‘ஹைக்கூ கவிதைகள்’
பகுதி 1 · 1 / 3
‘ஹைக்கூ கவிதைகள்’
ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழா
நிர்மலா சுரேஷ் எழுதியுள்ள இந்த அரிய நூலை வெளியிடுகின்ற விழாவிலே கலந்து கொண்டு - வெளியிடுகின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
இந்த அரங்கத்தில் குழுமியிருக்கின்ற உங்களில் மிகப் பலருக்கு ஹைக்கூ கவிதைகள் என்ற சொற்றொடரே புதுமையாக இருக்குமென்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். (கைத்தட்டல்) எல்லோரும் இதைப்பற்றி பேசுகிறார்களே என்பதற்காக தெரிந்ததைப் போல தலையாட்டிக் கொண்டிருக்கின்ற பலபேர் இங்கேயிருக்கிறீர்கள் (பலத்த சிரிப்பு) என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு - இயக்கத்தை, எங்களையெல்லாம் அரவணைத்து நடத்திச் சென்ற காலகட்டத்தில் பொழுது போக்குக்காக பிற்பகல் காட்சிக்கு - மினர்வா தியேட்டரில் நடைபெறும் ஆங்கிலப் படத்திற்கு எங்களையெல்லாம் அழைத்துச் செல்வார்.
மிகச் சிறிய அரங்கம் - மினர்வா அரங்கம் என்பது அங்கே படம் பார்க்கும் போது - நானாவது எஸ்.எஸ்.
எல்.சி. வரை படித்தவன். உயர்நிலைப் பள்ளியைக் கூட எட்டிப்பார்க்காத பல கழக நண்பர்களும் எங்களோடு அங்கே வருவார்கள். படம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நகைச்சுவைக் காட்சியின் போது எல்லோரும் சிரிப்பார்கள். அப்போது எங்களோடு வந்த அந்த சில நண்பர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். படம் முடிந்து திரும்பி வரும் போது, அண்ணா - அவர்கள் பெயரைச் சொல்லி அழைத்துக் கேட்பார் - “என்னப்பா, நாங்களெல்லாம் சிரிச்சோம், நீ ஏன் சிரிச்சே?”
என்று கேட்பார். “சிரிக்காமல் இருந்தால் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காக சிரித்தோம்” என்பார்கள். அதைப்போல ஹைக்கூ கவிதைகள் என்றால் என்னவென்று தெரியாத பலபேர் இங்கேயிருப்பது எனக்குத் தெரியும். நான் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். (பலத்த சிரிப்பு)
இந்த ஆராய்ச்சி நூலை டாக்டர் சி.பா. அவர்கள் இங்கே அறிமுகப்படுத்தினார் என்பதை விட திருமதி நிர்மலா சுரேஷ் அவர்கள் வாயிலாக ஹைக்கூ கவிதைகள் இன்றைக்கு தமிழகத்திலே அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏற்கனவே என்னுடைய நண்பர் ஈரோடு தமிழன்பனைப் போன்றவர்கள், ஏன் நிர்மலா சுரேஷைப் போன்றவர்கள் ஹைக்கூ கவிதைகளை எழுதி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றபோதிலும், இந்த விழா மூலம்தான் எப்படி ஜப்பான் நாட்டிலே ஹைக்கூ கவிதைகள் பரவியிருக்கிறதோ அதைப் போல தமிழகத்திலும் ஹைக்கூ கவிதைகள் பரவக் கூடிய காலகட்டம் இன்றைக்கு உதயமாகியிருக்கிறது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
அப்படிப்பட்ட ஒரு அறிமுக விழாதான் ஹைக்கூ கவிதைகளுக்கு இன்றைக்கு இங்கே நடைபெறுகிறது. அவர்களுடைய இந்த ஆராய்ச்சி நூலில் ஹைக்கூ கவிதைகளைப் பற்றி அவர்கள் சொல்லும் போது:-
“புரிதல் அரிதானவர்க்கு ஹைக்கூ ஒரு புதிர்! புரிந்தவர்க்குக் கிடைப்பதுவோ புதையல்! விலகி நிற்பவர்க்கு அது மாயம்; விளங்கிக் கொள்பவர்க்கு அது மானுட நேயம்! ஆர்வமில்லாதவர்க்கு அது வெறுமை; ஆர்வமுடையவர்க்கு அது பொறுமை! ஹைக்கூ ஏழு கடல் தாண்டும் மந்திரவாதியின் கிளியல்ல; எளிமையால், கட்டுக்கோப்பால், அதிர்வுகளை ஏற்படுத்தும் படிமங்களால், மின்னலடிக்கும் உள்ளுணர்வால், செறிவால் தன் மூன்றடிக்குள் அனுபவத்தை அளக்கும் முத்திரை!
தமிழில் வாமனக் கவிதையெனப் பெயர் சூட்டிக் கொண்டது”
என்று குறிப்பிடுகிறார்.
அதைத் தொடர்ந்து “சென்” உரை என்ற குறிப்பில் -
“மனிதனுக்குப் புரிய வைக்க சொற்களைத் தேடாதீர்கள்: சொற்களைப் புரிந்து கொள்ள மனிதனைத் தேடுங்கள்”
என்று இந்தக் கவிதை வரிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒரு கதை உண்டு. கற்பனைக் கதைதான். தெனாலிராமனைப் பற்றியது! மன்னனுக்கு முன்னால், மன்னனையும் மக்களையும் ஏமாற்ற அவன் சொன்னான்.
“இந்திர லோகத்திலே ஒரு பட்டாடை இருக்கிறது. அந்தப் பட்டாடையை என் ஒருவனால் தான் கொண்டு வர முடியும்” என்று சொன்னான். மேலும், “கொண்டு வந்தால் என்ன தருவீர்கள்?” என்று மன்னரைக் கேட்டான். மன்னன் “பத்தாயிரம் வராகன் பொன் தருகிறேன்” என்றான். பொருளைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தவணை வாங்கிக் கொண்டான் தெனாலிராமன்.
ஆனால் பல நாட்கள் கெடு மண்டபத்திற்கே பிறகு வரவில்லை. “பத்தாயிரம் வராகன் வாங்கிக் கொண்டு போனானே கொண்டு வர அவனை” என்று தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார்கள். தெனாலிராமன் கொலுமண்டபத்திற்கு வந்தான். “எங்கேயப்பா இந்திரலோகத்து பட்டுச் சேலை?”
என்று மன்னன் கேட்டான். ஒரு சிறிய குங்குமச் சிமிழ் போன்ற பாத்திரத்தைக் காட்டி, “இதற்குள்ளே இருக்கிறது” என்று சொன்னான். “எங்கே எடு பார்ப்போம்” என்றான் மன்னன். அந்தச் சிமிழைத் திறந்து ஏதோ ஒன்றை இழுப்பதைப் போல பாவனை செய்து - “இதுதான் இந்திரலோகத்துச் சேலை” என்றான். ஆனால் அங்கே ஒன்றும் இல்லை. வெறும் கையாலேயே முழம் போட்டு “அற்புதம் முழம் இருக்கிறது பாருங்கள்” என்றான்.
மன்னன் திகைத்தான். சொல்லிவிட்டு உடனடியாக தெனாலிராமன் சொன்னான், “இது பகுத்தறிவு உள்ளவர்களுடைய கண்களுக்குத்தான் தெரியும்” என்று. உடனே மன்னன், தெரியவில்லை என்று சொன்னால், தனக்கு பகுத்தறிவு இல்லை என்றாகிவிடுமே என்பதற்காக, “ஆஹா, அருமையாகத் தெரிகிறது, நல்ல வண்ணம், வெகு அழகாக இருக்கிறது” (பலத்த சிரிப்பு) என்று கூறி, அமைச்சரைப் பார்த்து “உங்களுக்குத் தெரிகிறதா?”
என்று கேட்டான். அமைச்சரும் தனக்குத் தெரியவில்லை என்று சொன்னால், தன்னுடைய அறிவைப் பற்றிச் சந்தேகப்படுவார்கள் என்று பயந்து, “அழகாக இருக்கிறது, அருமையான சேலை” என்றான்.
கொலு மண்டபத்திலே உள்ள ஒவ்வொருவரும் அப்படியே “ஆஹா, பிரமாதம், பிரமாதம்” என்று சொன்னார்கள். பத்தாயிரம் வராகன் ஏன்!
அதைப் போல, இந்த ஹைக்கூ கவிதைகள் கவிதை உணர்வு உள்ளவர்களுக்குத்தான் தெரியுமென்று சொல்லிவிட்டு - உங்களுக்கு தெரிகிறதா என்று கேட்டால், நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று கரம் தூக்கி - எங்களுக்குத் தெரிகிறது, தெரிகிறது என்று நிச்சயமாக சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் - இது இப்போது புரியாமல் இருந்தாலும், அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி நூல் வெளியிடப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
“புயலுக்குப் பிறகு, சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான் மேசைகளின் மீதிருந்து”
இதுதான் வியப்புக்குரியது. இரண்டு வரிகளுக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது வரி! புயலுக்குப் பிறகு சிறுவன் ஆகாயத்தை துடைக்கிறான் - மேசைகளின் மீதிருந்து! இதை ஆங்கிலத்தில்...
