உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா உரை

பகுதி 2 · 2 / 3

உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு உள்ளவர்களுக்குத் தெரியாது. நம்முடைய மக்கள் தலைவர் மூப்பனாருக்கு நன்றாகத் தெரியும். அவர் தஞ்சாவூர்க்காரர். ஆர்.எம்.வீ. அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். கலை உலகத்திலே நீண்ட நாட்களாக இருப்பவர். குரு - சீடர் என்றால் முன்பெல்லாம் பள்ளிக்கூடம் வைத்து, அங்கே ஒரு நாற்காலியில் குரு உட்கார்ந்து கொண்டு மாணவர்களையெல்லாம் எதிரிலே உட்கார வைத்து பாடம் நடத்துகின்ற அந்த நிலை அல்ல.

அதிலும் குறிப்பாக வேதங்கள், மந்திரங்கள் இவைகளை யெல்லாம் கற்றுக் கொள்கிற குரு - மாணவர்கள் என்ற நிலை இருந்தாலும் அல்லது கலைத் துறையிலே பயிற்சி

பெறவேண்டுமென்ற நிலை இருந்தாலும் குருவிடத்தில் மாணவன் அவர் வீட்டிலேயே தங்கிப் படித்து பயிற்சி பெற்று தன் வித்தையைப் பெருக்கிக் கொள்வது பழைய கால வழக்கம். அதன்படி இந்த யாதவப் பிரகாசர் என்ற குருவிடத்தில் இராமானுஜர் சீடராக இருந்தபோது வழக்கம்போல் ஒருநாள் அவரை உட்காரவைத்து அவருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் இதெல்லாம் குருவிற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய கடமை.

இராமானுஜர் குருவிற்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டது அப்படிப்பட்ட நேரத்திலே குரு ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி பேசியிருக்கக் கூடாது என்று இன்றைக்குக் கூட அதைப்பற்றி பலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் அதைப்பற்றி ஆய்வு நடத்துபவர்கள். திடீர் என்று குரு “கப்யாசம்- புண்டரீ காட்சம்” என்ற சொற்றொடரைக் குறிப்பிட்டு அதற்கு, விளக்கம் சொன்னார். அது சற்று ஆபாசமான விளக்கமாக இருந்தது.

இராமானுஜர் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தபோது குரு அவரைப் பார்த்து சீடா உனக்குத் தெரியுமா? கப்யாசம், புண்டரீகாட்சம் என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்கிறார். சொல்லுங்கள் குருவே என்கிறார் இராமானுஜர்.

குரு விளக்குகிறார். கப் யாசம் என்றால், கபி ஆசம் - கபி என்றால் குரங்கு. ஆசம் என்றால் குரங்கின் பின்புறம். அதோடு விடவில்லை. எதற்குச் சொல்கிறார் என்றால், பகவானுக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபத்தால் சிவந்த அவருடைய கண் எப்படி இருக்கிறதென்றால் கப்யாசம், அதாவது குரங்கின் பின்புறம்போல் இருக்கிறது என்று குரு விளக்குகிறார். இராமானுஜரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கடவுளுடைய கண்களைப்பற்றி தான் வணங்குகின்ற பகவானுடைய கண்களைப் பற்றி அது கோபத்தால் சிவந்திருப்பதைப் பற்றி சொல்லும்போது, குரங்கின் பின்புறம்போல் இருக்கின்றது என்று குரு வியாக்யானம் செய்கிறாரே என்று எண்ணினார். கலகலவென கண்ணீர் வழிந்தது. குருவின் உடலிலே அந்தக் கண்ணீர் பட்டதும் அண்ணாந்து பார்த்து என்னப்பா, ஏன் அழுகிறாய் என்று கேட்கிறார். நீங்கள் சொன்ன விளக்கத்திற்காக அழுகிறேன் என்று தன் வேதனையைத் தெரிவித்தார்.

நீ சொல்லேன் விளக்கம், வேறு என்ன விளக்கம் இருக்கிறது என்று குரு ஆத்திரத்தோடு கேட்டார். அதற்கு இராமானுஜர், ஐயா, கபி என்றால் சூரியன், ஆசம் என்றால் தாமரை மலர். சூரியனைக் கண்ட தாமரை மலர்ந்தால் எப்படி சிவப்பாக இருக்குமோ அதைப் போலத்தான் பகவான் கண்கள் இருந்தன என்பதுதான் இதற்குச் சரியான விளக்கம் என்று கூறுகிறார். இதற்கு குரு நன்றி பாராட்டவில்லை. பொறாமை ஏற்பட்டு விட்டது. இப்படி சில குருக்களுக்கு பொறாமை ஏற்படுவது சகஜம்.

மாணவன் தன்னை மீறுகின்ற அளவிற்கு நடந்துவிட்டால் சில குருக்களுக்குப் பொறாமை ஏற்படும். அந்தப் பொறாமை ஏற்பட்ட காரணத்தால் சும்மாயிருப்பார்களா சுற்றியிருப்பவர்கள்? மற்ற மாணவர்கள் இந்த மாணவனை ஒழிக்க இது தான் சரியான நேரமென்று குருவோடு அமர்ந்து இவனைத் தீர்த்துக் கட்டிவிட்டால் நல்லது. இல்லாவிட்டால் நம்முடைய சமயக் கடமைகளுக்கே கூட ஆபத்து என்றார்கள். குருவும் அந்த நோக்கத்திலே இருந்தார். ஆனால் முறையைப் பற்றிச் சிந்தித்தார்.

வன்முறையால் அவனைக் கொன்று விட்டால் வெளியே தெரிந்து விடும் எனவே, கொல்வதற்கு வேறு என்ன மென்முறை இருக்கிறதென்று அவர்கள் ஆராய்ந்தார்கள், முடிவில் குருவே சொன்னார். எல்லா மாணவர்களையும்

அழைத்துக் கொண்டு நான் காசிக்குச் செல்வதாகக் கூறி இராமானுஜனையும் அழைக்கிறேன், வருவான், அங்கே காசியில் நேரம் பார்த்து கங்கையில் நீராடுகின்ற நேரத்தில் கங்கா நீரில் அவனைத் தள்ளிவிட்டு எல்லோரையும்போல கங்கையில் ஸ்நானம் செய்து கொண்டிருந்ததால், கங்கை நீர் அடித்துக் கொண்டு போய்விட்டது என்று கூறிவிடலாமென்று குருவே இந்த அருமையான யோசனையைச் சொல்லி இராமானுஜரை அழைத்தார்கள். அவரும் இணங்கிச் சென்றார்.

அவருக்கு இந்த சூழ்ச்சி தெரியாது.

அவரோடு அவருடைய சிறிய தாயாரின் மகன் கோவிந்தன் - அவரும் அந்தக் குருவிடம் பயிற்சி பெறுபவர் - அவரும் சென்றார். பாதி தூரம் சென்றதும், அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட கோவிந்தன் இராமானுஜரைத் தனியாக அழைத்துச் சென்று இதுபோல் நடக்கவிருக்கின்றது எனவே, நீ தப்பியோடி விடு, நான் மாத்திரம் சென்று நீ எங்கேயோ போய்விட்டதாகச் சமாளித்துக் கொள்கிறேன் என்று கூறி இராமானுஜரைத் தப்பியோடச் செய்துவிட்டு கோவிந்தன் மாத்திரம் குருவிடம் சென்று அவன் எங்கேயோ போய்விட்டான் என்று சொன்னதும் குருவிற்கு மகிழ்ச்சி.

இந்தக் கானகத்தில் அவன் எங்கே போக முடியும், எங்கு போனாலும் புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் கொன்று தீர்த்து விடும், பரவாயில்லை என்ற மகிழ்ச்சியோடு அவரும் மற்றவர்களும் காசிக்குச் சென்றுவிட்டு நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பினார்கள்.

திரும்பி வரும்போது அவர்கள் எதிரிலே ஒரு பெரிய கூட்டம் போற்றிப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கும்போது சீடர்கள் சூழ இராமானுஜர் வருவதைக் கண்டு திகைத்துப் போனார் என்பது

இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றிலே ஒரு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.

இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இராமானுஜராகப் பிறந்துவிட்ட காரணத்தால் அவருக்கும் சிக்கல் இல்லாத வாழ்க்கை கிடையாது. அவருக்கும் வாழ்க்கை, பிரச்சினைதான். அவரையும் எப்படியும் வீழ்த்த வேண்டுமென்று குருவே எண்ணுமளவிற்கு அவருக்கு வாழ்க்கை போராட்டமாகத்தான் இருந்திருக்கின்றது. அதிலிருந்து அவர் தப்பித்தான் வாழ்ந்திருக்கிறார்.

நீதியரசர் ரெட்டியார் குறிப்பிட்டதைப்போல அவர் தன்னுடைய ஆசானாக நான் குறிப்பிட்ட அந்தக் குருநாதரை முதலிலே ஏற்றுக் கொண்டிருந்தார் என்றாலுங்கூட, இதற்குப் பிறகு அவர் தனக்கு அறிவுரை கூறுகின்ற ஆசானாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் திருக்கச்சி நம்பி. அந்த திருக்கச்சி நம்பிதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இராமானுஜர் உயர் குலத்தில் பிறந்தவர் - உயர் குலத்திலே பிறந்தவராகக் கருதப்படுபவர். அவர் தனக்கு அறிவுரை கூறுகின்ற ஆசானாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்தான் திருக்கச்சி நம்பி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் காட்டிய வழிதான் இராமானுஜர் நடக்கின்ற வழியாக அமைந்தது. இராமானுஜருடைய மாணவர்கள் பல பேர் தீண்டத் தகாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். அவர்களில் ஒருவர்தான் உறங்கா வல்லிதாசர் என்பவர். அந்த உறங்கா வல்லிதாசனைத்தான் காவிரிக் கரைக்கு நீராடச் சென்று - செல்லும்போது ஒரு அந்தணருடைய தோளின் மீது கை போட்டுக் கொண்டு அழைத்துப் போய், அங்கே நீராடி விட்டுத் திரும்பும்போது இந்த உறங்கா வல்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருடைய தோளிலேதான் கை போட்டுக்

கொண்டு இராமானுஜர் நடந்து வந்திருக்கிறார். அப்போது அவரைப் பார்த்து அந்தணர்கள் இதென்ன அநியாயம், இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு இராமானுஜர், பக்தி மார்க்கத்திலே ஈடுபடுவதற்குச் சாதி ஒரு தடையல்ல என்ற அந்தக் கருத்தை தெரிவித்தார்.

அது மாத்திரமல்ல; கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, சாதிச் செருக்கு என்று மூன்று செருக்குகள் உண்டு. என்னைப் பார்த்து இவன் தோளிலே கை போட்டுக் கொண்டு வரலாமா என்று கேட்கின்ற நீங்கள் இந்த மூன்று செருக்கும் இல்லாதவர்கள் என்று எனக்குத் தெரிகிறது. இருந்தாலுங்கூட, நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதின் மூலமாக சாதிச் செருக்கே இருக்க முடியாத ஒருவனை வெறுக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. இவைகள் ஒழிந்த ஒரு நிலைதான் சமுதாயத்திற்குத் தேவை என்பதை நான் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிலை ஏற்பட்டால்தான் சமுதாயம் முன்னேற முடியும், வாழ முடியுமென்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னார் என்பது அவருடைய வரலாற்றிலே ஒரு புரட்சிகரமான ஏடாகும்.

பக்தி மார்க்கத்திலே ஈடுபடுவதற்குச் சாதி ஒரு தடையல்ல. எல்லாச் சாதியினரும், ஏன் பெண்களும்கூட பக்தி வழியிலே இறைவனை அடையலாம் என்று முழங்கியவர் இராமானுஜர். ஒரு குரு ஒரு மாணவனுக்கு மந்திரம் உபதேசிப்பது என்ற வரம்பை நீக்கி எத்தனை சீடர்களுக்கு வேண்டுமானாலும் உபதேசிக்கலாம், சீடனுடைய தகுதியைப் பார்க்காமல் அவனுடைய ஆர்வத்தை மாத்திரமே நோக்கி உபதேசிக்க வேண்டுமென்று சொல்லி அதையும் நடத்திக் காட்டினார்.

இதனால் பக்தியின் பயனாகிய முக்தியும் ஒரு சிலருடைய சொத்தன்று. அது எல்லோருக்கும் பொதுவுடமை என்றாக்கியவர் இராமானுஜர் என்பது தெளிவாகிறது.

இவருக்கு முன்னால் வாழ்ந்த ஆழ்வார்கள் இதைப் பேசியிருக்கிறார்கள். நாதமுனிகள் இந்த அடிப்படையிலே சிந்தித்திருக்கிறார். உய்யக்கொண்டார், ஆளவந்தார் போன்றவர்களும் தங்கள் அளவிலே இவ்வாறு நடந்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் இதை ஒரு சமயப் பொதுவுடைமையாக ஒரு இயக்கமாகவே நடத்திய பெருமை இராமானுஜர் ஒருவருக்குத்தான் உண்டு. அதனால்தான் நான் இன்று ஒரு வார இதழ் படித்தேன். அதில் நல்ல எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதி இராமானுஜரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அதிலே குறிப்பிடுகிறார். “அந்தக் காலத்துப் பெரியார்” என்று இராமானுஜரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நான் சொன்னாலோ அல்லது ஆர்.எம்.வீ. சொன்னாலோ அது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. இராமானுஜர் அந்தக் காலத்துப் பெரியார் என்று இந்திரா பார்த்தசாரதி அந்த நீண்ட கட்டுரையில் கனையாழி இதழில் இராமானுஜரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதியும் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டத்தான் இதை நான் இங்கே எடுத்துச் சொன்னேன்.

அந்த அளவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு பெரியாரைப் பெற்றோம். ஆனால் அந்தப் பெரியார் சொன்ன சமுதாயச் சீர்திருத்தத்தை - சம நீதியை - சமூகநீதியை - சமத்துவத்தை நாம் தொடர்ந்து பின்பற்றியிருந்தால் இன்றைக்கு இந்தப் பெரியார் தேவைப்பட்டிருக்கவே மாட்டார். சமத்துவபுரங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் எல்லோரும் சமத்துவமாக இருக்கும்போது பிறகு எதற்காகச் சமத்துவபுரம்?

இந்த ஆயிரம் ஆண்டு காலம் இராமானுஜர் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன கருத்துக்களை நாம் ஏற்று நடக்கவில்லை. தொடர்ந்து

அந்த வழியைப் பின்பற்றவில்லை. அதனால் தான் இந்த நிலை நமக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதை நான் இங்கே கூற விரும்புகிறேன்.

அவருக்குத் தமிழகத்தில் சில தமிழ் மன்னர்களால் அதிலும் குறிப்பாக, சோழ மன்னர்களால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதுதான் எனக்கு வேதனை அளிக்கக்கூடிய நிகழ்ச்சி. நானும் மூப்பனாரும் சோழ நாட்டுக்காரர்கள் ஆனால் அன்றைக்கு ஒரு சோழ மன்னர் அந்த மன்னருடைய பெயர் கிருமிகண்ட சோழன். அவனால் இராமானுஜருக்கு ஒரு எதிர்ப்பு ஏற்பட்டு அவர் அந்த மன்னருடைய ஆட்சியிலே வாழ விரும்பாமல் பன்னிரண்டு ஆண்டுகாலம் மைசூர் பகுதியிலே சென்று வாழ்ந்தார்.

அப்படி வாழ்ந்த அந்த பன்னிரண்டு ஆண்டு காலத்திலேதான் இங்கே கூறப்பட்டதே மேலக்கோட்டை திருநாராயணபுரம் - அங்கே தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் என்ற அருமையான புரட்சிகரமான செயலை அன்றைக்குத் தொடங்கி வைத்தார் இராமானுஜர்.

முதல் பதிப்பு 2000