இலக்கியத்தில் தமிழகம்
பகுதி 2 · 2 / 4
மூவாயிரம் ஆனாலும், நான்காயிரம் ஆனாலும் ஒரு மொழி இலக்கண வளம் பெற்ற மொழியாக ஆகியே மூவாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், அந்த மொழி அதற்கு முன்பு பேச்சு வழக்கிலே எத்தனையோ ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். அது எத்தனை ஆண்டுக் காலம் மக்களிடையே பழகி, புழக்கத்திற்கு வந்திருந்தால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கணத்தைப் பெற்றிருக்கும். அதையெல்லாம் ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் தமிழின் காலம் ஏறத்தாழ எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டு காலத்திற்கு முந்தியதாக இருந்திருந்தால்தான் அது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட அரிய கருவூலமாக இருக்கிற இலக்கண வளத்தைப் பெற்றிருக்க முடியும் என்று கருதுகிறார்கள்.
ஆக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மூத்த மொழியாக தமிழ் மொழி இருந்திருக்கிறது. அதனால்தான் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்று நம்முடைய பெருமையை இலக்கியங்கள் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் தமிழைப் பற்றி விமர்சித்த நேரத்தில், தமிழ் மொழியிலே இருக்கிற புராணங்கள் - இதிகாசங்கள் காரணமாக தமிழ்ச் சமுதாயம் எப்படிக் கெட்டுவிட்டது என்கிற மனநோக்காட்டோடு இவைகளை எண்ணிப் பார்த்து சினம் கொண்டு - சிற்றம் கொண்டு - தமிழ் மொழியைப் பற்றிச் சொல்லும்போது அது ஒரு ‘காட்டு மிராண்டி மொழி’ என்று கூடச் சொன்னார்கள்.
சென்னையில் மயிலைப் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டம்; தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்ட கூட்டம். அந்தக் கூட்டத்தில் என்னிடம் ஒரு துண்டுத்தாள் தரப்பட்டது. அதில் ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்கிற
பெரியாரை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்ற கேள்வி எழுதப்பட்டிருந்தது.
அதற்கு நான், ‘இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்; பெரியார் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை’ என்றேன்.
மக்கள் வியப்பால் ‘இவனும் இப்படிச் சொல்கிறானே’ என்று ஆச்சரியப்பட்டார்கள். பிறகு நான் அதற்கு விளக்கமளித்தேன்.
‘பெரியார் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. காட்டுமிராண்டிகளாக மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே இருந்தமொழி தமிழ்மொழி. ஆகவேதான் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்லியிருக்கிறார்’ என்று நான் குறிப்பிட்ட போது பெரியாரே அவருக்குரிய புன்னகையோடு அதனை வரவேற்று மகிழ்ந்த காட்சி இன்னும் என் மனக்கண் முன்னால் நின்று கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்! அப்படிப்பட்ட ஒரு மொழியைச் சேர்ந்த குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் நாம்!
அந்த மொழியைக் காப்பாற்ற - அந்த மொழிக்குரிய மக்கள் பகுத்தறிவாளர்களாக - நல்ல நெறியாளர்களாக - நாம் பாடுபட்டாக வேண்டும்.
கல்லூரி முதல்வர் எடுத்துக் காட்டினாரே கடமை உணர்வும் - கண்ணிய உணர்ச்சியும் - கட்டுப்பாட்டு நிலையும் தேவை என்று அவரே எடுத்துக் காட்டினாரே - அப்படி எடுத்துக் காட்டிய நேரத்தில் அவர் தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டாரோ இல்லையோ - நீங்கள் எல்லாம் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் சொந்தக்காரர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அல்லவா என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.
அந்த அண்ணன் 1966-ஆம் ஆண்டு இறுதியில் ஆட்சி நம் கைக்கு வருமா? வராதா? என்பது வினாக்குறியாக இருந்த காலக் கட்டத்தில் நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்பியதற்குக் கூறிய ஒரேயொரு காரணம் - தமிழன் தன்னுடைய மொழியைப் பாதுகாக்கவும் - தன்னுடைய மரபைப் பேணவும் - தன்னுடைய இலக்கியங்களைக் காப்பாற்றவும் - தன்னுடைய வரலாற்று மேன்மை அழிந்துவிடாமல் பாதுகாக்கவும் - இன்னும் ஐம்பது அல்லது அறுபதாண்டு கால வேலை தமிழகத்திலே பாக்கியிருக்கிறது.
எனவே “ஆட்சிப் பொறுப்பிலே நாம் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் - அந்தப் பணியைச் செய்து முடிக்க நோக்கம் கொண்டு நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்கள்.
அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டாண்டு காலம் நம்மோடு இருந்தார்கள்; பின்னால் மறைந்து விட்டார்கள் என்றாலும்கூட அந்த இரண்டு ஆண்டு காலத்திலே அவர் ஆற்றிய பணிகளில் மிகச் சிறந்த பணிகளாக மூன்று பணிகளை - அதனை யாராலும் மாற்ற முடியாத பணிகளாக செய்து முடித்தார்.
முதல் பணியாக தான், எந்தச் சுயமரியாதை உணர்வும் - மூட நம்பிக்கை அற்ற நிலையும் சமூகத்திலே பரவிட வேண்டும் என்று பெரியார் அவர்கள் சொன்னார்களோ அந்தப் பெரியாருடைய எண்ணத்தைக் காப்பாற்றுகிற வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற மிகப் புரட்சிகரமான ஒரு தீர்மானத்தை சட்ட மன்றத்திலே கொண்டு வந்து அதை நிறைவேற்றிக் காட்டினார்கள்.
எதுவுமே நிறைவேறுகிற வரையிலே கடினமாகத் தோன்றும். சுயமரியாதைத் திருமணங்கள் அப்படிச் செல்லுபடியாக வேண்டும் என்ற முயற்சி நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. அது நிறைவேற்றப்படாத அந்த காலகட்டம் வரையில் அது ஒரு கடினமான பணியாகத் தோன்றியது.
ஆனால், அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி ‘செல்லுபடியாகும்’ என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்து இனிமேல் நடைபெறுகிற திருமணங்கள் மாத்திரம் அல்ல இதற்கு முன்பு நடைபெற்ற திருமணங்கள்கூட சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தைச் சட்டப் பேரவையிலே நிறைவேற்றி அது இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.
அடுத்தபடியாக, அண்ணா அவர்கள் தமிழகத்திலே ஆங்கிலம் - தமிழ் - இந்தி - என்கிற இந்த மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய இன்னல், தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இருப்பதை உணர்ந்து அண்ணாவைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களும் - மாணவர்களும் உணர்ந்து, மூன்று மொழிகளைப் படிப்பது இயலாத காரியம், இந்தி மொழி கட்டாயம் என்று ஆக்கப்படுமேயானால் தமிழன் இந்தியாவிலே இரண்டாந்தர குடிமகனாக ஆகிவிடுவான். அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
கட்டாய இந்தி எங்கள் மீது திணிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று மாணவர்கள் போர்க்குரல் கொடுத்தார்கள்.
1938-ம் ஆண்டிலேயே கட்டாய இந்தியை எதிர்த்து காராகிருகத்திலே ஆறு மாத காலம் பூட்டப்பட்டிருந்த அண்ணா அவர்கள் - தொடர்ந்து பல ஆண்டுகாலம் இந்தியைத் திணிப்பது கூடாது என்ற முழக்கத்திற்குச்
சொந்தக்காரராக இருந்த அண்ணா அவர்கள், முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடனேயே மாணவர்கள் குரலுக்கு மதிப்பளித்து தன்னுடைய கொள்கை நிறைவேறுகிறது என்கிற குதூகலத்தோடு சட்டப் பேரவையிலே தீர்மானித்தார்கள். ‘இனித் தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தாய்மொழி தமிழும், அடுத்தபடியாக, தொடர்பு மொழியாக, ஆங்கிலமும் இருக்கும்; இந்திக்கு வேலை கிடையாது’ என்கிற அந்தத் தீர்மானத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
அடுத்து நீண்ட காலமாக இருந்து வந்த மற்றோர் முயற்சி.
நம்முடைய தமிழ் நிலத்திற்கு “சென்னை ராஜ்யம்” என்பதுதான் பெயராக இருந்தது. இது இளைஞர்களுக்குத் தெரிய நியாயமில்லை. அவர்கள் பாடப் புத்தகத்திலே தான் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சென்னை ராஜ்யம் என்பது ஆந்திராவிலே ஒரு பகுதியும், கேரளத்திலே ஒரு பகுதியும், இன்றைக்கு உள்ள கர்நாடக மாநிலத்திலே சில பகுதிகளும் இணைந்து ‘மெட்ராஸ் பிரசிடென்சி - சென்னை ராஜதானி’ என்ற பெயர் பெற்ற ஒரு பூபாகமாக விளங்கியது.
