உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கம்பர் விழா (2)

பகுதி 2 · 2 / 3

கம்பராமாயணத்தில் கம்பர் கண்ட அயோத்தி நாடு எப்படி இருந்தது என்கிற வினா எழுகிற நேரத்தில், கம்பர் எப்படி அந்த நாடு இருந்திருக்க வேண்டுமென்று கருதினாரோ, அது அந்த நாடா? அல்லது அப்படியே இருந்த நாடா? என்ற கேள்விக்கு நாம் சென்றால் - திரு. ஜி.கே. சுந்தரம் பேசுகிறபோது அயோத்திநகர் அப்படித்தான் இருந்தது என்று இங்கே வாதிட்டார். இங்கே பேசப்படுகிற எந்தக் கருத்தானாலும், ஒருவரை ஒருவர் வெல்வதற்காகவே பேசுகிற கருத்து என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது.

கம்பராமாயணம் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு இடம் தருகின்ற ஒரு விரிவான தமிழ்ப் பனுவல்; ஆகவே அப்படிப் பேசுகிறோம்.

அந்த வகையிலே பலபேர் பலவகைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னாலும், அது கம்பரைப் பற்றிய திறனாய்வே அல்லாமல், கம்பனை இழிவதற்காக எடுத்துச் சொல்லப்படுகின்ற கருத்துக்களென்று, யாரும் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாமென்று முதலிலேயே அணைபோட்டுக் கொள்கிறேன்.

திரு. ஜி.கே. சுந்தரம் அவர்கள் பேசுகிறபோது சுக்கிர கேற்பத் தண்டனை வழங்குவது பற்றிக் குறிப்பிட்டு, பணக்காரன் ஏழை என்ற பாகுபாடில்லாமல் அயோத்தி மாநகரத்திலே தசரதனுடைய பரிபாலனத்தில் தண்டனை வழங்கப்பட்டதென்று ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதை இங்கே குறிப்பிட்டார்கள். அயோத்தி நகரம் எப்படி இருந்தது என்பதைக் கம்பருடைய கவிநயத்தின் மூலமாகச் சிறப்பித்துக் கூறுவோரும் உண்டு. “வண்மை இல்லையோர் வறுமையின்மையால்”, வழங்குகின்ற கொடையாளார் இல்லை.

வறுமையுடன் போய்க் கை நீட்டுபவர்கள் இல்லாத காரணத்தினால்தான் வள்ளல்கள் யாரும் இல்லை என்று கம்பர் குறிப்பிடுகிறார். அங்கு ஏற்றத்தாழ்வற்ற சமநிலை இருக்கின்ற காரணத்தால் “எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலால் இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ” என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

அப்படிச் சொல்லுவது, அவைகளெல்லாம் அங்கே இல்லை என்பதைக் குறிப்பிடுகிறதா, அல்லது அப்படி இல்லாமல் இருக்கவேண்டும் என்கிற கம்பருடைய கனவை நிரூபித்துக் காட்டுகிறதா, என்பதை எண்ணிப் பார்த்திட நாம் மறந்திடக்கூடாது. “இராமாயண காலத்தில் அந்த நாடு அப்படித்தான் இருந்தது. அங்கு, இல்லாதவர்கள் இல்லை என்கிற அந்தச் சூழ்நிலைதான் இருந்தது” என்று கம்பர் சொல்லுவாரேயானால், அல்லது கம்பர் சொல்லுகிறாரென்று நாமெல்லாம் கூறுவோமேயானால், நம்முடைய கூற்றை கம்பர் வேறொரு இடத்தில் மறுக்கிறார்.

எந்த இடத்திலே என்றால், இராமனுக்கு மகுடாபிஷேகம் சூட்டுவதற்காக நாள் நேரம் குறிப்பிடப்பட்டபோது, எப்படியும் இராமனுடைய பட்டாபிஷேகத்தை மாற்றிப் பட்டாபிஷேகத்தை பரதனுக்கு நடத்த வேண்டுமென்று கூனி கங்கணம் கட்டிக்கொண்டபிறகு, கூனி கைகேயியைச் சந்தித்துக் கலக மூட்டுகிற நேரத்தில், கைகேயியின் மனத்தை மாற்றுகிற வகையில் சொல்லுகிறாள். “பரதனுக்கு இல்லாமல் இராமனுக்கு முடிசூட்டப்பட்டுவிடுமேயானால், பிறகு உனக்கு இங்கே எந்தச் செல்வாக்கும் இல்லாமல் போய் விடும்.

உன்னைச் சீந்துவார் யாரும் இருக்கமாட்டார்கள். என்ன நிலைமை ஏற்படுமென்றால்......

“தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத், துயரால் ஈண்டு வந்துனை இரப்பவர்க்கு, இருநிதி அவளை வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால் மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி?”

வறுமையினால் துன்பப்பட்டு உன்னிடத்திலே வந்து கையேந்துகிறவர்களே, அவர்களுக்கு நீ எதுவும்

தரக்கூட முடியாத சூழ்நிலையை அடைந்துவிடுவாய் என்று கைகேயிக்குக் கூனி சொல்லுகிற அந்த நிலைமைகளைக் கணிக்கிற நேரத்தில், இரந்து கையேந்துகிறவர்கள் அயோத்தியிலே இருக்கிற காரணத்தினால்தானே, கைகேயியைப் பார்த்துக் கூனி அதைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது?

ஆகவே கம்பர், இராமாயண காலத்து நாடு இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லவில்லை. நாடு இப்படி இருக்க வேண்டுமென்று கற்பனை செய்கிறார். ஆக, “இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ” என்ற இந்தக் கற்பனை, இந்தக் கனவு, இன்றைக்குத் தோன்றியது அல்ல; சோஷலிச முழக்கமல்ல. கி.பி. 886 அல்லது 887-ஆம் ஆண்டிலேயே கம்பரே இந்த முழக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்.

அதற்குமுன் வள்ளுவர் தொடங்கிய இந்த முழக்கத்தை விரிவுபடுத்திக் கம்பர் முழங்கியிருக்கின்றார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருதினார் கம்பர். ஆகவே இப்படித்தான் இருந்தது என்று சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. அப்படி இல்லை என்பதை கூனி கைகேயிக்குச் சொல்கிறாள்; நமக்குச் சொல்லவில்லை! கூனி நமக்குச் சொன்னால் நாம் சந்தேகப்படலாம். கூனி சொல்கிறாள் என்றால் - கம்பர்தான் சொல்கிறார்.

ஒரு இலக்கியத்தில், வருகின்ற பாத்திரங்கள் பேசுகின்றார்களென்றால் அந்தப் பாத்திரங்களைப் படைத்தவர்கள் தான் பேசுகின்றார்கள். அவர்கள் வாயிலாகப் பேசுகின்றார்கள். அதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் இருக்கின்ற சூழ்நிலையை எடுத்துச் சொல்லிப் பேசுகின்ற கொடிய வார்த்தைகளுக்கெல்லாம் பாத்திரத்தைப் படைத்த எழுத்தாளர்கள் சொந்தக்காரர்கள் அல்ல என்றாலும், இருக்கிற சூழ்நிலைகளைச் சில நேரங்களிலே பாத்திரங்களின் வாயிலாக ஏற்றி, நிலை விளக்கம் தருவது எழுத்தாளர்களது கடமை.

அந்த வகையிலே கவிச்

சக்கரவர்த்தி கம்பர், நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதனையும், நாடு எப்படி இருக்கிறது என்பதனையும், தன்னுடைய காவியத்தின் மூலமாக உலகத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

திரு. சா. கணேசன் அவர்கள் கம்பருடைய இராமாயணம் முதலிலே கி.பி. 886-ல் அரங்கேறியது என்பதை எடுத்துச் சொன்னார். அடுத்து கி.பி. 887-இல் திருவரங்கத்தில் நாதமுனி என்கிற பெரிய வைணவ ஆச்சாரியார் தலைமையில் கம்பராமாயணம் அரங்கேறி, ஒவ்வொரு செய்யுளையும் கம்பர் விரித்துரைக்கின்ற நிகழ்ச்சியினைக் கேட்க, ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்கிற குறிப்புக்களையும் நாம் காண்கின்றோம்.

திவ்வியப்பிரபந்தத்தில் கம்பராமாயணத்தைச் சேர்க்க வேண்டும் என்று அந்த அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்த நாதமுனி என்கிற பாமாச்சாரியார் சிந்தித்தார் என்றும், ஒரே ஒரு காரணத்திற்காக அதை அவர் சேர்க்க முடியாமல் மறுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதென்றும் நான் “கம்பன் கவி அமுதம்” என்ற நூலிலே கண்டேன்.

கம்பர், தன்னை ஆதரித்து வளர்த்துச் சீராட்டிய சடையப்ப வள்ளலைக் கடைசி வரையில் மறக்காமல் காவியத்தில் பல இடங்களில் புகழ்கின்றார். அந்தப் புகழின் சிகரமாக,

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச, விரை செறி கமலத் தாள் சேர் வெண்ணெய்மண் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி”

என்று பாடுகின்றார். மகுடாபிஷேகத்திற்காக மகுடத்தை, வசிட்டர் யாரிடத்தில் வாங்கி இராமனுடைய தலையில் சூட்டுகிறார் என்றால், சடையப்ப வள்ளலுடைய மூதாதையர்களிடத்தில் வாங்கி அதைச் சூட்டினார் என்று பாடியிருக்கின்றார்.

இராமன் இருந்த அயோத்தி எங்கே? சடையப்ப வள்ளலுடைய மூதாதையர் இருந்த தமிழகம் எங்கே? இரண்டையும் இணைக்கிறார் கம்பர். இணைக்கின்ற நேரத்தில்தான் சடையப்ப வள்ளலுடைய வள்ளன்மைக்குக் காட்ட வேண்டிய நன்றியையும் காட்டுகின்றார்.

நன்றி காட்ட வேண்டும் என்கிற அந்த உணர்வு கம்பருடைய உள்ளத்திலே எவ்வளவு திண்மையாக ஏறியிருந்தது என்பதை நான் பிறகு விளக்குகின்றேன்.

நாதமுனி என்கிற வைணவ ஆச்சாரியார் கம்பரிடத்தில் கூறுகிறார்: “சடையப்ப வள்ளல் என்கிற மனிதனை நீ இந்த ராமாயணத்திலே புகழ்ந்திருக்கிறாய். நாஸ்திகு (மனிதனைப் புகழ்வது), இங்கே இடம் பெறக் கூடாது; இது முழுக்க முழுக்கக் கடவுளைத் தெய்வத்தைத் தேவர்களைப் புகழக்கூடிய காவியம்; இதிலே சடையப்ப வள்ளல் என்கிற மனிதனைப் புகழ்கிற வரிகள் இருக்கின்ற காரணத்தால், அவைகளை எல்லாம் நீக்கி விட்டால், திவ்வியப் பிரபந்தத்திலே ஒன்றாக இதையும் சேர்க்கலாம்” என்று, நாதமுனி கம்பரிடத்திலே சொன்னார்.

கம்பர் அதை முழுமையாக மறுத்து விட்டார். “முடியாது! இது அதிலே சேர்ந்தாலும் சேரட்டும், சேராமல் போனாலும் போகட்டும். நான் நன்றி காட்டிய தன்மை இந்தக் காவியத்திலே இருந்து எடுபடக் கூடாது. சடையப்ப வள்ளலை, அவருடைய மூதாதையரைப்பற்றி நான் பாடியது இதில் இருந்தே தீர வேண்டும்” என்று கம்பர் பிடிவாதம் காட்டிய காரணத்தால், நல்ல வேளையாக அது பிரபந்தத்தில் ஏறாமல் போயிற்று.

இல்லையேல் பிரபந்தத்தில் அது ஏறியிருக்கும்.

ஆனால் அந்த வாதம் சரியானதா? கம்பராமாயணத்தைப் பிரபந்தத்திலே ஏற்றுவதற்கு, மனிதனைப் பாடிய பாட்டு இடைஞ்சலாக இருக்கிறது என்று கம்பருக்குச் சுட்டிக் காட்டப்பட்டதே, அந்த வாதம் சரியா என்றால் இல்லை.

முதற் பதிப்பு : மே 2000