கன்னிமாரா பொது நூலக நூற்றாண்டு விழா
பகுதி 3 · 3 / 3
நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கிய சாரத்தைச் சாமான்யரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம், மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல் இருக்க வேண்டும்.
நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் ‘வீட்டிற்கோர் புத்தகசாலை’ அமைத்துக் கொண்டால் நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்”
என்று அண்ணா அவர்கள் 1949ஆம் ஆண்டிலேயே வானொலி மூலமாகச் சொல்வது இயலாதிருந்த அந்தக் காலக் கட்டத்தில், இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.
ஆங்கிலேயர்களால் - எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல - அடிமைத்தனம் போன்ற பல துன்பங்கள் நமக்கு ஏற்பட்டாலுங்கூட - உலகத்தைக் காணுகின்ற அறிவை வளர்க்கின்ற பல அற்புதச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அவற்றிலே ஒன்று லைப்ரரி - நூலகம் என்று சொன்னால் மிகையாகாது.
கன்னிமாரா என்று இந்த நூலகத்திற்குப் பெயர் வந்ததே - சென்னை மாகாணக் கவர்னராக இருந்த கன்னிமாரா பிரபு 1890-ஆம் ஆண்டு திட்டமிட்டு - அவர் பணியிலிருந்து திரும்ப இங்கிலாந்து சென்ற பிறகு - உருவானது 1896இல் இந்தக் கன்னிமாரா நூலகம். இப்படி உருவான இந்த நூலகம், பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல - 1950இல் பொது நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டு - பொது நூலகமாகவும், தமிழக நூலகங்களுக்கெல்லாம் தலைமை நூலகமாகவும் இன்றைக்கு உயர்ந்திருக்கிறது.
1954இல் மத்திய அரசு நூல்கள் விநியோகச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மும்பாய், கல்கத்தா, புதுடெல்லி, சென்னை கன்னிமாரா ஆகிய நூலகங்களையெல்லாம் தேசிய மதிப்பைப் பெறக்கூடிய நிலையை உருவாக்கியது.
1910ஆம் ஆண்டு இந்த நூலகத்திலே 48,000 நூல்கள் இருந்தன. ஆனால் இன்றைக்கு ஐந்தேகால் இலட்சம் நூல்கள் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஐந்தேகால் லட்சம் நூல்களை மூன்றரை இலட்சம் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 1896இல் கன்னிமாரா நூலகக் கட்டிடம் உருவாக்கப்பட்டு நூலகம் தொடங்கியதற்குப் பிறகு - 78 ஆண்டுகளுக்குப் பிறகு 1974இல் கழகம் ஆட்சியிலே இருந்தபோதுதான் இந்தக் கட்டிடத்தோடு சேர்த்து மூன்றடுக்குக் கட்டடம் கட்டப்பட்டது என்பதை நான் மிகுந்த பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைக்கு பேராசிரியர் அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல இந்த நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் (பேராசிரியர்கூட ஒரு கோடியே 45 இலட்சம் என்றார் - கொடுத்தவன் நான்) (பலத்த சிரிப்பு) கூடுதல் கட்டிட வசதிக்காக வழங்கப்பட்டிருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது மாத்திரமல்ல; வாசகர்களின் வசதிகளைப் பெருக்க - நூலகத்திற்குத் தேவையான தளவாடப் பொருள்களை எல்லாம் வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மேலும் கன்னிமாரா நூலகத்திற்கு (பலத்த கைத்தட்டல்) இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நூலகத்தை மக்கள் இயக்கமாக மாற்ற 1989ஆம் ஆண்டு நாங்கள் இரண்டாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதே, அந்தக் காலக் கட்டத்தில் பேராசிரியர் அவர்களுடைய உறுதுணையோடு தமிழகம் முழுவதும் நூலகங்கள் - இதை மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டுமென்ற திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் நூலகங்கள் பரவலாகத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைக்கு அந்த நூலகங்களில் உறுப்பினர்களாக மாத்திரம் 25 இலட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுதி நேர நூலகங்களாக - அந்த மக்கள் இயக்கமாக நூலகங்களை மாற்றியதன் காரணமாக 1,146 நூலகங்கள் இருக்கின்றன.
கல்கத்தாவில் ராஜாராம் மோகன்ராய் அவர்கள் பெயரால் ஓர் அறக்கட்டளை இருக்கின்றது. அந்த அறக்கட்டளை எந்தவொரு மாநில அரசு அந்த மாநிலத்திலே இருக்கிற நூலகத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கினாலும் அதற்கு ஈடாக ஒரு தொகையை ஒதுக்கிக் கொண்டிருக்க
கின்றது. கடந்தகால ஆட்சியில் நூலகங்களுக்காக பத்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார்கள். உடனே ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளையும் பத்து லட்ச ரூபாய் நிதி அளித்தது. இந்த ஆட்சியில் நாங்கள் நூலகங்களுக்காக முப்பது லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களைக் காட்டிலும் நூலக விவகாரத்தில் தமிழ்நாடுதான் இந்த அறக்கட்டளையின் அதிக தொகையைப் பெற்ற ஒரேயொரு மாநிலம் (கைத்தட்டல்) என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
1974ஆம் ஆண்டு நூலக அலுவலர்கள் 13 பேர். 74இல் எந்த ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது நூலக அலுவலர்கள் 13 பேர் நியமிக்கப்பட்டார்கள். 89-91இல் எந்த ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது மூன்று நூலக அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு 96,97இல் இப்பொழுது ஏழு நூலகர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். மொத்தம் 23 பேர். இவையிலே என்னவென்று கேட்காதீர்கள். எதுவும் இல்லாத காரணத்தால் அதை விட்டுவிட்டேன்.
இல்லாததை எப்படிச் சொல்ல முடியும்.
எனவே 29 மாவட்டங்களில் தமிழகத்திலே 23 நூலக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். மற்ற மாவட்டங்களிலும் நியமிக்கப்படவிருக்கிறார்கள் என்பதையும் நூல்பயிலுவதிலே தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தம்பிகளாகிய நாங்கள் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால் நூலகத்தின் பெருமையை உணர்ந்தவர்கள் - படிப்பின் பெருமையை உணர்ந்தவர்கள் - புத்தகத்தின் பெருமையை உணர்ந்தவர்கள்.
எனவே நூலகங்கள் எல்லா இடங்களிலும் கன்னிமாரா நூலகத்தைப்போல
பல கன்னிமாரா நூலகங்கள் தமிழகம் முழுவதும் உருவாக இந்த அரசு தொடர்ந்து முனைப்போடு பணியாற்றும் என்ற நல்ல செய்தியை இந்த விழாவிலே அறிவிக்கிறேன்.
இந்த விழாவிலே நம்முடைய எம்.எம். அவர்கள் ஐந்து இலட்ச ரூபாயை இந்த நூலகத்திற்காக வழங்கி கலைஞர் கட்டளையிட்டால் இன்னும் வழங்குவேன் என்று சொன்னார். அவர் வழங்குவதற்கு முன்பே என்னைக் கேட்டிருந்தால் எவ்வளவு வழங்க வேண்டுமென்று சொல்லியிருப்பேன். (பலத்த சிரிப்பு) இனிமேல் நான் கட்டளையிட விரும்பவில்லை. தானாகவே வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
நம்முடைய நல்லி அவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட வேண்டுமென்று சொன்னார். நான் அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் பெயரால் ஒரு கட்டிடத்தைக் கட்டுங்கள். (பலத்த சிரிப்பு) நூலில் மூழ்கித் திளைக்கின்ற உங்களுக்கு, ஆயிரக் கணக்கான நூல்களைப் படிக்கும் உங்களுக்கு, இளமை முதல் புத்தகங்களைப் படிப்பதிலே ஆர்வம் உள்ள உங்களுக்கு இந்த ஆர்வம் பிறக்கட்டும். இன்றைக்கு கன்னிமாரா பிரபுவின் பெயரை நாம் எப்படிச் சொல்லிக் கொண்டிருக்கின்றோமோ, அதைப் போல அந்தப் புத்தகக் கண்காட்சி சாலை (கைத்தட்டல்) நல்லி குப்புசாமியின் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்குமென்று நான் கருதுகிறேன்.
இப்போது தியாகராயர் நகரிலே மாத்திரம் நல்லியிருந்தால் போதாது. நூலகத்திலும் நல்லியின் பெயர் இருக்க வேண்டுமென்று கூறி, வாழ்த்தி விடைபெறுகிறேன்.
- முரசொலி 13-9-97
