காரல் மார்க்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் (ஜமதக்னி) வெளியீட்டு விழா
பகுதி 2 · 2 / 4
“மூலதனம் (Das Capital) ஐரோப்பா, கண்டத்தில் பாட்டாளி வகுப்பினரின் விவிலியம் (கிறித்துவ மறை நூல்) என அழைக்கப்படுகிறது. ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் மட்டுமின்றி; பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா - மேலும் இத்தாலியிலும், ஸ்பெயினிலும் கூட இந்த நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகள் பாட்டாளி வகுப்பினர் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாக மலர்ந்து வருகின்றன.”
என்று எங்கல்ஸ் 1886-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரையிலே குறிப்பிடுகிறார்.
மேலும் ‘மூலதனம்’ என்ற அந்த நூலைப் பற்றி எங்கல்ஸ் குறிப்பிடும்பொழுது;
“மார்க்சியக் கண்ணோட்டத்தில் மூலதனம் என்றால் என்ன என்பது பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது. பொதுவான கருத்தில் ஏதாவது ஒருவகையான உடைமை உள்ளவர்கள் எல்லாம் முதலாளிகள் அல்லது மூலதனக்காரர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
இதன் அடிப்படையில் சுயமாக உழைக்கும் சிறு வர்த்தகர்கள் - கடைக்காரர்கள், சிறு பட்டறை உரிமையாளர்கள் எல்லாம் முதலாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களிடத்தில் சிறிதளவு உடைமை உள்ளது என்பது உண்மைதான்.
ஆனால், அவர்களும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். இவர்களின் உடைமை பிரதானமாகப் பிறரைச் சுரண்டுவதன் மூலம் பெருகும் மூலதனமாகச் செயல்படவில்லை.
அதேபோல பெட்டியிலே பூட்டி வைக்கப்படும் வட்டி வியாபாரமும் மூலதனமாகாது.
சாதாரண வட்டிக்கடன் பிரதானமாக அவ்வப்போது ஏற்படும் செலவுக்காக வாங்கப்படுவதுதான். இவைகள் எல்லாம் உழைப்பைச் சுரண்டும் மூலதனமாகாது. வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் முதலாளிகள் மூலதனத்தின் ஒரு பகுதியைப் பெறுகின்றார்கள். சுருக்கமாகச் சொன்னால் மூலதனம் என்பது மனித உழைப்பைச் சுரண்டுவதில் ஈடுபடுத்தப்படும் பணத்தைத்தான் குறிக்கிறது.”
மனித உழைப்பைச் சுரண்டுவதில் ஈடுபடுத்தப்படும் பணத்தைத்தான் ‘மூலதனம்’ என்பது குறிப்பிடுகிறது என்ற சீரிய, செழுமிய கருத்தை ‘மூலதனம்’ என்கிற மொத்த நூலுக்கும் ஒரே ஒரு வரியில் எங்கல்ஸ் அவர்கள் பொருள் விளக்கம் தந்து, நம்மையெல்லாம் சிந்தனையில் ஆழ்த்துகின்றார்.
இத்தகைய அருமையான ஒரு தத்துவ நூலை அரும்பாடுபட்டு தந்த காரல்மார்க்ஸ் அவர்கள் எங்கே பிறந்தார்கள். பொதுவுடைமைப் பூங்கா என்று வர்ணிக்கப்படுகின்ற ரஷ்யாவிலா? அல்லது செஞ்சீனத்திலா? அல்ல. ஜெர்மனியிலே ‘ட்ரியர்’ என்ற ஊரில் பிறந்தார். அந்த ஊர் புரோகிதர்களின் அடைக்கல ஸ்தானமாகவும், வைதீகத்தின் மூலஸ்தானமாகவும் இருந்த ஊர்.
காரல் மார்க்ஸ் பிறந்த ஊரிலிருந்து, கிறிஸ்தவ தேவாலயங்கள், மடங்கள், மத நிறுவனங்கள், பாதிரிமார்களின் உறைவிடங்கள் முதலியவற்றைப் பார்த்து “கெதே” என்ற ஜெர்மானியக் கவிஞன் பிரமித்துப் போனதாகக் கூறுகிறான்.
அவ்வளவு மத குருமார்கள் நிரம்பிய ஊரில் காரல் மார்க்ஸ் பிறந்தார். இப்படி மத ஆதிக்கம் நிறைந்து விளங்கிய ‘ட்ரியர்’ என்னும் ஊர் காரல் மார்க்ஸ் அவர்களுடைய மூதாதையர்கள் யூதர்கள் என்பதையும் உலகத்திற்குச் சொல்கிறது. அவர்களுடைய பரம்பரைத் தொழில் - காரல் மார்க்சின் மூதாதையர்களின் பரம்பரைத் தொழில், இங்கே நம்முடைய ஆனைமுத்து அவர்கள் குறிப்பிட்டார்களே. அந்தப் பெயரையே மாற்றிவிட்டார்கள். காரல் மார்க்சின் பரம்பரைத் தொழில் புரோகிதம்.
ஆனால், காரல் மார்க்சின் தந்தை ஹிர்ஷெல் மார்க்ஸ் வழக்கறிஞர் தொழில் செய்தார். அப்படி அவர் வழக்கறிஞர் தொழில் செய்வதை யூதர்களே தடுத்தார்கள். யூதர் என்பதால் காரல் மார்க்ஸின் தந்தைக்கு வழக்கறிஞர் தொழிலில் போதிய வருவாயும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக 1821-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி ஹிர்ஷெல் மார்க்ஸ் யூதனாக இருந்து வழக்கறிஞர் தொழில் நடத்த தடை இருக்கின்ற காரணத்தால், வருமானம் இல்லாத காரணத்தால், யூதனாக இருப்பதனால் தான் வழக்கறிஞர் தொழிலுக்குத் தடை என்ற கேள்வியை எழுப்பி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
அவர் அப்படி மாறிய பிறகு, ஓராண்டுக் காலம் கடந்த பிறகு, அவருடைய மனைவியும் கிறித்துவ மதத்திற்கு மாறினார். இப்படி மத உணர்வு பெருகியிருந்த ஊரிலும், மதம் மாறிய பெற்றோர்கள் இடையிலும் பிறந்து வளர்ந்த காரல் மார்க்ஸ்தான் பின்னாளில்; “மதம்
மக்களுக்கு அபினி” என்று குறிப்பிட்டார் என்று வரலாற்று ஆசிரியர்கள் புகழ்ந்து கூறுகின்றார்கள்.
இவர் ஆரம்பத்திலே பத்திரிகைத் தொழிலில்தான் ஈடுபட்டார். இவர் பிறந்த அந்தப் பிரதேசத்திற்குப் பெயர் ரைன்லாந்து. ரைன்லாந்து என்கின்ற அந்தப் பிரதேசத்தின் பெயரை வைத்து “ரைன்லாந்து கெஜட்” என்கின்ற ஒரு பத்திரிகையில் அவரும், அவருடைய நண்பர்களும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு அதைத் தொடங்கினார்கள். அந்தப் பத்திரிகை 1812-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் நாள் தொடங்கப்பட்டது.
படிப்பை முடித்துவிட்டு, வேலையில்லாமல் இருந்த காலத்தில் இந்தப் பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகளின் காரணமாக, அந்தப் பத்திரிகையும் காரல் மார்க்சினுடைய பெயரும் மிக பெரும் புகழுக்கு உள்ளாயின.
ஆனால், அந்தப் பத்திரிகையினுடைய மதிப்பு உயர்ந்த பிறகு, ஜெர்மானிய அரசு அவர்மீது ஒரு கண் வைக்கத் தொடங்கியது. காரணம், அரசைக் கண்டித்து, அரசினுடைய கொள்கைகளைக் கண்டித்து, அதனுடைய திட்டங்களைக் கண்டித்து, அவர் எழுத அவர்மீது ஜெர்மானிய அரசினுடைய கண் பட்டது. எனவே, பல அடக்குமுறைகளுக்கு அவர் ஆளாகவேண்டியிருந்தது.
அந்தப் பத்திரிகையிலே அவர் எடுத்துவைத்த எண்ணம் நம்முடைய சிந்தனையில் எல்லாம் என்றென்றும் பதிய வேண்டிய ஒரு எண்ணமாகும்.
“அரசாங்கத்திற்காக மக்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கூடாது. மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்கிறது என்ற எண்ணம்தான் தேவை” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இதற்குப் பிறகு ரைன்லாந்து பத்திரிகையை அவர் நிறுத்திவிட்டு, வேறு இடம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசின் கெடுபிடிகளால், பத்திரிகையின்
கொள்கைகளைப் பற்றி இன்னொரு கருத்தையும் மார்க்ஸ் வெகு அழகாக சொல்கிறார்.
“சந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கையை நிர்ணயிக்கக் கூடாது. பத்திரிகைதான் சந்தாதாரர்களின் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டும்.”
