இதய பேரிகை
பகுதி 3 · 3 / 6
அன்றொருநாள்--ஆம்1949 செப்டம்பர் 17-ம் நாள் சிங்காரச் சென்னையிலே தளபதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துவக்க விழாவிலே கண்ணீர்த் துளிகளைச் சிந்தினர், வார்த்தைகளைச் சிந்துவதற்குமுன்!
அண்ணாவின் கண்ணீர்--அவர் வடித்ததுமட்டுமல்லவே--தம்பிமார்களின் தணல் நெஞ்சம், இரத்தத்தை நீராவியாக்கி, அதைக் கண்ணெனும் வானத்து வழியாக வழியவிட்ட பெருமழைத்துளிகளின் கூட்டல்லவா?
அந்தக் கண்ணீர்த் துளிகள் வீண்போகுமா? வீண்போகத்தான் விடுவோமா?
“சிறு துளி பெரு வெள்ளம்” அதோ அலைவீசும் பெரு வெள்ளம்! கண்ணீர் வெள்ளமா? அல்லது களிப்பு வெள்ளமா?.......
வீதிதேவர் மயக்கம்.
நினைத்ததை தனிப்பட்டவர்களிடம் கூறினோம் நிதானிக்காமல் சீறினர்கள் கூட்டங்களிலே அதை எடுத்துச் சொன்னோம். ‘அக்ராசனாதிபதி அவர்களே’ என அழைத்து ஆண்டவனின் திருக்கல்யாணக் குணங்களைக் கூறி வயிறு நிரப்பிவந்தவர்களுக்கு நமது மேடை அபாய அறிவிப்பாகத் தெரிந்தது; அலறித் துடித்தார்கள்.
பேசியதுடன் நிற்கவில்லை. எழுதிக்காட்டினோம் எண்ணங்களை. அம்மாமித் தமிழிலே அக்கிரகாரத்துக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர்களுக்கெல்லாம் எச்சரிக்கையாக மாறிற்று நமது எழுத்து. எரிந்து விழுந்தனர்.
நம்மால்--நம் நினைப்பால்--பேச்சால்--எழுத்தால்--நடுங்கவேண்டியவர்கள் நடுங்கினார்கள்.
யாருக்காக அந்தப்பணியை மேற்கொண்டோமோ; அவர்கள்--யார் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டுமோ அவர்கள்,--யார் பெருமைப்பட்டிருக்க வேண்டுமோ; அவர்கள்--அலறித் துடிக்கிறார்கள் என்னும்போதுதான் ஆச்சரியம் பிறக்கிறது நமக்கு.
நினைப்பு, பேச்சு, எழுத்தோடு நிற்கவில்லை நாம் நாடக உருவிலே நம் கருத்தைத் தெரிவிக்கப் புறப்பட்டோம். எந்தக் கருத்தை இந்த நாட்டிலே இதுவரையில் மூடிவைத்திருந்தார்களோ--அந்தக் கருத்துக்கள் திரையைக் கிழித்துப் புறப்பட்டன, கருத்தால் எழுச்சி பிறந்தது. எழுச்சியைக் கண்ட கயவர் வெகுண்டனர். வெகுள்வது சகஜம்.
கருத்தால் பயன்பெறவேண்டியவர்கள் கனல் கக்கும் விழியினராய்த் திரிய ஆரம்பித்திருக்கின்றனர். இது கருத்தின்மீது உள்ள வெறுப்பாகக் கூடத் தெரியவில்லை. கருகிப்போன உள்ளத்தின் பொருமைச் சாம்பல் காற்றிலே பறப்பதாகத்தான் தெரிகிறது.
நாம் பேசுகிறோமென்றால் பல்லாயிரவர்--நடிக்கிறோமென்றால் லட்சம்பேர்--நமக்காக அல்ல நாம் வெளியிடும் உண்மைகளுக்காக கூடி நிற்கிறார்கள்.
அண்ணாவின் பேச்சு--அன்பர் ராதாவின் நடிப்பு--நடிப்புப் புலவர் ராமசாமியின் நாடகம்--இவைகளைக் காணுகிற நேரத்திலே--கலைவாணர் கிருஷ்ணனின் வில்லுப்பாட்டு, காலட்சேபம் இவைகளைக் கேட்கிற நேரத்திலே கருத்து விருந்து பெறுவோர் ஒருபுறம் குழுமியிருக்கும்போது கருத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல்--தனிப்பட்டவர்களுக்கு இவ்வளவு செல்வாக்கு வளர்ந்துவிட்டதே என்று தப்புக்கணக்குபோட்டு அழுகிய இதயத்தை அணைக்க “ஆகா! ஊகூ!”
என்று கருத்தின்மீது பாய்ந்து கூச்சல் கிளப்புவது அறியாதார் செய்கை தான் என்றாலுங்கூட அந்தப் பட்டியலிலே பலர் நிற்கிறார்களே என்கிறபோது பரிதாபம் ஏற்படத்தான் செய்கிறது.
அறிக்கை! மறியல்! அட்டகாசம்! விட்டேனு பார் என்ற உறுமல்.
சென்னையிலே தியாகராயர் கல்லூரி உதவி நிதிக்காக நடைபெறும் கலா நிகழ்ச்சிகளில் “நீதிதேவன் மயக்கம்” ஒன்று. நீதிதேவன் மயக்கம் அறிஞர் அண்ணாவின் சிந்தனைப் பூந்தோட்டத்
திலே பூத்த புதுமலர். இரக்கமற்ற அரக்கன் என இலங்கை வேந்தன் மீது கம்பன் சாட்டிய குற்றத்தை ஆதாரங்களை அள்ளி வீசி பொடிப் பொடியாக்கிக் காட்டுகிற புரட்சிச் சித்திரம்.
“என்னை இரக்கமற்றவன் என எழுதி வைத்தீரே கம்பரே! இராமனைக் காட்டுக்குத் துரத்திய கைகேயி காட்டினளா இரக்கம்?
குழந்தையைக்கொன்ற கோட்புலி நாயனாரிடம் உண்டா இரக்கம்? மிதிலை எரியும்போது வேதாந்த விசாரணையிலிருந்த ஜனகரிடம் கண்டீரா இரக்கத்தை? சீதையை வயிற்றிலே சிசுவுடன் ஆரண்யத்துக்குத் துரத்தினனே இராமன், அவன் இரக்கத்தை நினைத்ததுண்டா?
இப்படிப்பட்ட கேள்விகளை கம்பன்மீது வீசுகிறான் நீதிமன்றத்திலே நிற்கும் இராவணன். கம்பன் விழிக்கிறான். நீதிதேவன் தீர்ப்புக்கூற முடியாமல் மயங்குகிறான்.
கம்பனென்ன - யாருமே பதில்கூற முடியாத கேள்விகள்தானே அவைகள்!
இராவணன் உருவிலே அண்ணா நின்று கேட்கிறார் என்றால், கம்பரையா கேட்கிறார்? இல்லை..... கம்பர் நூலுக்கு விழா எடுக்கும் விவேகிகளைப் பார்த்து கேட்கிறார். இதுதான் நீதிதேவன் மயக்கம்.
இந்த நீதிதேவன் மயக்கம் நடக்கக்கூடாதென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் பார்த்தார்கள் கம்பனின் வாரிசுகள்.
கல்லூரி நிதி. அதற்கு அண்ணாவின் நாடகம். இசையரசு தேசிகரின் முயற்சி. நாடகத்தின்பெயர் நீதிதேவன் மயக்கம்.
இதற்கு குறுக்கேநின்றார்கள், வீதிதேவர்கள். விழியை உருட்டினர்-நாடகத்திலேவரும் நீதிதேவன் போல! அதட்டிப்பேசினர் நாடக நீதிதேவனின் குரல்போல!
மறியல் செய்வோமென மார்தட்டினர். கடைசியில், போலீசாரிடம் போயினர்-வீதிதேவர்களின் கதறல்களைக் கேட்ட போலீஸ் நீதிதேவன் மயக்கம் நாடகத்துவசனங்களை பாடம்செய்ய ஆரம்பித்தது.
