பாரதியும் புதுமைப் பெண்களும்
பகுதி 4 · 4 / 4
நம்முடைய இந்திய நாட்டின் சரித்திரத்திலே பல வீரர்கள் - சாம்ராஜ்ஜியாதிபதிகள் - மராட்டிய மண்டலத்தைக் கட்டியாண்ட வீர சிவாஜி போன்றவர்கள் தாய் ஊட்டிய வீரத்தின் காரணமாகப் பெருமை பெற்று விளங்கினார்கள்.
வீர சிவாஜியின் தாய் ஊட்டிய பால் வீரப்பாலாக அமைந்த காரணத்தினால் அவர் மராட்டிய மண்டலத்தையே கட்டியாளக் கூடிய வீரனாகத் திகழ்ந்தார். அவருடைய வரலாறு இன்னமும் இந்தியாவில் இருக்கின்ற அத்தனை பேர்களுடைய உள்ளங்களிலும் கொடி கட்டிப் பறக்கின்ற வரலாறாக இருக்கிறது.
எனவே பெண்கள் ஒரு நாட்டிலே முன்னேறினால்தான் அந்த நாடு முன்னேற முடியும். ஒரு காலத்திலே ஆண்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்த பெண்கள் சமுதாயம், பாரதி போன்றவர்களால் தமிழ்த் தென்றல் திரு.வி.க. போன்றவர்களால், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் போன்றவர்களால், ‘பெண்கள் விடுதலை தேவை’ என்று முழங்கிய பேரறிஞர் அண்ணா போன்றவர்களால், இன்றைக்கு தலை நிமிர்ந்து வாழுகின்ற நிலையை நம் நாட்டிலே காணுகின்றோம்.
எனவேதான் பாரதி தேவை என்று கூறிய அந்தப் புதுமைப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்றால், நாகரிகத்தைக் குறிப்பிட்டுப் பாரதி புதுமைப் பெண்ணை உருவாக்கவில்லை. நாட்டுப்பற்று மிகுந்தவளாக, அதே நேரத்திலே மொழிப்பற்று மிகுந்தவளாக, அதே நேரத்திலே விடுதலை உணர்வு கொண்டவளாக, அதே நேரத்திலே மூட நம்பிக்கைகளை ஒழித்து விஞ்ஞான ரீதியில் நாட்டை - உலகத்தை - இந்த வையத்தை உருவாக்கக் கூடியவளாக - அந்தப் புதுமைப் பெண் இருந்திட வேண்டும் என்றுதான் பாரதி விரும்பினார்.
பாரதியினுடைய பாடலில் ஒரு கட்டத்திலே குறிப்பிடுகிறார். ஒரு பெண்ணுடைய காதலை மறுக்கின்ற பெற்றோரைப் பற்றிப் பாரதி குறிப்பிடும் பொழுது,
“நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார் பாடை கட்டி யதைக்கொல்ல வழிசெய்கின்றார்
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி யிடரெய்திக் கெடுகின்றாரே...”
என்று குறிப்பிடுகிறார்.
நாடகத்தைப் பார்க்கின்றார்கள். பெற்றோர் பாராட்டுகிறார்கள். நாடகத்தில் வருகின்ற அம்பிகாபதி - அமராவதி இருவருடைய காதலையும் சுவைத்து மகிழ்கிறார்கள்.
‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க’ என்று அம்பிகாபதி பாடுகிற நேரத்தில் ‘ஆகாகா’ என்று தலையாட்டுகிறார்கள். பிறகு அம்பிகாபதி - அமராவதி காதலை மறுக்கின்ற அமராவதியின் தந்தை சோழ மன்னன், அம்பிகாபதியின் தலையை அறுக்க வேண்டும் என்று ஆணையிடுகிற நேரத்தில் பதைக்கிறார்கள். இப்படி ஒரு தண்டனையா என்று அவர்கள் தவிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு வீட்டிற்கு வருகிறார்கள். வீட்டிலே அதே கதையைக் கேள்விப்படுகிறார்கள். அம்பிகாபதி நாடகத்தைப் பார்த்து அம்பிகாபதி - அமராவதி காதலைத் தடுத்த சோழ மன்னனைச் சபிக்கின்ற அதே பெற்றோர் தங்களுடைய வீட்டிலே அப்படியொரு காதல் கதையை அனுமதிக்கிறார்களா? என்றால் இல்லை. அதைத்தான் பாரதி சொல்லுகிறார்,
“நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார் பாடை கட்டி யதைக்கொல்ல வழி செய்கின்றார்
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி யிடரெய்திக் கெடுகின்றாரே...”
- இது பெற்றோர்களுக்காக எழுதிய பாட்டு. நீங்கள் பெற்றோர்கள் மத்தியில் பாடிக்காட்டக் கூடிய பாட்டு.
எனவே குடும்பத்தில், வாழ்க்கையில், நாட்டில், சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் பெண்கள் முன்னேறப் புரட்சிக் கவியாகத் திகழ்ந்த பாரதியார் தன்னுடைய கவிதையைப் பயன்படுத்தினார். நாடு வாழ அவருடைய கருத்துக்கள் பயன்பட்டன. நலிவு தீர அவருடைய கவிதைகள் பயன்பட்டன.
இன்று பாரதியினுடைய கனவுகள் முழுவதும் வெற்றிகரமாக நிறைவேறி விட்டதா? என்றால் இல்லை. விடுதலை பெற்ற இந்தியாவெங்கும் - இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங்களில் இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிற வன்முறைச் சம்பவங்களை கேள்விப்படுகிறோம். பலவற்றை நேரிலே பார்க்கிறோம். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இன்றைக்கு வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்ற காட்சிகளைக் காணுகிறோம்.
பெண்களுடைய மானத்திற்கு ஆபத்து. பெண்களுடைய உயிர்களுக்கு ஆபத்து என்ற அளவிற்கு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடந்து வருவதைக் காணுகிறோம்.
உத்தமர் காந்தியடிகள் சொன்னார்: ‘உண்மையான சுதந்திரம் ஒரு நாட்டிற்குக் கிடைத்தது என்றால் ஒரு அழகான பெண் தன்னுடைய கழுத்திலே நகைகளை அணிந்து கொண்டு இரவு 12 மணிக்கு ஒரு கிராமத்திலே இருந்து புறப்பட்டு இருட்டில் இன்னொரு கிராமத்திற்கு
செல்லுகின்ற அளவிற்கு நம்பிக்கையும் துணிவும் அந்தப் பெண்ணுக்கு என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான சுதந்திரம் பெற்ற நாடாகக் கருத முடியும்’ என்று.
ஆனால் இருட்டில் அல்ல. ஒரு கிராமத்திலே இருந்து இன்னொரு கிராமத்திற்கு அல்ல. நகை அணிந்த பெண் கூட அல்ல. ரொம்ப அழகான பெண்ணும்கூட அல்ல. பட்டப்பகலில் இன்றைக்கு நடமாட முடியாத சூழ்நிலை நாட்டிலே இருப்பதைப் பல மாநிலங்களிலே இன்றைக்கு காணுகின்றோம்.
நான் நாடு என்று குறிப்பிடுகிற நேரத்தில் தமிழ்நாடு என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்தியத் திருநாடு முழுவதும் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இருப்பதை நாம் காணுகிறபோது இந்த நிலைக்காக சுதந்திரம் வேண்டும் என்று பாரதி அன்றைக்குப் பாடவில்லை.
ஆனாலும் அவர் பாடிய சுதந்திரம் கிடைத்தது. கிடைத்த சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் - சுமையும் இளைஞர் சமுதாயத்திற்கு உண்டு. அந்த இளைஞர் சமுதாயம் பாரதியை மனதில் நிறுத்தி இளம்பிராயத்திலேயே தேசியக் கவிஞனாக அரும்பி, மலர்ந்து - மணம் வீசிய அந்த பார் புகழ் புலவருடைய பாதையிலே நடைபோட்டு தாயகத்தைக் காப்பாற்றிட வேண்டும். அந்தச் சூளுரையை இன்று இந்த பாரதி மன்றத் தொடக்க விழாவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
29.8.80 அன்று தாம்பரம், கிறித்துவக் கல்லூரி பாரதி விழாவில் ஆற்றிய உரை.
