உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இலக்குவனார்

பகுதி 2 · 2 / 3

இலக்குவனார் அவர்கள் தமிழ் இனத்துக்குத் தேவையான சுயமரியாதையை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

அந்தச் சுயமரியாதைத் தன்மை அவர் மறைகிற வரைக்கும் அவரோடு இருந்தது.

அவர் இடையிலே சில நேரங்களில் உணர்வுகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக உணர்ச்சிகளுக்கு ஆளானார்.

எனினும், இந்த அரசு அவருடைய பெருமையை எண்ணி இயன்றதை எல்லாம் செய்திருக்கிறது.

அவருடைய குடும்பத்தைக் காக்கும் பெரும் பொறுப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது என்றார்கள். நான் அவர்களுக்குச் சொல்லவேன்.

அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தனி ஒருவர் எடுத்துக் கொள்வது இலக்குவனாருக்குப் பெருமையல்ல! நான் தட்டிக் கழிப்பதாக யாரும் எண்ணக்கூடாது; அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பாகும்.

அந்தக் குடும்ப நிலைபற்றி - அவரது மக்களைப் பற்றி - அங்கே என்னென்ன ஆகவேண்டும் என்பது பற்றிச் சிந்திக்காமல் நான் அவசரப்பட்டு எதையும் சொல்ல முடியாது.

ஆனால் என்னால் இயன்றதை அந்தக் குடும்பத்துக்குச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லவேன்.

இலக்குவனார் அவர்கள் இந்தியை எதிர்த்துச் சிறை சென்றார்கள். தமிழ் வீறு கொண்டு வாழ வேண்டும் - பெருமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்கள்.

அவர் தயாரித்தவர்களெல்லாம் மாணவர்கள் என்று சொல்லுவதைவிட, அழுத்தம் திருத்தமான போர்வீரர்கள்தான் அவர் தயாரித்தார் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

அவர் யாருக்கும் தலை வணங்காமலே வாழ்ந்தார். அவர் கனகவிசயனை எதிர்த்து வெற்றி கொண்ட சேரன் செங்குட்டுவனைப் போல் இருந்தார்.

இன்றைக்குச் சேரன் செங்குட்டுவன் காலம் இருக்கிறதா என்றால் இல்லை. அன்றைக்கு -

“காவா நாவிற் கனகவுங் விசயனும் விருந்தின் மன்னர் தம்முடன் கூடி செப்பிய மொழிகளைச் சேரனுக்கு உணர்த்துவேன்”

என்று வடபுலம் சென்று வந்த ஒரு புலவர், சேரனிடம் - உன்னை இழித்துப் பேசிய இரு மன்னர்கள் வடக்கே இருக்கிறார்கள் எனச் சொன்ன மாத்திரத்தில் - வெகுண்டெழுந்த செங்குட்டுவன் படை திரட்டிச் சென்றான் - பகைவர்களைப் பணிய வைத்தான். வடபுலத்திலிருந்து தமிழர்களைப் பழித்தவரைத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னான்; அது அந்தக் காலம்!

இந்தக் காலம் இங்கே இருந்து வடக்கே சென்று, “உன்னை மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறேன் பார் அவர்களிடம்” என்று சொல்கின்ற அளவுக்குச் சேரன் செங்குட்டுவனின் காலத்துக்குத் தலைகீழான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட காலம் இருக்கலாமா - நீடிக்கலாமா? நம்முடைய மொழி இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அரசாங்க ரீதியில் தமிழுக்கு முதலிடம் அளிக்கிறோம் என்றாலும் சில பேர் உணர்வு ரீதியாகத் தமிழை இரண்டாவது இடத்தில் வைத்துத்தான் எண்ணுகிறார்கள்.

ஆங்கிலத்திலே நமக்கு மோகம் ஏற்பட்டிருக்கிறது. உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் தேவை என்று கருதுகிறோம்.

வெளிநாடுகளிலுள்ள மக்கள் ஆங்கிலத்திடமே வசப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. நான் வெளிநாடு சென்றிருந்தபோது இங்கிலாந்து - லண்டன் - ரோம் - பிரான்ஸ் - மேற்கு ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றேன்.

சென்ற இடங்களிலும் - தங்கும் இடங்களிலும் நாங்கள் ஆங்கிலத்திலே ஏதாவது கேட்டால் அவர்கள் பதில் சொல்ல முடியாமல் விழித்த காட்சியை நான் பார்த்தேன்.

அவர்கள் தங்கள் தாய்மொழியிலேதான் பேசுகிறார்கள். பிரான்சில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தோம், கிடைக்கவில்லை. பிரெஞ்சு மொழிப் பத்திரிகைதான் கிடைத்தது. அதைப் போலவே ரோமாபுரியிலும் ஆங்கில மொழிப் பத்திரிகை கிடைக்கவில்லை.

முதற் பதிப்பு : மே 2000