உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பாரதியும் புதுமைப் பெண்களும்

பகுதி 3 · 3 / 4

“நான் இரண்டு நிமிடங்களுக்குமேல் உயிரோடு இருக்க மாட்டேன். என் பிராணன் போகும் முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே!-

முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவை விவாகம் செய்ததக்கதே. ஆண்களும் பெண்களும் ஒருங்கே எமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை.

எனவே நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத் தனமான சுயநல சாஸ்திரங்களை கிழித்து கரியடுப்பிலே போட்டுவிட்டு தைரியத்தோடு சென்னைப் பட்டணத்திற்குப் போய் அங்கே கைம்பெண் விவாகத்தை பதிவுசெய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மணமகனைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது நீ உள்ள வரையில் என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை” என்று சந்திரிகையின் கதை - என்கிற கதையிலே வருகிற ஒருத்தி சொல்லிவிட்டு உயிர் விடுகிறாள்.

அவள் உயிர் விடுவது - உயிர் விடுகிற நேரத்தில் பேசுவது, அப்படி பேசுகிற நேரத்திலே சோகம் ஏற்படுவது என்பது முக்கியம் அல்ல. அவள் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு பெரிய புரட்சிகரமான கருத்தை - அதை பாரதியார் வாழ்ந்த காலத்தோடு நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்பொழுது ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அது பெரிதாக நமக்குத் தெரியாது.

கவிதைகள் மாத்திரம் அல்ல; எத்தனை அருமையான கதைகளை எழுதித் தந்திருக்கிறார் - வசன காவியங்களை இயற்றித் தந்திருக்கிறார் என்பதை எண்ணும் பொழுது இத்தனை குறுகிய காலத்திற்குள்ளே இவ்வளவு பெரிய சாதனையா என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது.

புதுமைப் பெண்களைப் பற்றிப் பாடிய பாரதி, அந்தக் காலத்து பழமை முறைகளுக்கு ஏற்பத் தன்னுடைய பதினாலாவது வயதில் ஏழு வயது நிரம்பிய செல்லம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்பதை எண்ணினால், அந்தப் பாரதியா புதுமைப் பெண்ணைப் பற்றி பாடினார் என்றுகூட எண்ணத் தோன்றும்.

ஆம், அதனால்தான் பாடினார்.

14 வயதில் 7 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்கின்ற நிலை, அத்தகைய வைதீகம் - சம்பிரதாயம் அன்று இருந்திருக்கிறது என்பதை எண்ணும்போது இன்று தமிழகத்திலே எவ்வளவு பெரிய மாற்றங்களை கடந்த காலத்திலே நல்லறிவாளர்கள் - சீர்திருத்தச் சிற்பிகள் - பகுத்தறிவாளர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள் என்பதை நாம் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

பாரதியின் பள்ளிப் பருவத்திலேயே அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆசிரியர் ஒருவர் அவருக்குப் பாடத் தெரியும் என்று கேள்விப்பட்டு அவரைக் கேலி புரிவதற்காக “பாரதி சின்னப் பயல்” என்று ஈற்றடி வருமாறு ஒரு பாட்டு எழுது என்று சொல்ல, ‘பாரதி சின்னப்பயல்’ என்று தன்னைத் தானே - இழித்தும் - பழித்தும் ஈற்றடி வைத்து எழுதுகின்ற அந்தப் பாடலை பாடுகிறேன் என்று பாரதி ஒப்புதல் அளித்துவிட்டு, அந்த ஈற்றடி வைத்தே பாடிக் காட்டினார்!

இளம் பாலகனான பாரதி ஆசிரியரைப் பார்த்து ஈற்றடியை முடிக்கும் பொழுது “பார், அதி - சின்னப் பயல்” என்று இதோ பார் அதி சின்னப் பயல் மிக மிக அதிகமான சின்னத்தனமான பயல் என்று ஆசிரியரையே குறிப்பிட்டிருக்கின்ற அளவிற்கு, ‘பாரதி

சின்னப் பயல் அல்ல. என்னை இப்படி பாடச் சொன்னானே பார் - அதி சின்னப் பயல்’ என்று பாடிக் காட்டிய புலமையை இளம் வயதிலேயே பாரதியார் பெற்றிருந்தார்.

அந்தப் பாரதியார் ‘தாய்த் திருநாடு தன்னைப் போற்றி மதித்திடுவோம்’ என்று பாடிய அந்தப் பாரதியார்,

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே”

என்று சுதந்திரம் வருவதற்கு முன்பே,

“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”

என்று பள்ளுப்பாடுவோமே என்று பாடிய அந்தப் பாரதியார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளில் எப்படிச் சிறப்பிக்கப்படுகிறார்?

ஆனால் அந்தக் கால கட்டத்தில் எவ்வளவு புரட்சி கரமான ஒரு கருத்தை - சுப்பிரமணிய பாரதியார் தான் எழுதிய சந்திரிகையின் கதையில் - அந்தக் கதையில் வருகிற ஒரு பாத்திரத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார் என்பதை எண்ணிப் பார்த்தால் எத்தகைய புதுமைப் பெண்கள் நாட்டிலே தோன்ற வேண்டும் என்பதிலே அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பாரதியும் புதுமைப் பெண்ணும் என்று சொல்லுகின்ற நேரத்தில் இப்போது நாட்டிலே நான் காணுகின்ற புது - ‘மை’ - பெண்களை அவர் குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடுகின்ற புதுமைப் பெண் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்” என்கிற அந்த திறமைமிக்கப் பெண்தான் கவிச் சக்கரவர்த்தி பாரதி குறிப்பிட்டார்.

அத்தகைய பெண்களால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்று அவர் கருதினார்.

நீங்கள் ஜப்பான் நாட்டுச் சரித்திரத்தைப் படித்துப் பார்ப்பீர்களேயானால் அந்த நாடு எதிரிகள் வயப்பட்டு சீரழிந்து - பாழ்பட்டு இனி இது கடைத்தேறாது என்கிற அளவிற்கு நினைக்கின்ற நிலை இருந்தது.

அந்த நாடு மீண்டும் உயர்ந்தெழுந்து இன்றைக்கு உலகத்திலே இருக்கின்ற நாடுகளில் வளமுள்ள ஒரு நாடு என்று எண்ணத்தக்க வகையிலே இருக்கிறது என்றாலும் கூட அத்தகைய நிலையை அங்கே ஏற்படுத்துவதற்கு காரணமாக இருப்பவர்கள் அந்த நாட்டுத் தாய்மார்கள்.

அந்த நாட்டுத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு அத்தகைய வீர உணர்வை - நாட்டுப் பற்றை ஏற்படுத்தியதின் காரணமாகத்தான், எதிரிகளுடைய படையெடுப்பால் சீரழிந்து போன ஜப்பானை மீண்டும் தலைநிமிரச் செய்ய உறுதுணை செய்த தாய்மார்களை ஜப்பான் நாட்டின் சரித்திரம் இன்றைக்கும் நமக்குக் குறிப்பிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

முதற் பதிப்பு : மே 2000