உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

காரல் மார்க்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் (ஜமதக்னி) வெளியீட்டு விழா

பகுதி 1 · 1 / 4

காரல் மார்க்சின் மொழிபெயர்ப்பு நூல்கள் (ஜமதக்னி) வெளியீட்டு விழா

சற்றொப்ப இரண்டரை மணி நேரம் கலைவாணர் அரங்கத்தில் நாமெல்லாம் பல்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்று விரைவில் உங்களுக்கெல்லாம் இந்த மண்டபத்திலிருந்து விடுதலை அளிப்பேன் என்ற உறுதியையும் வழங்கி என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா?” என்ற கேள்வியைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுப்பினார். இந்தக் கேள்விக்கு விடை காணும் அந்த வழியைத்தான் நூற்றாண்டுக் காலமாக உலகத்திலே உள்ள பல சிந்தனையாளர்கள் தேடித் தேடி அதிலே மாபெரும் சிந்தனையாளனாகக் காரல் மார்க்ஸ் தோன்றி இந்த மூலதனத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய இந்திய மொழியில் - அதுவும் நம்முடைய தமிழ் மொழியிலேயே முழுவதும் மொழியாக்கம் செய்து தந்த பெருமை - அந்தப் பெருமையை நாமெல்லாம் பெற்று மகிழ்கின்ற இந்த நல்ல வாய்ப்பான நேரத்தில் இல்லை என்றாலும் கூட அந்தப் பெரும் மொழிபெயர்ப்பாளர் ஜமதக்னி அவர்களுக்குத்

தமிழ்ச் சமுதாயம், இலட்சிய வெறி கொண்ட இளைஞர் சமுதாயம், தொழிலாளர் வர்க்கம் என்றென்றும் தன்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் காணிக்கையாக்கத் தயாராக இருக்கின்றது.

இந்த நூலை வெளியிடுவதற்காக நம்முடைய நாகநாதன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி இங்கே பேசிய முனைவர் பேராசிரியர் ஜெகதீசன் குறிப்பிட்டார் என்று கருதுகிறேன்.

திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால்,

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்

என்ற குறளை மாற்றி “மருமகன் மாமனாருக்கு ஆற்றும் உதவி என்று பாடியிருப்பார்.” என்று குறிப்பிட்டார். திருவள்ளுவர் இருந்தால் அப்படி வெண்பா பிழையாக நிச்சயமாகப் பாடமாட்டார் (கைத்தட்டல்) என்பதை நான் ஜெகதீசனுக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வள்ளுவரே சரியாகத்தான் பாடியிருக்கிறார்,

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்

எனும்பொழுது, குறளிலே மகன் என்று வருகின்ற இடமெல்லாம் அது மகனை மாத்திரம் குறிப்பதல்ல, மகளையும் குறிப்பதுதான். இதை குறளுக்கு உரை கண்ட பல புலவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றார்கள்.

எனவே, “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்” என்ற இடத்தில் மகன் என்று மாத்திரம் எடுத்துக்கொள்ளாமல், “மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ்சொல்” என்று எடுத்துக்கொண்டால், “அது எப்படி நாகநாதன் அல்லவா

இதைப் பதிப்பித்தார். எப்படி மகளுக்கு இந்தப் பெருமை சேரும்?” என்று முனைவர் ஜெகதீசன் கேட்பாரேயானால், இங்கே ஓர் உண்மை விளக்கப்பட்டது.

75-ஆம் ஆண்டு இங்கே நடைபெற்ற திருமணம் காதல் திருமணம் என்ற உண்மை விளக்கப்பட்டது. இந்த மகளுக்கு இந்த மணமகனைத் தேடித் தராமல் இருந்திருந்தால், இந்த நூல் இன்றைக்கு வெளிவந்திருக்காது. எனவே மகள் அந்த மகனை ஊக்கப்படுத்தி, அந்த மாப்பிள்ளையை ஊக்கப்படுத்தி அதன் விளைவாக இன்றைக்கு நம்முடைய கரங்களில் ஒளிவிட்டுக் கொண்டிருப்பதுதான் இந்த “மூலதனம்” என்ற நூலாகும். எனவே, வள்ளுவர் பாடியது மகளுக்கும் பொருந்தும் என்பதால், இது சாந்திக்கும் பொருந்தும் என்று நான் சாந்தியையும் வாழ்த்துகின்றேன்.

சாந்தியை வாழ்த்துவதால் நாகநாதன் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால் நாகநாதனுடைய இயல்பு எனக்கு நன்றாகத் தெரியும்.

நான் என்றோ ஒருநாள் அவரோடு பழகுகிறவன் அல்ல. ஒவ்வொரு நாளும் காலையில் அண்ணா அறிவாலயத்தில் வாக்கிங் செல்லுகிற நேரமெல்லாம் எனக்குத் துணையாக வருகின்றவர் நாகநாதன். யார் வந்தாலும் வராவிட்டாலும் நாகநாதன் வரத் தவறுவதில்லை. அப்படி நடந்த நேரத்திலேதான் நாகநாதன் என்னிடத்தில் இந்த நூலைப் பற்றி பல நேரங்களிலே விளக்கியிருக்கிறார். அது அச்சியற்றப்பட முடியாமல், அச்சியற்றப்பட்டாலும் வெளிவர முடியாமல் ஒரு தயக்கம், ஓர் இடர்ப்பாடு ஏற்பட்டிருப்பதை என்னிடத்தில் எடுத்துக்கூறியிருக்கின்றார்.

அதற்கு ஏற்ப, அவர் விடுத்த விண்ணப்பம்; நம்முடைய தமிழ்க்குடிமகன் அவர்களுடைய துறையிலே தேங்கிக் கிடக்கிறது என்ற செய்தி என்னிடத்தில் சொல்லப்பட்டது. தேங்கிக் கிடப்பதை அறிந்து, தமிழ்க்குடிமகனிடத்திலே நானே

கேட்டு, தேக்கத்தைப் போக்கி, எல்லோருடைய ஏக்கத்தையும் போக்குகின்ற அளவிற்கு இன்றைக்கு இந்த ‘மூலதனம்’ வெளியிடப்பட்டிருக்கின்றது.

“ஆஹா! என்னுடைய இலாகாவிலே தேங்கிக் கிடந்தது என்ற உண்மையை அண்ணன் சொல்லிவிட்டாரே” என்று தமிழ்க்குடிமகன் வருத்தப்படக் கூடாது. எந்த அமைச்சருடைய இலாகாவிலும், எதுவும் தேங்கிக்கிடக்க கூடாது என்பதற்காகத்தான் தமிழ்க்குடிமகனை வைத்து, இங்கே இதைச் சொல்கிறேன். நல்லவைகள் உடனுக்குடன் நடைபெற வேண்டும். அல்லவைகள் வேண்டுமானால் தேங்கிக் கிடக்கலாம்.

தமிழ்க்குடிமகன் அவர்கள் நான் சொன்னவுடன் உடனடியாக இடையிலே தேக்கம் இருந்தாலும் கூட உடனடியாகச் செயல்பட்டு இந்த பரிந்துரையைச் செய்து நிதிநிலை அறிக்கையிலே நாகநாதனுடைய முயற்சிக்காக ஒரு ஐந்து லட்ச ரூபாயை அரசின் சார்பாக வழங்குகின்ற அந்த நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

எல்லோரும், இந்த நிதி உதவி செய்த என்னையே இந்த விழாவில் பாராட்டிப் பாராட்டிப் பேசினார்கள். ஒருவேளை என்னைப் பாராட்டவேண்டும் என்ற கடமையின் காரணமாகப் பாராட்டினார்களோ, என்னவோ தெரியாது. அது தேவையற்ற பாராட்டு என்று நான் கருதுகின்றேன். “ஐந்து லட்சம் கொடுத்தார், ஐந்து லட்சம் கொடுத்தார்” என்று பாராட்டிப் பாராட்டி மகிழ்ந்தார்கள், வாழ்த்தினார்கள்.

மருத்துவம் பார்த்தவன்தான் நான். பத்துமாதம் சுமந்து இந்த அருமையான பிள்ளையை வெளியே கொண்டு வந்தவர்கள் இந்த பதிப்பகத்தார். எனவே, பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான். குழந்தை பெற்ற தாயைப் பாராட்டாமல், மருத்துவம் பார்த்த மருத்துவச்சியைப் பாராட்டுவதைப் போல, என்னை நீங்கள் பாராட்டியதாகக் கருதுகிறேன்.

நான் தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்குத் தமிழகத்திலே நடமாடவேண்டிய இதுபோன்ற புதிய கருத்துக்களுக்கு ஆக்கம் தரவேண்டும் என்கின்ற அந்தக் கடமை உணர்வைத்தான் இந்த நிதி அளித்ததன் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறேனே அல்லாமல், வேறல்ல.

‘மூலதனம்’ என்கின்ற இந்த நூலுக்கு, முகவுரை அந்தக் காலத்திலே எழுதியவர், 1886-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஐந்தாம் நாள் ‘மூலதனம்’ முகவுரை எழுதியவர், ஆங்கிலப் பதிப்புக்கு முகவுரை எழுதியவர் பிரடரிக் எங்கல்ஸ் அவர்கள் ஆவார்கள்.

அவர் குறிப்பிடுகிறார்;

முதல் பதிப்பு 2000