சென்னை - ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா உரை
பகுதி 3 · 3 / 3
இராமானுஜர் எதிலும் பிடிவாத குணம் உள்ளவர் என்பவர் மாத்திரமல்ல; எதையும் தீர்க்கமாகச் சிந்தித்து அதனால் வருகின்ற விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பெரியார் எப்படி உறுதியான குணம் படைத்தவராக இருந்தாரோ அதைப் போலவே இருந்திருக்கிறார் என்பதற்கான உதாரணம்தான் திருக்கோட்டியூர் நம்பிகளின் இடத்திலே அவர் நடந்து கொண்ட முறை.
17 அல்லது 18 முறை படையெடுத்திருக்கிறார் - மந்திரச் சொல்லை அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக. 18வது முறைதான் அதிலே வெற்றி பெற்றார். அப்போது திருக்கோட்டியூர் நம்பி அவருடைய காதிலே மந்திரத்தை உபதேசித்து இதை நீ கடைசிவரை இன்னொருவனுக்கு வெளியிடக் கூடாது, அப்படி
வெளியிடுவதாக இருந்தால் கடைசி காலத்திலே ஓரேயொருவன் காதிலேதான் இதைச் சொல்ல வேண்டும், இதை மீறி நீ நடந்தால் உனக்கு நன்மை இல்லை தீமைதான் கிடைக்கும், சத்தியம் செய்து கொடு என்று கேட்டார். திருக்கோட்டியூர் நம்பியின் கால்களைப் பிடித்து இராமானுஜர் சத்தியமும் செய்து கொடுத்தார் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று. பிறகு திருக்கோட்டியூர் வந்து கோபுரத்திலே ஏறி நின்றார் - அந்த ஊர் மக்களையெல்லாம் வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தார்.
எல்லோரும் வந்தார்கள். அவர்களைப் பார்த்து திருக்கோட்டியூர் நம்பி சொல்லிக் கொடுத்த அந்த ரகசிய மந்திரத்தை அனைவருக்கும் விளங்கக் கூடிய அளவிற்கு உபதேசித்தார்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் திருக்கோட்டியூர் நம்பி திகைத்தார், ஆத்திரப்பட்டார், இராமானுஜரை அழைத்து வரச் செய்தார். எப்படி சத்தியம் செய்து விட்டு மீறினாய் என்று கேட்டார். சொன்னவனுக்குத் தீமை ஏற்படும், கேட்டவனுக்கு நன்மை ஏற்படுமென்றால், கேட்டவர்கள் பலர், சொன்னவன் நான் ஒருவன், இந்த ஒருவன் தீமைக்கு ஆளானால் பரவாயில்லை, பலர் நன்மைக்கு ஆளாவார்கள். எனவேதான் பலர் அறிய அதை நான் சொன்னேன் என்று குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட குருநாதர், பழைய குருநாதரைப் போல் அல்ல. இவரைக் கட்டித் தழுவி நீ தான் எனக்கு வழிகாட்டியப்பா என்று சொன்னார் என்பது அவருடைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய ஒரு பகுதியாகும்.
அப்படிப்பட்ட இராமானுஜருடைய கொள்கைகளை மனதிலே பதிய வைத்துக் கொண்டுதான் இன்றைக்கு நாம் சமத்துவபுரங்கள் உருவாக வேண்டுமென்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். விடுதலைப்
போராட்ட தளகர்த்தர் பெரியவர் செங்கல்வராயன் அவர்கள் கையால் இராமானுஜர் விருது பெற்ற நான் அதைப்பற்றி நீண்ட நேரம் பேசிவிட்டேன்.
இங்கே அண்ணா அவர்களுடைய பெயரால் நம்முடைய சிவராமன் அவர்கள் விருது பெற்றிருக்கிறார். சிவராமன் எவ்வளவு அழுத்தமான ஆணித்தரமான வார்த்தைகளை ஏட்டின் மூலமாக நாட்டிற்குத் தந்தவர் என்பதை நாமெல்லாம் அறிவோம். ஏதாவது ஒரு பெரிய பிரச்சினையில் சந்தேகம் ஏற்பட்டால், இதைப்பற்றி சிவராமன் என்ன எழுதுகிறார் என்று இன்றல்ல, அந்தக் காலத்திலேயே, நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருந்த அந்தக் காலத்திலேயே தினமணி பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டு புரிந்து கொண்டோமென்றால் சிவராமன் அவர்களின் பெருமை எளிதில் விளங்கும்.
அவர் இங்கே பேச மறுத்து விட்டார். காரணம் அவர்களுடைய முதிர்ந்த பருவம். நாமெல்லாம் பேசுவதைக் கேட்க முடியாத அளவுக்குச் செவிப்புலனில் பலகீனம். எனவே என்ன பேசினோம் என்பது தெரிந்தால்தான் பேச முடியுமென்பதற்காக அவர் பேச மறுத்துவிட்டாரேயல்லாமல் வேறல்ல.
அண்ணாவின் கதை என்று தினமணி கதிர் சார்பாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. நம்முடைய நண்பர் சாவி அவர்கள் தினமணி கதிரிலே பணியாற்றிய அந்தக் காலத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. அதை நான்தான் வெளியிட வேண்டுமென்று தினமணி அலுவலகத்தின் சார்பில் கேட்டு நான் வெளியிடச் சென்றிருந்தேன். அப்போது சிவராமன் பேசிய பேச்சு, அவர்கள் அந்த உரையிலே எங்கள் உள்ளத்தில் பதியவைத்த அந்தக் கருத்துக்கள்
இன்றைக்கும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களாகும். அந்த அளவிற்கு அனுபவம் வாய்ந்த ஒரு பெரியவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும். நான் அடிக்கடி, அவர் எப்படி இருக்கிறார் என்று அவரைச் சார்ந்தவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் இந்த விழாவிற்கு வந்ததும், அண்ணா அவர்களின் பெயரால் தரப்பட்ட விருதைப் பெற்றுக் கொண்டதும் பெருமை அளிக்கக் கூடிய செய்திகளாகும்.
அதைப் போலவே என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெயரால் அளிக்கப்பட்ட விருதினை நம்முடைய அம்மையார் இராதா தியாகராஜன் பெற்றுக் கொண்டிருக்கிறார். அம்மையார் தமிழிலே எந்த அளவிற்குப் புலமை வாய்ந்தவர் என்பதும் எல்லா இலக்கியங்களையும் கற்க வேண்டுமென்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் உடையவர் என்பதும் அந்த ஆர்வத்தோடு நிற்காமல், அவைகளையெல்லாம் இன்று முழுமையாகக் கற்றுள்ளார் என்பதும் நான் அறிந்த உண்மையாகும்.
எனவே அவர்களுக்கு என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரால் உள்ள விருதினை அளித்திருப்பது சாலப்பொருத்தமுடையதாகும்.
என் பெயரால் உள்ள விருதை நம்முடைய முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதிலே விருதுக்குப் பெருமையோ இல்லையோ எனக்குத் தெரியாது. அதைப்பெற்றுக் கொண்டுள்ள சிலம்பொலி செல்லப்பன் முனைவர் மாத்திரமல்ல, தமிழகம் முன்னேற வேண்டுமென்பதிலும், தமிழ் வளர வேண்டும், வலிமை பெற வேண்டுமென்பதிலும் எல்லோரிடமும்
போட்டி போடக் கூடிய அளவிற்குப் புலமை வாய்ந்தவர். அப்படிப்பட்ட சிலம்பொலி செல்லப்பனை நீண்ட நாட்களாக நான் அறிவேன். தமிழகக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர். எனவே, அவருக்குக் கிடைத்துள்ள இந்த விருது நிகழ்ச்சியில் நான் அவரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த விருது வழங்குகின்ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆழ்வார்கள் மையத்தின் சார்பில் நடத்திக் கொண்டிருக்கின்ற ஆர்.எம்.வீ. அவர்களுக்கும் செயலாளர் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை உங்கள் அத்தனை பேர் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். இராமானுஜர் படம் பொறித்த விருது கேடயத்தை வழங்கினார்கள். அத்துடன் நில்லாமல் என்னுடைய 75 வயதைக் காட்டுகின்ற வகையில் 75 ஆயிரம் ரூபாயை பரிசாகவும் தந்திருக்கின்றார்கள். அப்பொழுதுதான் நான் எண்ணிக் கொண்டேன். 75 தானே ஆகிறது, 100 ஆக ஆகியிருக்கக் கூடாதா (சிரிப்பு) என்று எண்ணிக் கொண்டேன்.
நான் பொதுவாக இதுபோல் விருதுகளில் தரப்படுகின்ற பரிசுகளையெல்லாம் நானே எடுத்துக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குப் பல இடங்களில் தரப்பட்ட விருதுகள் - நம்முடைய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் அவர்களே வந்திருந்து தஞ்சையிலே வழங்கிய இராஜராஜ சோழன் விருதுக்காகத் தரப்பட்ட ஒரு இலட்சம் ரூபாயை அந்தப் பல்கலைக் கழகத்திற்கே தந்து என்னுடைய தந்தையார் தாயார் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி,
அதன் பேரில் பல சொற்பொழிவுகளை நடத்துங்கள் என்று கொடுத்து விட்டேன்.
இங்கேயும் அப்படிக் கொடுத்து விடுவேன் என்று ஜெகத்ரட்சகன் எண்ணக் கூடாது (சிரிப்பு) ஆர்.எம்.வீ.யும் எதிர்பார்க்கக்கூடாது. இதுகுறித்து நானும் மூப்பனார் அவர்களும் யோசித்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இராமானுஜர் சமத்துவத்திற்காகப் பாடுபட்டவர், அதைச் செயல்படுத்தியவர். எனவே, அவர் பெயரால் தரப்பட்ட விருதை இந்த அரசின் சார்பாக நான் தொடங்கியிருக்கின்ற சமத்துவபுரங்களுக்கு வழங்குவதற்கு இந்த 75 ஆயிரம் ரூபாயை அரசின் நிதியிலேயே சேர்க்கிறேன்.
(பலத்த கைத்தட்டல்) இந்த 75 ஆயிரம் ரூபாய் மாத்திரம் அதற்குப் போதாது. அரசிடம் நிதி இருக்கிறது. செலவழிக்கலாம். ஆனால் உள்ள நிதி எல்லாம் ஊதியத்திற்காக வழங்குவதற்கே சரி பாதிக்கு மேல் போய்விடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்களும் சமத்துவபுரத்திலே ஆர்வம் உள்ளவர்கள் என்பதை எடுத்துக்காட்ட - நீங்கள் என்றால் இங்கே மண்டபத்திலே உள்ளவர்கள் மாத்திரமல்ல, தமிழகத்திலே உள்ள எல்லா மக்களும் - பெரியாருடைய, அண்ணாவினுடைய, புரட்சிக்கவிஞருடைய, இராமானுஜருடைய கருத்தில் - சமத்துவ நோக்கத்திலே அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலே - அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற நிதியை இன்று முதல் தொடர்ந்து வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி வழங்குபவர்களில் முதலாவதாக நம்முடைய மூப்பனார் அவர்கள் இன்றைக்கு ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார்கள். (பலத்த கைத்தட்டல்) இன்னும்
வழங்கவில்லை. இருந்தாலும் வழங்கியிருக்கிறார்கள் என்று சொன்னதற்குக் காரணம் அது வழங்கப்பட்டதாக அர்த்தம். அவ்வளவு நம்பிக்கைக்குரியவர் அவர் என்ற காரணத்தால் அது வழங்கப்பட்டதாகக் கூறுகிறேன். அவரைப் பின்பற்றி எல்லோரும் சமத்துவபுரத் திட்டத்திற்குத் தங்களுடைய உதவியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு வழி வகுக்கின்ற வகையிலே இந்த நல்ல விழா நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்களும் ஜெகத்ரட்சகன் அவர்களும் முன்னின்று நடத்திய ஆழ்வார்கள் மையத்தின் சார்பில் நடைபெறுகின்ற இந்தவிழா பயன்படுத்தியிருக்கிறது என்பதற்காக இந்த மையத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
12-9-98 அன்று சென்னையில் ஆழ்வார்கள் ஆய்வு மைய விழாவில் ஆற்றிய உரை
