உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கன்னிமாரா பொது நூலக நூற்றாண்டு விழா

பகுதி 1 · 1 / 3

கன்னிமாரா பொது நூலக

நூற்றாண்டு விழா

கன்னிமாரா பொது நூலகத்தின் நூற்றாண்டு விழா - பொதுநூலகத் துறையின் வெள்ளிவிழா - ஆகிய இரு விழாக்களும் சீரோடும் சிறப்போடும் நடைபெறுகின்ற இந்த நாளில் உங்களோடு இந்த விழாவில் கலந்துகொள்கிற வாய்ப்பு பெற்றமைக்காக என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலகத்தின் சிறப்புக்களை எனக்கு முன்னால் இங்கே உரையாற்றிய பேராசிரியர் அவர்களும், பேரவைத் தலைவர் அவர்களும், மற்றும் நண்பர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்த விழாவில் ஒன்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எங்களுக்கெல்லாம் மாறி மாறி பல பொன்னாடைகள் இங்கே வழங்கப்பட்டன. இந்த பொன்னாடைகளுக்குப் பதிலாக நூல்களே வழங்கப்பட்டிருக்குமானால் (கைத்தட்டல்) நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

ஒருவேளை, நல்லி சொல்லக்கூடும் - பொன்னாடையும் நூலில் ஆனதுதானே என்று சொல்லக்கூடும். (பலத்த கைத்தட்டல்) இருந்தாலும் ஒரு பொன்னாடையின் விலையும் அதற்குப் பதிலாக நீங்கள் நூல்களாக வழங்கினால் எத்தனை நூல்களை நாங்கள் பெற்றிருக்க முடியும் என்ற நிலையையும் எண்ணிப் பார்த்தால் -

இனியாவது நடைபெறுகின்ற விழாக்களில், அது நூலகத்தின் விழாவாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை; அது மணவிழா நிகழ்ச்சியாக இருந்தாலும் பரிசளிப்பது, அன்பளிப்பு வழங்குவது, மாலை மரியாதை செய்வது என்ற இவற்றுக்குப் பதிலாக நூல்களை வழங்குவதை கன்னிமாரா பொது நூலக நூற்றாண்டு விழாவிலேயிருந்து நாம் தொடங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)

நூலகம் அமைத்தல், படிப்பகம் அமைத்தல் இவை எத்துணை பயனுடையது என்பதை நான் என்னுடைய பொது வாழ்க்கையிலே கண்டவன். நான் இளம் மாணவனாக இருந்த காலகட்டத்தில் திருவாரூரில் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் என்று ஒரு அமைப்பை உருவாக்கி ஒரு சிறிய ஓலைக் குடிசையிலே அந்தச் சங்கத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அந்தச் சங்கத்திற்குள்ளேயும் பத்து, பதினைந்து நூல்கள் - பெரியவர்கள், பெருமக்கள் எழுதிய நூல்கள் - அங்கே படிப்பதற்கென்று இருந்தது உண்டு.

அதன்பின்னர், 45,46ஆம் ஆண்டுகளில் நான் கோவையில் - திரைப்படத் தொழிலில் ஈடுபாடு கொண்டு அங்கே கோவைக்கு அருகேயுள்ள சிங்காநல்லூரில் வாழ்ந்து வந்தேன். அந்தச் சிங்காநல்லூர் பகுதி, அந்தக் காலக்கட்டத்தில் ஒரு பயங்கரமான வன்முறைப் பகுதி. அங்கேதான் எனக்கு வீடு கிடைத்தது. குடும்பத்தோடு நான் அங்கே வசித்துக் கொண்டிருந்தேன். அங்கே இருந்தாலுங்கூட, நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை, அந்தப் பகுதியில் பரப்பிட வேண்டுமென்ற அவா எனக்கு மிகையாக இருந்தது.

ஆனால் அந்த ஆவலை வெளியிட்டால் உயிருக்கே ஆபத்து என்பது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட இடம்.

அங்கே ஒவ்வொரு நாளும் ஒரு கொலை விழும் - அரசியல் கொலை.

அந்த இடத்திலிருந்து நான் திரைப்படத் தொழிலில் வசனங்களை எழுதுகிற, திரைக்கதை எழுதுகிற அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருந்தபோது - எனக்கொரு நண்பர் அங்கே கிடைத்தார். அவர் பெயர் அண்ணாசாமி. அவரும் நானும் நெருங்கிப் பழகினோம். இன்னும் சொல்லப் போனால், அவருடைய வீட்டின் ஒரு பகுதியிலேதான் நான் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு எப்படியாவது அந்தப் பகுதியிலே வேறு பல கட்சிகளுடைய வன்முறைகளுக்கிடையிலேயும் நம்முடைய கொள்கைகளை - தந்தை பெரியாரின் சிந்தனைகளை - அண்ணாவின் எண்ணங்களைப் பரப்ப வேண்டும் என்ற அந்த ஆர்வம் என்னைத் துளைத்துக் கொண்டேயிருந்த காரணத்தால் - நானும் நண்பர் அண்ணாசாமியும் சேர்ந்து ஒரு யோசனை செய்தோம்.

பாரதி படிப்பகம் - பாரதி நூலகம் என்ற ஒன்றை அங்கே அமைத்தோம். பாரதியின் பெயரால் நூலகம், படிப்பகம் அமைத்தால்தான் அங்கே, அது இருக்கும். இல்லாவிட்டால் உடைத்தெறியப்படும், அந்தக் காலக் கட்டத்தில்! பாரதிதாசன் பெயராலோ, பெரியார் பெயராலோ, அண்ணா பெயராலோ நூலகம் அமைத்தால் அவைகள் அங்கே அந்தக் காலத்தில் இருக்க முடியாது.

எனவே, பாரதியார் பெயரால் நூலகம் அமைத்து, அதிலே திராவிடர் இயக்கச் சார்பற்ற ஏடுகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, அதைப் படிக்கின்ற ஆர்வத்தை அந்தப் பகுதியிலே உள்ள மக்களிடத்திலே பரப்பி, ஒவ்வொரு நாளும் அவர்களும் வந்து காலை, மாலை நேரங்களில் அங்கே வாங்கி வழங்கப்படுகின்ற

நாளேடுகளை, வார ஏடுகளை, புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்த போது - வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல - வார ஏடுகளிலே திராவிடநாடு ஏடு வரவழைக்கப்பட்டது. குடியரசு ஏடு வரவழைக்கப்பட்டது. நாளேடுகளில் - மற்ற நாளேடுகளோடு ஒரு நாளேடாக விடுதலை ஏடு வரவழைக்கப்பட்டது.

இன்றைக்குச் சொல்கிறேன்; சிங்காநல்லூர் எங்கள் இயக்கத்தின் கோட்டையாக இருக்கிறதென்றால், அன்றைக்கு 45-ஆம் ஆண்டு உருவான பாரதி படிப்பகம் தான் காரணம் என்று கூறுவேன். (கைத்தட்டல்)

எனவே நூலகத்தின் பயனை, படிப்பகத்தின் பயனை அனுபவ ரீதியாக நான் உணர்ந்தவன் என்ற காரணத்தால், மற்றவர்களும் நூலகத்தின் பயனைத் துய்க்க வேண்டும், உணர வேண்டுமென்று வேண்டுகோளை இந்த நல்ல விழாவிலே நான் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணா அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்தோடு புத்தகங்களைப் படிப்பார்கள் என்பதை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்கிற அண்ணா அவர்களின் ஆர்வம் - அதற்கு ஒரு உச்சக் கட்டத்தைச் சொல்ல வேண்டுமென்றால் - அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, அமெரிக்கா சென்று - அமெரிக்காவிலிருந்து திரும்பிவந்து மீண்டும் இரண்டாவது தடவையாக நோய் அவரைப் பற்றிக் கொண்டு அடையாறு மருத்துவமனையிலே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்ற சூழ்நிலையில் இரண்டாவது முறையாக மருத்துவமனையிலே அண்ணா அனுமதிக்கப்பட்டார். நானும் பேராசிரியர் போன்றவர்களும் அவரைச் சூழ இருந்தோம்.

அவரை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்ற நேரம் வரையில் - (அறுவைச் சிகிச்சைக்குச் சென்ற பிறகு அண்ணா கண் திறக்கவில்லை; பிறகு மறைந்து விட்டார்) - ஆனால் செல்கின்ற நேரம் வரையிலே அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருந்தார். அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கவே இல்லை. அங்கிருந்த மருத்துவர்கள் அண்ணா அவர்களை அறுவைச் சிகிச்சை அறைக்கு வாருங்கள் என்று அழைத்துச் செல்ல வந்தபிறகுதான், அந்தப் புத்தகத்தை அண்ணா அவர்கள் மூடி வைத்தார்கள்.

அப்படி இறுதிக் கட்டத்திலே கூட - இறுதி மூச்சு விடுகின்ற நேரத்திலே கூட - தன்னுடைய உயிர் இனி நிலைக்கப் போவதில்லை என்றுதானே உணர்ந்த அந்தச் சூழலிலேகூட அண்ணா அவர்கள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் என்பதைச் சொல்வதற்குக் காரணம், இன்றைக்கு புத்தகங்களைப் படிப்பதே ஒரு அலுப்பான விஷயம்; தேவையற்ற வேலை என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற இளைய தலைமுறைக்கு இந்தச் செய்தி எட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அடையாறு மருத்துவமனையிலே அறுவை சிகிச்சைக்குச் செல்கின்ற அந்தக்கணம் வரையிலே புத்தகம் படித்துக் கொண்டிருந்த அண்ணா அவர்களின் செயலை நான் நினைவூட்ட வேண்டியவனாக இருக்கிறேன்.

இங்கே நல்லி பேசும்போது சரஸ்வதி மகாலைப் பற்றியெல்லாம் சொன்னார். நூல் நிலையங்களைப் பற்றி நாம் எண்ணுகிற நேரத்தில் பல இலக்கியங்கள், பல காப்பியங்கள் எல்லாம் இன்றைக்கு அழியாமல் காப்பாற்றப்படுவதற்குக் காரணமாக இருந்த இரண்டு சான்றோர்களையும் நாம் மறந்துவிட முடியாது.

முதற் பதிப்பு : மே 2000