உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழா

பகுதி 4 · 4 / 4

இன்னொன்று; அவர் பல்வேறு சூழ்நிலைகளைக் கிராமப் புறங்களிலே இருக்கின்ற பழக்க வழக்கங்களை நடமாடுகின்ற கதைகள் என்றாலும் கூட உன்னிப்பாகக் கவனித்து இந்த நூலிலே கவிதைகளாக ஆக்கியிருக்கிறார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டை மாத்திரம் நான் கூற விரும்புகின்றேன்.

கிராமங்களில் ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஊரிலே ஒரு நாட்டாண்மை இருப்பார். அந்த நாட்டாண்மைக்காரர் அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கத்தக்கவர்,

அதே நேரத்திலே அவரைக் கண்டு அனைவரும் அஞ்சுவார்கள், யாருடைய வீட்டில் எந்த நிகழ்ச்சி ஆனாலும் இவர் செல்லமாட்டார். வருவார், வருவார் என்று காத்திருப்பார்கள். வரமாட்டார் என்று நினைப்பது பிறகு வாடிக்கையாகி விட்டது. ஒரு வீட்டில் திருமணம் என்றால் தன்னுடைய கைத்தடியைக் கொடுத்தனுப்புவார். அந்தக் கைத்தடியைக் கொண்டு போய் வைப்பார்கள். அவருக்குப் பதிலாக கைத்தடி அங்கே இருக்கும். அவர் வந்துவிட்டதாகக் கருதி திருமண காரியங்கள் நடைபெறும்.

ஒரு வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்து விட்டாலும் அந்தக் கைத்தடியைக் கொண்டு வைப்பார்கள். அவர் வந்திருக்கிறார் என்று கருதி இறந்துபோனவரின் உடலை ஈமச்சடங்குகளுக்காக எடுத்துச் செல்வார்கள். எந்த விழாவாக இருந்தாலும் இதுதான் முறை என்று அவர் வைத்துக் கொண்டிருந்தார். கடைசியாக அவரே இறந்து விட்டார் அவர் இறந்தவுடன் வீட்டிலுள்ளவர்கள் ஊரிலுள்ளவர்களெல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். யாரும் வரவில்லை.

நூறு கைத்தடிதான் வீட்டிற்கு வந்தது. (பலத்த கைத்தட்டல்)

இந்த விஷயத்தை ஈரோடு தமிழன்பன் காப்பியடித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அவரும் காப்பியடிக்காத கவிஞர் அல்ல; காப்பியடிக்கிற கவிஞர்தான் என்பதற்கு உதாரணமாக இந்தக் கவிதை. அவர் சொல்கிறார்,

“அன்று முக்கியமான வேலை அதனால் வர முடியவில்லை உன் ‘திருமணத்திற்கு’ எழுதிய என் எழுத்து நரம்புகளில்

கொப்பளித்த பொய் அதிர்ந்து அலையடித்து என் இரத்த நாளங்களில்”

(ஒரு திருமணத்திற்கு இவர் போகவில்லை, முக்கியமான வேலை. வர முடியவில்லை என்கிறார். எழுதியவுடனேயே அவருடைய நரம்பு பொய் என்று சொல்கிறது. மீண்டும் எழுதுகிறார்.)

“உடம்புக்கு ரொம்பச் சரியில்லை இல்லாவிட்டால் உன் மகள் திரட்டிக்கு வராமல் இருப்பேனா?...”

கடிதத்தைப் பெட்டியில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன் அது திரும்பி வந்து விழுந்தது என் மனத்தில் - வேறு வாக்கியத்தோடு...

“புளுக வேண்டாம் போய்வா”

“மாமியாரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் வர இயலாது உன் புதுமனை புகுவிழாவுக்கு...”

என் கண்ணெதிரிலேயே எழுத்துக்கள்மேல் மாத்திரைகள் ஏறி மிதித்தன. மருந்து வாசத்தில் மிதந்தது கடிதச் சடலம்.

“அன்று வர முடியவில்லை உன் அம்மா சாவுக்கு...? அலுவலகத்தில் பெரிய பிரச்சினை...”

பேனா முன் பாய்ந்து உண்மையின் மார்பில் கீறல்கள்

போன வாரம் நான் மாரடைப்பால் காலமானேன் கனவில்!

என் மகனுக்குக் கடிதங்கள் ஏராளமாக.

‘அன்று வரமுடியவில்லை’ என்று ஆரம்பமான அத்தனை கடிதங்களும் என் கையெழுத்தில்...

திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன்! அப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

“அன்று வரமுடியவில்லை...”

இது காப்பியடித்த கவிதையானாலும் கூட ரொம்ப அழகாக ஒரு சின்னக் கதையை வைத்து பின்னப்பட்ட நாமெல்லாம் ரசிக்கத்தக்க ஒரு கவிதைக் கதையாகவே இது உருவாகியிருக்கிறது.

இங்கே பேசிய அருமை நண்பர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது அவர்கள் கவிதையை முழுமையாகப் படிக்கவில்லை ஒன்றிரண்டு பக்கங்களைத் தான் புரட்டிப் பார்த்தேன் என்று சொன்னார். பேராசிரியர் முழுவதையும் படித்திருக்கிறார். மற்றவர்களெல்லாம் முழுவதும் படித்து விட்டுத்தான் பேசியிருக்கிறார்கள்.

வைரமுத்து எவ்வளவு படித்திருக்கிறார் என்பதை அவர் பேசும்போதே தெரிந்து கொண்டேன். பாதிக்குமேல் படித்திருக்கிறார். நான் தமிழன்பனுக்குச் சொல்லிக் கொள்வேன். நான் முழுவதும் படித்திருக்கிறேன். அதற்குச் சாட்சியும் வேண்டுமானால் ஒன்று கூறுகிறேன்.

அன்று முக்கியமான வேலை அதனால் வரமுடியவில்லை உன் “திருமணத்திற்கு”

என்பதில் அச்சுப் பிழை. ‘உன் திருமணத்திற்கு’ என்பதற்குப் பதிலாக ‘உன் திருணமத்திற்கு’ என்று அச்சாகியிருக்கிறது. இதிலிருந்தே தம்பி தமிழன்பன் புரிந்து கொள்ள வேண்டும். நான் முழுமையாக இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன் என்பதை என்று கூறி விடைபெறுகிறேன்.

18-10-98 அன்று சென்னையில் ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000