கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழா
பகுதி 2 · 2 / 3
தேங்கிய நீரிலே பாசி படிகிறதே; அதைத்தான் கவிஞர் பித்தன் வாயிலாக ஆடை என்று சொல்கிறார்.
“அணைந்த நெருப்புக் தான் சாம்பலை அணிந்து கொள்கிறது. தோலும் ஆடைதான் என்பதை பாம்பு அறிந்திருக்கிறது நீங்கள் அறியவில்லை.” (கைதட்டல்)
தோல் கூட ஆடைதான் என்பதை பாம்பு அறிந்திருக்கிறதாம். இந்த ஆடை என்பது - நான் முதலிலே குறிப்பிட்டேனே - தேங்கிய நீர்தான் பாசியை உடுத்திக் கொள்கிறது என்று, அதைப் போல பாலைக் கூட சூடாகக் காய்ச்சி ஆற வைத்தால், மேலே ‘ஆடை’ உருவாகிறது. அதை ஆடை என்கிறோம். அந்த ஆடையைக் கொண்டு வந்து தேங்கிய நீரில் திணிக்கிறார் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள். அது கூட பாசியை உடுத்திக் கொள்கிறது.
இந்தப் பித்தன் என்ற கவிதைத் தொகுப்பு முழுவதையும் படித்துப் பார்த்தால் - எனக்குத் தோன்றுகின்ற எண்ணம், அவரே முன்னுரையிலே குறிப்பிட்டதைப் போல எதிர்மறையாக எல்லாவற்றையும் சொல்வது என்கிற ஒரு முடிவோடு சொல்லப்பட்ட விஷயங்கள். எதிர்மறை உடன்பாடு என்பதில் எதிர்மறையாகச் சொல்லப்பட்டவை. “பாசிட்டிவ்”, “நெகட்டிவ்” என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அது தனித்தனியாக இல்லாமல் ஒன்றாகச் சேர்ந்தால்தான் ஒளியே கிடைக்கும் (கைதட்டல்).
முதலில் நெகட்டிவ் தயாராகிறது. புகைப்படத்திலே கூட முதலில் தயாராவது நெகட்டிவ்; பிறகு அது பாசிட்டிவ்வாக படமாக உருப் பெறுகிறது. (கைதட்டல்) அதை மனதிலே வைத்துக் கொண்டு படித்தால் எல்லாம் பாசிட்டிவ்லேயே - அந்த அணுகுமுறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
“அநாதை” என்ற தலைப்பில் -
“யார் அந்த அநாதை?” என்று கேட்டேன்.
கவிஞர் கேட்கிறார். அதற்குப் பித்தன் சொல்கிறான்.
“உண்மை” என்றவன், (அந்த அநாதையின் பேர் உண்மையாம்) “கடைத்தெருவில் அது அநாதையாக அழுது கொண்டிருந்தது. அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை” என்று கூறினான்.
(உண்மை கடைத்தெருவிலே அநாதையாக அழுது கொண்டிருந்ததாம். அதை யாருமே அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.)
“ஏன்?” என்றேன் “நெற்றியில் திருநீறோ, நாமமோ இல்லை, மார்பில் சிலுவை இல்லை, தலையில் தொப்பியில்லை, அதனால் அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை” என்றான். (கைதட்டல்)
அடையாளம் கண்டு கொண்டிருந்தால் அயோத்தி பிரச்சினை அல்லவா வரும்? (கைதட்டல்) எனவே இது நெகட்டிவ் அப்ரோச் - எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டு ஒரு பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் - இவைகள் எல்லாம் இருந்தால்கூட எல்லோரும் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுவதற்காக அதைச் சொல்கிறார்.
இப்போது கூட பாருங்கள். இந்த ஒரு வாரக் காலத்தில் நான் கலந்து கொண்ட விழாக்களில் முதலில் கலந்து கொண்டது திருநாவுக்கரசு அவர்களின் பொன் விழா; நேற்று கலந்து கொண்டது, நம்முடைய கிறித்தவ பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களின் மணிவிழா; இன்று நான் கலந்துகொள்கிற விழா, கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் மணிவிழா. (கைதட்டல்) இந்து,
கிறித்தவர், முஸ்லீம் என்ற இந்த மூன்று விழாக்களிலே கலந்து கொள்கிறேனே (கைதட்டல்) இது அடையாளம் தெரிந்தாலுங்கூட எல்லாவற்றிலும் நானே கலந்து கொள்வதிலிருந்து எல்லாமே ஒன்றுதான். இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், கிறித்தவராக இருந்தாலும், இந்து முஸ்லீம் சிக்கி சாயி, ஆபஸ் பே ஹை பாயி, பாயி என்பார்களே (சிரிப்பு) அந்தப் பாடலை உள்ளடக்கிய அந்த உணர்வை எடுத்துக் காட்டத்தான் நெகட்டிவ் அணுகுமுறையிலே கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் ஒரு பாசிட்டிவ் செய்தியை நமக்குச் சொல்கிறார்.
இன்னொன்று “பக்கவாதம்” என்று ஒரு தலைப்பு. அதிலே, ஒரு அருமையான தத்துவம்.
“ஒன்றை நல்லது என்கிறீர்கள் ஒன்றைக் கெட்டது என்கிறீர்கள் இது குருட்டுத் தீர்ப்பல்லவா?”
என்று பித்தன் கேட்கிறான். ஒன்று நல்லது என்கிறீர்கள். இன்னொன்று கெட்டது என்கிறீர்கள், இது குருட்டுத் தீர்ப்பல்லவா? என்று கேட்கிறான்.
“உங்கள் தீர்ப்பு உண்மையில் தீர்ப்பல்ல ஒரு பக்க வாதம் (ஒன் சைடு ஆர்கியுமெண்டாம். தமிழிலே ஒரு பக்க வாதம் நிறுத்திச் சொன்னால் ஒரு பக்கவாதம்) போர்வையைக் குளிர்காலத்தில் நல்லது என்கிறீர்கள் கோடைக்காலத்தில்
கெட்டது என்கிறீர்கள் போர்வையில் இல்லை நல்லதும் கெட்டதும். விசிறியைக் கோடைக்காலத்தில் விரும்புகிறீர்கள், குளிர்காலத்தில் வெறுக்கிறீர்கள் விசிறியிடம் இல்லை விருப்பும் வெறுப்பும்.
மழை பெய்தால் குடியானவன் போற்றுகிறான் குயவன் தூற்றுகிறான் மழையிடம் இல்லை பாரபட்சம். இது நல்லது இது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடு ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா?”
எவ்வளவு அருமையான உவமை பாருங்கள்! நல்லது கெட்டது என்ற இரண்டு சொல்லுக்கு இடையில் - இந்த இரண்டு தன்மைக்கு இடையிலே இருப்பது பெரிய இடைவெளி அல்ல. மிகச் சிறிய இடைவெளிதான். ஒரு இழை போன்ற இடைவெளிதான் என்று சொல்ல வந்த கவிஞர் இந்த இடைவெளி பெரிய அகழி என்று சொல்லவில்லை; சிறிய வாய்க்கால் என்று சொல்லவில்லை; ஆறு தாண்டும் காவேரி என்றும் சொல்லவில்லை. பிறகு என்ன சொல்கிறார்? நல்லது
கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடு ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா? ஓடுகின்ற நீரில் கோடு கிழித்தால் எவ்வளவு நேரம் தாங்கும் அது? கிழிக்கும் போதே இரண்டும் ஒன்றாகிவிடும். அந்த அளவிற்கு மெல்லிய இடைவெளிதான். நல்லது கெட்டது என்ற இந்த இரண்டு தன்மைகளுக்கும் இடையே இருக்கிறது என்கிறார்.
மற்றொன்று, எதையதை நாம் ரசிக்க மாட்டோமோ, அதையெல்லாம் பித்தன் ரசிக்கிறான். பித்தனா ரசிக்கிறான். பித்தன் என்ற பெயரில் அப்துல் ரகுமான் ரசிக்கிறார். “காயங்களை” ரசிக்கிறார்.
“காயங்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன் இருட்டின் உடலில் இந்த நட்சத்திரக் காயங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” என்றான்
(பித்தன் என்ற மனசாட்சி ரகுமானிடம் இவ்வாறு கூறுகிறது)
மற்றொரு அழகான அருமையான சிந்திக்கத் தக்க நினைத்து நினைத்துப் பாராட்டத்தக்க ஒன்று.
