கம்பர் விழா (2)
பகுதி 3 · 3 / 3
எப்படி? அதே கம்பராமாயணத்தில் வீட்டணன் என்னதான் இராவணனை எதிர்த்துக் கொண்டு இராமனுடைய அணியிலே வந்து சேர்ந்துவிட்டாலும் கூட, அவன் அசுரகுலந்தான். அப்படிச் சேர்ந்த காரணத்தால் அவன் அசுரனல்ல; மனிதனாக ஆகிவிட்டான் என்று ஒரு இடத்திலே கம்பர் குறிப்பிடுகிறார். தேவர், அடுத்து மனிதர், மூன்றாவதுதான் அசுரர்.
“ஆறுகொள் சடிலத் தானும், அயனும்நின் றிவர்கள் ஆதி வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்ற யன்றே”
என்று கம்பர் வேறு ஓர் இடத்தில் “சிவன் பிரமன் முதலிய தேவர்களையெல்லாங்கூட, மனித இனம் வென்று விட்டது, அதனால் உயர்ந்து சிறந்து விட்டது” என்று பாடியிருக்கின்றார். இதைக் சிறப்புமிக்க மனித குலத்தைச் சேர்ந்தவனைப் பாடக்கூடாதாம். அசுரனாகிய வீட்டணனைப் பற்றிப் பாடிய பாடல் பல இருக்கும் போது, அது பிரபந்தத்திலே சேரலாமாம்; ஆனால் சடையப்ப வள்ளல் என்ற ஒரு மனிதனைப் பற்றிப் பாடிய பாட்டு, அதில் இருப்பதால் அது பிரபந்தத்திலே சேரக்கூடாதாம்!
ஆகவே கம்பராமாயணத்திற்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு, 87-ஆம் ஆண்டு கிளம்பியது என்பதை நீங்கள் மனத்திலே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகின்றேன்.
தேவர், மனிதர், அசுரர்! தேவர், அசுரர் என்ற இந்த இரண்டிற்கும் இடையே மனிதர்! இந்த மனிதரைப் புகழ்ந்து பாடியது கம்பராமாயணத்தில் இருப்பதால் பிரபந்தத்தில் இடம் பெறக்கூடாது என்று எடுத்து வைக்க வாதம் சரியானதா? இல்லை! அசுரக் குலத்தில் பிறந்த வீட்டணனைப் பாராட்டுகின்ற - முதலில் தவறிழைத்துப் பின்னர் திருந்திய ஒருவனைப் பாராட்டுகின்ற - நூலாகக் கம்பராமாயணம் விளங்கலாமாம்! ஆனால் எப்போதும் தவறு செய்யாமல் வள்ளல் தன்மையால் வாரிவாரி வழங்கிப் புகழ்பெற்ற சடையப்ப வள்ளலைப் பாராட்டக்கூடாதாம்!
இது கம்பருக்கு நாம் தருகின்ற தாக்குதல் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. கம்பருடைய காலத்தின் நிலைமைக்கு நாம் தருகின்ற தாக்குதல் ஆகும்.
அந்தக் காலம் கி.பி. 887 உடன் முடிந்து விட்டதா? அல்லது இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறதா? விடையை உங்களுடைய சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.
நம்முடைய ஜி.கே. சுந்தரம் இன்னொன்றையும் சொன்னார். நான் இங்கே பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது என்கிற முடிவோடுதான் நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்ட நேரத்திலும் - வந்த பிறகும் - இருந்தேன். ஆனால் அவர் பேசும்போது, இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது தவறல்லவா என்று சிலர் கேட்கிறார்கள்; அதற்கு ராஜாஜி சொல்கிற பதில் - “இராமன் மானிட அவதாரம் எடுத்து விட்டான். மானிடன் தவறு செய்வான். ஆகவே அந்தத் தவறுகளைப் பெரிதாகக் கொள்ளக்கூடாது” என்பதாகும்.
ஒரு கடவுள் கஷ்டப்பட்டு மனித அவதாரம் எடுப்பதே மனிதர்களைத் திருத்துவதற்காக இருக்கலாமேதவிர, இதைப்போல நடந்து கொண்டால் தவறல்ல என்று சொல்வதற்காக இருக்கலாமா?
ஆக, வாலிவதைப் படலத்தைப் பொறுத்தவரையில் யாருமே இராமனுடைய போக்கை ஒத்துக் கொண்டவர்கள் அல்ல; இவைகள் எல்லாம் பாத்திரங்கள் என்ற உணர்வோடுதான் நாம் பார்க்க வேண்டுமேயல்லாமல், வேறு கற்பனை செய்து கொண்டு பார்ப்பது முறையல்ல; நல்லதல்ல! அந்தப் பாத்திரப் படைப்பில், வாலிவதைப் படலத்தில், இராமன் மறைந்திருந்து தாக்கியது குற்றம் என்பதை நானோ மற்றவர்களோ - சொல்வதை விட, இராமனே சொல்லுகின்றான். எங்கே? வாலிவதைப் படலத்திலா?
அல்ல. இராவணன் மாண்டு விட்ட பிறகு சொல்லுகின்றான். கம்பராமாயணம் படித்தவர்கள் - என்ன புதிய கதையாக இருக்கிறதே! அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லையே என்று கேட்கக்கூடும்.
போரிலே இராவணன் மாண்டு கிடக்கின்றான். அப்போது இராவணனை அவனுடைய இளவல் வீட்டணனோடு வந்து இராமன் பார்க்கின்றான். பார்க்கும்போது இராவணனுடைய முதுகில் ஒரு தழும்பு இருக்கிறது. அப்போது இராமன் சொல்லுகின்றான்; “அடடா, முதுகிலே தழும்பு ஏற்பட்டவனையா நான் கொன்றேன்? முதுகிலே காயம் பட்டவனைத் தழும்பு பட்டவனைக் கொல்வது வீரனுக்கு அழகல்லவே? முதுகிலே தழும்பு கொண்டவனையா நான் கொன்றேன்?”
என்று வருத்தப்படுகிறான்.
“மாண்டொழிந்(து) உலகில் நிற்கும் வயங்கிசை முயங்க மாட்டா(து), ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவலன் புகழை உண்ணப் பூண் தொழில் உடைய மார்பா! போர்ப்புறங் கொடுத்தோர் போன்ற ஆண்தொழி லோனிற் பெற்ற வெற்றியும் அவத்தம் என்றான்.”
அப்பொழுது வீட்டணன் சொல்லுகின்றான் - அதாவது வீட்டணனைக் கம்பர் சொல்ல வைக்கின்றார்! “அது புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட தழும்பல்ல இராமா! ஏற்கெனவே ஒருமுறை என்னுடைய அண்ணன் இராவணன், ஒரு யானையோடு போரிட்ட போது அந்த யானையினுடைய தந்தங்கள் அவனுடைய மார்பிலே புகுந்து ஊடுருவி முதுகுக்கு மேலே வெளிப்பட்டு விட்டன. அதனால் ஏற்பட்ட தழும்புதான் அது” என்று.
“நாடுள தனையும் ஓடி நண்ணலர்க் காண்கி லாமற் பீடில குன்றம் போலும் பெருந்திசை எல்லை யானைக் கோடுள தனையும் புக்குக் கொடும் புழத் தழுந்து புண்ணின் பாடுளது அன்றித் தெவ்வர் படைக்கலம் பட்(டு) என் செய்யும்?”
“அப்பனை அனைத்தும் மார்புக்(கு) அணி எனக் கிடந்த; வீரக் கைப்பணை முழங்க மேனாள் அமரிடைக் கிடைத்த காலன துப்பணை வயிர வாளி விசையிலும், காலின் தோன்றல் வெப்பணை குத்தினாலும், வெறிநிடைப் போய அன்றே.”
என்று இராவணனுடைய வீரத்தை வெளிப்படுத்துகின்றான் என்று கம்பர் சொல்லுகின்றார். ஆகவே இராமனே பயப்படுகின்றான். முதுகிலே தழும்பேற்ற
ஒருவனைக் கொன்று விட்டோமே, பழிவந்து சேருமே என்று! வீரத்திற்கு இலக்கணம் வகுக்கிற இராமன், மறைந்திருந்து வாலியைக் கொன்றது பற்றி எவ்வளவு நாள் மனச்சங்கடப்பட்டிருப்பான் என்பதைக் கம்பருக்காக வாதாடுகின்றவர்கள் இராமனுக்காக வாதாடுகின்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறேன்.
நான் இதிலும் இராமன் சார்பாகத்தான் வாதாடுகின்றேன். ஏனென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம் ஏற்படுகிறது - முதுகிலே தழும்பேற்றவனைக் கொன்று விட்டோமே; நம்முடைய வீரம் நிலை குலைந்து விட்டதே; பாழாகி விட்டதே என்று! அதே இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றோமே என்ற குற்றத்திற்காக எவ்வளவு வருந்தி இருப்பான் என்பதையும் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.
பாத்திரங்களைப் பாத்திரங்களாகவே பார்க்க வேண்டும். நமக்கு ஏற்பட்டுவிடுகின்ற கஷ்டமே, காவியம் எழுதுகின்ற புலவர்களை விட்டுவிட்டு அவர்கள் படைக்கின்ற பாத்திரங்களுக்கு அதிக மரியாதைகளை கொடுக்கத் தொடங்குவதால்தான்! “மனோன்மணீயம்” நூலைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதினார். அவரை நாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். அதிலே வருகின்ற சீவகன், புருடோத்தமன், மனோன்மணி இவர்களை எல்லாம் வழிபடுகின்ற தெய்வங்களாக நாம் ஆக்கிக் கொள்ளவில்லை.
ஆனால் கம்பரைப் பொறுத்தவரையில் அவருடைய பாத்திரங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கின்ற நிலையும், அந்தக் காவியத்தை உருவாக்கிய கம்பரை மறந்துவிடுகின்ற சூழ்நிலையும் நாட்டிலே ஏற்பட்டு விட்டது. அதை மாற்றுகின்ற புதிய புரட்சியை 35 ஆண்டுகளுக்குமுன், நமது சா. கணேசன் காரைக்குடியிலே
ஆரம்பித்துக் காவியம் இயற்றியவன்தான் நாயகன், அவன்தான் புகழ்தலுக்கும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவன் என்கிற முறையில், கம்பர் விழாக் கண்டார்கள். ஆகவே கம்பருக்குத்தான் சிறப்பு என்று எடுத்துக்காட்டி நிலைநாட்டி வருகின்ற இந்த விழாவைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.
1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் காரைக்குடி கம்பர் விழாவில் ஆற்றிய உரை.
