உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா உரை

பகுதி 1 · 1 / 3

சென்னை - ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா உரை

இன்று உங்கள் அனைவருடைய இனிய வாழ்த்துக்களோடு நானும், பெரியவர் சிவராமன் அவர்களும் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும் முனைவர் திருமதி ராதா தியாகராஜன் அவர்களும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். இங்கே வழங்கப்பட்ட விருதுகளின் பெருமை ஒரு புறம் இருந்தாலுங்கூட, அந்த விருதுகளைப் பற்றியும் அதைப் பெற்றுக் கொண்ட எங்களைப் பற்றியும் உரையாற்றியவர்கள் மிக அதிகமாக, குறிப்பாக என்னைப் பாராட்டியிருக்கிறார்கள், புகழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.

இங்கே நம்முடைய மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் கடந்த காலத்திலே நீங்கள் செய்தவைக்காக அல்ல, இனி சாதிக்க வேண்டியவைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்கள். அதுதான் உண்மை. இங்கே சொல்லப்பட்ட அழகு தமிழ்ச் சொற்கள், வர்ணிக்கப்பட்ட வார்த்தைகள், ஜெகத்ரட்சகன் வாரிவாரி இறைத்த வர்ணனைகள், தம்பி வலம்புரிஜான் தனக்கேயுரிய தமிழ் ஆற்றலைக் கொண்டு இந்த மண்டபத்தில் சொல் மழை

பொழிந்திட்ட காரணத்தால் எங்கே நனைந்து மூழ்கி விடுமோ என்று நான் சந்தேகப்படுகின்ற அளவிற்கு அன்பு மழை பொழிந்தார்கள். அந்த நிலைகள் எல்லாம் நான் இதுவரை ஆற்றியுள்ள பணிகளுக்காக, என்னிடத்தில் அவர்கள் கண்ட ஆற்றலுக்காக திறமைக்காக - புலமைக்காக உழைப்புக்காக என்று நான் கருதவில்லை. சகோதரர் ஆர்.எம்.வீ. அவர்கள் பேசியதும் சரி, மற்றவர்கள் பாராட்டிப் பேசியதும் சரி, மூப்பனார் அவர்களே பேசியதும் சரி, எல்லாமே இன்னும் இந்தச் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்று என்னை வேலை வாங்குவதற்காகத் தட்டிக் கொடுக்கப்பட்டவைகளே தவிர வேறு அல்ல என்பதை நான் உணருகிறேன்.

அந்த அளவிற்கு இங்கே நான் புகழப்பட்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் என்ன பேசுவது, எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரியாத நிலையில்தான் ஒரு மயக்கத்தில்தான் நான் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்குத் தேன் குடத்திலே விழுந்த ஈயைப் போல் - விழுந்த அல்ல, தூக்கிப் போடப்பட்ட ஈயைப்போல் நான் உங்கள் முன்னால் இப்போது காட்சி தருகிறேன்.

எனக்கு அளிக்கப்பட்ட இராமானுஜர் விருது பற்றி சகோதரர் ஆர்.எம்.வீ. பேசும்போது குறிப்பிட்டார். இதை நாங்கள் கலைஞருக்கு வழங்குகிறோம் என்று அழைப்பிதழில் அச்சியற்றவில்லை. இதைப் பெற்றுக் கொள்ள அவர் இசைந்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறோம் என்றார். அது என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல - விருதையல்ல, வீரப்பன் அவர்கள் சொன்ன வார்த்தை என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால் ஒருமுறை கம்பனடிப்பொடி

என்று வர்ணிக்கப்படுகின்ற காரைக்குடி சா. கணேசன் அவர்கள், காரைக்குடியில் ஆண்டுதோறும் நடத்துகின்ற கம்பர் விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருந்தேன். நம்முடைய சிவராமன் அவர்களும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களும் இன்னும் பல புலவர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே பேசும்போது, கம்பர் விழாவில் கருணாநிதி கலந்து கொள்வதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அதற்கு மாறாக வேறு மாதிரியாக ஆச்சரியப்படுங்கள். கம்பர் விழாவிற்கு கருணாநிதியை அழைத்திருக்கிறார்களே என்று நீங்கள் ஆச்சரியப்படுவதுதான் சரி என்று நான் அங்கே குறிப்பிட்டேன்.

அதைப்போல இராமானுஜர் விருதை நான் பெற்றுக் கொள்ள இசைந்தேன் என்பதைவிட இராமானுஜர் விருதை கருணாநிதிக்குத் தந்தீர்களா என்று உங்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியத்தோடு கேட்கக் கூடிய ஒரு சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.

இந்த விருது எனக்கு வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டபோது ஆர்.எம்.வீ. அவர்கள் சும்மாயில்லாமல் இதைப் பற்றி சுற்றுப்புறத்தில் என்னென்ன பேச்சுக்கள் நடைபெறுகின்றன என்பதைவும் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதை அவருடைய உரையிலிருந்து என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நீங்களும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

நான் சார்ந்திருக்கின்ற இயக்கம் - நாங்கள் சார்ந்து இருக்கின்ற இயக்கம் - நாங்கள் எந்தப் பெரியாருடைய

கரம் பிடித்து வளர்ந்தோமோ - எந்த அண்ணாவின் வழியைத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறோமோ, அதற்கு இது ஏற்புடையதா என்று யாராவது சந்தேகப்படுவார்களேயானால் - கேட்கமாட்டார்கள் - கேட்டால் சரியான பதில் கிடைத்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால் வெளிப்படையாக கேட்க மாட்டார்கள் சந்தேகப்படுவார்களேயானால், அவர்களுக்கு நான் தருகின்ற ஒரேயொரு விளக்கம் - இன்றைக்கு இந்த நாட்டிலே எந்தெந்த செயல்களைப் புரிய வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, எந்தெந்த முன்னேற்றங்கள் முகிழ்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ இவைகளை யெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்து காட்டிய பெருமைக்கு உரியவர் இராமானுஜர் என்கிறபோது அந்த விருது கிடைப்பதிலே நான் பெருமைப் படுகிறேன்.

ஒருவேளை எனக்குக் கொடுக்கக் கூடாதென்று ஆர்.எம்.வீ. அவர்களோ - ஆழ்வார் மையமோ தீர்மானித்திருந்தால்தான் நான் வருத்தப்பட்டிருப்பேன். அவர்கள் வழங்க முன் வந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் ஆழ்வார்களுக்குப் பக்கத்திலே வரக்கூடாதென்று ஒதுக்கி வைத்துவிட்டார்களோ என்ற ஐயப்பாடு எனக்கு இல்லாமல் என்னையும் ஆழ்வார்கள் மதிக்கிறார்கள் - என்னையும் ஆழ்வார்கள் விரும்புகிறார்கள் என்னையும் ஆழ்வார்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் எனக்கொரு பெருமைதான்.

ஒருமுறை நம்முடைய மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள் இணைந்து நடத்திய தெய்வீகப் பேரவையின் மாநாடு ஒன்று நடைபெற்றது. நான் அப்போது இரண்டாவது முறையாக முதல்வராக இருக்கிறேன். அப்போது அதிலே உரையாற்றிய ஒரு ஆதீனகர்த்தர், கலைஞர் கடவுளை

ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, இருந்தாலும் நான் சொல்லுகிறேன் - என்று அவர் அந்தக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து நான் அதைப்பற்றி பேசும்போது, எனக்கு முன்னால் பேசிய ஆதீனகர்த்தர் அவர்கள் கலைஞர் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தினார்; நான் அவருக்குச் சொன்னேன், நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா இல்லையா என்பதல்ல பிரச்சினை கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா இல்லையா என்பதுதான் எனக்குள்ள பிரச்சினை என்று குறிப்பிட்டேன்.

அதே நிலைதான் இப்போதும். அதைத்தான் ஆர்.எம்.வீ. அவர்களும் இங்கே அழகாக எடுத்துக் காட்டினார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த அரசியல் இயக்கத்தைக் கண்டபோது கொட்டுகின்ற மழையிலே சென்னையிலே ராபின்சன் பூங்காவில் 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் சொன்னார்கள், ஒன்றே குலம், ஒருவனே தேவன், அதுவே நம்முடைய கடவுள் கொள்கை, சமுதாயக் கொள்கை என்று குறிப்பிட்டார்கள்.

அந்தக் கொள்கை வழி நடக்கின்ற நாங்கள் இராமானுஜருடைய பல்வேறு கோணங்களிலே ஒரு கோணம், எங்களுடைய கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்கிற நேரத்தில் அதை எதற்காக நாங்கள் புறக்கணிக்க வேண்டும். அதை எதற்காக நாங்கள் வெறுத்து ஒதுக்கவேண்டும், அதை எதற்காக நாங்கள் பயன்படுத்தாமல் - நாங்கள் பயன்படுத்தாதவர்களாக ஆக வேண்டும். எனவேதான் இராமானுஜரைப் போன்றவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சொன்ன அந்தக் கொள்கை இன்னமும் நிறைவேறாத

சூழ்நிலையில் அவருடைய பெயரால் வழங்கப்படுகின்ற இந்த விருதுக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ அல்லது அதைப் பெறுகின்ற எனக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ இந்த விருதின் பலன், இதனுடைய விளைவு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் சமத்துவமான பூமி - இந்தியா சமத்துவமான மண் என்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துமேயானால் இந்த விருதுக்கு இன்றைய நாளை விட அன்றைய நாளில்தான் அதிகப் பெருமை என்பதை நான் இங்கே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இராமானுஜர் அவர்கள் மாத்திரமல்ல, ஆழ்வார்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த 12 ஆழ்வார்களின் முதல் மூன்று ஆழ்வார்கள் தோன்றிய பகுதியே சென்னை, செங்கற்பட்டு பகுதிதான். அந்தப் பகுதிகளில் ஒன்றான திருப்பெரும்புதூரில் இராமானுஜர் கி.பி.1017-ஆம் ஆண்டு பிறந்தார். இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று பொதுவாகச் சொன்னார்கள். நான் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முன் குறிப்பெடுக்காமல் வருவதில்லை.

(கைத்தட்டல்) முதலமைச்சர்தானே, என்ன பேசினாலும் கேட்டு விட்டுப் போவார்கள், எதையாவது பேசி விட்டுப் போகலாம் என்று வருவதில்லை, இன்று காலையிலிருந்து ஐந்து புத்தகங்கள், இராமானுஜரைப் பற்றிய புத்தகங்களைப் படித்து விட்டுத்தான் வந்தேன். அதிலே சிலவற்றை நம்முடைய நீதியரசர் ரெட்டியார் அவர்களே குறிப்பிட்டபோது, அடடா, நாம் எடுத்துவந்த குறிப்பையெல்லாம் இவர் பேசுகிறாரே என்றுகூட நான் ஆச்சரியப்பட்டேன், வருத்தப்படவில்லை.

அதைக்கூட ஆர்.எம்.வீ.யிடம் சொன்னேன். அதற்கு அவர், இவைகளையெல்லாம் அவர் விளக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவரை இந்த விழாவிற்கு அழைத்தோம் என்று குறிப்பிட்டார்.

எனவே, கி.பி. 1017-ஆம் ஆண்டு அதாவது தோராயமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லாமல், சரியாக சொல்ல வேண்டுமேயானால், 981 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பெரும்புதூரில் இராமானுஜர் பிறந்தார். அவருடைய குருவாக அவர் ஏற்றுக் கொண்டவர் யாதவ பிரகாசர், அத்வைத ஆசிரியர் அவர். ஆனால் குருவுக்கும் மாணவருக்கும் அடிக்கடி சர்ச்சைகள். குருவை மிஞ்சிய சீடராக இருந்தார் இராமானுஜர். இராமானுஜரே அப்படியிருந்தாரே, நாம் இருந்தால் என்ன என்று இன்றுள்ள சீடர்கள் (சிரிப்பு) கேட்கக் கூடாது.

குருவையே மிஞ்சிய சிஷ்யர் என்றால் குருவே பாராட்டுகின்ற அளவிற்கு - போற்றுகின்ற அளவிற்கு, குருவே நினைக்காதக் கருத்துக்களை, பொருள் விளக்கங்களை குருவுக்கே சொல்லித் தரக்கூடிய வித்தகராக மாணவப் பருவத்திலேயே இராமானுஜர் விளங்கினார். இதனால் குருவிற்கும் சீடருக்கும் அடிக்கடி சர்ச்சை வருகிறது என்பதைப் பற்றி பலரால் வெளியே பேசப்படுகிறது.

முதல் பதிப்பு 2000