இதய பேரிகை
பகுதி 5 · 5 / 6
சரீரத்தின்மீது தாவியது. சதையைக் கருக்கியது. எலும்பை உருக்கியது. ஆனால் அவர்கள் கொள்கைகள் தணலிலே வெந்த தங்கமாயின.
ஏன், இத்தனை கஷ்டமடைந்தார்கள்.... அவதியை வலுவிலே ஏன் அணைத்துக்கொண்டார்கள்.... தாங்கள் மன்னர்களாகவா? அல்லது மடத்திலவர்களாகவா? மாணிக்க ஊஞ்சலிலே மகரக் கட்டிலிலே — மயில் ஆசனத்திலே — மந்தகாசர்களாய் அமர்ந்து மகிழ்ச்சிக்கூத்து ஆடவா? அப்படி நினைத்திருந்தால் அவர்கள் கையிலே சிலுவையோ-விபூதியோ-அல்லவா காட்சியளித்திருக்கும். அவர்கள் கைகளில் இருந்தது அறிவு நூல்கள் தானே! அந்தஸ்தை விரும்பியிருந்தால் ஆண்டவன் - ஆண்டவனின் கதை-ஆண்டவனின் அற்புதம் இப்படியல்லவா காலக்ஷேபம் நடத்தியிருப்பார்கள்.
அவர்கள் விரும்பியது; மதத்தை மண்ணாக்கி, மடத்தனத்தை அழித்தது. மக்கள் சமுதாயத்தைப் புதுமைச் சோலையாக்க வேண்டுமென்பதுதான். தாங்கள் அடியெடுத்து வைக்கும் புரட்சிப் பாதை பயங்கரம் நிறைந்தது என்பது அவர்களுக்கு தெரியும். தெரிந்தும் தைரியமாகக் கிளம்பினார்கள். தாங்கள் அழிக்கப்பட்டாலும் தங்கள் கொள்கைகள் அழிக்கப்பட முடியாத நிலையை அடைந்தார்கள்.
நம் நாட்டிலே மட்டுமல்ல—நானிலமெங்கணுமே ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நாகரீகம் அரும்பக்கூட முடியாத நிலைமை இருந்திருக்கிறது. மேல் நாடுகளிலே இருந்த மத நம்பிக்கை நம்மைவிட மட்டமானது. அங்கேயிருந்த கடவுள்கள் நமக்கிருப்பதைவிட தொகையிலே அதிகமானவர்கள். அங்கேயிருந்த குருக்கள்—
நம்மை ஆட்டிப்படைக்கும் குருக்கள் மாதிரி விடக் கொடுமை நிறைந்தவர்கள்.
அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? சீர்திருத்தம் முன்னவிட்டது. சீர்திருத்த கிடந்த மூட நம்பிக்கைகள் மூலையில் போய் முக்காடிட்டு அமர்ந்தன. சீர்திருத்தவாதிகள் செத்து மடிந்தார்கள். சீர்திருத்தம் சீரழியவில்லை செங்கோல் பிடித்தது. மேல் நாட்டிலேயிருந்த கடவுளின் சிலைகள் கண்காட்சிசாலைக்குப் போய்விட்டன. நம் நாட்டிலே ஆற்றங்கரை கணபதி அப்படியேதானிருக்கிறார். அறியாமைக்கு நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதையும் அரசாங்கமே முன்வந்து செய்கிறது.
சுக்கல் சுக்கலாகப்போன சோமநாதபுரம் கடவுளை இப்போது தூக்கி மண்ணில் வைத்து மகிழ்கிறது நமது அரசாங்கம். அதுமட்டுமா? வேப்பிலை கட்டிய சாமியார் வருகிறார். தில்லையிலே நிர்வாண சாமியார் திரிகிறார். ஜப்பான் கோயிலிலே பாப்பு அவதாரத்தில் பகவான் வந்தார். ரமணர் செத்தார், வால்நட்சத்திரம் புறப்பட்டது, பாண்டுரங்கனைத் தூக்கினார்கள், வரமாட்டேன் என்று சொல்லி விட்டார் இந்த வருடம் தேர்தல் நடக்காது என்று அகில இந்திய அற்புத ஜோசியர் கூறிவிட்டார்.
இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன. அநேகமாக பத்திரிகைகள் எல்லாம் பஞ்சாங்கமாகிவிட்டன. சரிந்துபோன சமுதாயத்துக்கு இன்னும் ஆழமாகச் சவக்குழி தோண்ட முயற்சி நடக்கிறது இங்கே.
அந்த முயற்சியை முறியடித்து முதுமையேறிப் போன மூடக்கொள்கைகளை வேரோடு சாய்த்துப் புதுவழி காணத்தான் அறிவியக்கம் பணியாற்றி வருகிறது.
நமது உரிமை.
“பேனுவை உடைப்போம்... வாயை அடைப்போம்...என்ன தைரியம் உனக்கு! எங்களைப்பற்றி பேச நீ யார்? எங்கள் நடவடிக்கைகள் குறித்து எழுத நீ யார்? நாங்கள் சுதந்திரம் வாங்கியவர்கள். நாட்டையாளுகின்றவர்கள். நாங்கள் வைத்தது சட்டம், விடுதலை வாங்கித் தந்த எங்களுக்கு முன், விவேக சிந்தாமணி....நீ யார்? நாங்கள் விடுவித்தோம் மக்களே! நாங்கள் வேதனைப்படுத்துவோம் அவர்கள்! விழியிலே நீர் பெருக்கி மொழியிலே கனல் பெருக்கி விசாரக்குரல் எழுப்புகிறாயே; உனக்கென்ன இருக்கிறது உரிமை?
நாங்கள் பாரததேவியின் விலங்கொடித்தவர்கள் பட்டினி போடுவோம் மக்களே. பசி பசி எனக் கேட்டிடும் கூக்குரல் எங்களுக்கு கோலாகலமாக இருக்கும். அதற்காக நீ ஏன் ஒப்பாரி வைக்கிறாய் வெள்ளைக்காரனை வெளியேற்றிய வீராதி வீரர்களப்பா நாங்கள்...எங்கள் ஆட்சியிலே நீ பேசக்கூடாது; நெருப்பு மழைபொழியும்; நீ கேட்க உரிமை கிடையாது. எரிமலைகளை உண்டாக்குவோம் கண்டித்து எழுதக்கூடாது நீ சர்க்காருக்குச் சாமரம் வீசலாம்....சந்தோஷப்படுவோம், சந்தனம் பூசலாம் தட்டிக்கொடுப்போம்.
மயக்கம் தெளிய மருந்து கொடுத்தால் மண்டையிலடிப்போம். நீ யார் எங்களுக்கு மருந்து கொடுக்க! பார்த்தாயா போலீஸ் படையை! பார்த்தாயா சிறைச்சாலையை! சிந்தித்தாயா தூக்குமேடையை! கண்டிருக்கிறாயா கண்ணீர்ப்புகையை! ஜாக்கிரதை! எங்கள் விஷ
யத்தில் தலையிடாதே! நீ பேசாதே! எழுதாதே! நல்லவைகளைக்கூட நீ சொல்லலாம்...நாங்கள் அவற்றை நஞ்சாகத்தான் மதிப்போம்....உஷாராயிரு! உயிரை விடாதே!”
இப்படிப்பட்ட எச்சரிக்கைகள்—மிரட்டல்கள்—அடக்குமுறைகள்—அதிகார அம்புகள் இதே தோரணையில் இல்லாவிட்டாலும், இந்தக் கருத்தை எதிரொலிக்கும்விதத்திலே எதிர்க்கட்சிகளின்மேல் எவப்படுகின்றன நமது சர்க்காரில்! குன்றத்தூர் சம்பவத்திலிருந்து கூச்பிஹார் கொடுமைவரையில் நாட்டிலே பொழுது போக்கும் கதைகளாக ஆகிவிட்டன.
அரசாங்க சிறைச்சாலைகளுக்கு அஜீரணம் ஏற்படுகிற அளவுக்கு அரசியல் கைதிகள் நிரப்பப்பட்டுவிட்டனர், அங்கே அவர்களுக்கு ஏற்படுகிற இன்னல்களோ நினைத்தாலே நெஞ்சு எரிகிறது, அவ்வளவு பயங்கரமானவை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்திய போராட்டங்களில் சிறைப்பட்ட வீரர்கள் அந்தக் கொடுமைகளை சுவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். மொட்டையடிப்பது-பட்டினிபோடுவது-வேலைகள் தந்து வேதனைப்படுத்துவது இப்படி கொடுமைக் கூர்வேல் பொழிந்திருக்கிறார்கள் சிறைச்சாலைகளிலே!
திராவிட கழகத்தார் நடத்திய மறியலிலே சிறைப்பட்ட தோழர்கள் பட்டிருக்கும் அவதியும் கொஞ்சமல்ல. கம்ப்யூனிஸ்ட் கட்சிக் கைதிகளுக்கும் காண்போர் கண்ணீர் விடும் நிலையிலேயே உபசாரம் நடந்திருக்கிறது, சிறைக்கோட்டத்திலே! இன்னைக்கு அவர்கள் வசம் இருக்கிற சிறைச்சாலைகள் முன்பொரு நாள் அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்பதை உண்மையாகவே மறந்துவிட்டார்கள். “மோர்
தாப்படவில்லை” இதற்கொரு “போர்” நடக்கும் அப்போது!
“சாப்பாட்டிலே உப்பில்லை” இதற்கொரு சத்யாக்கிரகம் நடத்திருக்கிறார்கள் இந்த சண்டமாருதர்கள்!
“குளிப்பதற்குத் தண்ணீர் போதவில்லை” இதற்கொரு சத்யப் போராட்டம் துவக்கியிருக்கிறார்கள் இன்னைக்குச் சர்க்காராய் மாறிவிட்ட சன்மார்க்க சீலர்கள்!
மோருக்கு, உப்புக்கு, தண்ணீருக்குப் போராடியவர்கள் இன்று புலிகளாக மாறி எதிர்க்கட்சிகளை எலிகளாக நினைத்து நடக்கிறார்களே; ஏன் என்று தான் நமக்குத் தெரியவில்லை. ‘ஏன்’ என்று கேட்டால் எடுக்கிறார்கள் அடக்குமுறைச் சட்டத்தை!
இது முறையா? தகுமா? தர்மந்தானா? என்று கண்ணீரிலே எழுதுகோலைத் தோய்த்து எழுதினால் “விடாதே பறிமுதல்!” என்று விரைந்து கட்டுகின்றனர்.
இந்தப் பயங்கரமான சூழ்நிலை எப்போது இருக்கிறது தெரியுமா தோழர்களே?
ஆரியமாயைக்கும், அறிவு பயக்கும் நமது நூல்கள் பலவற்றிற்கும் அணைபோட்டது எப்போது தெரியுமா தோழர்களே?
நல்ல கருத்துள்ள—நாட்டுக்குப் புதையல் போன்ற-நமது நாடகங்களை நடிக்கக்கூடாதென்று
தடைபோட்டது எப்போது தெரியுமா தோழர்களே?
நாரணமங்கலத்தார்களை 144 போட்டுக் கடுங்காவல் தண்டனை கொடுத்தது எப்போது தெரியுமா தோழர்களே?
நண்பர் நடராசன் பேசப்போன குன்றத்தூரிலே கொடுமையை வாரியிறைத்து குண்டுகளை வீசி ரத்தக்களரியை உண்டுபண்ணியது எப்போது தெரியுமா தோழர்களே?
சேலத்திலே தோழர் சித்தையன் முன்னின்று நடத்திய நெசவாளர்கிளர்ச்சியை சாக்காகவைத்து அவர்மீது ஜாமீன் வழக்குத்தொடுத்தது எப்போது தெரியுமா தோழர்களே?
காங்கிரஸ் அஹிம்சை ஆட்சியில் என்று பதில் சொல்லுவீர்கள். இல்லை! இல்லை! அதுவல்ல நாம் குறிப்பிடுவது! எழுத்துரிமை பேச்சுரிமை கட்டுப்படுத்தப்படாமல் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் மேலே தீட்டிய தீமைகள் நர்த்தனம் புரிந்தன நாட்டிலே! இப்போது திருத்தப்படும் அரசியல் சட்டத்திலே எழுத்துரிமை பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் திட்டம் வரப்போகிறது. ‘பொது அமைதி’க்கு உகந்தபடி எழுத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தம் வரப்போகிறது.
பொது அமைதி என்று பெயரை வைத்துக்கொண்டு போலீஸ்காரணங்களை உற்பத்தி செய்து அடக்குமுறைக்கு சுதந்திரமளிக்கப்போகிறார்கள் என்றுதான் நாம் நினைக்கவேண்டியிருக்கிறது. எழுத்து, பேச்சு உரிமைகளுக்கு கட்டுப்பாடு
இல்லாதபொழுதே இந்தத் தொல்லைகள் என்றால், கட்டுப்பாடு வந்துவிட்டால் எவ்வளவிருக்குமா அடக்குமுறைக்கு! இப்படிப் பேசாதே என்கிறார்கள். இனிமேல் பேச நினைக்காதே என்பார்கள்.
