சென்னை - ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழா
பகுதி 1 · 1 / 4
சென்னை - ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீட்டு விழா
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய இரண்டு அரிய நூல்களை வெளியிடுகின்ற இந்த இனிய விழாவில் கலந்து கொண்டு நூல்களை வெளியிடுகின்ற இந்த நல்ல வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழன்பன் அவர்களைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. கடந்த பல ஆண்டு காலமாக தமிழ் பூமியில் தமிழன்பன் யார் என்பது உணர்த்தப்பட்டிருக்கின்றது. அவருடைய கவிதைகள் தமிழகத்திலே உலா வந்து கொண்டிருக்கின்றன. அவருடைய புகழும், பெருமையும் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய ஒரு சூழலில் அவருடைய பல நூல்களைத் தொடர்ந்து இந்த நூல்கள் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன. இங்கே உரையாற்றிய பேராசிரியர் அவர்களும் மற்றும் தமிழ்ப் பெருமக்களும் அவர் எழுதியுள்ள கவிதைகளின் திறமைகளையும் இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
அவர் யாத்துள்ள இந்தக் கவிதைகளில் எவை சிறப்பானவை, எவை சிறப்பற்றவை என்று பகுத்துக்
கூற முடியாத அளவிற்கு அனைத்துமே தேனாய், கற்கண்டாய் இனிக்கின்ற அந்தத் தன்மையை இந்த நூல்களில் என்னால் காண முடிகின்றது.
எந்தத் தேதி? என்ற ஒரு தலைப்பில் அவர் கேட்கிறார் -
“உழைக்க ஒரு சாதி! உறிஞ்சிப் பிழைக்க ஒரு சாதி! இந்தக் கிழட்டு நீதி கிழியப் போவது எந்தத் தேதி?”
என்று கேட்கிறார்.
உரையாற்றியவர்கள், புகழ்ந்தவர்கள், விமர்சித்தவர்கள் ஒவ்வொரு கவிதைக்கும் தாங்கள் கொண்ட பொருளை விளக்கி தாங்கள் கொண்டுள்ள கருத்தை விளக்கிக் கூறி உரையாற்றியிருந்தாலும் கூட எனக்கு ஈரோடு தமிழன்பன் இடத்திலே காணவேண்டும் என்று துடித்த அந்த ஆர்வம் இன்றைக்குள்ள சமுதாயத்தைப் பற்றி என்ன சொல்கிறார்? இந்தச் சமுதாயத்திற்கு என்ன அறிவுரையை இந்த நூல்கள் மூலம் வழங்குகின்றார் என்பதுதான். எடுத்த எடுப்பிலேயே என்னுடைய கண்ணில் பட்ட இந்த வரிகள் என்னை மிகவும் நெகிழவைத்த வரிகளாகும்.
இவை இளைய தலைமுறையினுடைய இதயங்களிலே பதியவைக்கப்பட வேண்டிய வாசகங்களாகும். கவிதை வரிகளாகும்.
அடுத்து,
“மனிதனை மனிதன் மதிக்கும் மானுட நேயம் மலர்வதற்கு
மதங்கள் தடையெனில் மதங்களை ஒழிப்போம்!”
என்று எழுதியிருக்கிறார்.
மனித நேயத்தை ஒழிப்பதற்கு இன்றைக்கு மதங்கள் முன்வருகின்ற நேரத்தில் மானிட நேயம் மலர்வதற்கு அவைகள் தடையாக இருக்குமானால் வேறு வழியில்லை மதங்களையே ஒழிப்போம் என்று மிகுந்த உறுதியோடு திடமான தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவர் யாத்துள்ள இந்தக் கவிதை வரிகள் என்றென்றும் நமக்கு ஓர் அறைகூவலாக விளங்குகின்றன.
மதங்களை ஒழிக்க வேண்டும் என்கிற அந்த உணர்வோடு அவர் அதைக் கூறவில்லை. மதங்கள் மனிதநேயத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்காக இந்தக் கருத்தை அவர் கவிதை வாயிலாக எடுத்துக் காட்டியுள்ளார். அவருடைய உவமைகளை, சொல்லாடலை அவருடைய வீச்சுக்களை பல கவியரங்கங்களிலே நானும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேட்டு இருக்கின்றீர்கள், ஒரு இடத்திலே குறிப்பிடுகிறார்.
“பெட்டிக்குள் அடக்கினாலும் பிணமாகி விடாத தீக்குச்சிக் குணத்தை எடுத்துச் செல்வோம்!”
பெட்டிக்குள் இருந்தாலும் தீக்குச்சி பெட்டிக்குள் அடங்கிவிட்ட காரணத்தால் அதனுடைய சக்தி குறைவதில்லை. பெட்டிக்குள் அடக்கினாலும் பிணமாகி விடாத தீக்குச்சிக் குணத்தை எடுத்துச் செல்வோம். மேலும் கூறுகிறார்.
“அழுக்கைக் கழுவும் தண்ணீர், அழுக்காகிப் போகும்! மாசை எரிக்கும் நெருப்பு மாசாவதே இல்லை!”
அழுக்கைக் கழுவுகின்ற தண்ணீர் அந்த அழுக்கோடு கலந்து அழுக்காகி விடும். மாசு நெருப்பால் எரிக்கப்படும் போது இந்த நெருப்பு மாசாகி விடுவதில்லை, ஆனால் அழுக்கைக் கழுவுகின்ற தண்ணீர் அழுக்காகி விடுகின்றது. நாம் எல்லா வகையிலும் நெருப்பாக இருக்க வேண்டும். என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அவர் கையாண்டுள்ள கவிதை வரிகள் இவைகள்.
அவருடைய உவமைகளுக்கு ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைச் சொல்ல வேண்டுமேயானால், காலையிலே கிழக்குத் திசையில் கதிரவன் தோன்றுகிறான். அதை அவர் எப்படிச் சொல்கிறார் என்பதுதான் புதுமை.
“கள்ளச் சாராயத்தைக் குடித்த நள்ளிரவு, இடுப்பு வலி எடுத்த கிழக்கின் வயிற்றில் எட்டி உதைக்கிறது.”
ஏற்கனவே கிழக்கு பிரசவத்திற்குத் தயாராக இருக்கின்றது. இடுப்பு வலி எடுக்கின்றது. கள்ளச் சாராயத்தைக் குடித்த நள்ளிரவு இடுப்பு வலி எடுத்த கிழக்கின் வயிற்றில் எட்டி உதைக்கிறது என்கிறார்.
பிறகு மாலைப் பொழுதைச் சொல்கிறார்.
“நாளின் கழுத்தைக் கவ்விய சூரியன் இரத்தம் சொட்டச் சொட்ட அதை இழுத்துக் கொண்டு மறைகிறான் மேற்கில்.”
அந்த வானத்தை இவ்வளவு அழகாக வர்ணித்த கவிஞன் வேறு யாரும் இருக்க முடியாது. தம்பி ஈரோடு தமிழன்பன் அதிலே வெற்றிக்கொடி நாட்டியிருக்கின்றார் என்றே நான் கருதுகிறேன்.
