உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழா

பகுதி 3 · 3 / 4

விலகல் கடிதம் கொடுத்துவிட்டு புல்லாங்குழலிலிருந்து வெளியேறிய பாட்டு உன்னைச் சந்தித்தது. புல்லாங்குழலிலிருந்து பாட்டு வெளியே வருகிறது. இசை வெளியே வருகிறது. புல்லாங்குழலுக்குள் ஊதும்போது இசை உள்ளே நுழைகிறதாம். அது வெளியில் வருகிறபொழுது எப்படி இருக்கிறதாம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டு இசையை மீட்டுவிட்டு வெளியே வருகிறதாம். விலகல் கடிதம் கொடுத்துவிட்டு புல்லாங்குழலிலிருந்து வெளியேறிய பாட்டு உன்னைச் சந்தித்தது.

அந்தச் சந்திப்பில் பாட்டுக்கு மீசை முளைத்தது. அந்தப் பாட்டு வீரப்பாட்டாக முற்பகுதியில் மாறியதாம்.

“உனது வாக்கியங்களில் ஒன்றிரண்டைக் கேட்டதும் வயதுக்கு வந்தன எரிமலைகள்!”

மேலும் செல்லப்பன் இங்கே கூறினார்.

“நடவு செய்த தோழர்களின் கூலி நான்கு அணாக்களை உன் கோபநெருப்பு உருக்கிச் சம்மட்டி தயாரித்தது”

என்று தமிழன்பன் எழுதுகிறார். இதைப் பாரதிதாசன் எழுதும்போது,

“நடவு செய்த தோழர்கூலி நாலணாவை ஏற்பதும் உடலுழைப்பிலா செல்வர் உலகை ஆண்டுலாவலும் கடவுளாணை என்றுரைத்த கயவர் கூட்டமீதிலே கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்”

என்று பாடுகிறார். அதைத்தான் தமிழன்பன் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘மனிதனைத் தேட மார்க்கம் என்ன?’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அந்தக் கவிதையில்தான் எனக்குச் சற்று மாறுபாடு. மாறுபாடுகளைச் சொன்னால் பாராட்டு விழாவிலே தம்பி தமிழன்பன் வருத்தப்பட மாட்டார் என்று கருதுகிறேன். உரிமையுள்ள அண்ணன் என்ற காரணத்தால் சொல்கிறேன்.

“இராமன் இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டான். சரயு வெள்ளத்தில் தருமத்தின் பிணங்கள்”

என்று குறிப்பிடுகிறார்.

இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்தால் தருமம் பிணமாகிவிடும் என்பது நம்முடைய தம்பி ஈரோடு தமிழன்பனுடைய கருத்தாக வெளிப்பட்டிருக்கின்றது. வெளிப்பட்ட கவிதை அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக்கின்றது. உண்மையிலேயே அது அவருடைய கருத்தல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக்கின்றது.

அவர் எந்தக் கூட்டு பற்றி சொல்கிறார் என்று எனக்குத் தெரியும். எந்த இராமனைப் பற்றியோ சொல்கிறார். பாபர் மசூதியைப் பற்றி குறிப்பிட விருக்கிறார். எனக்கு ஒரு கவலை உண்டு. நம்முடைய கவிஞர்கள் வைரமுத்து அதை வெளியிட்டாரா என்பது எனக்குத் தெரியாது. அவருடைய பல கவிதைகளை நான் கண்டதில்லை. நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமானானாலும் தமிழன்பனானாலும் வேறு சில கவிஞர்களானாலும் இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு கெட்ட குணத்தின் அடையாளமாகக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

அதை நான் ஏற்பதற்கில்லை. (பலத்த கைத்தட்டல்) ஏனென்றால் தம்பி தமிழன்பன் எந்த பாரதிதாசனைப் பற்றி இவ்வளவு பாராட்டுக்களைச் சொல்லியிருக்கிறாரோ அந்தப் பாரதிதாசன்

இராவணனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பாரதிதாசனுக்கு முன்பே பாரதிதாசனுக்கும் எங்களுக்கும் அடியெடுத்துக் கொடுத்தவரே பண்டிதர் ஜவஹர்லால் நேரு. அவர் எழுதிய “உலக வரலாற்றில்” இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டம் என்று சொல்லியிருக்கிறார். எனவே இராவணன் திராவிடன்தான். திராவிட மன்னன்தான் என்பதிலே எந்த ஐயப்பாடும் கிடையாது. காரணம் பண்டித நேருவே அதற்குச் சான்று கூறுகிறார். அதை அடிப்படையாக வைத்துத்தான் இராவணன் திராவிட மன்னன் என்று நாம் வாதாடுகிறோம்.

அந்த உண்மையை ஊருக்கும் உலகிற்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நான் இரக்கமற்ற அரக்கன் அல்ல என்று நிரூபிப்பதற்காக நான் இரக்கமற்ற அரக்கனா என்ற ஒரே கேள்வியை அடிப்படையாக வைத்து மூன்று மணி நேரம் நடக்கக் கூடிய ‘நீதி தேவன் மயக்கம்’ என்ற நாடகத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதி அவரே இராவணனாக நடித்துத் தமிழகமெங்கும் அந்த ‘நீதி தேவன் மயக்கம்’ நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தில் பல நேரங்களில் நீதி தேவனாக இருந்து மயக்கம் போட்டு விழுபவர் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்பதை (பலத்த கைத்தட்டல்) நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஏனென்றால் இராவணனுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மாமுனிவர்களெல்லாம் திகைப்பார்கள். “நீ அகல்யாவைச் சாபமிட்டாயே அப்போது இரக்கம் இருந்ததா?” என்று இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக் கேட்டு முனிவர்களையெல்லாம் தவித்து கடைசியாக இராவணன் வெற்றி பெறுவான். நான் இரக்கமற்ற அரக்கன் அல்ல; இரக்கமற்றோர் யார் தெரியுமா என்று கேட்டு வெற்றிக் கொடி நாட்டுவான் இராவணன்.

அந்த இராவணனைப் பற்றி தம்பி ஈரோடு தமிழன்பன் புகழ்ந்து எழுதியிருக்கிறாரே அந்தப் பாரதிதாசன் சொல்கிறார்.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா! அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்! குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்! குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்! என் தமிழர் மூதாதை; என் தமிழர் பெருமான் இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்!”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய இராவணன் அதையொட்டி நான் எழுதிய ‘தென்னவன் காதை’ என்ற கவிதையில் நான் குறிப்பிடுகின்றேன்.

“இரண்டு விட்ட தென்புலத்தில் ஏற்றி விட்ட விளக்குபோல எழுந்து நின்றான் இலங்கை வேந்தன். அவன் சரிதம் சொல்லவென்றால்... தசையெலாம் ஆடுதய்யா! திசையெட்டும் புகழ் சேர்த்த தென்னிலங்கைக் கோமான். திராவிடரின் மூதாதை. பழந்தமிழின் பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன் கண்ணுக்குள் பாவைபோல் இலங்கைத் தீவு கரு விழி தான் ஆழ்கடல்கள்! தமிழ் மண்ணுக்குப் புகழ்தந்த பெரு வீரன் உருவில் சிங்கம் - உள்ளம் தங்கம் - யாழ்ப் பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்ந்த யாழ்ப்பாணத் திருநாட்டான்!

மலைத் தமிழன்!

இமைக்கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு. அப்படித்தான் இலங்கைக்கு இராவணன்!”

இதையும் படித்திருப்பார் ஈரோடு தமிழன்பன். இதற்கு முன்பு புரட்சிக்கவிஞர் எழுதிய அந்த இராவணன் பற்றிய கவிதையையும் படித்திருப்பார். இனிமேலாவது இராவணனைப் புண்படுத்தாதீர்கள். (பலத்த கைத்தட்டல்) அவனைப் புண்படுத்தி என்னைப் புண்படுத்தாதீர்கள். இதுவரை எழுதாமல் இருந்தால் தம்பி வைரமுத்துவுக்கு நன்றி! இனி எழுதாமல் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். எழுதியவர்கள் இனிமேலாவது எழுதாமல் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் நேரு கொடுத்த சான்றின்படி இந்திய வரலாற்றை எழுதிய சீனிவாச அய்யங்கார் போன்ற பெரியவர்கள் எல்லாம் கொடுத்த சான்றின்படி இராவணன் தமிழ் மன்னன்; திராவிடன். அவனை ஒரு கொடுங்கோலனாகச் சித்தரிக்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கையில் ஏதாவது தவறுகள் நடந்திருக்கலாம். அந்தத் தவறுகளுக்காக அவனை ஒரு அக்கிரமக்காரனாக, அநியாயக்காரனாகச் சித்தரிக்க வேண்டாம். அவனோடு கூட்டுச் சேர்ந்தாலே தர்மம் பிணங்களாக மிதக்கும் என்கிற அளவிற்கு ஈரோடு தமிழன்பன் இங்கே சொன்னதைக் கனிவாகத் தேன் பெய்து கற்கண்டாக, நாமெல்லாம் பாராட்டுகிற இந்த விழாவில் இடையிலே செல்லமாகக் கண்டிக்கின்ற உரிமையும் எனக்கு இருக்கின்ற காரணத்தால் அதைத் தவிர்க்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொரு இடத்திலே மிக அழகாக நம்முடைய தமிழ்க்குடிமகன் இங்கே சொன்னாரே தமிழ் இயக்கத்தைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பாடியதையும் அதற்கு ஏற்ப நம்முடைய ஈரோடு தமிழன்பன் எடுத்தாண்டுள்ள இந்தக் கவிதை வரிகளையும் தொகுத்துக் காட்டினாரே அதை மிகுந்த வேதனையோடு நம்முடைய இதயத்தில், உள்ளத்தில் ஈட்டியைப் பாய்ச்சி உணர்த்துவதைப் போல நான்கே வரிகளில் ஒரு கவிதை.

“தமிழால் எல்லாம் முடியும் ஆனால் தமிழனால்தான் ஒன்றும் முடியாது! தமிழ் செய்த ஒரே ஒரு தவறு - அது தமிழனுக்குத் தாய் மொழியானதுதான்!”

(பலத்த கைத்தட்டல்)

இதைக் கண்ணீர் கலந்து தமிழன்பன் எழுதியிருப்பார் என்று கருதுகிறேன். ஏனென்றால் படிக்கும்பொழுதே கண்களில் எனக்கு நீர் சுரக்கிறது. தமிழ் செய்த ஒரே ஒரு தவறு அது தமிழனுக்குத் தாய்மொழியாக ஆனதுதான் என்பதை எண்ணி எண்ணி நான் வியந்தேன்; வருந்தினேன்; வேதனைப்பட்டேன்.

முதல் பதிப்பு 2000