உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

‘ஹைக்கூ கவிதைகள்’

பகுதி 3 · 3 / 3

“தோலை பொறுத்தவரை எத்தனை வேறுபாடு, ஆணுக்கும் பெண்ணுக்கும்

ஆனால் எலும்பைப் பொறுத்தவரை இருவரும் மனிதர்களே”

தோல்தான் ஆண், பெண் இரு சாராரையும் வேறு படுத்திக் காட்டுகின்றன. ஆனால், எலும்பைப் பொறுத்த வரையில் இருவரும் மனிதர்களே என்று ஆண் பெண் சமத்துவத்தை ஹைக்கூ கவிதை கூறுகிறது.

ஆனால் அந்தக் காலத்துச் சிவ வாக்கியார் - சித்தர் சிவ வாக்கியர்

“...... ஆவது ஏதடா? பனத்தி ஆவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலே இலக்க மிட்டிருக்குதோ”

என்று அன்றைக்கே கேட்டார். அதனுடைய மறு வடிவமாக இந்த ஹைக்கூ கவிதை நமக்கு இன்று கிடைத்திருக்கின்றது.

சென் என்பது ஒரு இயல்பு என்பதையும் ஒரு தத்துவம் என்பதையும் உரையாற்றிய தமிழன்பன் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டினார். அதைப்பற்றி நிர்மலா சுரேஷ் எடுத்துக்காட்டும் போது எவ்வளவு அழகான உவமை நயத்தோடு, அதை எடுத்துக்காட்டி இருக்கிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவர் சொல்கிறார்: “சென் ஒரு இயல்பு; மனித மன இயல்பு; அது ஒரு குறியீடு. மனிதனுக்கோ அல்லது நாட்டினருக்கோ வழங்கப்பட்ட சிறப்புச் செய்தியல்ல. எனவே, அது இந்தியாவில் இருந்து சீனத்துக்கு வந்தது. சீனாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்றது என்று நாம் கூறுவதெல்லாம், நம் நாட்டில் நாம் சுவாசிக்கும் காற்று எந்த நாட்டிலிருந்து வந்த காற்று என்று ஆராய்வதற்கு ஒப்பாகும்” - எவ்வளவு அழகான உவமையின் மூலம் நிர்மலா சுரேஷ் இந்த உண்மையை தெளிவுபடுத்துகிறார் என்பதைக் கண்டு நான் மிகுந்த வியப்படைகிறேன்.

இன்னொரு ரசிக்கத் தக்க ஹைக்கூ கவிதை!

“நிலவுக்கொரு கைப்பிடி நாம் மட்டும் அளிக்க முடிந்தால்”

(நிலவுக்கு ஒரு கைப்பிடி நாம் மாத்திரம் அளிக்க முடிந்தால் என்று இந்த இரண்டு அடியோடு நிறுத்துகிறார். மிச்சத்தை உங்களால் கற்பனை செய்ய முடியாது. அவர் செய்தார்)

“நிலவுக்கொரு கைப்பிடி நாம் மட்டும் அளிக்க முடிந்தால் அது அழகிய விசிறியாகும்”

நிலவோடு ஒரு கைப்பிடியைப் பொருத்திப் பார்த்து - விஞ்ஞான ரீதியாகப் பொருத்திப் பார்க்க முடியாது, கற்பனை ரீதியாகத்தான் - ஹைக்கூ கவிதையிலே கற்பனைக்கு இடம் இல்லை என்று நிர்மலா சுரேஷ் வாதாடியிருந்தாலும் கூட - இது அழகான கற்பனை.

இந்த ஆராய்ச்சியில் நம் தமிழ்நாட்டிலே உள்ள பல ஹைக்கூ கவிதைகளையும் நிர்மலா சுரேஷ் ஆராய்ந்து, அதிலே தனக்குள்ள கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சில மாறுபட்ட கருத்துக்களும் உண்டு. ஆதரவான கருத்துக்களும் உண்டு. குறிப்பாக அறிவுமதியினுடைய ஹைக்கூ கவிதைகளைப் பற்றி நிர்மலா சுரேஷ் விமர்சித்த நேரத்தில் சிலவற்றிலே தனக்கு உடன்பாடில்லை என்றாலுங்கூட, ஒன்றை இது மிக இயல்பாக அமைந்த படிவம் என்று பாராட்டிக் குறிப்பிடுகிறார்.

அது அறிவுமதியின் ஹைக்கூ கவிதை.

“உழுது வந்த களைப்பில் படுக்கும் மாடுகள் காயம் தேடும் காக்கை”

மாடு உழுது வந்த களைப்பிலே படுக்கிறது. காயம் தேடும் காக்கை! உழுதுழுது கழுத்தெல்லாம் புண்ணாகி படுத்திருக்கும் மாட்டின்மீது காயம் எங்கே என்று காகம் தேடுகிறது! அதனுடைய கஷ்டம் இதற்குத் தெரியாது. இதனுடைய பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் காக்கை மாட்டை நாடுகிறது என்பதை வெகு அழகாக இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.

நிர்மலா சுரேஷ் அவர்களைப் பற்றி நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை நம்முடைய டாக்டர் மு.பி.பா. அவர்கள் இங்கே எடுத்துக்காட்டினார். “திராவிட இயக்கத்தின் வேர் நிலைத்த தருவில் பூத்த மலர்” என்று நான் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை இந்தப் புத்தகத்தில் அவர்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

நான் அவ்வாறு குறிப்பிட்டதற்குக் காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா சுரேஷ் என்ற பெயரை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியிலே சந்தித்திருக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் தொலைக்காட்சியிலே செய்தி வாசிப்பவராக அவரைக் கண்டிருக்கிறேன். தொலைக்காட்சியிலே செய்தி வாசிக்கும்போது - அப்போதெல்லாம் தொலைக்காட்சி ஒருதலைப் பட்சமாகவே செய்திகளை வாசிக்கும். ஆனால் செய்தி வாசிப்பவர்கள் மீதே நமக்கெல்லாம் ஒரு கோபம் இருக்கும்.

அந்தப் பார்வையோடு நிர்மலா சுரேஷை ஒரு விழா மேடையிலே சந்தித்தேன். அவர்கள் பேசி முடிந்த பிறகு, நான் பேசும்போது, ஏதோ கிண்டலாகவோ, தாக்குதலாகவோ ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டேன். மனம் புண்படும்படியாக அல்ல; அவர் சிரிக்கும்படியாக!

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் என்னைப் பார்த்து - “என்னை அப்படிச் சொல்லி விட்டீர்களே, என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? நான் திருச்சி இருதயராஜ் அவர்களின் மகள் அல்லவா?” என்று சொன்னார்கள்.

சொன்னதும், எனக்கு எத்தனையோ ஆண்டு கால நினைவுகள் நெஞ்சிலே நிழலாடின. திருச்சியிலே இருதயராஜ் என்பவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் நெருக்கமான நண்பர். அண்ணா அவர்கள் திருச்சிக்குச் செல்லும் போதெல்லாம், இருதயராஜ் அவர்களை அழைத்து, அவரோடு உரையாடாமல் இருக்கமாட்டார்கள். வரலாற்று ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமுதாய ரீதியாக பல கருத்துக்களை அவரோடு கலந்து உரையாடுவார்கள். அப்போதெல்லாம் நானும் பக்கத்திலே இருந்து இருதயராஜ் அவர்களோடு பழகியிருக்கிறேன்.

அந்த முறையில் - நிர்மலா சுரேஷ், எனக்கு அருமை மகள் (பலத்த கைதட்டல்) என்னுடைய அன்புச் செல்வி. அந்தச் செல்வி ஒரு சிறப்பு வாய்ந்த கவிஞராக - அதற்கு மேலாக சிறப்பு வாய்ந்த கவிதைகளை எல்லாம் ஆராய்ந்து, ஆராய்ச்சி செய்து ஒரு நூலை வெளியிடுகிறவராக - அதுவும் நூறு, இருநூறு பக்கங்கள் அல்ல; 444 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் என்றால் - இருதயராஜ் இன்றைக்கு அடைய வேண்டிய பெருமையை - புகழை - மகளே!

நான் இங்கேயிருந்து அடைகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி - இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டிருக்கின்ற இந்த நேரம் எந்த நிலையிலே என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

“அரங்கத்தில் அமைச்சர்கள் நிரம்ப ஆனால் நான் அழுகிறேன் ஓரிடம் காலி”

என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

- முரசொலி 4.8.97

முதற் பதிப்பு : மே 2000