உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழா

பகுதி 2 · 2 / 4

விண்மீன்களைப் பற்றி பாடும்போது,

“உறங்கப் போன்போது சூரியன் படுக்கையை உதறினான்... நட்சத்திரத் தூசுகள்.”

அடுத்து ஒரு பழைய புராணக் கதையோடு நட்சத்திரங்களுக்கான உவமையைக் கூறுகிறார்.

“எந்தக் கவுதமன் இரவைக் சபித்தான்? இப்படி உடம்பெலாம் கண்கள்?”

அகல்யா கவுதமன் கதை உங்களுக்கெல்லாம் தெரியும். இந்திரன் சம்பந்தப்பட்ட கதை அது. அகல்யாவை இந்திரன் கற்பழித்து விடுகிறான். அவளும் இணங்கினாள் என்று நான் அல்ல வ.ரா.வே. சொல்லியிருக்கிறார். இதைத் திடீரென்று வந்து கண்டு விட்ட கவுதம முனிவர் இந்திரனை சபிக்கிறார். அகல்யாவைக் கல்லாக கடவாய் என்று சொல்லிவிட்டு இந்திரனை உன்னுடைய உடம்பெல்லாம் கண்களாகக்

கடவது என்று சபிக்கிறார். இங்கே அதைத்தான் நட்சத்திரங்களுக்கு உவமையாக எந்தக் கவுதமன் இந்திரனைச் சபித்தான் இப்படி உடம்பெலாம் கண்கள் என்று கேட்கிறார்.

அடுத்து நான் மிகவும் சுவைத்த வரிகள்.

“அந்தி, சூரியனை விதைத்தது அதற்குள் இத்தனை பூக்களா? என்ன வீரிய விதை!”

சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் இந்தக் கவிதை வரிகளிலே ஒரு அருமையான கவிதையை எடுத்து இங்கே உரையாற்றினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி தம்பி கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதியுள்ள வரிகள் அவை. அதை மீண்டும் நான் சொல்லி, வேறு சில விளக்கங்களையும் கூற விரும்புகின்றேன்.

“பாரதிதாச! உன்னைக் கனகசபை எழுதியபோது நீ சுப்பிரமணியர் துதி அமுது!”

பாரதிதாசனுடைய தந்தையின் பெயர் கனகசபை. கனகசபை எழுதியபோது அவருடைய தாயின் கருவில் கனகசபை எழுதியபோது அவன் தந்தைக்கு மகன் என்ற நிலையிலே பள்ளிப் பருவத்தில் அல்லது வாலிபப் பருவத்தில் அவர் சுப்பிரமணியர் துதி அமுது என்கிற நூலைப் பாடினார். அந்த நூலை - உங்களில் பலர் கண்டிருக்க முடியாது. முருகனைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றைக்கு, பக்தர் பாரதிதாசனாக இருந்தபோது எழுதியதைப்போல எந்த பக்தர்களும் எழுதியிருக்க முடியாது.

அத்தகைய அருமையான அளவில் சுப்பிரமணியர் துதியமுது பாடினார்.

“எட்டையபுரத்தான் உன்னை எழுதிய போது நீ கதர் இராட்டினப் பாட்டு”

கதர் இராட்டினப்பாட்டு என்ற தலைப்பில் பாரதிதாசன் நூல் ஒன்று வெளிவந்திருக்கிறது. கதரைப் பற்றி அதனுடைய அருமை பெருமைகளைப் பற்றி பாரதிதாசன் கவிதை போல இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் கவிஞர்கள் கூட யாரும் எழுத இயலாது. காந்தியடிகளே கூட அதைப்படித்திருந்தால் ‘இப்படி ஒரு கவிஞனா!’

என்று வியப்பில் ஆழ்ந்து போயிருப்பார்.

“ஈரோட்டுப் பெரியார் உன்னை எழுதியபோது நீ புரட்சிக் கவிஞன்”

என்று குறிப்பிடுகிறார். இந்தச் சுப்பிரமணிய துதி அமுது, கதர்ப்பாட்டு, பிறகாலத்தில் அவர் பாடிய சுயமரியாதைப் பாடல்கள், திராவிட இயக்கப் பாடல்கள், தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய பாடல்கள் இவைகளையெல்லாம், நீங்கள் எண்ணிப்பார்க்கும் பொழுது ஒன்றை நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது ஒரு குறும்புக்காரர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை வெளியிடுகிறேன் என்று சொல்லி அவர் எழுதிய சுயமரியாதைப் பாடல்கள், திராவிட நாட்டுப் பண்கள், தமிழ் இயக்கப் பாடல்கள் இவைகளையெல்லாம் புத்தகத்தின் முன் பகுதியில் வைத்துவிட்டு பாரதிதாசன் பிறகு திருந்திவிட்டார், ஆத்திகராக

மாறிவிட்டார், அந்தக் காலத்தில் எழுதியது சுப்பிரமணியர் துதி அமுது என்று கூட ஒரு புரட்டைச் செய்ய முடியும். எனக்குச் சந்தேகம் இது. பாரதியார் யுகத்திலே நடந்திருக்குமோ என்று. சுப்பிரமணிய பாரதியார் யுகத்தில் நடந்திருக்கக்கூடும். ஏனென்றால் அவர் பாடிய பாடல்கள் எவ்வளவு புரட்சிகரமானது என்பதைச் சிலவற்றை மறைத்துவிட்டாலும்கூட மறைக்காமலே வெளியிடப்பட்ட சில கவிதைகள் இன்றைக்கும் மக்கள் மத்தியிலே பரவியிருக்கின்றன.

“பார்ப்பானை, ஐயர் என்ற காலமும் போச்சே! வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே!”

பாரதியார் கவலைப்பட்டு அதைச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட காலம் மாறிவிட்டது என்பதற்காக அதைச் சொல்கிறார்.

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்”

என்கிறார் பாரதியார். அவைகளெல்லாம் வரிசையிலே ஒழுங்காக வைக்கப்படாமல் மாறி மாறி வைக்கப்பட்டு பாரதியார் ஏதோ சமுதாயத்திலே புரட்சி செய்தவர் அல்ல என்பதைப் போலவும், சாதி மதங்களை வேரோடு வெறுத்தார் என்கிற நிலையை எடுத்துக்காட்டாமல் சமுதாயத்தில் ஒரு புரட்சிக்காரராக விளங்கினார் என்பதை எடுத்துக் காட்டாமல் அவரை முழுக்க ஒரு பக்தராக தேவி உபாசகராக நாட்டிலே காட்டியிருக்கிறார்கள் என்றால் அவருடைய பாடல்கள் ஒழுங்காக வரிசைப்படுத்தப்படவில்லை என்பதுதான் அதற்குப் பொருள்.

அதற்காகத்தான் சொல்கிறேன். இந்தப் பாடல்களைக்கூட எதிர்காலத்திலே ஒழுங்காக வரிசைப்படுத்தாமல் வேண்டுமென்றே பாரதிதாசனுக்குக் களங்கம் கற்பிக்க அத்தகைய முயற்சியிலே கூட சிலர் ஈடுபடக்கூடும். ஏனென்றால் அவர் எழுதிய சுப்பிரமணியதுதி அமுது, கதர்பாட்டு இவைகளெல்லாம் அவ்வளவு சிறந்த பாடல்கள் அத்தகைய தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

பாரதிதாசனைப் பற்றி பாடும்பொழுது நம்முடைய தம்பி தமிழன்பன் அந்தப் பாட்டின் இனிமையைப் பற்றிக் கூறுகிறார்.

“விலகல் கடிதம் கொடுத்துவிட்டு புல்லாங்குழலிலிருந்து வெளியேறிய பாட்டு உன்னைச் சந்தித்தது! அந்தச் சந்திப்பில் பாட்டுக்கு மீசை முளைத்தது”

முதல் பதிப்பு 2000