கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழா
பகுதி 3 · 3 / 3
“காயம்படும் ஓலைதான் சுவடியாகிறது (கைதட்டல்) எழுத்தாணியால் சுவடியாகிறது. காயம்படும் கல் தான் சிலையாகிறது உளியினால் காயம்படும் மூங்கில் தான் கானம் பாடுகிறது” (கைதட்டல்)
காயத்திற்கு இப்படி வக்காலத்து வாங்குகிறார்.
அடுத்து, “பாரம்”. பாரம் என்றால் எல்லோரும் வெறுப்பார்கள். இந்தப் பாரத்தைத் தூக்கிக்கொண்டு போ என்று சொன்னால் ஒரு சலிப்பு வரும். ஆனால் பித்தன் சொல்கிறான்.
“பாரத்தை இறக்கி வைப்பது மகிழ்ச்சியானது என்கிறீர்கள் ஆனால் மரணத்தில் அழுகிறீர்களே, ஏன்?” (கைதட்டல்)
உயிர் ஒரு பாரம் என்கிறோம்; உடம்பு சுமை என்கிறோம்; சரி, இதை பெரிய பாரம் என்று சொல்கின்ற நீ மரணம் என்றவுடன் ஏன் அழுகிறாய்? அது தான் சுமை இறங்கி விடுகிறதே?
இப்படி இந்தப் பித்தனுடைய உவமைகளை- கவிதைகளை, தத்துவங்களையெல்லாம் படித்துப் படித்து கவிஞர் அவர்களே, நானே அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகிவிட்டேன் (பலத்த கைதட்டல்) என்பதை இராஜாஜி மண்டபத்தில் நான் அறிவிக்கின்றேன்.
அண்ணா அவர்களைப் பற்றி “விதை போல் விழுந்தவன்” என்ற தலைப்பில் வந்துள்ள புத்தகத்தில் “கண்ணில்லாதவனின் கண்ணீர்” என்ற தலைப்பில் உள்ள கவிதையில்,
“இங்கே புதைக்கப்பட்டது வெறும் மனித உடலல்ல, எங்கள் வரலாற்றுப் பேழை. குருடர்கள் நாம், எங்களுக்குக் கிடைத்த
புதையலை மறுபடியும் புதைத்துவிட்டோம் குருடர்கள் நாம்”
(ஏனென்றால், எங்களுக்குக் கிடைத்த புதையலை மறுபடியும் புதைத்துவிட்டோம்:)
அடுத்து, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதை நன்னன் தொட்டுவிட்டு, விட்டு விட்டார். ஆனால் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்றால்,
“அண்ணா நீ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்னதன் பொருள் இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. இறைவனை யாரும் காண முடியாது என்பதைத் தானே அப்படிச் சொன்னாய். (கைதட்டல்) நாம் இறைவனைக் காண முடியாமல் போனாலும் போகட்டும். ஏழைகள் இல்லாதோர் உலகத்தைப் படைப்போம்.”
என்று கொள்கையை, இலட்சியத்தை, குறிக்கோளை சுட்டிக் காட்டுகிறார்.
“அண்ணா சாலை” என்ற தலைப்பில் அண்ணாவைப் பற்றி அவர் பாடும் போது,
“சாலையிலே நாம் நடந்தபோது கால்களைக் கடித்த செருப்புகளை நாம் கழற்றி எறிந்தோம்.”
(எவ்வளவு ஆழமான பொருள் என்று அரசியல் ரீதியாக எண்ணிப் பாருங்கள். அண்ணா சாலையில் நான் நடந்த போது கால்களைக் கடித்த செருப்புகளை நாம் கழற்றி எறிந்தோமாம்)
“வார் அறுந்து போன செருப்புகள் சிலவோ தாமே கழன்று வழியில் விழுந்தன விளம்பர மதிப்புக்காக சில வியாபார வீதிகளும் சில வியாபாரத் தெருக்களும் அண்ணாவின் பெயரைச் சூட்டிக் கொண்டன. அண்ணா சாலையில் நடப்பவன் எல்லாம் அண்ணா வழியில் நடப்பவனா? (கைதட்டல்) அண்ணா, நீ மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய். இப்போதோ சிலர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குத் தான் மணமுண்டு என்கிறார்கள்.”
(அண்ணா சொன்னது - மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார். ஆனால் இப்போதோ சிலர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குத் தான் மணம் உண்டு என்கிறார்கள்)
“நம் தோட்டத்து மல்லிகைக்கு மணம் இல்லை என்கிறார்கள் இன்னும் சிலர் மாற்றானின் காகிதப் பூவுக்கும் மணமுண்டு என்கிறார்கள் உன்னால் வளர்ந்த சிலர் உன்னைவிட வளர்ந்து விட்டார். அவர்களோ மாற்றான் வீட்டுச் சாக்கடையும் மணக்கிறது என்கிறார். அதில் போய்க் குளிக்கவும் தொடங்கி விட்டார். இன்னும் சிலர்
மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மயங்கி அங்கேயே போய்க் குடியேறி விட்டார்கள்.” (கைதட்டல்)
இந்த ஆதங்கம் எல்லாம் அண்ணாவைப் புகழ்ந்துரைக்கின்ற - அண்ணாவிற்கு இரங்கல் தெரிவிக்கின்ற இதயத்தைத் தொடுகின்ற இந்தக் கவிதை வரிகளில் அப்துல் ரகுமான் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
இந்த இனிய விழாவில் நூல்களையெல்லாம் ஏற்கனவே எனக்கு அனுப்பி வைத்து விட்ட விழாக் குழுவினர் இன்று பிற்பகல் அட்டை வேயப்பட்ட நூல்களையும், மலரையும் அத்துடன் இன்று காலை தினமணியிலே வெளிவந்த ஒரு கட்டுரையையும் எனக்கு அனுப்பிவைத்தார்கள். நண்பர் கவிஞர் மீரா அவர்கள் எழுதிய கட்டுரை அது. அதிலே ஒரு வேண்டுகோள் விடப்பட்டிருக்கின்றது.
பாரதியார் ஒரு காலத்திலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதையை சுதேசமித்திரன் பத்திரிகையாலயத்திற்கு அனுப்பி வைத்து ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் எழுதிய கவிதை இது, இதை வெளியிடுங்கள் என்று சொன்னாரென்றும், அது அந்தப் பத்திரிகையிலே வெளியிடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டி - அந்தக் கவிதா மண்டலம் என்று பாரதியாரால் சுட்டிக் காட்டப்பட்ட கவிதா மண்டலம் இன்றில்லை, அப்துல் ரகுமான் அவர்களுடைய மணிவிழாவையொட்டி அந்தக் கவிதா மண்டலத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
அதிலும் ஒரு பிழை நான் கண்டேன். எங்கே அதை உருவாக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரென்றால் மகாபலிபுரம் சாலையிலே, உருவாக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார். அது மகாபலிபுரம் சாலையல்ல. மாமல்லபுரம் சாலை (கைதட்டல்) என்று நான் தம்பி மீராவிற்குத் தெரிவித்துக் கொண்டு - பிழை இருந்தாலுங்கூட கருத்து நல்ல கருத்து என்ற காரணத்தால் - கவிதா மண்டலம் உருவாக தமிழக அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை (பலத்த கைதட்டல்) என்னுடைய அருமை நண்பர் அப்துல் ரகுமான் அவர்களின் மணிவிழாவிலே நான் பிரகடனப்படுத்தி - இந்த விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றிய அனைவரையும் மீண்டும் மீண்டும் பாராட்டி - அவர்களுக்கெல்லாம் நன்றி கூறிக்கொள்கிறேன்.
19-7-98 அன்று கவிக்கோ அப்துல் ரகுமான் மணிவிழாவில் ஆற்றிய உரை
