்கென்று ஓர் எதிர்காலத்தை எழுதுகின்ற வாய்ப்பினை வீணாக்கி விடக் கூடாது. அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும். எத்தனையோ இலக்கியப் பெட்டகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

திருக்குறளை எடுத்துக்கொண்டால், திருக்குறளிலே இல்லாதது எதுவுமில்லை என்று சொல்லத்தக்க அளவிற்கு, தமிழ்நாட்டிற்கு மாத்திரமல்ல, இந்த உலகிற்கே பல அரிய கருத்துக்களை திருவள்ளுவர் வாரி வாரி வழங்கியிருக்கின்றார்.

தன்னுடைய மகனுக்கு ஒரு தகப்பன் செய்ய வேண்டிய கடமை என்ன என்ற கேள்வியை வள்ளுவர் கேட்டுவிட்டு அவர் சொல்கிறார்

“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்!”

ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு ஆற்ற வேண்டிய கடமை, அவையத்தில் (உலகத்தில்) -சபை நடுவே முந்தியிருக்கக்கூடிய பெருமைக்குரியவனாக அவனை ஆக்குவதுதான் என்று குறிப்பிடுகின்றார்.

அதே நேரத்தில்,

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்!”

என்றும் குறிப்பிடுகின்றார்.

ஒரு மகன் தந்தைக்காற்ற வேண்டிய உதவி என்ன வென்றால், “இவனுடைய தந்தையானவன் என்ன தவம் செய்தானோ - இவனைப் பெற்றெடுக்க” என்று உலகத்தார் பாராட்டுகின்ற அந்தப் பெரும் புகழைத் தன்னுடைய தந்தைக்கு மகன், தன்னுடைய நடத்தையின் காரணமாக வழங்கிட வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

அப்படிப்பட்ட செல்வங்களாக,

அப்படிப்பட்ட மக்களாக,

தியாகராசர் கல்லூரி மாணவர்கள் - ஏன்? மதுரையில் இருக்கக்கூடிய கல்லூரிகளுடைய மாணவர்கள் எல்லோரும் தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று இந்தத் திருக்குறளின் வாயிலாக உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலைப் பிரித்துத் தந்து, இந்த முப்பாலும் தமிழர்களுக்குத் தப்பாமல் என்றென்றும் நல்வாழ்வை அளிக்கக்கூடிய அழகான அறிவுரைகளை வள்ளுவர் நமக்கு வழங்குகின்றார். அவைகளை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருக்குறளைப் போலவே நமக்கு வீரச் சுவையை - காதல் சுவையை - வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கக் கூடிய சங்க இலக்கியங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அகநானூறு ஆனாலும், புறநானூறு ஆனாலும், இன்னும் பல்வேறு சங்க இலக்கியங்களானாலும் அவைகளையெல்லாம் நாம் பாதுகாத்தல் மட்டுமே போதாது; அவைகளையெல்லாம் படித்துப் படித்து அவற்றிலே நமக்குக் கிடைக்கின்ற தேன் துளிகளைச் சுவைத்து - அதை மற்றவர்களுக்கும் அளித்து மகிழ்ந்திட வேண்டும்.

நான் இந்த அரிய நேரத்தில் - உங்களையெல்லாம் சந்திக்கின்ற மாலை நல்லவேளையில் புறநானூற்றினுடைய கடினமான நடையை எளிய நடையிலே மாற்றி எழுதிய ஒரு கவிதையை உங்களிடத்திலே கூறுவது என்னுடைய உள்ளத்திற்கு ஊக்கமூட்டுவதாக அமையும். உங்களையும்

உற்சாகப்படுத்துவதாக அமையும்; நான் கையாண்ட இந்த முறையைப் போல நீங்களும் சங்க இலக்கியங்களைக் கையாள வேண்டும் என்பதற்கு வழி காட்டுவதாகவும் அமையும் அது. இங்கே என்னை வரவேற்று மாலை அணிவித்த மாணவக் கண்மணிகள் அவர்களே, முன்வந்து இயற்றிய கவிதை வரிகளைக் கேட்டேன். அவைகள் என்னைப் பற்றியதற்காக இல்லை; அதிலே வழிந்தோடிய தமிழ் இனபத்தை நான் பாராட்டுகிறேன். என்னைப் பாராட்டினார்கள் என்பதற்காக இல்லை; எவ்வளவு அருமையாகத் தமிழை எடுத்துக் கோக்கிறார்கள்.

இவர்களுடைய கையிலே எதிர்காலம் தரப்படுமேயானால் தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை காத்திருக்கிறது என்று நான் எண்ணினேன்.

அந்த எண்ணத்தின் காரணமாகத்தான் தொடர்ந்து நீங்கள் இந்தத் தூய பணியிலே ஈடுபட வேண்டும் என்று நான் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புறநானூற்றிலே உள்ள கடினமான சொற்களையும் எடுத்து வைத்து - அது தமிழ்நாட்டு மக்களுக்கு எளிய முறையிலே புரிய வேண்டும் என்பதற்காக எனக்குத் தெரிந்த தமிழில் பல கவிதைகளை - கவிதையல்ல என்கிற பெயரில் நான் தீட்டி மகிழ்ந்திருக்கிறேன்.

(கலைஞர் எழுதிய “புறநானூற்றுத் தாய்” என்ற பாடலை, வீரம் கொப்பளிக்க அவரே கூறுகிறார். மாணவர்கள் எழுச்சி ஆரவாரம்! உற்சாகம்! கைத்தட்டல் நீண்ட நேரம்)

அதை உங்களைப் போன்ற மாணவனாக இருந்த கால கட்டத்திலே எழுதினேன். (கைத்தட்டல்) அவ்வளவு வீரமாக எழுத இப்போது வருமா? எனக்கே தெரியாது. (கைத்தட்டல்)

எனவேதான் நான் உங்களை வேண்டுகிறேன்; விரும்புகிறேன் - உங்களால் எழுத முடியும் என்று! இதைப் போன்ற புறநானூற்றுப் பாடலை எளிய முறையிலே எழுதாவிட்டாலும் அந்தப் புறநானூற்றுத் தாய் மகிழ்ந்து பாராட்டினாளே, அதைப் போன்ற தமிழ்ச் சமுதாயப் பிள்ளைகளாக - வீரர்களாக - தீரர்களாக தமிழ்நாட்டைக் காப்பாற்ற - தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற - தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற நீங்கள் பீடுநடை போடுங்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.

வணக்கம்!

20.10.80 அன்று மதுரை தியாகராசர் கல்லூரி விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000