இலக்குவனார்
பகுதி 1 · 1 / 3
இலக்குவனார்
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய பெருமைக்காக நாடெல்லாம் அவருக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதை இங்கே பலர் எடுத்துச் சொன்னார்கள்.
தமிழ்ப் புலவர்கள் அனைவரும் தமிழுக்குத் தமிழர்களுக்கு வந்த ஆபத்துக்களைக் கனவதில் ஒருமித்து இருந்தார்களா என்றால், இல்லை என்ற பதிலே நமக்கு வேதனையோடு கிடைக்கிறது.
1938-ம் ஆண்டு தமிழ் மொழிக்குக் கட்டாய இந்தியால் - கட்டாய இந்தித் திணிப்பால் - ஆபத்து வந்த நேரத்தில் எல்லாத் தமிழ்ப் பெருமக்களும் புலவர்களும் ஒன்றுகூடி இந்தியை எதிர்த்தார்களா? ஆம் என்று நாம் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் திரு.வி.க., மறைமலை அடிகளார் என்கிற வகையில் ஒரு சிலரது பெயரைத்தான் நாம் சொல்ல முடியுமே தவிர, தமிழ்ப் புலவர்கள் பட்டாளமே ஒன்றாகத் திரண்டெழுந்து இந்தியை எதிர்த்தது என்று சொல்ல முடியாது.
அப்படி ஒவ்வொரு நேரத்திலும், தமிழ்ப் புலவர்களுக்குரிய இலக்கணமே ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதைப்போல எங்கே அந்த இலக்கணத்துக்கு மாசு வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக - அன்று முதல் இன்று வரை தமிழ்ப் புலவர்கள் ஒற்றுமையின்மை என்ற அந்த இலக்கணத்தை நன்கு கடைப்பிடித்து வருகிறார்கள்.
தமிழ்ப் புலவர்களிடத்திலே கருத்து வேறுபாடு வேண்டியதுதான். அந்தக் கருத்து வேறுபாடுகள் உள்ளபடியே தமிழை வளர்க்கப் பயன்படுமானால், தமிழ் ஆராய்ச்சிக்குப் பயன்படுமேயானால், தமிழர்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள மேலும் இது ஒரு நல்ல புதையலாகக் கிடைக்குமானால் அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளை நாம் என்றைக்கும் வரவேற்கிறோம்.
போட்டி தேவைத்தான். ஆனால், போட்டிக்கும், பொறாமைக்கும் வேறுபாடு இருக்கிறது. போட்டியின் காரணமாகப் பொறாமை எழக்கூடாது.
“இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் எழுதினாரா? நான் ஜெர்மானிய மொழியிலே அல்லது ரஷ்ய மொழியிலே எழுதுகிறேன் பார்” என்றால் அது போட்டி.
“இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் எழுதிவிட்டாரா? என்ன எழுதிக் கிழித்தார்!” என்று கூறுவது பொறாமை.
இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மை தமிழர்களிடத்தில் என்றைக்கு வருகிறதோ - இன்றிருக்கிற பொறாமை மனப்பான்மை என்றைக்குக் குறைகிறதோ - அன்றுதான் இந்தத் தமிழ்ச் சமுதாயம் கடைத்தேறும் - முன்னேறும்.
எப்போதுமே பக்கத்திலிருப்பவனைப் பாராட்ட நமக்கு மனமிருப்பதில்லை.
இதைத் தெரிந்துதான் அண்ணா அவர்கள் ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்’ என்றார்கள். பக்கத்து வீட்டில் - எதிர் வீட்டில் - இருப்பவனைப் பாராட்டப் பழக மனமில்லாமல் பலர் அவதிப்படுகிறார்கள்.
பாராட்டுதல் இன்றைக்கு மற்றக் கட்சிகளில் முழு நிலவாக இல்லாமல் பிறை நிலா போல அரைகுறையாக இருப்பதை நான் காண்கிறேன்.
அந்தப் பிறைபோல் இருக்கின்ற குறைமாறி, நிறை நிலவாக - கட்சி வித்தியாசம் இல்லாமல் - எந்தக் கட்சியிலே திறமையானவர்கள் இருந்தாலும், எந்த இயக்கத்திலே நல்லவர்கள் ஆற்றலாளர்கள் இருந்தாலும், அவர்களைப் பாராட்டுகின்ற பண்பாடு அவர்களுக்கும் வந்தாக வேண்டும்.
அது வராவிடில் தமிழன் தலைதூக்க முடியாது. இந்த எண்ணத்தை உருவாக்குவதற்குத் தோன்றிய தமிழ்ச் சமுதாயப் பட்டாளத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தான் மறைந்த பேராசிரியர் இலக்குவனார் அவர்கள்.
இங்கே பேசியவர்கள் எல்லாருமே நான் அவருடைய மாணவன் என்று குறிப்பிட்டார்கள். நான் அவருடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவரும்தான், எனக்கு ஆசிரியராக இருந்ததைச் சொல்லிச் சொல்லிப் பெருமை பாராட்டிக் கொள்வார்; அந்த அளவுக்கு என்பால் அன்பு கொண்டிருந்தார்.
திருவாளர் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது சில திங்கள் அவரிடத்தில் பயிற்சி பெறுகின்ற வாய்ப்பினை நான் பெற்றேன்.
தொடர்ந்து, வித்துவான் தண்டபாணி தேசிகரிடத்திலும், முத்துக்கிருட்டிண நாட்டாரிடத்திலும் நான் தமிழ் கற்றேன் - சிறப்புத் தமிழும் கற்றேன் - இலக்கியத் தமிழும் கற்றேன்! பள்ளியிலே அவர்கள் சொல்லிக் கொடுக்கிற நேரம் போக - எஞ்சியுள்ள நேரங்களில் அவர்களது இல்லங்களுக்குச் சென்று தமிழ்ச் செய்யுள்களைத் தமிழ் இலக்கியங்களைப் பயின்றிருக்கிறேன்.
தண்டபாணி தேசிகர், எனக்குத் தமிழின் இனிமையைச் சொல்லிக் கொடுத்தார்.
முத்துக்கிருட்டிண நாட்டார் தமிழ் உணர்வைச் சொல்லிக் கொடுத்தார்.
