உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

காரல் மார்க்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் (ஜமதக்னி) வெளியீட்டு விழா

பகுதி 3 · 3 / 4

சந்தாதாரர்கள் என்றால் வாசகர்கள். தந்தை பெரியார் அவர்கள் ‘குடியரசு’ இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபொழுது, இது விற்குமா? இதை மக்கள் ஏற்பார்களா? இந்தக் கருத்தை மக்கள் ஜீரணம் செய்ய முடியுமா? என்றெல்லாம் கேட்ட நேரத்தில் பெரியார் சொன்னாராம்:

“விற்கிறதோ இல்லையோ, நான் குடியரசு பத்திரிகையை அச்சடிப்பேன். எவனும் வாங்குகிறானோ இல்லையோ, அதைப்பற்றி கவலையில்லை. ஒரே ஒரு பத்திரிகையாவது அச்சடித்து அந்த ஒரு பத்திரிகையை நான் ஒருவனே திண்ணையிலே உட்கார்ந்து நானே படித்துப் பார்ப்பேன்” (கைத்தட்டல்) என்று தந்தை பெரியார் சொன்னார்.

இதே கருத்தைத்தான் காரல் மார்க்ஸ் சொல்கிறார். வாசகர்கள் பத்திரிகையின் கொள்கையை நிர்ணயிக்கக் கூடாது. பத்திரிகைதான் வாசகர்களின் கொள்கையை நிர்ணயிக்க வேண்டும் என்று மார்க்ஸ் சொன்னதாக சாமிநாத சர்மா அவர்களின் புத்தகத்திலே வெகு அழகாக அவர் மார்க்சின் இந்த சிந்தனா விலாசத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

காரல்மார்க்சைப் பற்றி நம்முடைய பேராசிரியர்கள் இங்கே பேசும்பொழுது, திராவிட இயக்கத்திற்கும், காரல் மார்க்சினுடைய கொள்கைகளுக்கும் உள்ள உடன்பாடு ஏன்? கம்யூனிச இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள உடன்பாடு - அதைப்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் பல நேரங்களிலே ஆற்றிய உரைகள், எழுதிய

எழுத்துக்கள் இவைகளையெல்லாம் சான்றுகளாக ஆக்கிக் காட்டினார்கள்.

அண்ணா அவர்கள் காரல் மார்க்சைப் பற்றி குறிப்பிடும்போது சொல்கிறார்;

“வளமையினருகே வறுமை; பலத்தினருகே பயம்; இவை ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல; கருத்துலகின் காவலர்களாக விளங்கியவர்கள் அனைவரையும் கதிகலங்க அடித்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்கத் தத்துவ ஞானியின் காலத்திலிருந்து, கி.பி. பதினொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரல் மார்க்ஸ் காலத்திற்கு முன்பு வரை மக்களின் நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமான முடிவை அளிக்கவில்லை.

ஆண்டை - அடிமை உயர்ந்தவன் - தாழ்ந்தவன் மதகுரு - பக்தன் மிராசு - உழவன் பிரபு - பணியாள் முதலாளி - தொழிலாளி

இவர்களிடையே ஏற்பட்ட போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் காரல் மார்க்ஸ். பிரபுக்கள் - முதலாளிகளின் கொடுங்கோன்மை வெகுநாளைக்கு நிலைக்காதென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால்தான், உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று சேர்த்தது; நலிவுற்ற ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒற்றுமைப்படுத்தியது”

என்று அறிஞர் அண்ணா அவர்கள் காரல் மார்க்சைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

இத்தகைய பெருமை வாய்ந்த காரல் மார்க்ஸ் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சாமிநாத சர்மா தன்னுடைய நூலில் கவிதை வரிகளில் வந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவன் மேகங்களுக்கு மத்தியில் தன் இலட்சியத்தைப் பொருத்தி வைத்துக் கொண்டான்.

ஆனால், புழுதி மண்ணிலேதான் அவன் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. அன்றாடம் என்ன தேவையோ அதுதான் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

“நாலா பக்கங்களிலும் நெருக்கப்பட்டான். அவனை வறுமை வாட்டியது. தேவை தின்றச் செய்தது. அவன் பொதுவாக வாழ்க்கையிலே புடமிடப்பட்டான். புடம் போடப்பட்டான்.”

இது சாமிநாத சர்மா எழுதிய நூலில் காணப்படும் கவிதை வரிகள்.

உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். என்னையும் அந்த உணர்வுகளில் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

திராவிட இயக்கத்துக்கும், கம்யூனிசக் கொள்கைகளுக்கும் உள்ள உடன்பாடு இன்று நேற்றல்ல. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உறவாகும். ‘திராவிடர்’ என்றாலே உழைப்பாளிகள்தாம், பாட்டாளிகள்தான் என்ற சித்தாந்தத்தை உண்மைத் தத்துவத்தை தந்தை பெரியார் அவர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். மே தினங்கள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில் எல்லாம் உரையாற்றிய அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் என்றாலே உழைப்பாளிகள்தாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இங்கே பேசிய நம்முடைய அன்பிற்குரிய நல்லகண்ணு அவர்கள், தமிழகத்திலே இன்றைக்கு உருவாயிருக்கின்ற சில மாயைகளை விலக்க, அகற்ற, நம்மால் முடியும். ஆனால், அது ஆழமாக இன்றைக்கு வேரூன்றி விட்டது என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால், உரையாற்றிச் சென்ற நண்பர் சங்கரய்யா அவர்கள், “அது தற்காலிகமானதுதான்” என்று குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள். தற்காலிகமோ, நிரந்தரமோ எதுவாயினும் அத்தகைய மாயைகள் தமிழர்களுடைய மனதை மயக்குவதற்கு இடம் தராமல், தமிழர்களை, உழைப்பாளிகளை, பாட்டாளி மக்களை, இந்தச் சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டிய பெரும் கடமை நமக்கெல்லாம் இருக்கின்றது.

அவர் “நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டோம்” என்று குறிப்பிட்டார். நாங்கள் இந்த மேடையிலே இருப்பதையே மறந்துவிட்டு, நாங்கள் இருவரும் (சி.பி.ஐ., சி.பி.எம்.) ஒன்று சேர்ந்துவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். பிறகு, அவருக்கே நினைவுக்கு வந்து நீங்களும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒன்றாகத்தானே இருக்கிறோம். பிறகு, எப்படி நீங்கள் ஒன்று சேர்ந்து விடுவீர்கள். எங்களை அழைப்பீர்கள் என்று தெரியவில்லை.

எல்லோரும் ஒன்றாக இணைந்து இந்தச் சமுதாயத்தினுடைய எதிர்கால ஏற்றத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாயையை வீழ்த்துவதற்குப் பாடுபட்டாக வேண்டும்.

இந்த உணர்வு எனக்கு இன்று நேற்றல்ல, ஏதோ, இன்றைக்கு ‘மூலதனம்’ நூலினை வெளியிட்டுப் பேசுகிற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நான் யார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க நான் முன்வரவில்லை.

மே தின வாழ்த்து என்னிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிக் கேட்டபொழுதே நான் எழுதிய வாழ்த்து,

“அயர்வை அச்சத்தால் போக்கி இரத்தத்தை வியர்வைக் குளமாக்கி வாடுகின்ற பாட்டாளியும், ஆடுகின்றான் திருநாளென்று”

முதல் பதிப்பு 2000