இதய பேரிகை
பகுதி 4 · 4 / 6
நாடக நடிகர் யாராவது வர அசெளகரியப்பட்டால்கூட போலீஸ் ஆபீசர் ஒருவரையே அந்த பாத்திரத்தை நடிக்க வைக்கலாம் என்கிற அளவுக்குப்போலீசார் நமக்கு நாடகங்களை மனப்பாடம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
இறுதியில் நாடகம் நடந்தேவிட்டது. மக்கள் வெள்ளம். மன்றத்திலே இராவணனுக்கு அண்ணா.
மேற்கண்ட நிகழ்ச்சிமட்டுமல்ல; இதுபோன்ற நிகழ்ச்சிகள் இப்போது ஏராளமாக ஆகிவிட்டன. நமது நாடகங்களை நடக்கவொட்டாமல் செய்தால் அதை ஒரு வெற்றியாகக்கருதி பூரிக்கலாம் என்பது அவர்களின் ஆசை.
அந்த ஆசையின் எதிரொலிதான் வெருட்டல்-விஷமத்தனமெல்லாம்.
நாடகம் எப்படியிருக்க வேண்டும்; என்கிற இலக்கணத்தைப் போதிக்கிற பெரிய மனிதர்கள் கூட சிலர் புறப்படுகிறார்கள்.
நாடக உலகத்தில் பல வருடங்கள் பழகிவிட்டதை மட்டும் தகுதியாகக்கொண்டு பேசவரும் இவர்கள் நம் அனுதாபத்துக்குரியவர்தானென்றாலுங்கூட-வேண்டாத வேலைகளில் ஈடுபடுகிறார்களே என்பதுதான் நமது வருத்தம்.
வீதிதேவர்கள் உலவுகிறார்கள் வீணுரை பேசிக்கொண்டு, அந்தக் கும்பலிலே இவர்கள் பெயரும் சேர ஏன்தான் விரும்புகிறார்களோ!
அனுபவம் மாத்திரம் போதாது—ஆற்றலும் தேவை என்பதை உணரவேண்டும். இதை அவர்கள் நம்புகிற ‘ஒளவையார் - முருகன் கதை’ கூட எடுத்துக்காட்டும்.
நாட்டு நிலையைச் சிந்திக்காமல் பொறுமையை அடக்கமுடியாத ஒரே காரணத்திற்காக வீதிதேவர் பக்கம் வீழ்ந்து வீறிட்டுக் கத்துவதில் வீரமுமில்லை; விவேகமுமில்லை! விஷப்புத்திதான் ஒளிவிடுகிறது.
நேர்மை உதயமாகும்வரையில் — திராவிடர் வாழ்வு உயரும்வரையில் - நீதிதேவன் மயக்கங்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். வீதிதேவர்களின் புலம்பல் வெற்றியளிக்க முடியாது.
பூம்புகார் மாநாடு.
கம்பராமாயணம் மட்டுமே கவிதைத்தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது இப்போது. கம்பனுக்குமட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள் இளங்கோவடிகளுக்கும் மதிப்புதர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மகாநாடுதான் கவிதை மகாநாடு என்று கருதிக்கிடந்தவர்கள் சிலப்பதிகாரமகாநாடு நடத்துகிற அளவுக்குப் பெருநோக்கம் பெற்றிருக்கிறார்கள்.
திராவிடத்திலே அரசியலில்மட்டுமின்றி, சமுதாயத்தில்மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறக்கமுடியாது - கம்பனுக்குக் கோயில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்துபோன மூடநம்பிக்கையை நமது கம்பராமாயண எதிர்ப்புக் கருத்துக்கள் முறியடித்தன. கம்பனை நாம் குறைகூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள், கொஞ்சமல்ல, கொடுஞ்சொற்களால் அர்ச்சிக்கப்பட்டோம்.
கலையுணர்ச்சியில்லாதவர்கள் என்று பேசப்பட்டோம். “செவிச்சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்” என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்கமுடியாமல் செய்துவிடவேண்டுமென்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள
வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள் குரங்குகள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்க வேண்டுமென்றோம். அடிப்படையான வெறுப்பே அதுதான், ஆரிய ராமனைக் கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான்.
அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரியதாயிருப்பது தன்மானமற்றச் செயல் என்று விளக்கினோம். காலத்துக்கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள் கம்பதாசர்கள்! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக்கொடுத்திருக்கிறான் என்பதே நம்முடைய தலையாயக் குற்றச்சாட்டு.
அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலேகூட நாம் கூறினோம் நாங்கள் இலக்கிய விரோதிகளல்ல; சிலப்பதிகாரம்போன்ற நூல்கள் அக்காலக் கருத்துக்கள் பல கொண்டனவாயினும் திராவிடரை இழித்துப் பேசவில்லை என்பதோடு திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன, அவைகளை நாங்கள் வெறுப்பதில்லையென்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக் கிடக்கும்போது தமிழனை அரக்கனெனக் கூறும் கம்பராமாயணத்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு.
நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின்மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல. பகவத் உணர்ச்சியுமல்ல. அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல. தமிழர்களுடைய வாழ்க்கைமுறை சிலப்பதிகார காலத்தில் எப்படி
யிருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வட நாட்டாரின் முடிநெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும் நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத்தாலும் கண்ணகியென்கிற பாத்திரம் கற்பனைக் கெட்டாத செயல்களே செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும் அக்காலப் பெண்மணிகளின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்துகொள்கிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டியர் மூவருடைய ஆட்சிபற்றிய விபரங்கள் தெரிந்துகொள்ளும் அரிய நூல் அது என்பதாலும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை.
திருக்குறள் ஏன் போற்றுகிறோம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை; அக்காலத் தமிழகத்தைப்பற்றிய நல்லதொரு படப்பிடிப்பு திருக்குறள் என்பதாலும் திராவிடர் நீதி முறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக்கிறோம். குறைகளேயில்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிபட்டுப் போகின்றன. வரப்போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற புரட்சிக் கருத்துக்கள் கூட பழமையென்று கூறப்படலாம்.
பொதுவாக குறள், சிலப்பதிகாரம்போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது; ஆகவே பாராட்டுகிறோம். கம்பன் திராவிடரை இழிமக்களாய் ஆக்கிவைத்தான்; ஆகவே எதிர்த்தோம்,
நம்முடைய பேச்சுக்களுக்கு சக்தி உண்டு என்பதைத்தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன்வந்திருப்பது காட்டுகிறது.
ஆனால் ஒன்று, கம்பனைப்போல ஆக்கிவிடக் கூடாது, இளங்கோவடிகளை! காவிரிப்பூம்பட்டினத்திலே கூடிய மகாநாட்டில் இந்திரவிழா கொண்டாடும்படியாக உபதேசம் செய்திருக்கிறார் ஆர். கே. சண்முகனார்! அந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மகாநாடு.
“கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்டபுலம்பிரியாது கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல்நீத்தம் எங்கோ மகளையாட்டிய வந்தநாள் ஆரியமன்னர் ஈரைஞூற்றுவர்க்கு ஒருநீயாகிய செருவெங்கண விழித்துக் கண்டது கடுங்கட்கூற்றம்”
என்பனபோன்ற செய்யுட்களை விளக்கி திராவிடரின் பண்டைய வீரத்தை - நீதியை நினைவுபடுத்துவதற்கு பயன்படவேண்டும். பூம்புகாரில் கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகாரத்துக்கு உரியவர்களல்ல. சிலப்பதிகார மாநாட்டைப்பற்றி அவர்கள் சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தருகிறது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் ‘இந்திர விழா’ போன்ற புது மூடத்தனங்களை வளர்த்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.
வெற்றி விளக்கு!
நச்சுக்கோப்பையைக் கையிலே ஏந்தி—நெஞ்சிலே வீரத்தை ஏந்தி—மொழியிலே கொள்கையை ஏந்தி—உயிர்விட்டிருக்கிறார்கள். நெருப்பிலே தள்ளப்பட்டபோதும் உடலிச் சாம்பலாக்க முடிந்ததே தவிர அவர்களின் உயர்ந்த லட்சியத்தைப் பொசுக்க முடியவில்லை. துப்பாக்கியிலிருந்து குண்டுகள் புறப்பட்டு அவர்கள் மார்பைத்துளைத்திருக்கின்றன; அப்போதும் கொள்கையிலே ஓட்டை ஏற்படவில்லை. அலைந்து திரிந்திருக்கிறார்கள், ஆதரிக்க யாருமில்லாது விரட்டப்பட்டிருக்கிறார்கள், வசைமாரிகளைத் தாங்கியிருக்கிறார்கள்.
மக்களின் முன்பு பைத்தியக்காரர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். காணத்தகாதவர்களாக - காதகர்களாக-கயவர்களாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். எச்சு ஒருபுறம் - எண்ணம் - ஒருபுறம் - இப்படி மாறி மாறி எதிர்ப்பு அம்புகள் எவப்பட்டிருக்கின்றன. இவ்வளவையும் சமாளித்திருக்கிறார்களே தவிர சாய்ந்துபோனது கிடையாது.
சுயநலம் அவர்கள் வாழ்வில் சுற்றிக்கிடந்தது. சொந்த விஷயம் அவர்கள் கொள்கையை சுக்கு நூறுக்கியது கிடையாது. குடும்பம் அவர்கள் பாதைக்கு இடையூறு விளைத்தது கிடையாது. கோலாகலத்தை விரும்பியது கிடையாது. சாக அடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சாகவில்லை. அதற்கு மாறாக புது உடம்பு பெற்றார்கள். புகழ் உடம்பு பெற்றார்கள். நெருப்பு அவர்கள்
