‘ஹைக்கூ கவிதைகள்’
பகுதி 2 · 2 / 3
“after the storm boy wiping the sky from the Tables”
இதற்கு தமிழாக்கம்தான் நான் இங்கே முன்பு குறிப்பிட்டதாகும். புயலுக்குப் பிறகு சிறுவன் ஆகாயத்தை எப்படி துடைக்க முடியுமென்றால் - புயலால் பாதிக்கப்பட்ட ஆகாயம் - ஆகாய வெளியில் இருந்து சிதறிய பல
பொழிவுகள் - இவைகள் எல்லாம் சிந்திய அந்த மேசையை அவன் துடைக்கிறான் என்பதிலிருந்து புயலால் ஏற்பட்ட விளைவுகளை கவிஞன் அழகாக சித்தரித்திருக்கிறான் என்பது புரிகிறது.
“ஹைக்கூ என்பது நம்மை அமைக்கும் கைச்சைகை, பாதி திறந்த ஒரு கதவு; தூய்மையாய்த் துடைக்கப்பட்ட ஒரு கண்ணாடி” என்று “பிளித்” குறிப்பிடுவதையும் நம்முடைய நிர்மலா சுரேஷ் அவர்கள் வெகு அழகாக இந்நூலிலே விளக்கிக் காட்டி ஹைக்கூவின் தனித் தன்மையை விளக்கியிருக்கிறார்.
நம்முடைய டாக்டர் சி.பா. அவர்கள் இங்கே விளக்கியதைப் போல இதிலே மூன்றாவது வரிதான் அதனுடைய தனித்தன்மை!
“உதிரும் மலரொன்று மீண்டும் கிளைக்குத் திரும்புகிறதோ: (மரத்திலிருந்து மலர் உதிர்வதைக் காணுகிறான். அந்த உதிர்ந்த மலர் மீண்டும் கிளைக்குத் திரும்புவதையும் பார்க்கிறான். எப்படி முடியும்? மூன்றாவது வரி அந்தச் சந்தேகத்தைப் போக்குகின்றது) ஓ! இது வண்ணத்துப் பூச்சி!”
வண்ணத்துப் பூச்சி கிளையை நோக்கிப் பறப்பதை ஹைக்கூ இப்படி வர்ணிக்கிறது.
அதைப்போல - பூனை ஒன்று இறந்து கிடந்தது என்று சொன்னால், அது சாதாரண விஷயம். ஐயோ பாவம், பூனை இறந்து விட்டது என்று சொன்னாலும், அது ஒரு அவலச் சொற்றொடர், அவ்வளவுதான்! ஆனால் ஹைக்கூ அதை எப்படிச் சொல்கின்றதென்றால்,
“இறந்த பூனை திறந்த வாயுடன் கொட்டும் மழையில்...”
மைகேல் கிலிங்டாக் என்பவரின் ஆராய்ச்சி வெளியீட்டை நிர்மலா சுரேஷ் வெளிக்காட்டியிருக்கிறார்.
“ஹைக்கூக்கள் மேலோட்டமானவையோ அல்லது பொதுவானவையோ அல்ல. எல்லா ஹைக்கூக்களும் சிறப்பாக; குறிப்பாக ஒரு நிகழ்வை அல்லது கூர்ந்து நோக்கிய பார்வையை முன் வைக்கின்றன” - இந்தப் பண்பை இன்றைய அமெரிக்க ஆய்வாளர் ஹிக்கின்சன் - Zoom lens effect எனப் பெயரிட்டு அழைத்தார். ஹைக்கூ ஒரு பரந்த காட்சியிலிருந்து ஒரு குவிந்த காட்சிக்கு ஒரு நிழற்படக் கருவியைப் (காமிரா) போல நம்மை அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவினைப் போலவும், படப்பிடிப்பைப் போல உள்ளது ஹைக்கூ என்று குறிப்பிடுகிறார்.
நம்முடைய தம்பி இயக்குநர் வசந்த் அவர்களுக்கு “ஸ்லம்” லென்சைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்தக் கவிதையில் முதலில் ஒரு சமவெளி காட்டப்படுகிறது.
“சமவெளியில் பசுவின் உதடுகள் புல்லின் ஈரத்தோடு”
சமவெளியில் என்பது “லாங் ஷாட்”; பிறகுதான் மிடில் ஷாட்டை நோக்கி வந்து ஸ்லம்க்கு வரவேண்டும். லாங் ஷாட், சமவெளி; பசுவின் உதடுகள் - ஸ்லம் ஸ்லம் நெருங்குகிறது. புல்லின் ஈரத்தோடு - புல் சாப்பிட்ட ஈரத்தோடு இருக்கிறது! இதுதான் லென்ஸ் பயன்படுத்துவதைப் போல!
தம்பி வசந்த் ஒரு கருத்தை இங்கே சொன்னார். இரண்டு உதடுகள் - ஆனால் ஒரே முத்தம்தான் என்றார். நான்கு உதடுகள் தேவை என்பதை அவர் மறந்து விட்டார். (பலத்த கைதட்டல்) முத்த மயக்கம்; அவ்வளவுதான்!
(பலத்த சிரிப்பு) பாம்பைப் போல - புகை மேல் நோக்கியோ அல்லது வேறு திசை நோக்கியோ செல்வதைப் பாம்பு போல புகை வளைந்து செல்கிறது என்று சொன்னால் நம்முடைய கவனம் எல்லாம் பாம்பு வளைவதைப் பற்றித்தான் போகும் என்பதற்காக அதைச் சொல்லாமல்,
“புகை எழும்... வளைந்து வானை நோக்கி”
என்று ஒரு ஹைக்கூ கவிதை வெளியிடப்பட்டுள்ளதை நிர்மலா சுரேஷ் இந்த நூலிலே எடுத்துக்காட்டி அனிகலற்ற அழகு - ஹைக்கூ கவிதைகளுடைய இலக்கணம் என்பதை குறிப்பிடுகிறார்.
சிவப்பு சில்வண்டைப் பற்றி நான் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் தமிழ்க்குடிமகன் அவர்கள் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்துச் சென்றுவிட்டார்.
இன்னொரு அழகான, மிகவும் ரசிக்கத் தக்க, எண்ணிப் பார்த்து சிந்திக்கத் தக்க ஒரு ஹைக்கூ கவிதை.
“அரிசியைத் தூவினேன் இதுவும் ஒரு பாவம்தான் கோழிகளுக்குள் சண்டை”
அரிசியைத் தூவினேன்... அப்படித் தூவியது பாபமாம்: ஏனென்றால் அரிசிக்காகக் கோழிகள் சண்டை போடத் தொடங்கிவிட்டன.
அடுத்து, ஒரு சமுதாயப் புரட்சி எண்ணத்தையும் ஹைக்கூ கவிதை வெளிப்படுத்தத் தவறவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது என்பார் பாடுகிறார்...
