உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இதய பேரிகை

பகுதி 1 · 1 / 6

சிறு துளி பெரு வெள்ளம்.

வேதனைப் புயலொன்று கிளம்பிற்று. நமக்கும் நமது தலைவருக்கும் இருந்துவந்த பாசமென்னும் பூந்தோட்டத்தை பாழாக்கிற்று. தலைவரைக் கண்டிக்கவேண்டிய பாரம், நமது இதயத்தின்மீது ஏற்பட்டுவிட்டது. அவர், மிக மிகச் சாதாரணமென்று கூறும் திருமணச் சம்பவத்தால் நமது திகைப்பு, கண்ணீர் பயனற்றுப்போய் நமது நிலையிலே ஒரு ‘வருந்தத் தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது’

மாலை மணி பத்திரிகையின் முதல் இதழிலே தலையங்கத்தை இப்படித் தீட்டியிருந்தார் அண்ணா.

**வருந்தத்தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது.**

அந்த வாசகத்தை ஊன்றிக் கவனிக்கவேண்டும்.

சரித்திரம் படித்து--சர்வதேச அரசியலிலே தினத்து-தியாக முத்திரைகளைப்பெற்று-பேச்சால்-எழுத்தால்-நடிப்பால், பேரறிஞர் முதல், பாமரர் வரையில் தங்கள் கருத்தின் பக்கம் திரும்பக்கூடிய அளவுக்கு திறமையோடு பணிபுரியும் ஆயிரமாயிரம் தம்பிமார்கள் இருந்தும் அவர்களை வைத்துக் கொண்டு, மாற்றார் மலைக்குமளவுக்கு-விரோதிகள் வெகுளுமளவுக்கு-சந்தேகங்கொண்டோர் சந்தோஷப்பட; சாபம்கொடுத்தோர் சஞ்சலப்பட, சமுத்தி

ரத்தின் பேரலைகளென ஓயாது உழைத்துவரும் உண்மைத் தொண்டர்கள் பதினாயிரக் கணக்கில் இருந்தும் அவர்களை வைத்துக்கொண்டு, ஒரு மகத்தான அரசியல் இயக்கத்தை நடத்தக்கூடிய மனப் பக்குவமும், மனவலிமையும் கொண்ட அறிஞர் அண்ணா ‘வருந்தத்தக்க மாறுதல்’ என்று வாட்டத்துடன் குறிப்பிட்டாரென்றால் அந்தச் சூழ்நிலையை எப்படித்தான் விவரிக்கமுடியும்.

சுரங்கத்திலிருந்து தங்கம் பெயர்க்கும்போது பாறையொன்று உருண்டுவிழ--அந்தப் பாறையிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியும், நாம் கொள்கையைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒன்றேதான்.

எவ்வளவு துடிதுடித்திருக்கிறோம், எப்படி யெப்படி துவண்டுபோயிருக்கிறோம். சிந்திய கண்ணீர் எவ்வளவு! செருமியழுத ஒலி செந்தமிழ் நாட்டையே உலுக்கிவிட்டதே! சிந்தாகூலர்களாக--செய்வதறியா சிலைகளாக மாறிவிட்டோமே சில நாட்கள்.

அந்த சில நாட்களை நினைத்தால்--அய்யோ--மீண்டும் வரவேண்டாம் அந்த நாட்கள் என்ற பிரார்த்தனைதானே நம் நெஞ்சிலே துள்ளியெழுகிறது.

பிரிகிறோமே என்ற பேரிடி ஒருபுறம், பிரிந்து விட்ட பிறகு பிரிந்துவிட்டோமே என்ற சோகத்தை விட பிரிந்துபோன நாம் பெரியதொரு எதிர்காலத்துக்குரியவர்களாயிற்றே நாட்டுப்பணி யென்னும் நல்லதோர் ரதத்திலே பூட்டப்பட்ட காளைகளாயிற்றே; எப்படி சாதிக்கப்போகிறோம் லட்சியங்களை!

ஆகுமா நம்மால்!....என்கிற பொறுப்புணர்ச்சிகளால் தூண்டப்பட்டு திகைத்திருந்தோமே அந்த நிலைமைதான் மிக மிகப் பயங்கரமானது.

அதைவிட பயங்கரமானது நம்மீது வீசப்பட்ட தூற்றல் அஸ்திரங்கள், கேலிக்கணைகள், பரிகாச பாணங்கள் அவதூறு அம்புகள்.

“இவர்களால் முடியுமா ஒரு இயக்கம் நடத்த!”

“இதுகள் அற்பாயுசுகள்”

“சிறு பிள்ளைவிட்ட வேளாண்மை, வீடுவந்து சேருமா?”

என்பதுபோன்ற ஏளனங்கள் நர்த்தனமாடின.

“இவர்களால் முடியுமா ஒரு இயக்கம் நடத்த?” என்ற சந்தேகம் மாறி, இவர்களால்தான் முடியும் என்ற பதில் கிடைத்துவிட்டது.

“அற்பாயுசுகள்” என்ற ஆரூடம் அழிந்து “சிரஞ்சீவிகள்” என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டு விட்டது.

“சிறுபிள்ளை வேளாண்மை” என்ற பழமொழிகள் பழிக்கப்பட்டு சிறு பிள்ளைகள் தரும் விளைவு பாரீர்--அறுவடையைக் காணீர்--குவித்திருக்கும் போர் பாரீர்--என்று கர்வத்தோடு கர்ச்சனை புரிந்திடும் காளையரைக் காண முடிகிறது.

சிலரது சுயநலத்தோடு முடிந்துவிடும் என்ற பேச்சுக்கள் சீரழிக்கப்பட்டு, மூச்செல்லாம் நாட்டுக்கே என்று முழக்கமிடும் முன்னணிவீரர்கள் பட்டாளத் தம்பிகளென பாங்கான நடைபோடும்

பாசறையாக மாறிவிட்டது நமது முயற்சியின் பயன்.

கண்ணீர்த் துளிகளென்ற புதுப்பெயர் நமக்கு யாரும் கண்டு பிடித்துக் கொடுத்ததல்ல. நாமே நமக்குச் சூட்டிக்கொண்ட சோகப்பெயர். ஏழை என்று ஏழை கூறிக்கொள்வதிலே இழிவு கிடையாது.

பாடுபடுபவன் தன்னை பாட்டாளி எனப்பகருவதிலே பரிகாசத்திற்கிடமில்லை. கண்ணீர் விட்டுக் கதறிய நாம், நம்மைக் கண்ணீர்த்துளிகள் என்று கூறிக்கொள்வதிலே கெளரவமிழந்தவர்களாகிவிட மாட்டோம். மாறாக பெருமையடைகிறோம்--பெருமிதங்கொள்கிறோம்--பீடுநடை போடுகிறோம். காரணம் என்ன?

ஜாரின் அரசியலை--ஜாலக்காரன் ரஸ்புடீன் சல்லடைக் கண்களாக்கியது எது? கண்ணீர்த்துளி.