உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இதய பேரிகை

பகுதி 6 · 6 / 6

இப்போது எழுதாதே என்கிறார்கள். இனிமேல் எண்ணாதே என்பார்கள். பலாத்கார பேச்சுக்கள்—பார்க்கக் கண்கூசும் ஆபாச எழுத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவைதான்; ஆனால், அதற்காகப் பேச்சுரிமை எழுத்துரிமை மூச்சு விடக் கூடாது நாட்டிலே என்று நவில்வது முதல்தரமான ஜார் ஆட்சி!

திராவிட இயக்கத்துக்கு—முன்னேற்றக் கழக வீரர்களுக்கு பெரும் சோதனைக் காலங்கள் வரப்போகின்றன. நம் வளர்ச்சியைக் கண்டு நடுங்கியிருப்பவர்கள் ‘ஒடுக்கமாட்டார்களா’ இவர்கள் என்று ஓயாக்கவலைகொண்டிருப்பவர்கள் சென்னை அரசாங்கத்தார். வரப்போகும் அரசியல் சட்டத் திருத்தத்தை அமோகமாக வரவேற்பார்கள். நம் பேச்சின் ஒவ்வொரு எழுத்தையும் கவனிப்பார்கள். நம் எழுத்தின் ஒவ்வொரு வளைவையும் அளந்து பார்ப்பார்கள்.

நம்மை எதிர்நோக்கியிருக்கும் திட்டங்கள் ஏராளம். தியாகத்திலே குதிக்கவேண்டிய திட்டங்கள்—வரப்போகும் அறப்போர்கள் அதிகம் அதிகம் என்றுதான் இன்றைய சூழ்நிலை கட்டிக்காட்டுகிறது. அந்தப் போராட்டக் காலங்களிலே புதுப்புது பாணங்கள் நம்மீது தொடுக்கப்படும்.

அதற்காக அமைக்கப்படும் அஸ்திவாரத்தில் ஒருபகுதிதான் இப்போது வருகிற அரசியல் சட்டத் திருத்தம். நாமோ, அஞ்சி அஞ்சிச் சாகும் கூட்ட

மல்ல! வெறும் வேட்டுக்கள் கிளப்புபவரல்ல! பணத்துக்கோ, பதவிக்கோ விபீஷணர்களாகாத பரம்பரையினர்! ஒரு இலட்சியத்துக்காக களத்தில் இறங்கிவிட்டவர்கள் வாழ்வுவரினும், சாவு தழுவினும் வரவேற்போம் என்ற வைர நெஞ்சுடன் வாளேந்திவிட்டவர்கள். வருவது வரட்டும் என்று உறுதியுடனே போர்நாள் எதிர்பார்த்திருப்போம். எழுத்துரிமை, பேச்சுரிமை—எத்தனை உரிமைகள் தனித்தனியாகப் பறிக்கப்பட்டாலும் சரி; நாம் ஒரே ஒரு உரிமை—மொத்தமான உரிமை—முழு உரிமை—திராவிடம் தனிநாடு என்ற உரிமை—கிடைக்கும் வரையில் போராடுவோம்.

பந்தல் ஆடுகிறது!

பகவத்சிங்குகளின் எலும்புகளை தூண்களாக நட்டு, திருப்பூர் குமரன்களின் நரம்புகளைக் கீற்றுகளாக முடைந்து போட்டு அமைக்கப்பட்ட அழகான பந்தல். காந்தியக் காந்த விளக்குகள் மின்னிட-வ. உ. சிதம்பரத்தின் தியாகத் தோரணங்கள் அசைந்தாடிட அலங்கரிக்கப்பட்ட அருமைமிகு பந்தல். அந்தப் பந்தலிலே அஹிம்சை ஆலவட்டம் சுழல-சத்திய சாமரங்கள் வீச-அன்னை சுதந்தர தேவி கொலுவிற்றிருக்கப்போகிறாள் என்று சொல்லிடக் கேட்டோம். சிந்தை குளிர்ந்தோம்.

தேவியும் வந்தாள், வான் முட்டும் வந்தேமாதர கோஷத்துடன்! தேவி-சுதந்தரதேவி-அகண்ட கண்களை விசாலமாக்கி அருகிருக்கும் அன்பர்களை அருள்பாலித்து அரியாசனத்தமர்ந்தாள்.

தேவிக்குப் படையல்.......பூஜைக்குத் தயார் என்று பூஜாரிகள் எழுந்தோடினர். மணி முழங்கிற்று, மந்திரங்கள் ஒலித்தன. ஆசியாவின் மாணிக்கம் அகில இந்தியாவின் முடிசூடா மன்னர் தேவியின் பிரதம குருக்கள் பண்டிதநேரு பூஜாச் சாமான்களுடன் வந்தார். ‘ஏற்றுக்கொள் தாயே’ என்று படையலைக் காட்டினார்.

பார்த்தாள் தாய். படபடவென அடித்துக்கொண்டது அவள் இதயம். பளிச்சிடும் மின்னல் கண்டதுபோல் கண்ணை மூடிக் கொண்டாள்.

பழு எலும்பு புறப்பட்ட பஞ்சைகள், பார்வை மங்கிப்போன பசிக்காரர்கள், குடல்கருகிய குழந்தை

கள். செத்துக்கொண்டிருக்கும் ஜீவன்கள், “இறப்புலகில் இன்பம் காண்போம்” என்று இவ்வுலகை வெறுத்த பிணக்குவியல்கள் சோறு கிடைக்காதவர்-சுகம் தெரியாதவர்-இப்படி ஒரு படையல்.

சிறைக்கோட்டம், அங்கே செம்மறியாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கும் ‘இந்தியப் பிரஜை’கள். செக்கிழுக்கும் மாடுகளென மனிதர்கள். இப்படி ஒரு விருந்து தேவிக்கு!

தடுப்புக்காவல் சட்டம்-வகுப்புவாரி உரிமைக்கு வைத்த கொள்ளிக் கட்டை — எழுத்துரிமைக்கு போடப்பட்ட முள்வேலி பேசாதே என வாயைப் பொத்தும் இரும்புக் கரங்கள் — இப்படி ஒரு சாப்பாடு சுதந்திர அன்னைக்கு!

தேவி ஆடினாள்—கிடுகிடென ஆடினாள்—நடனமல்ல; நடுக்கத்தால் மிரண்டு ஆடினாள். அவள் சிங்காதனம் ஆடிற்று—மேடை ஆடிற்று—பந்தலும் ஆட ஆரம்பித்துவிட்டது—ஏன் ஆடாது?

சுதந்திரம் சுவையான சொல் ஆயிற்றே...... பொன்கூண்டில் அடைப்பட்டிருப்பதைவிட மண் தரையில் உலவுவது மேல் என்பார்களே—அவ்வளவு சோபிதமான வார்த்தையல்லவா சுதந்திரம்—அதை சோக வார்த்தை ஆக்கிவிட்டார்களே; சுக மண்டபத்தைச் சுடு சுரங்கமாக்கிவிட்டார்களே; சுமன்றன கேள்விகள். கேள்விகளா அவை......சூறவளிக் காற்று! ஆட ஆரம்பித்த பந்தல் அடியோடு விழுவதற்குப் புறப்பட்ட புரட்சிப் புயல்.

அதோ...எத்தனை தூண்கள் விழுந்துவிட்டன. கிருபளானி—கோஷ்—பிரகாசம்—ஓமாந்தூரார்—

காணவில்லை தொண்டாற்றும் இந்தத் தூண்கள்! நாடு துன்பக்கேணியான பிறகும் தேவிக்குப் படையல் செய்யும் துன்மார்க்க முறையை தொடர்கதையாக விரும்பாதவர்கள் வெளியேறிவிட்டனர், எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால்தான் என்ன, நல்லவர்கள் வெளியேறிவிட்ட பிறகு நாங்களும் இருக்கிறோம் என்று எந்தக் கட்சியாலும் நடித்துக்கொண்டிருக்க முடியாது இது காங்கிரஸ் கட்சிக்கு விதிவிலக்கல்ல. தேசியப்பந்தல் ஆட ஆரம்பித்து விட்டது. புயல் வீசுகிறது.

மழை கொட்டுகிறது. பந்தல் விழத்தான் போகிறது. விழுந்துவிட்டபிறகு நிச்சயமாக நிமிர்த்தி வைக்க முடியாது.

இந்தப் பந்தல் சேலத்து தி. மு. கழக மாநாட்டில் விழுந்த பந்தல் அல்ல. பகலிலே பந்தல் விழுந்தது மாவீரர் கூடினார். மாலையில் அதே பந்தலில் மாநாடு துவங்கியது. தி. மு. கழகத்தார் சொல்வார் மட்டுமல்ல; செயல்வீரர் என்பதையும் காட்டிக்கொள்ள விழுந்தது அந்தப் பந்தல். காங்கிரஸ் பந்தல் எவராலும் தூக்கி நிறுத்த முடியாத அளவுக்கு—காந்தியாரே திரும்பி வந்தாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு—சாயப்போகிற பந்தல்.

ஆடும் பந்தலுக்குள்ளிருந்து அதிகார வேட்டுக்கள் கிளப்புகிறார்கள்—ஆணவமொழி பேசுகிறார்கள்—அடக்குமுறை வீசுகிறார்கள்—நாம் அவர்களுக்கு முதலில் நினைவுபடுத்துகிறோம். பந்தல் ஆடுகிறது; விழப்போகிறது—பார்த்து நடவுங்கள் என்று!

கருகிடும் மொட்டுக்கள்!

இளந்தளிர்! கொழுந்து! பசிலைப்பெண்! ஒன்பது வயது நிறைந்த சிறுமி! ஒரு வீட்டிலே வேலைக்காரி வேலை அவளுக்கு. அவளுக்கு எஜமானர்கள் இரண்டுபேர். அந்த ஒன்பதுவயது சிறுமியின் மீது எழுபத்திரண்டு காயங்கள்! வேலையிலே தவறும்போதெல்லாம் அவள் அப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறாள். அடிக்கப்பட்டிருக்கிறாள். சுடப்பட்டிருக்கிறாள். எழுபத்திரண்டு காயங்களும் நீதிமன்றத்திலே பேச ஆரம்பித்தன. இரண்டு எஜமானர்கள் மீதும் வழக்கு நடைபெற்று இருவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி கொழும்பிலே நடைபெற்றிருக்கிறது. குழந்தை பெண்ணின்மீது எழுபத்திரண்டு காயங்கள் உண்டுபண்ணியிருக்கிறார்கள் என்றால் மனிதத் தன்மைக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பு எவ்வளவு மோசமாக அறுந்துவிட்டது என்பது தெளிவாகிறது. கொழும்பிலே கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சமுதாயம், அந்த நல்ல தீர்ப்பை அவதிப்படுகிறவர்களுக்கு வழங்கியிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்று பதில்தான் கிடைக்கிறது.

கொழும்பிலேமட்டுமல்ல இந்தக்கொடுமை! நாம் வாழும் இடத்திலே அதைவிடப் பெரியகொடுமைகள் அகோர நர்த்தனமாடுகின்றன. கொழும்பிலே சிறுமியின் ரத்தம் கொட்டப்பட்டிருக்கும் - இங்கேயோ எலும்புகளே முறிக்கப்பட்டுவிடுகின்றன. கொழும்புக் கோரம்

வெளிவந்த செய்தி! வெளிவராத செய்திகள் ஆயிரக் கணக்கில் உள்ளன இங்கே! கொழும்பு சிறுமி கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள், நீதிமன்றத்துக்குச் செல்லாத வழக்குகள் எத்தனை எத்தனையோ இங்கு! கிராமங்களிலே பண்ணைக்கார்களின் வீடுகளிலே பார்க்கமுடிகிறது நம்மால், கொழும்புக் கொடுமையை!

மாட்டுக்கார்களாக-கூப்பிட்ட குரல் கேட்கும் வீட்டுக் கூலிகளாக-அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட சிறுவர்களை அந்தச் சீமான் வீடுகளிலே காணமுடிகிறது. கொழும்புச் சிறுமியைப் போல அவர்கள் வதைக்கப்படுவதையும் காணமுடிகிறது. சிறு குற்றம் செய்திருப்பான்; மரத்திலே கட்டிவைத்து மண்டையைப் பிளப்பார்கள். சாட்டையை ரத்தத்தில் நனைப்பார்கள். எலும்புகளைப் பிய்த்துவிடுவார்கள். எத்தனை காரமான வசவுகள் எத்தனை கடுமையான தாக்குதல்கள்.

யார்மீது? இளஞ்சிறார்கள்மீது! ஏழு, எட்டு, ஒன்பது என்ற வயதுள்ள சிறுவர்கள்மீது! நடக்கிறது இங்கே இந்த நாசம். கேட்பாரில்லை இவைகளை!

கொழும்பிலேகூட கோர்ட்டுக்குள் போய்த்தான் நீதிபெற முடிந்தது. இங்கே கோர்ட்டுக்குப் போக முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொழும்பிலே-இங்கே-ஏன், எங்குமே, இந்தக்கொடிய செய்கை நடைபெறாமலிருப்பதற்கு வழிவகுக்கப்படவேண்டும். அரசாங்கம் அதற்கான செயல்களில்

ஈடுபடவேண்டும். நமது அரசாங்கமோ இப்போதுதான் நெசவாளர் அறப்போரிலே பத்து வயது சிறுவன் ஒருவனைக் குருதியிலே மிதக்கவிட்டிருக்கிறது இது குழந்தைகளைக் காப்பாற்ற முன்வருமா? கருகிடும் மொட்டுக்களுக்குப் புதுமலர்ச்சி அளிக்குமா?