கன்னிமாரா பொது நூலக நூற்றாண்டு விழா
பகுதி 2 · 2 / 3
தாமோதரனார், உ.வே.சாமிநாதய்யர் என்ற இந்த இரண்டு பெரியவர்களும் நூல்களை - பழைய ஏடுகளை - சுவடிகளைத் தேடி அலைந்து எவ்வளவு சிரமப்பட்டார்கள்! எதற்காக? அவர்கள் படித்து மகிழ்வதற்காகவா? அல்ல. தாங்களும் படித்து, எதிர்காலச் சமுதாயமும் அதைப் படிக்க வேண்டும், பழைய இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்ற உணர்வோடு அவர்கள் அரும்பாடுபட்டு அவைகளையெல்லாம் திரட்டித் தந்தார்கள். இல்லாவிட்டால் இன்றைக்கு பளபளப்பாக அச்சு வாகனம் ஏறி நம்முடைய கண்களுக்கும் கருத்துக்களுக்கும் விருந்தாக இருக்கின்ற பல இலக்கியங்கள் நமக்குக் கிட்டாமலே போயிருக்கும்.
அத்தகைய பெரியவர்களை எல்லாம் இதுபோன்ற விழாக்களிலே நாம் நினைவு கூர்வது அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.
புத்தக நிலையங்களைப்பற்றி, நூலகங்களைப்பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்:
“மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து தனி மனித தத்துவமாம் இருளைப் போக்கிச் சகமக்கள் ஒன்றென்பதுணர்வதற்கும், இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை”
என்று குறிப்பிடுகிறார். அந்தச் சுவடிச் சாலை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்தினார்கள்.
1949-ஆம் ஆண்டு வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் “வீட்டிற்கு ஒரு புத்தகசாலை” என்ற தலைப்பிலே பேசிய அந்த உரையை உங்கள் முன்னால் நான் வைக்க விரும்புகிறேன்.
அண்ணா பேசுகிறார்:-
“பெரும்பாலான வீடுகளின் அமைப்பையே பாருங்கள். கூடம் - பாதுகாப்பான அறை - படுக்கை அறை - சமையலறை - பூஜை அறை இவை எல்லாம் இருக்கும் - புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை - தேடிப் பாருங்கள் மிக மிகக் கஷ்டம். பல வீடுகளிலே, தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால், புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள் - பதில் கூற மாட்டார்கள்; ஒரு புன்னகை தோன்றும்.
“பைத்தியக்காரா! இது வீடு. நீ என்ன இங்கு வந்து, புத்தகசாலை கேட்கிறாயே!” என்று பொருள், அந்தப் புன்னகைக்கு!
வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் இருக்கும்; பீரோக்கள் இருக்கும்; அவைகளில் வெள்ளிப் பாத்திர தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர் செம்பும் இருக்கும்; பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறுகடை அளவுக்கு இருக்கும். மருந்து வகைகள் சிறு வைத்திய சாலை அளவுக்கு இருக்கும் அப்படிப் பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூட, புத்தகசாலை இராது; இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை! அவசியமும் தோன்றுவது இல்லை.
“இந்தச் செப்புக்குடம் சீரங்கத்தில் வாங்கியது, தேவா கல்யாணத்தின்போது திருப்பதியில் வாங்கினோம். இந்தத் தாம்பாளத்தைப் பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க, அப்போது வாங்கினோம். இந்த இரத்தின் ஜமக்காளத்தைக் கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம். சிதம்பரத்திலே
ஆருத்ரா தரிசனத்தின்போது இதை வாங்கினோம்” என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ்வொன்றுக்கும் ஒரு சரித்திரமே கூறுவார்கள். ஆனால், பத்து நல்ல புத்தகங்களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று கூறமாட்டார்கள்.
வீட்டில் அலங்காரத்தையும் விசேஷகால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பது போல, வீட்டிற்கோர் புத்தகசாலை, சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாக்கிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியா திருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகமாகும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்பட வேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும். எவ்வளவு செலவு? ஏது அவ்வளவு பணம்? என்று கேட்பர். பலருக்குத் தேவையான அளவு புத்தகம் வாங்கத்தான் முடியாது - இந்தக் குறையைப் போக்க பொதுப் புத்தக சாலைகளை நடத்தி, சர்க்கார், நகர சபைகள், பொதுநலக் கழகங்கள் பணிபுரிய வேண்டும்.
ஆனால் சில அடிப்படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடுகளில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்க வேண்டும்.
வீட்டிற்கோர் புத்தக சாலை அமைக்க வேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்கூட அல்ல - அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
வீடுகளிலே நடைபெறும் விசேஷங்களின்போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது, புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால், சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்து விடலாம்.
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகசாலை என்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.
ஒவ்வோர் வீட்டிலும் வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும், அமைக்க வேண்டிய புத்தகசாலையில் நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையை குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே, மக்களின் அறிவுக்குத் தெளிவும் ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய, வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி, விண்ணுலகுக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மன
மருட்சியையும் தரும் ஏடுகளும், தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.
பஞ்சாங்கம் அல்ல. புத்தகசாலையில் இருக்க வேண்டியது அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும்.
பூகோள, சரித ஏடுகள் கட்டாயம் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான நல்ல நிலைகளையும் உருவாக்க வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
