இலக்கியத்தில் தமிழகம்
பகுதி 4 · 4 / 4
“நான் இல்லாவிட்டாலும்கூட, என்னுடைய ஆட்சியே இல்லாவிட்டாலும்கூட, என்னுடைய கட்சியினுடைய ஆட்சியே இல்லாவிட்டாலும்கூட, இரு மொழித் திட்டத்தையோ - தமிழ்நாடு என்று வைக்கப்பட்ட பெயரையோ அல்லது சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலையையோ யாராலும் மாற்ற முடியாது. அதை மாற்றிவிட்டு தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி செலுத்த முடியாது,” என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
சொல்லிவிட்டு இன்னொன்றையும் குறிப்பிட்டார்கள், “அந்த நிலை இருக்கிற வரையில் அண்ணாதுரை வாழ்ந்து கொண்டே இருப்பான்” என்று குறிப்பிட்டார்கள்.
அவருடைய பெயர் இருக்கும் என்று அண்ணா அவர்கள் அறுதியிட்டுச் சொன்னார்கள். அந்த நிலைதான் இன்றைக்கு.
யார் வந்தாலும், தமிழ்நாட்டிற்கு வருகின்ற - வடபுலத்திலே இருந்து வருகின்ற எந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும்கூட, தமிழ்நாட்டு மண்ணை மிதித்தால் அவர்கள் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்துச் சொல்லுகின்ற முதல் வார்த்தை, “நாங்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம். பயப்படாதீர்கள்” என்று சொல்லி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதற்கு அந்த விலையைக் கொடுத்து இருக்கிறார்கள்.
விலை என்றால் சாதாரண விலையா?
தங்கள் நரம்புகளை அறுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அதிலே மீட்டப்பட்ட வீணைதான் தமிழ் இசை அழுதாக இன்றைக்கு தமிழ்ச் சமுதாயத்து மக்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
தங்களுடைய கபால எலும்புகளை உடைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.
தங்களுடைய தேக்கு மரத் தேகங்களுக்கு எட்டுச் சிங்க இளைஞர்கள் தீயிட்டுக் கொண்டார்கள். உலகத்திலே மதத்திற்காகத் தீயிட்டுக் கொண்டு செத்தார்கள் மதக் குருக்கள் என்கிற வரலாற்றைப் படித்திருக்கிறோம்.
மொழிக்காக - மொழியைக் காப்பாற்றுவதற்காக தீயிட்டுக் கொண்டு செத்தார்கள் என்கிற வரலாறு உலகத்திலே தமிழ்நாட்டிற்கு மாத்திரம் உரிய வரலாறே தவிர, வேறு யாருக்கும் இல்லாத வரலாறு.
எனவே அப்படிப்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு தமிழ்ச் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டிய - தமிழ்ச் சமுதாயத்தினுடைய ஏற்றத்திற்கு தோள் கொடுக்க வேண்டிய கால கட்டம் மீண்டும் வந்திருக்கின்றது.
நான் இங்கே மாணவ நண்பர்களை பார்க்கிறேன். நண்பர்கள் என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும்; மாணவத் தம்பிகளை எல்லாம் பார்க்கிறேன்; மாணவத் தங்கைகளைப் பார்க்கிறேன்; நீங்கள் எல்லாம் இந்தச் சமுதாயத்தினுடைய ஏற்றத்திற்கும், தமிழர்களுடைய நல்வாழ்விற்கும் பாடுபட வேண்டும்; பணியாற்றிட வேண்டும்.
இங்கே ஒரு ஒற்றுமையைக்கூட கண்டேன். நம்முடைய மாணவர் தலைவருடைய பெயர் ரவி.
ரவி என்பது வடமொழி.
கல்லூரி முதல்வருடைய பெயர் பத்மநாபன். அதுவும் வடமொழிதான்.
இரண்டும் வடமொழியாக இருந்தால்கூட அதற்குத் தமிழ்ச் சொல் ரவி என்றால் கதிரவன், கதிரவனை இங்கே மாணவர் பேரவையினுடைய தலைவராகப் பெற்று இருக்கிறீர்கள்.
கதிரவனுக்காக மலரக்கூடிய ஒரேயொரு மலர் தாமரை.
அந்தத் தாமரையை வடமொழியில் பத்மம் என்று அழைப்பார்கள். பத்ம மலர் என்பார்கள்.
எனவே ரவியும் - பத்மமும் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் காணுகிறீர்கள்.
கதிரவனுடைய ஒளிபட்டு தாமரை மலர்வதைப் போல பேரறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவு ஒளிபட்டு தமிழ்ச் சமுதாயம் மலர்ந்தது.
அப்படி மலர்ந்த சமுதாயம் கருகிவிடாமல் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை இளைஞர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டு இந்தப் பேரவையைத் தொடங்கி வைக்கிறேன்.
15.10.80 அன்று பொன்னேரி அரசினர் கல்லூரி விழாவில் ஆற்றிய உரை.
