உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இதய பேரிகை

பகுதி 2 · 2 / 6

பிரஞ்சு நாட்டுப் பேயர்களாம் பிரபுக்களின் பிடரியில் அடித்தது எது? கண்ணீர்த்துளி,

சீனத் தீவு, செஞ்சீனுவானது எதனால்? கண்ணீர்த்துளியால்,

கண்ணீர்த்துளி சர்வாதிகாரிகளைச் சாய்த்திருக்கிறது. கண்ணீர்த்துளி பல இடங்களிலே ரத்தத் துளிகளை வரவழைத்திருக்கிறது. கண்ணீரை அலட்சியப்படுத்தியவர்கள் தங்கள் கழுத்திலிருந்து தலைக்கு விடுதலை கொடுத்தவர்களானார்கள்.

‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள்’

‘இலட்சியவாதி அழுத கண்ணீர்..........?’

கேள்விக்குறியல்ல பதில். இதோ வளர்ந்து நிற்கிறதே நமது சக்தி, இதுதான் லட்சியவாதியின் கண்ணீருக்குள்ள உண்மையான பலம்.

வளர்ந்திருக்கிறோமென்றால் சாதாரணமாகவா? காட்டாற்று நிறைப்போல கட்டுப்பாடில்லாமலா? அமைப்பு தெரியாத அரிச்சுவடிகளை வைத்துக்கொண்டா?......இல்லை இல்லை........

திட்டவட்டங்களோடு--திராவிடத்தின் நாலா பகுதிகளிலும்--திறன்மிக்கவரை செயலாற்றுகிறவர்களாகக்கொண்டு செழித்தோங்கியிருக்கிறோம்.

மாவட்டந்தோறும் கழக மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டு, மாநில மாநாட்டுக்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்கிற நாம், சென்ற இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை சிந்தையில் நிறுத்திப் பார்த்தால் எவ்வளவு பூரிப்பு பொங்குகிறது. குதூகல உருவங்களாகிவிடுகிறோம் நாம். கண்ணீர்த்துளிகளாகிய நாம் எவ்வளவு கண்ணியத்தோடு கடமையாற்றியிருக்கிறோம் என்ற களிப்பால் துள்ளி விளையாடுகிறது உள்ளம்.

வந்துபோன வடநாட்டு மந்திரிகளனைவரும் கடலெனக் குழுமிய கருங்கொடிப் பட்டாளத்தைக் கண்டு கதிகலங்கிப்போயினர்.

குதிரையின் குளம்படிகள் நம் கொள்கை வீரர்கள் உடலிலே அழுந்தியுங்கூட--குன்றத்தூர் வேட்டுச் சப்தம் கிளம்பியுங்கூட--நாரணமங்கலம் நடந்துங்கூட--தேனியிலே திருவிளையாடல் புரிந்து

நெடுஞ்செழியனின் பிணத்தைக் காணுவதற்கான முயற்சியில் எதிரிகளால் நடைபெற்றுங்கூட--தளர்ந்துவிடாத தடந்தோள் படைத்த தன்மான வீரர்கள் அறப்போராட்டங்களிலே குதித்தவண்ணமிருக்கின்ற சின்னாளப்பட்டியிலே--தென்தாமரைக் குளத்திலே--ஆறுமுகநேரியிலே--சித்தையன் கோட்டையிலே தடையுத்தரவுகளை மீறி கழகத்தின் முன்னணி வீரர்கள் சிறைச்சாலை புகுந்திருக்கிறார்கள். வழக்கு முடிந்து வாரக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ தண்டனை அனுபவிக்கத் தயாராய் நிற்கிறார்கள்.

நாடெங்கும் கிளைக்கழகம் காணும் நன்முயற்சிகள் ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நிதி நாடகங்கள், நாடகத்திலே நாட்டு நலிவு போக்கும் நல்ல பிரச்சாரங்கள், பிரச்சினைகள் பிரித்து பிரித்து விளக்குவதற்கான சமூகநீதி, எழுத்துரிமை போன்ற மாநாடுகள்.

இந்த வளர்ச்சியின் வேகத்தைக் காணுகிற எதிர்க்கட்சியினர் தேனீக்களை ஏவுகிறார்கள் அரசாங்கமோ அடக்குமுறையை நீட்டுகிறது.

நம்மீது அனுதாபமுள்ள கட்சிகளோ தேர்தலுக்குத் துணைவராதா இந்தத் திரண்ட சக்தி என்று பெருமூச்சு விடுகின்றன.

விலைக்கு வாங்க முடியுமா இந்த சக்தியை என்று வியாபார வியாகூலமடைந்திருக்கிறார்கள் பலர்.

முட்டி முட்டிப் பார்த்து, மூலையில் உட்கார்ந்து முகாரி பாடத் துவங்கிவிட்டன குட்டிச் சுவர்க்குக் குயில்கள்.

இப்படி, எதிர்ப்பு நெருங்கமுடியாத எரிமலையாக இலட்சியக் காளைகளின் இன்பச் சோலையாக--திராவிடத்தில் ஓயாது ஒலிக்கும் தேன் கீதமாக--வெற்றிச் சிரிப்பிலே, வீரநடையிலே, நிழலாட்டம் போடும் நிரந்தர எழிலாக--உயர்ந்து நிற்கிறது உழைப்பாளிகள் கட்டி முடித்த திராவிட முன்னேற்றக் கழக உப்பரிகை.

இந்த உப்பரிகையிலே உல்லாசியின் உற்சாகக் கீதமிருக்காது. உழைத்தவனின் வெற்றித் தெம்மாங்கு இருக்கும். ஏவலர் சூழ--எடுபிடிகள் சுற்றிட--இன்பத்தில் மிதந்து கிளம்பிடும் எக்காளமிருக்காது. ஏழை வாழ--எத்தன் வீழ--இலட்சிய வேலேந்திக்கிளம்பிடும் வேங்கைகள் இருப்பார்கள்.

பணபுரியின்மீது பாயலாமா?..... பதவிக்கோட்டையை முற்றுகையிடலாமா? என்ற பாசி மனத்தவரின் சதியாலோசனை நடைபெறாது இந்த உப்பரிகையில்!

பணிபுரிவோர்மீது பற்று வைப்போம்--பதவி விரும்பார்மீது நம்பிக்கை கொள்வோம்--என்கிற பாச அலைகள் மோதிக்கொண்டிருக்கும்.

வேஷமிருக்காது, நேசமிருக்கும் கூலிக்கு, வேலையென்ற குள்ள எண்ணமிருக்காது; கொள்கைக்கு செயல் என்ற பரந்த எண்ணம் இருக்கும்.

இத்தகைய உப்பரிகையிலேதான் உலவுகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழக அறப்போர் வீரர்கள்.

அறப்போர் வீரர்கள் ஆகா! எவ்வளவு ஆனந்தம் பெருக்கெடுக்கிறது நமக்கு!...........கண்ணிலே நீர்

தேங்கி நின்றவர்கள் கையிலே வேல் தாங்கி நிற்கிறார்கள் என்றால் எவ்வளவு மகத்தான பணி புரிந்திருக்கிறார்கள், மனமுடைந்த பிறகுங்கூட என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.