உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இலக்கியத்தில் தமிழகம்

பகுதி 3 · 3 / 4

அப்பொழுதெல்லாம் சென்னை ராஜதானிக்கு ஆளுகின்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றவர் களை ‘முதலமைச்சர்’ என்றுகூட அழைப்பதில்லை; ‘பிரதமர்’ என்றேதான் பெயர்.

மறைந்துவிட்ட சுதந்திரவீரர் ராஜகோபாலாச்சாரியார் பிரதமராகத்தான் இருந்தார் - இந்தியாவுக்கு அல்ல; சென்னை ராஜதானி என்கிற தமிழகம் முழுவதும் - ஆந்திரத்திலே - கேரளத்திலே - கர்நாடகத்திலே சில பகுதிகளைச் சேர்ந்த, அந்த இணைந்த ராஜ்யத்திற்கு -

சென்னை ராஜதானிக்குப் பிரதமராகத்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார்கள்.

அந்த, சென்னை ராஜதானி பிறகு பிரிக்கப்பட்டு, ஆந்திரர்கள் தங்களுக்குத் தனி மாநில உரிமை வேண்டும் என்கிற போர்க் குரல் எழுப்பி, கேரளம் தனியாக - ஆந்திரம் தனியாக - கர்நாடகம் தனியாகப் பிரிந்து தனி மாநிலங்களாக அவைகள் அரசோச்சக்கூடிய பக்குவத்தைப் பெற்ற காலகட்டத்தில் - தமிழகம் சில பகுதிகளை இழந்து, தமிழ் மாநிலமாக ஆனாலும்கூட, இங்குள்ள அரசியல் கட்சிகள்தான் தங்களுடைய பெயருக்கு முன்னால் ‘தமிழ்நாடு’ என்கிற அந்தச் சொல்லைச் சேர்த்துக் கொண்டனவே அல்லாமல், அரசாங்கம் ‘தமிழ்நாடு’ என்கிற பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. “சென்னை ராஜ்யம்” என்றேதான் பெயர் வழங்கியது.

நான் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி உறுப்பினனாக இப்போது இருப்பதைப் போல அப்போதும் இருந்தேன்; 1967-க்கு முன்பு.

அப்பொழுது இருந்த அமைச்சர் பெருமக்களைப் பார்த்து நான் கேட்டபோதெல்லாம் சொன்னார்கள்: ‘தமிழ்நாடு தமிழ்நாடு - என்று பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்களே! அந்தப் பெயர் இலக்கியத்திலே இருக்கிறதா?’ என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு.

“இலக்கியத்திலே இல்லாத ஒரு பெயரை வைக்கச் சொல்கிறாயே நியாயம்தானா?” என்று கூடக் கேட்டார்கள்.

நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். “இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்” என்று சிலப்பதிகாரத்திலே இருக்கிறது. ஒரு வேளை சிலப்பதிகாரத்தை நீங்கள்

இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா?” என்று நான் சட்டமன்றத்திலே கேட்டிருக்கிறேன்.

ஆனால் நிறைவேறவில்லை.

அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்யம் என்கிற இந்தப் பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’ என்கிற பெயரை உருவாக்கி - இருந்த பெயரை அறிமுகப்படுத்தி ‘தமிழகம்’ என்று பெயரிடலாமா? ‘தமிழ்நாடு’ என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்தபொழுது, டெல்லியிலே இருந்தவர்கள் ‘தமிழகம்’ என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது.

எனவே, ‘தமிழ்நாடு’ என்கிற பெயரை நம்முடைய மாநிலத்திற்குச் சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்ட மன்றத்திலே நிறைவேற்றி - அவரே, “தமிழ்நாடு - தமிழ்நாடு - தமிழ்நாடு” என்று மூன்று முறை சட்ட மன்றத்திலே சொல்லி எல்லா உறுப்பினர்களும் “வாழ்க - வாழ்க - வாழ்க” என்று கூறிய அந்த வரலாற்றுச் சம்பவம் என்றைக்கும் மறக்க முடியாத சம்பவமாகும்.

ஆக, சுய மரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாக்கிய அறிவார்ந்த கொள்கை நிறைவேற்றம் -

இந்தி ஆதிக்கத்திற்கு இங்கே தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ் - ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கைதான் இங்கே உண்டே தவிர கட்டாய இந்தி இங்கே இருந்தால் ஆகாது - பள்ளிக்கூடங்களில் அதற்கு வேலை இல்லை என்கிற மொழிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி -

தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் வந்த அந்த வெற்றி -

இந்த மூன்றையும் அண்ணா அவர்களுடைய வாழ்க்கையிலே இருந்து அவருடைய இரண்டாண்டு கால ஆட்சியிலே இருந்து - அந்தச் சரித்திரத்திலே இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

அண்ணா அவர்கள் உடல் நலிவுற்று, அவர்கள் இனி உயிர் வாழ்வார்களா? என்ற ஐயப்பாட்டிற்குரிய ஒன்றாக ஆகி அந்தக் கால கட்டத்திலே சென்னை ராஜ்யத்தினுடைய பெயர் மாற்றத்தைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு மண்டபத்திலே விழா ஏற்பாடு செய்து அந்த விழாவிற்கு அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டபொழுது மருத்துவர்கள் எல்லாம், இந்த உடல் நிலையோடு நீங்கள் செல்லக்கூடாது என்று தடுக்க, அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார்கள்: “இருப்பது ஒரு உயிர்.

அது போகப் போவதும் ஒரு தடவை. ஒரு நல்ல காரியத்திற்காகப் போகட்டும்” என்று சொல்லிவிட்டு, “என்னுடைய மண்ணுக்கு தமிழ்நாடு என்கிற பெயர் வைக்கின்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாவிட்டால் அந்த உயிர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் சென்றே தீருவேன்” என நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

‘ஐந்து நிமிட நேரமாவது பேசுவார்களா? அந்த அளவிற்கு உடல் நலிவு ஏற்பட்டு தளர்வுற்று இருக்கிறார்களே’ என்று எண்ணிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம் பேசினார்கள்.

பேசிய பொழுது சொன்னார்கள்: தன்னைப் பற்றி தன்னிலை விளக்கம் அளித்தார்கள். “அண்ணாதுரை என்ன செய்தான் என்று கேட்கிறார்கள். அண்ணாதுரை

நீண்ட காலம் ஆள முடியுமா என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். அண்ணாதுரையினுடைய ஆட்சி எவ்வளவு காலம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.”

“நான் அப்படிக் கேட்கின்ற என்னுடைய அன்புக்குரிய மாற்றார்களுக்குச் சொல்லுவேன்” என்று அண்ணா சொன்னார்; “நீங்கள் என்னுடைய ஆட்சியை மாற்றி விடலாம். என்னுடைய ஆட்சியை இல்லாமல் ஆக்கிவிடலாம். அண்ணாதுரை இனி ஆளவில்லை என்கிற நிலையை நீங்கள் உருவாக்கி விடலாம்.”

“ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். என்னுடைய ஆட்சிக் காலத்திலே நான் ஏற்படுத்தியிருக்கின்ற ‘இரு மொழித் திட்டம்’, ‘இந்தித் திணிப்புக்கு இங்கு இனி இடம் இல்லை’ என்ற அந்தத் திட்டம், சென்னை ராஜ்யத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்திருக்கிறேனே அந்தக் கொள்கை வெற்றி, ‘சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாக்க முடியும்’ என்று ஆக்கிக் காட்டியிருக்கிறேனே - ஆகிய இந்தத் தீர்மானங்களை எல்லாம் நீங்கள் நிச்சயமாக மாற்ற முடியாது.”

முதற் பதிப்பு : மே 2000