காரல் மார்க்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் (ஜமதக்னி) வெளியீட்டு விழா
பகுதி 4 · 4 / 4
என்று மே தினத்திற்கு வாழ்த்து எழுதியவன் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறவன் என்பதை மறந்து விடக்கூடாது.
“சிற்றாரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி, நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும் நிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்”
என்று கேட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றவன்தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
இந்த இயக்கத்தில் சிறுபிராயம் முதல் நான் ஈடுபட்ட நேரத்தில் - நேற்றைக்குக்கூட ஒரு விழாவிலே தம்பி துரைமுருகன் பேசும்போது குறிப்பிட்டார். “பெரியாரும், அண்ணாவும், மாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால், கலைஞர் தமிழ்நாட்டில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவராகவே ஆகியிருப்பார்” என்று அவர் குறிப்பிட்டார்.
காரணம் பெரியாருடைய திராவிட இயக்கக் கொள்கைகளும், சமுதாயக் கொள்கைகளும், சுயமரியாதைக் கொள்கைகளும், அண்ணா அவர்களுடைய தமிழ் உணர்வு நிலையும் என்னை ஈர்த்து விட்ட காரணத்தால், முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட்டாக நான் ஆகிவிடவில்லை என்பதை அவர் குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட் என்ற பெயரில் நான் இல்லாவிட்டாலும் கூட நான் ஒரு பொதுவுடைமைக்காரன்தான். நான் ஒரு
கம்யூனிஸ்ட் தான். அதனால்தான் நான் 1983-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய குறளோவியத்தில் காரல் மார்க்சினுடைய வாழ்க்கையை எழுதவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
83-ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்டது குறளோவியம். அந்தக் குறளோவியத்தில் காரல் மார்க்சைப் பற்றி எழுதியுள்ள வரிகளை மாத்திரம் படித்துக் காட்டுகிறேன்.
165 ஆண்டுகளுக்கு முன்பு - இது 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதால் 165 என்று குறிப்பிடுகின்றேன். ஆனால் உள்ளபடியே 180 ஆண்டுகளுக்கு முன்பு - இன்றைய நிலையிலே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வானளாவிய சிந்தனையை நிறுத்திக் கொண்டு பூமிக்குள் கல்லறையாகி விட்ட சமதர்மச் சிற்பி காரல் மார்க்சின் சித்தாந்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவனது பொது உடைமைச் சிந்தனைகளைச் செயலாக்கும் குறிக்கோள் என்றைக்கு வெற்றிபெறும் என்ற ஆர்வத்தோடு உழைக்கும் கூட்டம் இன்னமும் இந்த உலகின் பல நாடுகளில் போர்க்கொடி உயர்த்திக் கொண்டு இருக்கின்றது.
அந்த மாமனிதன் - சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகச் சாமானிய வாழ்வு வாழ்ந்து வறுமையின் கோரப்பிடியில் அடிக்கடி சிக்கி அறுபத்தி ஐந்தாவது வயதில் கண் மூடும் வரையில் தனது கடமையை ஓய்வின்றி ஆற்றியதற்கு எங்கல்ஸ் போன்ற உற்ற நண்பர் ஒருவரும் இருந்த போதிலும் அருகிலேயே இருந்து இறுதிவரையில் இல்லறம் நடத்திய மாதரசு ஜென்னி என்னும் குடும்ப விளக்கின் பெருமையைப் பலர் அறியமாட்டார்கள்.
செல்வக் குடும்பத்தில் உதித்தவள், அழகில் மிகச் சிறந்தவள். அவளை மணக்கப் பலர் தவித்தனர். ஆனால் அவளோ, வளமற்ற குடும்பத்தில் பிறந்த - தனது
அழகிற்குப் பொருத்தமற்ற - தன்னைவிட நான்கு வயது குறைவான காரல் மார்க்சையே மணப்பேன் என்று ஏழு ஆண்டுகள் காத்திருந்தாள். அவ்வாறே மணந்து கொண்டாள். கணவன் நாடு கடத்தப்பட்ட போதெல்லாம் அவளும் அவனுடன் சென்றாள். அவன் கைது செய்யப்பட்டபோது அவளும் கைது செய்யப்பட்டாள்.
அந்தப் பெண்மணி ஜென்னி தங்களின் குடும்ப நண்பருக்கு எழுதிய மடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்:
“எனக்குத் தாங்க இயலாத மார்பு வலி - முதுகு வலி - குழந்தைக்குப் பால் கொடுக்க ஒருத்தியை ஏற்பாடு செய்யக்கூட கையில் போதுமான பணமில்லை. என் மார்பு வலியைப் பொறுத்துக் கொண்டு நானே குழந்தைக்குப் பால் கொடுத்தேன். குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அதனால் என் மார்பு கடியுண்டு ரணமாகி குருதி வழியத் தொடங்கியது. அதனால் பாலும் குருதியும் கலந்து அது குடிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையில் கடன்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் துணிமணிகள், குழந்தைகளின் தொட்டில் விளையாட்டுப் பொம்மைகள் அனைத்தையும் ஏலம் போடுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.
மூன்று நாள் சாவுடன் போராடிய குழந்தை இறந்து விட்டது. அதன் உடலைப் பின்புறத்து அறையில் மூடிவைத்துவிட்டு, நாங்களும் மற்ற குழந்தைகளும் முன்புறத்து அறையில் இரவு முழுவதும் தரையில் படுத்துக்கிடந்தோம். விடிந்தால் அந்தக் குழந்தைக்கு ஒரு சவப்பெட்டி தயார் செய்யக்கூட எங்களால் முடியவில்லை.
நான் மட்டும் தனிமையில் இந்தத் துன்பங்களை அனுபவிக்கவில்லை. ஒருவகையில் நான் கொடுத்து வைத்தவள். என் கணவர்தான் எனக்கு எல்லாம் - அவர் என் பக்கத்திலேயே இருக்கிறார் என்பதே எனக்கு ஆறுதல். நான் அவருடன் அவருக்குத் துணையாக
இருப்பதே என் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரமாகக் கருதுகிறேன். ஆனால், என்னுடையவரிடம் பல வகையிலும் ஆதாயம் பெற்றவர்களில் ஒருவரே உதவிக்கு வருகின்றனர். அதை நினைக்கும்போது என் நெஞ்சம் நெருப்பாகிறது. உதவியற்ற நிலையிலும் கடமையாற்றிடும் அவருடன் துணையாக இணைந்து நிற்பதே எனக்கு இன்பமல்லவா?”
இன்று உலகத்தின் கண்கள் எல்லாம் எந்தக் கருத்துக்களைப் படித்துத் துடிக்கின்றனவோ அந்தக் கருத்துப் புதையலுக்குச் சொந்தக்காரனான காரல் மார்க்சின் இல்வாழ்க்கையில் விளைந்த துன்ப துயரங்கள் ஒன்று இரண்டல்ல ஓராயிரம் - அத்தனையும் தாங்கிக் கொண்டு அவனையும் தாங்கி நின்ற அந்தத் தாய்க் குலத்துத் திருச்சுடர் ஜென்னியை “வாழ்க்கைத் துணைநலம்” என்று வாயார மனமார வாழ்த்த வேண்டாமோ?
இதோ வாழ்க்கைத் துணைநலத்தின் இலக்கணத்தைக் குறள் கூறுகிறது:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்கேற்ற நற்பண்பு கொண்டவளாகி தன் கணவனுடைய பொருள் வளத்திற்குத் தகுந்த வாழ்க்கையை மனக்குறையேயுமின்றி நடத்துகிறவளே வாழ்க்கைத் துணையாவாள் என்ற குறளுக்கு நான் குறளோவியம் தீட்டியபொழுது காரல் மார்க்ஸ்தான் என் நினைவிற்கு வந்தாரென்றால் நான் கம்யூனிஸ்டா அல்லவா என்பதை நல்லகண்ணு அவர்களின் நல்ல தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.
ஆனால் கம்யூனிசம் - கம்யூனிசம் என்கின்ற பேரிலே தமிழகத்திலே மேலும் பரவாததற்குச் சில காரணங்கள் உண்டு. கம்யூனிசம் அண்ணாவின்
கொள்கைப்படி, பெரியாரின் கொள்கைப்படி, நான் கருதுவதின்படி, இந்த மண்ணுக்கு ஏற்றவாறு கம்யூனிசம் வளர்க்கப்படவேண்டும் என்பதை நான் உணர்ந்து சிந்தித்து அந்த வகையிலே நம்முடைய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இனம் - என்றெல்லாம் இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அந்த பல தேசிய இனங்களுக்கு, பல கலாச்சாரங்கள் இருக்கின்றன. பல மொழிகள் இருக்கின்றன. இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்து இந்த மண்ணுக்கு ஏற்ற வகையில் கம்யூனிசத்தை நாம் முயன்றால் இங்கே பரப்ப முடியும் என்பதையும் இங்கே எடுத்துக்காட்டி அருமையான புதையல் போன்ற ஒரு கருவூலம் போன்ற நூலினை நமக்கெல்லாம் தந்துள்ள தம்பி நாகநாதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த நூலை தமிழாக்கித் தந்துள்ள ஜமதக்னி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறை வாசத்திலே பல ஆண்டுகாலம் இருந்தவர். தியாக சீலர். தான் மாத்திரமல்லாமல் தன்னுடைய குடும்பத்தையே இந்திய நாட்டு விடுதலைக்காக அர்ப்பணித்தவர். அவருடைய அருமைச் செல்வி சாந்தி அவர்களும், சாந்தியினுடைய அருமைக் கணவர் நாகநாதனும் அந்த தியாகசீலருடைய புகழைப் பரப்புகின்ற வகையில் அவர் பெரும்பாடுபட்டு நாலைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதிக் குவித்த தொழிலாளர்களுடைய இலக்கியத்தை இன்றைக்கு வெளியிட முன்வந்தமைக்காக என் சார்பிலும், உங்கள் அத்தனை பேருடைய சார்பிலும் நன்றியையும், பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் அவர்களுக்குத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
2-5-98 அன்று ஜமதக்னி மொழி பெயர்த்த காரல் மார்க்சின் நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை
