குறள் வழி நடப்பீர்
பகுதி 2 · 2 / 4
அந்த நானிலத்தை நாம் திரும்பிப் பார்த்தால், அந்த நானிலத்தைப் பற்றி, தொல்காப்பியருடைய காலம் வரையிலே என்னென்ன சிறப்புகள் சொல்லப்படுகின்றன என்று பார்த்தால் இன்றைய தினம், கடவுளைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துக்கள் - கடவுள் உண்டா இல்லையா? என்று ஆராயப்படுகின்ற இந்தக் கருத்துக்கள் - இவைகளைப் பற்றி இல்லை என்பதற்கு ஆதாரம் தேடுகின்றவர்கள் பழந்தமிழர்களுடைய வாழ்க்கையிலே கடவுளுக்கே இடம் இல்லை என்றுகூட வாதிக்கக்கூடும்.
ஆனால், பழந்தமிழர்களுடைய காலத்தில் கடவுளுக்கு இலக்கியங்களிலே இடம் இருந்திருக்கிறது. தொல்காப்பியம் அதையே சுட்டிக் காட்டுகிறது.
நான் நம்முடைய தியாகராசர் கல்லூரியினுடைய இலச்சினையைப் பார்த்தேன். அந்த இலச்சினையில் மேலே சூரியன் - ஒரு பக்கத்திலே யாழ்; கீழே எழுதப்பட்டிருக்கின்ற எழுத்துக்களில் ‘அன்பும் அறிவுமே சிவம்’ என்கிற எழுத்துக்கள் - இவைகளைக் கண்டேன்.
இப்பொழுதுதான் ‘சிவம்’ என்கிற அந்தச் சொல்லை காணமுடிகிறதே அல்லாமல், தொல்காப்பியருடைய காலத்திலே, அவர் வகுத்துத் தந்திருக்கின்றாரே, நான்கு நிலம், குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல். இந்த நான்கு நிலங்களில் குறிஞ்சியில் உள்ளவர்கள் முருகனைத் தெய்வமாகவும், முல்லை நிலத்திலே வாழ்ந்தவர்கள் திருமாலைத் தெய்வமாகவும், மருத நிலத்திலே வாழ்ந்தவர்கள் வேந்தன் என்று கூறப்படுகின்ற இந்திரனைத் தெய்வமாகவும் - நெய்தல் நிலத்திலே வாழ்ந்தவர்கள் வருணனைத் தெய்வமாகவும் வழிபட்டார்கள் என்று தான் இருக்கிறதே அல்லாமல் தொல்காப்பியர் காலம் வரையில் ‘சிவம்’ அல்லது ‘சிவன்’ என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது.
எனவே முருகன் முன்பே பிறந்து விட்டார்; சிவன் பிறகுதான் பிறந்திருக்கிறார். (பலத்த கைத்தட்டல்)
அதற்குப் பிறகு வேறு சில இனங்கள் இந்தியாவிலே வந்து குடியேறிய காரணத்தால் அந்த இனங்கள் சாதிப் பிரிவுகளைக் கொண்டு வந்தன என்று கூறமாட்டேன் - வரும்போது ஒன்றாகத்தான் வந்தார்கள்; வந்த பிறகு இங்கே பல்வேறு பிரிவு மக்கள் - தொழிலால் வேறுபட்டிருந்தார்கள்.
தொழிலால் வேறுபட்டிருந்த பல்வேறு பிரிவு மக்கள் வருணாசிரமத்தால் பிரிக்கப்பட்டார்கள். பிறப்பிலே வேறுபாடு உண்டு என்ற நிலை உருவாயிற்று.
பிறப்பிலே வேறுபாடு உண்டு என்ற நிலை உருவானது மாத்திரமல்ல; நான் முதலில் குறிப்பிட்ட முருகனை அன்னியில் - திருமாலை அன்னியில் - வருணனை அன்னியில் - இந்திரனை அன்னியில் பல்வேறு கடவுள்கள் அதற்குப் பிறகு தோன்றலாயின. நூறு, இருநூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று ஆயிரக்கணக்கான கடவுள்கள் தோன்றின.
இன்றைக்கும் ஒருவர்தான் கடவுள் என்று வாதிக்கக் கூடியவர்கள் திருமூலருடைய திருமந்திரத்தை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே ஒரே கடவுளைத்தான் வழிபட்டார்கள் என்று ஆதாரத்தை எடுத்து வைத்தாலும் கூட திருமூலர் ஏன் அதைப் பாட முடிந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்கத் தவறிவிடக் கூடாது.
‘ஒன்றே குலமும் - ஒருவனே தேவனும்’ என்று திருமூலர் பாடவேண்டிய இன்றியமையாத நிலை அவருக்கு ஏற்பட்டதற்குக் காரணமே ஆயிரக்கணக்கான கடவுள்களை வழிபடக்கூடிய அளவிற்கு தமிழ் மரபு மாறிவிட்ட காரணத்தினாலேதான்.
‘ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்று திருமூலர் அன்றைக்கு எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதைத்தான் திருவள்ளுவரும்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”
-என்று குறிப்பிட்டார். செய் தொழிலினுடைய வேற்றுமையின் காரணமாகத்தான் பல பிரிவுகள் இருக்க
முடியுமே அல்லாமல், பிறப்பின் காரணமாக சில சாதிகள் இருக்க முடியாது என்று திருவள்ளுவர் அறுதியிட்டுக் கூறினார்.
“சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்; நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர்; பட்டாங்கில் உள்ளபடி”
-என்ற பாடலும் அன்றைக்கு அறவுரையாகத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்பட்டது.
இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்? சாதிப்பிரிவுகள் தமிழ்ச் சமுதாயத்தை புற்றுநோய் போலப் பற்றிக் கொள்ளத் தொடங்கிய காரணத்தினாலே தான் திருவள்ளுவருக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அவர் சொல்ல வேண்டியிருந்தது.
ஏனென்றால் சாதிகள் முதலிலே தொழில் வாரியாகப் பிரிந்து, பிறகு சாத்திர - சம்பிரதாய - ஆண்டவன் பெயரால் இயற்றப்பட்டு சாதிகளே இல்லை என்று கூறுவது ஆண்டவனுக்குச் செய்கின்ற துரோகம் - பாவம் என்று அச்சுறுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாயிற்று.
ஆண்டவனுடைய தலையிலே பிறந்தவர்கள் உயர்ந்த சாதிக்காரர் என்றும், தோளிலே பிறந்தவர்கள் அடுத்த சாதிக்காரர்கள் என்றும், தொடையிலே பிறந்தவர்கள் அதற்கடுத்த சாதிக்காரர்கள் என்றும், காலில் பிறந்தவர்கள் மிக மிகத் தாழ்ந்த சாதிக்காரர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டார்கள்.
நான் வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறேன். அப்படியே கூடப் பிறந்து இருக்கலாம். ஆண்டவனுடைய நெற்றியிலும்; ஆண்டவனுடைய தோளிலும்; ஆண்டவனுடைய தொடையிலும்; ஆண்டவனுடைய காலிலும் கூடப் பிறந்திருக்கலாம்.
அதன் காரணமாக சாதிகள் வெவ்வேறாக ஆகி இருக்கலாம். ஆனால் நான் ஆண்டவனைப் பார்த்து அல்ல: இப்படிப்பட்ட ஒரு கற்பனையை எழுதியோர்களைப் பார்த்து கேட்க விரும்புவது எல்லாம் ஆண்டவன் ஒருவன்தான். அவனுடைய உடலிலே எந்தப் பகுதியிலே பிறந்தாலும் அவன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும். இதில் ஏன் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் - மத்தியமாக வாழ்பவன் என்ற பேதங்கள்? அத்திமரம் உச்சியிலே இருக்கிற கொம்பிலேயும் காய் காய்க்கிறது, கிளையிலும் காய்க்கிறது; வேரிலேயும் காய்க்கிறது.
வேரிலே இருக்கிற காயும் அத்திக்காய்தான், அடிக் கிளையிலே இருக்கிற காயும் அத்திக்காய்தான். நுனிக் கொம்பிலே இருக்கிற காயும் அத்திக்காய்தான்.
நுனிக் கொம்பிலே இருக்கிற காய் பரங்கிக்காய்; அடிக்கொம்பிலே இருக்கிற காய் புடலங்காய்; கீழே இருக்கிற - வேரிலே இருக்கிற காய் பாகற்காய் (கைத்தட்டல்) என்று யாரும் சொல்வதில்லை. எல்லாம் எப்படி அத்திக்காய்களோ, அதைப்போலத்தான் ஆண்டவனுடைய தலைமுதல் கால்வரையிலே பிறந்திருக்கின்ற மனித சாதி அத்தனையும் ஒரே சாதியாக இருக்க முடியுமே அல்லாமல் (பலத்த கைத்தட்டல்) தனித்தனிச் சாதிகள் இருந்திட முடியாது என்கிற வாதத்தைத்தான், ஆண்டவன் பேரால் சாதிப் பிரிவுகளை நம்முடைய நாட்டிலே உருவாக்கியவர்களுக்குச் சொல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.
