குறள் வழி நடப்பீர்
பகுதி 1 · 1 / 4
குறள்வழி நடப்பீர்
உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு என்ற கொள்கையோடு வாழ்ந்து இந்தக் கலைக்கோயில் - அறிவாலயம் உருவாவதற்கு பெரும் பணி மேற்கொண்டு - மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற தியாகராசர் அவர்களுக்கு, என்னுடைய இதயமார்ந்த நன்றியுணர்வைத் தெரிவித்து இந்த இளங்கோ மன்றத்தினுடைய தொடக்க விழாவில் என்னுடைய உரையை ஆற்ற முற்படுகிறேன்.
இளங்கோ மன்றத்தினுடைய தொடக்கவிழா; செங்குட்டுவன் மன்றத்தினுடைய விழாப்போல அவ்வளவு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளங்கோ புலவர்; எழுத்தில் வேகமிருந்தாலும் அவருடைய தன்மை, மென்மையானது. செங்குட்டுவன் அவ்வாறு அல்ல; களம் பல கண்டவன். இமயம்வரை படையெடுத்துச் சென்று பகையை முறியடித்து, கண்ணகிக்குச் சிலை வடிக்க கனகவிசயர் தலையில் கல்லேற்றி வந்தவன்.
இந்த மண்டபத்திற்குள்ளே நான் நுழையும்போது நீங்கள் காட்டிய எழுச்சி; சேரன் செங்குட்டுவன் போருக்குச் சென்ற நேரத்தில் அவனுடைய வீரர்கள் எழுப்பிய முரசின் முழக்கத்தைப்போல இருந்ததே அல்லாமல், இளங்கோ மன்றத்தில் நடைபெறுகின்ற ஒரு இனிய நிகழ்ச்சியாக எனக்குத் தெரியவில்லை. காரணம்
எழுச்சிக் காவியத்தை என் முன்னால் நான் இப்பொழுது பார்க்கிறேன். உணர்ச்சி ஓவியத்தை என் முன்னால் நான் இப்பொழுது பார்க்கிறேன்.
மாலை அணிவித்தவர்கள் - வரவேற்றவர்கள் அத்தனை பேரும், என்னை வாழ்த்திப் பாராட்டியபோது நான் வந்திருக்கிறேன் என்பதில் அவர்கள் காட்டிய மகிழ்ச்சியைவிட ஏதோ ஒன்றைப் பறிகொடுத்து விட்டோம் என்பதில் உள்ள பரபரப்பு அதிகமாகத் தென்படுகிறது. (கைத்தட்டல்) நம்முடைய தாளாளர் திரு. கண்ணன் அவர்கள் நான் கல்லூரிக்குள் நுழைந்து அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, என்னிடத்தில் சொன்னார்: 66-ல் இந்தக் கல்லூரிக்கு வந்தீர்களாம்; அப்பொழுது நான் மிக மிக இளைஞன்; பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு; இப்போது வந்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் வருவதென்று சொன்னால்; எதற்கு வருவதென்று, இராமாயணம் படித்த உங்களுக்குத் தெரியும் (மகிழ்ச்சி - ஆரவாரம்) நான் இங்கே கம்பனைப்பற்றி பேசப் போவதில்லை. (மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம்) இளங்கோ மன்றத்தைத்தான் தொடங்கி வைக்க வந்திருக்கிறேன்.
இந்தக் கல்லூரியில் தமிழ் மணம் கமழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும், தமிழ் உணர்வு செழித்திட வேண்டும் என்பதற்காகவும், தமிழர்கள் இன உணர்வு பெற்றிட வேண்டும் என்பதற்காகவும், தியாகராசர் அவர்கள், அருந்தொண்டு ஆற்றியது மாத்திரமல்ல; எங்களைப் போன்றவர்களை எங்களுக்கு வழி காட்டியாக இருந்தவர்களை, எங்களை ஒரு காலத்தில் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருந்தவர்களை இந்தக் கல்லூரிக்கு
அழைத்துப் பேச செய்த முதல் பெருமைக்குரியவராக தியாகராசர் அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் எடுத்துக் காட்டுவது நன்றி தன்மைக்கு அடையாளமாக இருக்குமென்று கருதுகிறேன்.
மாணவ மணிகள் எதிர்காலத்தினைப் பற்றி, சிந்தித்துச் செயலாற்ற வேண்டியவர்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நிகழ்காலத்தில் உள்ள நிலைமைகள் தடங்களாக இருந்தாலும், கடந்த காலத்து வரலாறுகளும் - இலக்கியங்களும் அந்த சிந்தனைக்கு ஏற்ற உரங்களாக அமைந்திட வேண்டும்.
பேராசிரியர் பெருமக்களிடத்தில் சங்க இலக்கியப் பாடல்களைக் கேட்டவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். நான் நன்றாக அறிவேன்; இருந்தாலும் உணர்ந்தவைகளையும் - அறிந்தவைகளையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதில் தவறில்லை.
நம்முடைய தாய் மொழி தமிழ்! மூத்த மொழி என்று பெருமையோடு பேசிக் கொள்கிறோம்; நம்முடைய மொழிக்குரிய இலக்கணம் மிகமிகத் தொன்மை வாய்ந்த இலக்கணம், தொல்காப்பியத்தைவிட தொன்மை வாய்ந்த இலக்கணமானாலும் நமக்கு முழு உருவத்தில் கிடைத்த இலக்கணம் தொல்காப்பியம் என்கிற அளவிற்கு நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழி பெருமை பெற்ற மொழியாகும்.
அத்தகைய இலக்கண எழிலைப் பெற்ற நாம் - இலக்கியச் செழிப்பைப் பெற்ற நாம் - வரலாறுகள் முழுமையாகக் கிடைக்காவிட்டாலும்; அந்த வரலாறுகள் எல்லாம் வீர வரலாறுகளாகவே உடையவர்களாக இருந்த நாம் - இன்றைக்கு நாம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதென்றால், ஒரு
கல்லூரியினுடைய மாணவன் படித்து, தேர்வு எழுதி, வெற்றி பெற்று, பட்டம் பெற்று; வெளியிலே செல்லுகின்ற நேரத்திலே ஏதோ உத்தியோகம் பார்க்கலாம்; வேலை ஏதாவது கிடைக்குமா? அல்லது கிடைக்கிற வரையிலே மாதம் ஐம்பது ரூபாய்தான் கிடைக்குமா? (கைத்தட்டல்) அதாவது கிடைக்குமா? (மாணவர்கள் ஆரவாரம்) என்கிற இந்த நிலையிலே உள்ள எதிர்பார்ப்பல்ல - நான் உங்களிடத்திலே கோருவது.
பழந்தமிழர்களுடைய காலமே அப்படியே மீண்டும் வரவேண்டும் என்றும் நான் கூறமாட்டேன்.
ஆனால் பழந்தமிழர்களுடைய காலத்திலே நாம் பெற்றிருந்த அந்தப் பெருமைகள் - பழந்தமிழர்களுடைய காலத்திலே நாம் பெற்றிருந்த அந்த வளங்கள் - அறிவுச் செல்வங்கள் இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணம் - நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணம் - உலகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழுகின்ற வகையிலே தமிழர்களுக்குக் கிடைத்திட வேண்டும்.
அந்த நிலையை நாம் உருவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அந்தச் சிந்தனைக்கு உரமாகத்தான் நம்முடைய பழைய இலக்கியங்களைப் புரட்டிப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொல்காப்பியருடைய காலத்தில் நமக்குக் கடவுள்கள் இல்லாமல் போய்விடவில்லை. நம்முடைய நிலமே நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையாயும்.
ஐந்து நிலங்கள் என்று சொன்னாலும்கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாவது நிலமாக பாலை என்ற பகுதியை சொன்னாலும்கூட, நம்முடைய தென்னகத்தைப் பொறுத்த வரையில் - தமிழகத்தைப் பொறுத்தவரையில் - பாலை நிலம் என்பது தனியாக எங்கும் சங்க காலத்திலேயோ, தொல்காப்பியருடைய காலத்திலேயோ இருந்து கிடையாது.
பாலை என்பது அவ்வப்பொழுது முல்லை நிலத்தில் உருவாகும்; அதைப் போலவே குறிஞ்சி நிலத்திலேயும் உருவாகும்.
வறண்ட காலம்தான், பாலை நிலப்பகுதி என்று கருதப்பட்டது.
எனவேதான், பாலை என்பது அவ்வப்பொழுது பற்பல நிலங்களிலே உருவாகின்ற காரணத்தினால் ஐந்து நிலங்கள் என்று கூறுவதைவிட, நான்கு நிலங்கள் என்று கணக்கிட்டதன் காரணமாகவே நானிலம் என்கிற பெயர்கூட வந்ததென்று புலவர் பெருமக்கள் கூறுவார்கள்.
