உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கம்பர் விழா (2)

பகுதி 1 · 1 / 3

கம்பர் விழா (2)

“கம்பர் விழாவில் நான் கலந்து கொள்வது” என்ற கேள்விக்கு நான் முன்பே விளக்கம் தந்திருக்கின்ற காரணத்தால், மீண்டும் அதற்கான விளக்கத்தை இன்று அளிக்கத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

காரைக்குடிவாழ் தமிழ்ப் பெருமக்கள், ஒருமுறை விளக்கம் பெற்றாலே அதை மனத்தில் பதிய வைத்துக் கொள்ளக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் என்பதால், மீண்டும் மீண்டும் விளக்கம் அளிப்பது தேவையில்லாத ஒன்று நான் நம்புகின்றேன்.

கம்பருக்குச் சிலை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சென்னைக் கடற்கரையில் மிக முக்கியமான இடத்தில் கம்பர் சிலையை அமைத்திருப்பதிலிருந்தே இந்த அரசுக்கானாலும் அல்லது அரசு நடத்துகின்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த எங்களுக்கானாலும், கம்பர் புலமையின் மீது எந்தவிதமான காழ்ப்பும் இல்லையென்று அனைவரும் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

நான் வந்து நாற்காலியில் அமர்ந்ததும், என் பின்னால் வந்து நின்று சா. கணேசன் அவர்கள், “ஏன் தாமதமாக வந்தீர்கள்?” என்று கேட்டதாக, எதிரிலே உட்கார்ந்திருக்கக்கூடிய நீங்கள் எல்லாம் கருதியிருக்கக் கூடும். ஆனால் அவர் பின்னாலிருந்து எச்சரித்தார். “தயவு செய்து நாற்காலியை நகர்த்தி விடாதீர்கள். உங்கள் நாற்காலியோடு இந்தக் குடை பொருத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் நாற்காலியை நகர்த்தினால் குடை விழுந்து விடும்”

என்று சொன்னார்கள். அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றேன்.

என் நாற்காலி நகர்ந்தால் குடை கவிழும் என்பதைப் பெரியவர் சா. கணேசன் அவர்கள் அன்புள்ளத்தோடு எனக்கு எச்சரிக்கை செய்ததற்காக நான் அவருக்கு நன்றி செலுத்தப் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன். அவரத்தில் எங்கே நகர்ந்துவிடப் போகிறேனோ என்கிற ஆர்வத்தால், அவர்கள் எடுத்துச் சொன்ன அந்தக் கருத்து, இந்த மேடையைப் பொருத்ததாக இருந்தாலும், அது எங்கெங்கே போய்ப் பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொண்ட உங்களையும் நான் பாராட்டுகின்றேன்.

ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இவ்விழா இன்னும் வசதியோடும், வாய்ப்போடும் நடைபெறுகின்ற வகையிலே, தமிழர்கள் தமிழ்க் கவிஞர்களை மறந்திட மாட்டார்கள்; தமிழ்ப் புலவர்களுக்கு எந்நாளும், நன்றிக் கடமையைச் செலுத்துவார்கள் என்கிற ஒரு புதிய அத்தியாயத்தை நாம் இன்றைக்கு விரிவாக எழுதத் தொடங்கியிருக்கின்றோம்.

நான் வார்த்தைகளை அளந்து போடுகின்றேன்; ‘இன்றைக்கு விரிவாக எழுதத் தொடங்கியிருக்கின்றோம்’ என்றுதான் குறிப்பிடேன்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நன்றிக் கடன் ஆற்றுகின்ற செயலாக காரைக்குடியில் கணேசன் அவர்கள் கம்பருக்குச் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். இப்பொழுது அந்த நன்றிக்கடன் செலுத்துகின்ற முயற்சி விரிவான முறையிலே செய்யப்பட்டு வருகின்றது.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் பூம்புகார் புதுக் கோலம் பூணுகின்ற காட்சியாகும், மற்றொன்று சென்னை மாநகரில் திருவள்ளுவருக்கு ஒரு பெரிய கோட்டத்தைப் பல இலட்ச ரூபாய் செலவிலே அமைப்ப

தற்கு அரசு எடுத்துக் கொண்டிருக்கின்ற சீரிய சிறப்பு மிக்க முயற்சியாகும். இந்த மாதிரி ஏற்பாடுகள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நடைபெற்றாக வேண்டும்.

நாட்டரசன் கோட்டையிலே வந்து தங்கினார் கம்பர் என்பதற்காக, அங்கு நினைவுச் சின்னம்! அருகிலே உள்ள காரைக்குடியில் கம்பருக்கொரு மணி மண்டபம். அதைப் போலவே பெரும் புலவர்கள் பலபேர் வாழ்ந்த மண், பிறந்த மண், அவர்கள் உலவிய சிற்றார்கள், பேரூர்கள் இவைகளெல்லாம் தமிழகத்தில் ஏராளம், ஏராளம்! அந்த இடங்களை எல்லாம் கண்டு அந்த இடங்களில் அவர்களுக்கான நினைவுச் சின்னத்தை எழுப்புவது பெரிய அளவிலே இலட்சக்கணக்கான ரூபாய் செலவிலே செய்யாவிட்டாலும் சிறிய சிறிய அளவிலேயாவது, அப்படிப்பட்ட நினைவுச் சின்னங்களை எழுப்புவது - நாம் தமிழ் எழுச்சியை மக்கள் உள்ளத்திலே என்றென்றும் பசுமையாக வளர்த்துக் கொண்டிருப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதற்குத்தான் அதைக் குறிப்பிடுகின்றேன்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு நானும் கல்வி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்களும் காரிலே பயணம் செய்தபொழுது, ஒக்கூர் என்ற ஊரைக்கண்டு, இங்குதான் ஒக்கூர் மாசாத்தியார் பிறந்தார் என்று அறிந்து, அவர் எழுதிய கவிதை ஒன்றினை, அனைவரும் பார்க்கத்தக்க இடத்தில் கல்லில் எழுதிவைக்க ஏற்பாடு செய்தோம்.

அந்த அளவிலாவது தமிழகத்திலே பெரும் புலவர்கள், அகநானூறு பாடியவர்கள், புறநானூறு பாடியவர்கள், சங்க இலக்கியங்களை எழுதியவர்கள், இளங்கோவடிகளைப் போன்றவர்கள், திருவள்ளுவர் கம்பரைப் போன்றவர்கள் - இத்தகையோருக்கெல்லாம் நினைவுச் சின்னங்களை, நினைவாலயங்களை எழுப்பிட வேண்டும்.

கம்பர் விழாவில் கம்பருடைய சிறப்பியல்புகளையும் கம்பர் வழங்கிய தமிழ்க் காவியத்தினுடைய அழகு, இவைகளைப் பற்றியும் பேசுவது, தமிழ்மொழியை வளர்ப்பதற்கு மேலும் மேலும் பயன்படும், பயன்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும்.

கம்பர் உருவாக்கிய பாத்திரப் படைப்புக்கள், கம்ப ராமாயணத்துக்கென்று உருவாக்கிய பாத்திரப் படைப்புக்களே தவிர, வால்மீகி உருவாக்கிய பாத்திரப் படைப்புக்களுக்கும் கம்பர் உருவாக்கிய பாத்திரப் படைப்புக்களுக்கும் வேறுபாடு அல்ல, முரண்பாடுகளே கூட உண்டு.

இராமாயணத்துக்கு முதல் நூல் வால்மீகியினுடைய நூல்தான் என்று கொண்டால், வால்மீகி கண்ட பாத்திரங்கள்தான் உண்மையான பாத்திரங்கள் ஆக இருந்திட முடியும். அதைத் தொடர்ந்து மொழி பெயர்த்து எழுதப்பட்ட நூல்கள், அல்லது வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நூல்கள், இவைகளிலே அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்புக்கள், அவரவர்களுடைய எழுத்து ஆற்றலுக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, காலத்துக்கேற்ப, உள்ளத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை கம்பராமாயண ஆதரவாளர்களானாலும் எதிர்ப்பாளர்களென்று கருதப்படுவர்களானாலும் மறுத்திடமாட்டார்கள் என்பதை நான் நன்றாக உணர்கிறேன்.

கம்பராமாயணத்தை ஆதரித்து கம்பருடைய அழகுத் தமிழைப் புகழ்ந்து போற்றிக் கம்பர் உருவாக்கிய பாத்திரங்களின் சிறப்பியல்புகளையெல்லாம் அணு அணுவாக எடுத்துச் சொல்கின்ற புலவர் பெருமக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கின்றார்கள். அவர்களிலே ஒரு சிலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று, கம்பர் கவியமுதம் என்கிற பெயருடையது. அதை நான் வழியில் படித்துக்கொண்டு வந்தேன்.

முதற் பதிப்பு : மே 2000