உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழா

பகுதி 1 · 1 / 3

கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழா உரை

இன்று காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இனிய மணிவிழா நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு கவிஞர் அப்துல் ரகுமானை வாழ்த்துவதிலும், பாராட்டுவதிலும் மிகுந்த பெருமையும் பேருவகையும் கொள்கிறேன். மூன்று நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞரைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்றும் மணி விழாவையொட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் பெயரால் ஒரு அறக்கட்டளையும் தொடங்கப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ் நிலத்தில் தமிழை மேலும் வளர்ப்பதற்காக இன்றுள்ள அரசின் சார்பாக - கடந்த காலங்களில் இருந்த அரசுகள் தொடங்கி, இடையிலே வந்த ஆட்சிகளால் தொடராமல் விட்டுப் போன அந்தப் பணியினை இந்த அரசு விரிவாகவும், வேகமாகவும் ஆர்வத்தோடும், அக்கறையோடும், நடத்திக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் கவிஞர் அப்துல் ரகுமானுடைய மணிவிழா நடைபெறுகிறது. இந்த விழா நிகழ்ச்சிக்குத் தருகின்ற உற்சாகமும், ஊக்கமும், தமிழை மேலும் வளர்ப்பதற்கு - தமிழுக்கு உரிய இடம் தருவதற்குப் பணியாற்றி வருகின்ற இந்த அரசுக்கு நிச்சயமாகக்

கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.

தமிழ் வளர்ச்சியில் - நமக்குள்ள இந்த நிலத்தைப் பொறுத்தவரையில் உள்ள ஆதங்கம் எல்லாம் நம்முடைய தமிழ்ப் பெருமக்கள் விளம்பரப் பலகைகளில் கூட தமிழில் எழுதத் தயங்குகிறார்களே என்பதுதான். இவ்வளவு பெரிய விழாவில் இது சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் இதுதான் பெரிய செய்தி. தமிழன் தன்னுடைய வணிக நிலையத்தின் பெயரைக் கூட தமிழில் எழுதத் தயங்குகிறான் என்பதுதான் முக்கியமான செய்தி. சிலருக்குச் சந்தேகம்.

ஒரு வணிக நிலையத்தின் பெயரைத் திடீரென்று மாற்றினால், ஏற்கனவே அது பெற்றுள்ள விளம்பரங்கள் எல்லாம் குறைந்துவிடாதா? அதற்கு முன்பு அந்த நிலையத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள், பெயர் மாறிய காரணத்தால் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடாதா என்று சிலருக்குச் சந்தேகம்.

உதாரணமாக வடமொழியிலேயுள்ள ஒரு பெயரின் பெயரால் ஒரு வாணிப நிலையம் இருந்து - அந்த வடமொழிப் பெயரை மாற்றிவிட்டு, வாணிப நிலையத்தைத் தமிழாக ஆக்கினால் எப்படி மற்றவர்கள் தொடர்பு கொள்ள முடியும்? எப்படி அந்த நிலையத்தை நினைவிலே வைத்துக் கொள்ள முடியும் என்ற இயல்பான சந்தேகம் எழுவது இயற்கைதான். அதற்குத்தான் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். “ஜெயலட்சுமி சில்க் ஹவுஸ்” என்று ஒரு வாணிப நிலையத்தின் பெயர் இருந்தால், அதில் ஜெயலட்சுமி என்கிற பெயரை மாற்றத் தேவையில்லை.

ஜெயலட்சுமி துணிக்கடை என்றோ, ஜெயலட்சுமி பட்டுமாளிகை என்றோ மாற்றி - அந்தப் பெயர் வைக்கப்படலாம் என்று நான் கூறியிருக்கிறேன்.

நாம் இங்கே கூடியிருக்கின்ற இடம் இராஜாஜி மண்டபம். ஆனால் விழாக் குழுவிலே தமிழாய்ந்த தமிழ்

மக்கள் எல்லாம் இருந்தபோதிலும், இராஜாஜி மண்டபத்திலே இந்த விழா நடைபெறுவதாக அழைப்பிதழில் அச்சடிக்கலாம், இராஜாஜி ஹாலில் இந்த விழா நடைபெறும் என்று அச்சடித்திருக்கிறார்கள். குற்றம் சொல்வதற்காக இதை நான் கூறவில்லை. அடுத்து, மற்றவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். இராஜாஜி மண்டபம் என்று சொன்னாலே எல்லோருக்கும் புரியும். அப்படித்தான் பல ஆண்டு காலமாக நாம் நடத்துகின்ற விழாக்களிலே அந்தப் பெயரைப் பொறித்து வருகிறோம்.

இராஜாஜி பெயர் மாற வேண்டாம். ‘ஹால்’ மண்டபமாக ஆனால் போதும் என்பதுதான் இன்றைக்குத் தமிழ் வளர்ச்சியின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.

ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி சொல்ல விரும்புகிறேன். முரசொலி பத்திரிகையில் இராஜாஜி அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் - அவருடைய பெயரைப் போடும்போது “ராசாசி” என்று போடுவார்கள். ஒருநாள் இராஜாஜி அவர்கள் அவருடைய கைப்பட எனக்கு எழுதிய கடிதத்தில் - “அன்புள்ள கருணாநிதி அவர்களுக்கு, உங்களுடைய முரசொலி பத்திரிகையில் என்னுடைய பெயரை ராசாசி என்று போடுகிறீர்கள். ஆனால் எம்.ஜி.ஆர். என்றும் இராஜேந்திரன் என்றும் போடும்போது வடமொழி ‘ஜி’ இருக்கின்றது; நான் மாத்திரம் செய்த பாவம் என்ன?”

என்று தெரிவித்திருந்தார்கள். நான் உடனடியாக முரசொலிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனிமேல் இராஜாஜி என்றே பத்திரிகையில் போடுங்கள் என்று ஆணையிட்டு, இராஜாஜி அவர்களுக்கும் இனிமேல் முரசொலியில் இராஜாஜி என்றே வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுப் பதில் எழுதியிருந்தேன். அதற்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார்கள்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் - வடமொழியில் ஒருவருடைய பெயர் இருக்குமேயானால், அதை அப்படியே மாற்ற வேண்டுமென்பதல்ல. ஆனால் மாற்றக்கூடிய அளவிற்குள்ள “ஹால்” என்பதை “ஹவுஸ்” என்பதை “கம்பெனி” என்பதைத் தமிழிலே மாற்ற முடியுமானால் அதை மாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறேன். ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஒரு கவிஞர் - அந்த உணர்வைத் தமிழ் மக்களிடம் ஊட்டி வருகின்ற ஒப்பற்ற பணியைச் செய்து வருகின்ற நல்ல தமிழர்களுடைய வரிசையிலே - ஆர்வமுள்ள தமிழர்களுடைய வரிசையிலே இருக்கின்ற கவிஞர் என்னுடைய அருமை நண்பர் அப்துல் ரகுமான் என்ற காரணத்தால், இந்த விழாவில் இதைச் சொல்வது மிகவும் பொருத்தமென்று கருதுகிறேன்.

இங்கே மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. என்னை மிகவும் கவர்ந்த “விதை போல் விழுந்தவன்” என்ற சொற்றொடரை வைத்து ரகுமான் அவர்கள் பல நேரங்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. நான் அந்த நூலுக்குத் தந்த முன்னுரையிலே கூட குறிப்பிட்டிருக்கிறேன். அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவைப் பற்றி கவிஞர் ரகுமான் அவர்கள் சுட்டிக் காட்டும்போது என் நெஞ்சு விம்முகிறது. அந்த நிலையிலேகூட, அவர் விதை போல் விழுந்தார் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்ற அந்தச் சொற்றொடரைப் பார்த்தபோது, அந்தக் கவலையைக் கூட ஒருகணம் மறந்து இந்த அற்புதமான உவமையை, சொல்லாடலை, நான் நினைத்து நினைத்து பெருமூச்சு விட்டேன் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஒரு அரிய நூலை வெளியிட்டு அதற்கான மதிப்புரையை முனைவர் நன்னன் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர் பேசும்போது

- ஒரு பேச்சாளி பேசும்போது எதிரே உள்ளவர்களை யெல்லாம் முட்டாளாக நினைத்துக் கொண்டு பேச வேண்டும் என்று சொன்னார். அப்போது நானும், பேராசிரியரும், ரகுமானும் பேசிக் கொண்டோம்; நல்லவேளை, நாம் பின்னால் உட்கார்ந்திருக்கிறோம் (பலத்த சிரிப்பு, கைதட்டல்) என்று ஆறுதல் அடைந்தோம். அப்படி நன்னன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்றால், பேசுகிறவர்களே கூட முட்டாள்களாக இருக்கலாம்; ஆனால் பேசும்போது எதிரே அமர்ந்திருப்பவர்களை நம்மை விட ஆற்றல் குறைந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டால்தான் பேசும்போது அச்சமில்லாமல் பேச முடியும் என்பதற்காகச் சொல்லப்பட்ட கருத்து அது.

அந்தக் கருத்தைத்தான் நன்னன் அவர்கள் இங்கே எடுத்து வைத்து, அவருக்கு உடன்பாடான கருத்துக்களை யெல்லாம் எடுத்துரைத்து கவிஞரை மிகவும் புகழ்ந்து, ஒன்றிரண்டு கருத்துக்களை மிகுந்த நயத்தோடு எடுத்துக்கூறி அவருடைய உரையை நிறைவு செய்திருக்கிறார்.

“பித்தன்” என்ற தலைப்பிலே வெளியிடப்பட்ட நூலைப் பற்றி மதிப்புரை வழங்கியவர் முனைவர் கா. செல்லப்பன் அவர்கள். செல்லப்பன் அவர்களை நான் நீண்ட நாட்களாக அறிவேன். நல்ல ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். நான் எழுதிய “குறளோவியம்” நூலை ஆங்கிலத்திலே அவர்கள் மொழி பெயர்த்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு அது வெளியிடப்பட்ட நிகழ்ச்சி பலருக்கும் நினைவிருக்கும். அத்தகைய ஆங்கிலப் புலமை வாய்ந்த முனைவர் செல்லப்பன் அவர்கள் “பித்தன்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நூலுக்கான மதிப்புரையை வழங்கியிருக்கிறார்.

தம்பி வைரமுத்து - கவியரசு வைரமுத்து - அதில் கவியரசு என்பதை அவர் துறந்து விட்ட காரணத்தினால் - நான் சொல்லும்போது கவியரசு என்று சொல்லுவதை விட, “என் தம்பி” என்று அழைப்பதிலே அதிக இனிமை இருக்கின்ற காரணத்தினால், என் தம்பி வைரமுத்து “முத்தமிழின் முகவரி” என்ற தலைப்பில் நண்பர் ரகுமான் எழுதிய கவிதை நூல் பற்றி மதிப்புரை வழங்கியிருக்கிறார்.

முத்தமிழின் முகவரி என்று என்னைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது முகவரி சரியாக இருந்தால் கூட, அஞ்சல் ஊழியர்களுடைய வேலைநிறுத்தம் காரணமாக அது ஒழுங்காகக் கிடைப்பதில்லை. (சிரிப்பு) அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் முகவரி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்னைப் பல நேரங்களில் பல கவியரங்குகளில் பாராட்டி, அவர் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அது குறித்து தம்பி வைரமுத்து அவர்கள் தன்னுடைய உணர்ச்சிப் பூர்வமான உரையை இங்கே நிகழ்த்தியிருக்கின்றார்.

நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் அப்துல் ரகுமான் அவர்களுக்கும் இந்த இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகளையெல்லாம் இங்கே எடுத்துக்காட்டி அவருடைய இனிய பண்புகளை அவருடைய எளிய தமிழைப் போற்றி புகழ்ந்துரைத்திருக்கிறார்.

இந்தக் கவிதை நூல்களை நான் ஆழ்ந்து படித்தேன். எப்பொழுதுமே பாராட்டு விழாக்களுக்கு வருகின்ற சில பேர் அந்தப் புத்தகங்களின் அட்டையை மாத்திரம் தடவுவார்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் ஒரு

நாள் அல்லது இரண்டு நாள் உட்கார்ந்து ஆற அமர அந்த நூல்களைப் படித்து விட்டுத்தான் வருவேன். நன்னன் சொன்னதைப் போல நானும் சில வரிகளைக் கோடிட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். ஆனால், நீண்ட நேரம் பேசுகின்ற நிலையில் நான் இல்லை. அது அப்துல் ரகுமானுக்குத் தெரியும். காலையிலிருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எப்படியும் இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்தோடு இந்த விழாவிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

ரகுமான் அவர்கள் எழுதிய “பித்தன்” என்ற நூலிலே சில கவிதை வரிகளை உங்களிடத்தில் எடுத்துக் காட்டுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

பித்தன் ஆடையைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய செயலைப் பார்த்து ரகுமான் கேட்டிருக்கிறார்.

“சட்டையை ஏன் கிழிக்கிறாய்?” என்றேன். அதற்குப் பித்தன் சொல்கிறான் - “கூடத்தைப் படிக்கவேண்டும் என்றால் உறையைக் கிழிக்கத் தானே வேண்டும்” என்றான். (கைதட்டல்)

எவ்வளவு அருமையான தத்துவம் இதிலே அடங்கி யிருக்கிறது என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பித்தன் தொடர்கிறான்.

“பூக்களும் பறவைகளும் ஆடை அணிவதில்லையே? நீங்கள் ஆபாசமானீர்கள், அதனால் உங்களை ஆடையால் மறைத்தீர்கள்.”

மனிதர்கள் ஆபாசமானவர்களாம் - பூக்களும் பறவைகளும் ஆபாசமற்றவைகளாம். அதனால் அவைகள் ஆடை அணிவதில்லையாம் - இவ்வாறு சொல்லிவிட்டு மேலும் சொல்கிறான்.

“தேங்கிய நீர்தான் பாசியை உடுத்திக் கொள்கிறது.”

முதல் பதிப்பு 2000