உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இலக்கியத்தில் தமிழகம்

பகுதி 1 · 1 / 4

இலக்கியத்தில் தமிழகம்

பொன்னேரியில் அமைந்து, நீண்ட காலமாக அறிவுத் தொண்டாற்றி வருகின்ற இந்தப் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நம்முடைய மாணவ நண்பர்கள் பேரவையின் தொடக்க விழாவினை நான் நடத்தித் தரவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டு, உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கல்லூரியின் முதல்வர் வழக்கமாக ஆங்கிலத்திலே பேசக் கூடியவர் என்றும் - இன்று அவர் இங்கே தமிழிலே பேசியது உங்களுக்கு வியப்புக்குரியதாக இருந்தது என்றும் - அதனால் இடையிடையே உங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்தின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்றும் நான் அறியலானேன்.

எனக்குள்ள வருத்தமெல்லாம், தமிழ் ஒலிக்கும்போது அது மழலைமொழியில் ஒலித்தாலும் ஒலிப்பது தமிழ் அல்லவா என்ற உணர்வோடு அதை வரவேற்கின்ற பக்குவத்தை - பண்பாட்டினை நாடுமெல்லாம் பெற்றிட வேண்டும்.

ஒரு காலத்தில் தமிழிலே பேசுவதே அவமானகரமானது; மதிப்பிற்குரிய காரியமல்ல; தமிழ் ஒரு நீசமொழி. எனவே ஆங்கில மொழியிலேதான் பேச

வேண்டும்; அப்படிப் பேசுவதுதான் - பேசுகின்றவனுடைய சமுதாய அந்தஸ்தையும் அரசியல் அந்தஸ்தையும் உயர்த்திக் காட்டுகின்ற ஒன்று எனக் கருதப்பட்ட காலம் தமிழகத்திலே இருந்தது. மிகப் பெரும் திறன் வாய்ந்தவர்கள் - மேதைகள் - உளமார நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டுமென்று கருதியவர்கள் கூட, தமிழ் மொழியின் மீது அவர்களுக்கு அன்பு இருந்தாலும் ஆங்கிலத்திலே பேசினால்தான் மாற்றார் தங்களை மதிப்பார்கள் என்கிற மனநிலை பெற்று, ஆங்கிலத்திலே பேசுவதை தங்களுடைய வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

பெயரால் - கல்லூரிகளில் ஆனாலும் கல்வி நிலையங்களில் ஆனாலும் அரசு விழாக்களில் ஆனாலும் அமைச்சர்களோ - அதிகாரிகளோ கலந்து கொள்கிற விழாக்களில் ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்று இல்லாமல் அவரவர்களுடைய விருப்பத்திற்கிணங்க இறை வணக்கம் என்று சொன்னதும் ஒரு அம்மையார் ஒலி பெருக்கியின் முன்னால் வந்து ஒரு தெலுங்கு கீர்த்தனையைப் பாடி முடித்துவிட்டுப் போவதும், இன்னொரு நிகழ்ச்சியிலே ஒருவர் ஆண்டவனைப் பற்றி ஒரு பாடலை பாடி விட்டுப் போவதும் - இப்படிப்பட்ட நிலைமை இருந்ததை நான் உணர்ந்தேன்.

எனவேதான் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்ற பாடலைத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு விழாக்களானாலும் - அரசு சார்புடைய நிறுவன விழாக்களானாலும் - இறுதியிலே தேசிய கீதம் பாடவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப் போலவே தொடக்கத்திலே “நீராருங் கடலுடுத்த” என்று தொடங்கும் இந்தத் தமிழ்த்தாய் வணக்கத்தைப் பாட வேண்டியதும் இன்றியமையாதது என்ற அறிவிப்பு அரசின் சார்பாகப் பிறப்பிக்கப்பட்டது - இங்கே அந்த அடிப்படையில் அந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டபோது உள்ளம் மகிழ்ந்தேன்.

கல்லூரி முதல்வர் உரையாற்றும்போது என்னைப் பற்றிச் சிலவற்றைக் குறிப்பிட்டார்.

என்னை அவர் ‘ஜீனியஸ்’ என்றும், மேதை என்றும், நிர்வாகத் திறன்மிக்கவன் என்றும், எழுத்தாளன் என்றும், பேச்சாளன் என்றும், ஆற்றலாளன் என்றும் இப்படி எத்தனையோ சொற்களைக் கொண்டு அவர்

என்னைப் புகழ்ந்து பேசினார் என்றால், ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவர் அந்தக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருப்பவனைப் பற்றி அதுகூடச் சொல்லாவிட்டால், தகுதியற்ற ஒருவனை அழைத்த குற்றத்திற்கு அவர் ஆளாக நேரிடும்.

எனவேதான் அவர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டவைகள் சம்பிரதாயத்திற்காகச் சொல்லிய வார்த்தைகள் என்ற அளவில்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் சிலர் இருக்கிறார்கள். இவ்வளவுதானா என்னைப் பற்றிச் சொன்னீர்கள்? இதையெல்லாம் விட்டுவிட்டீர்களே என்று வருத்தப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களைப் பற்றிப் பாராட்டுகிற நேரத்தில் அவைகளுக்குத் தாங்கள் உரியவர்கள் தான் என்ற எண்ணத்தோடு எதிரே வீற்றிருக்கும் மக்களை தங்களுடைய விழிகளால் சுழற்றிப் பார்த்து, ‘பார்த்தாயா! நான் யார் தெரிகிறதா? கல்லூரி முதல்வரே என்னைப் பாராட்டுகிறார்!’

என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். நான் அடக்கத்தின் காரணமாக மாத்திரமல்ல; உண்மையிலேயே சொல்கிறேன்.

இன்னும் இந்த நாட்டிற்கு - இந்தச் சமுதாயத்திற்கு - இந்தச் சமுதாயம் உயிர் எனப் போற்றுகின்ற தமிழ் மொழிக்கு தமிழின் மேன்மைக்கு - தமிழர்களின் மேன்மைக்கு - தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய இலக்கியங்களின் வளர்ச்சிக்கு - தமிழ்நாட்டு மக்களுடைய நல்வாழ்விற்கு ஆற்ற வேண்டிய தொண்டு ஏராளம் இருக்கிறது. அந்தத் தொண்டு முழுவதையும் ஆற்றி முடிக்கக் கூடிய அளவிற்கு என்னுடைய வாழ்நாள் இருக்குமா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட - வாழ்ந்த காலம் குறைவோ - நிறைவோ - என்ன செய்தோம் என்ற கேள்விக்கு மன நிறைவோடு நாமே பதில் காண்பதுதான் சரியான வாழ்க்கை; நியாயமான வாழ்க்கை; உண்மையான வாழ்க்கையாகும்.

அந்த வாழ்க்கையைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நடத்திக் கொண்டிருந்தான்.

அப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் நடத்துகின்ற அளவிற்கு அவனுக்கு இலக்கியங்கள் கிடைத்தன.

வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டு வாழ்ந்த பெருமை தமிழ் இனத்திற்கு உண்டு.

தொல்காப்பியம்தான் தமிழிலே மிகத் தொன்மை வாய்ந்தது என்று கூறுகிறோம். தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழன் தன்னுடைய மொழிக்கு இலக்கணம் கண்டறிந்தான் என்பதற்கான சான்றுகளை நாம் தொல்காப்பியத்திலேயே காண முடிகிறது.

‘என்மனார் புலவர்’ என்று தொல்காப்பியம் கூறுகிறது. சில கருத்துக்களை உணர்த்துகின்ற நேரத்தில் இப்படிப் புலவர்கள் சொல்வார்கள் என்று தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது என்றால் - அதற்கு முன்பே இலக்கணம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று - தமிழ்மொழி, இலக்கணம் கொண்ட மொழியாக இருந்திருக்கிறது.

தொல்காப்பியம் தமிழர்களுக்கு கிடைத்த காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று புலவர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். சிலர், தங்களுடைய ஆராய்ச்சியின் மூலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்றும் குறிப்பிடுவார்கள்.

முதற் பதிப்பு : மே 2000