உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இலக்குவனார்

பகுதி 3 · 3 / 3

அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

உலகத் தொடர்பு என்ற முறையிலேகூட - அரசு ரீதியாக - அரசாங்க ரீதியாகத்தான் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

அல்லது பெரும் புலவர்களின் நூல்களைப் படிக்க ஆங்கிலம் தேவைப்படுகிறது.

ஆகவேதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன், ஆங்கிலம் தேவை என்றால்கூடத் தயவுசெய்து நமது வீட்டுப் பிள்ளைகள் இப்போது நினைப்பதையெல்லாம் தமிழிலேயே நினைக்கச் சொல்லுங்கள்.

நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் இப்போது நினைப்பதையெல்லாம் ஆங்கிலத்திலேயே நினைக்கிறார்கள்.

ஒலிபெருக்கி என்றால் ஒலிபெருக்கி என்று முதலில் தமிழிலே நினைத்துவிட்டுப் பிறகு யாருக்காவது புரிய

வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் ‘லவுட்ஸ்பீக்கர்’ என்று சொல்லலாம்.

ஆனால் இன்றைக்கு வளர்ந்து வருகிற நிலையில் குழந்தைப் பருவத்திலேயே ஒலிபெருக்கி என்று நினைக்காமல் ‘லவுட்ஸ்பீக்கர்’ என்றே நினைக்கிறார்கள்.

கையிலே இருக்கிற காகிதத்தை நினைக்கும்போதோ ‘பேப்பர்’ என்று நினைக்கிறார்கள். பிறகுதான் பேப்பர் என்றால் என்ன என்று கேட்டால் காகிதம் என்று சொல்லுகிறார்கள்.

நான் சொல்லுகிறேன், தமிழில் ‘தாள்’ என்றே நினையுங்கள். தாள் என்று நினைத்து, யாருக்காவது புரிய வைக்கவேண்டுமென்றால் அவர்களிடத்தில் பேப்பர் என்று சொல்லுங்கள்!

ஆகவே நினைப்பதைத் தமிழில் நினைப்போம் - தமிழ் மரபிற்கேற்பச் செயல்படுவோம். தமிழன் ஒரு காலத்தில் கொடிகட்டி ஆண்டவன். இன்றைக்கும் ஏதோ கொடிகட்டி ஆள்கிறான்!

ஆனால் அன்றைக்கு அவன் கட்டி ஆண்ட கொடி கடாரத்திலே பறந்தது. இலங்கையிலே பறந்தது. இமயத்திலே புலி - வில் - கயல் சின்னங்களைப் பொறித்து மகிழ்ந்தனர் தமிழர்.

அந்தத் தமிழன் - இன்றைக்கு நிலை கெட்டு - வழி மாறி வீழ்ந்து கிடக்கின்றான் என்றால் இந்தத் தமிழ்ச் சமுதாயம் முன்னேறுவதற்கு இலக்குவனார் பேரில் கேட்கிறேன்; நாமெல்லாம் சூளுரை மேற்கொள்ள வேண்டாமா?

நான் தமிழ் தமிழினம் தமிழ்ச் சமுதாயம் என்று சொல்லி ஏதோ தனித்த இன உணர்ச்சியைக் கிளப்பி விடுவதாகக் கருதக்கூடாது.

எந்த நிலையில் இதை நான் சொல்கிறேன் என்றால், விருகம்பாக்கம் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா கோடிட்டுக் காட்டினாரே - தமிழ் மரபு தமிழன் பெருமை இவைகளைக் காப்பாற்றத்தான் ஒரு ஆட்சி தேவை என்று, அந்த இழையிலேதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டித்தான்,

தமிழ் - நாடு! தமிழை நாடுவதில் தவறில்லை. தமிழ்நாடு என்பதற்காகத்தான் நம்முடைய நிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். மொழியை எங்கே மறந்து விடுவோமோ என்பதற்காக அந்த நாட்டின் பெயரில் தமிழைச் சேர்த்துத் தமிழ்நாடு என்று வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு என்று பெயர் வைத்திருப்பதற்குக் காரணம்! தமிழை நாடு! தமிழ்க் கலாச்சாரத்தை நாடு! தமிழ்ப் பண்பை நாடு! தமிழ் உணர்ச்சியை நாடு! தமிழ் இலக்கியத்தை நாடு! தமிழ் உயர்வை நாடு! - என்பதற்காகத்தான்.

தமிழ்நாடு என்பதை ஒரு நிலத்தின் பெயராகக் கருதாதீர்கள், நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அறிவுரை என்று கருதுங்கள்.

ஆகவே, தமிழ்ச் சமுதாயத்தைப் பேணிக் காப்பாற்றுவீர். அந்தத் தமிழ்ச் சமுதாயம் உலகத்தில் ஒரு காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல் இன்று மங்கிக் கிடக்கிறது.

அதை மீண்டும் ஒளிப்பெறச் செய்ய நாம் பாடுபட்டாக வேண்டும். அதற்கு வருகிற இடையூறுகளை எல்லாம் களைந்தாக வேண்டும். அந்த உறுதியை அந்தச் சூளுரையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் பேராசிரியர் இலக்குவனார் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.

முதற் பதிப்பு : மே 2000