பாரதியும் புதுமைப் பெண்களும்
பகுதி 2 · 2 / 4
தலைவர் அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்கள்; ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் நாங்கள் கருணாநிதியை இங்கே அழைக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.
உள்ளபடியே எனக்கேகூட அதிலே பெருமை. ஆளும் கட்சியாக இருந்தால் மாத்திரம் என்னை அழைத்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கிற நேரத்திலே என்னை அழைக்காமல் இருந்தால் நீங்களும் என்னிடத்திலே நெருங்கிப் பழகிய சில நண்பர்களைப் போல ஆகிவிட்டீர்களோ என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன். ஆனால், மாணவர்கள் - மாசற்ற மனம் படைத்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் ‘நீங்கள் என்னை ஆளுகின்ற பொறுப்பிலே இருப்பவனா?
எதிர்வரிசையிலே இருப்பவனா?’ என்றெல்லாம் பேதம் பிரித்துப் பார்க்காமல் ஒரு தமிழனை தமிழர்கள் அழைக்கிறோம் என்கிற அந்த உணர்வோடு இங்கே அழைத்திருக்கிறீர்கள்.
தலைவர் அவர்கள் சொன்னார்கள், ஆளும் கட்சியும் - எதிர்க்கட்சியும் இரண்டு கண்களைப் போன்றது என்று குறிப்பிட்டார்கள்.
இரண்டு கண்களைப் போன்றது என்று சொல்லுவது கூட அவ்வளவு பொருத்தமுடையதாக எனக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் நானே கண் நோய் வாய்ப்பட்டவன். இரண்டு கண்களைப் போன்றவர்கள் என்கிறபோது இரண்டு கண்களில் ஒன்று பழுதானால்கூட ஒரு கண்ணால் பார்க்கலாம். எனவே ஆளும் கட்சி - எதிர்க்கட்சி இரண்டும், இரண்டு கண்கள் என்று கூறுவதை விட ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறுவதுதான் பொருத்தமுடையதாகும்.
ஒரு நாணயத்தினுடைய ஒரு பக்கத்திலே தலையிருந்து, ஒரு பக்கத்திலே பூவும் இருக்கிற நேரத்தில் எந்தப் பக்கம் தேய்ந்து போனாலும் அந்த நாணயம் செல்லாது. அதைப் போலத்தான் ஒரு நாட்டின் ஜனநாயகத்தில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி இருக்க வேண்டும். இரண்டிலே ஒன்று தேய்ந்தாலும் அல்லது தேய்க்கப்பட்டாலும் அந்த நாணயம் செல்லாத நாணயமாக ஆகிவிடும்.
எனவேதான் ஆளும் கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் நம்முடைய கல்லூரி முதல்வர் குறிப்பிட்டதைப் போல, அவரும் முதல்வர்தான் - முதல்வருக்கு முன்னாலே பேசுகிறேன் - எனவே, முதல்வர் சொன்னதைப்போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இரண்டு கண்கள் அல்ல; ஒரு ரூபாய் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்பதை நான் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இன்று காலையிலேதான் நான் இந்த மன்றத்திலே என்ன தலைப்பிலே பேசுகிறேன் என்று அறிந்து கொண்டேன். காரணம் இரண்டு மூன்று நாட்கள் நெல்லை மாவட்டத்திலே நடைபெற்ற மாநாட்டிற்குச் சென்றுவிட்டு, வந்த பிறகு உடல் நலம் இல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்கிற பொழுது நான் அழைப்பிதழைக் காண நேரிடவில்லை. இன்று காலையிலே அழைப்பிதழ்
தரப்பட்டது. பிறகு பத்திரிகையிலும் பார்த்தேன். பார்த்த பிறகுதான் ஒரு புதுமையான தலைப்பு எனக்கு இங்கே தரப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.
‘பாரதியும் புதுமைப் பெண்களும்’ என்ற தலைப்பு. நான் கிறித்துவக் கல்லூரிக்கு பலமுறை வந்த நேரத்தில் எல்லாம் - இங்கே மாணவர்களை சந்தித்த போதெல்லாம் மாணவர்களில் மகளிர் புறத்து மாணவர்கள் குறைவாக இருப்பதைத்தான் நான் கண்டிருக்கிறேன். இருந்தாலும் கூட நீங்கள் ஏன் இந்தத் தலைப்பை விரும்பினீர்கள் என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தேன். எனக்குப் புரியவில்லை. எப்பொழுது வந்தாலும் நம்மைப் பற்றியே பேசுகிறாரே - இந்தத் தடவையாவது புதுமைப் பெண்களைப் பற்றிப் பேசட்டுமே என்ற ஆர்வத்தின் காரணமாக ‘பாரதியும் புதுமைப் பெண்களும்’ என்ற தலைப்பினை எனக்குத் தந்திருக்கின்றீர்கள்.
பாரதி இந்த நாட்டிற்காக - மொழிக்காக - நாட்டினுடைய விடுதலைக்காக - சமுதாய வளர்ச்சிக்காக - சாதி பேதங்களை ஒழிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
பாரதி பிறந்த எட்டயபுரத்து மண் ஒரு நல்ல கவிஞனையும் நாட்டுக்குத் தந்தது. அதே எட்டயபுரத்து மண் யாரைத் தந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
அந்த மண்ணில் பிறந்து காசி வரையிலே சென்று கல்வி பயின்று விடுதலைப் போராட்டக் கால கட்டத்திலே இந்தியாவிலே ஆங்கிலேயருடைய ஆதிக்கத்திற்குட்பட்ட நிலப்பரப்பிலே இருப்பது ஆகாது என்ற காரணத்தினால் பிரஞ்சுக்காரர்களுடைய ஆதிக்கத்திலே இருந்த புதுவை மண்ணிலே அமைந்து திரிந்து அப்படி அலைந்த நேரத்திலும் அலை கடல் ஓரத்திலும் நூற்றுக்கணக்கான எழுச்சிக் கீதங்களைப்
பாடி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை தன்னுடைய மாணவராகப் பெறுகின்ற பேற்றினையும் பெற்று - 39-வது வயதிலேயே இந்த உலகைவிட்டு மறைந்து விட்டவர்தான் கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி.
எண்ணிப் பார்க்கிறோம். வயது 39. எழுதியதை எடுத்துப் பார்க்கிறோம். 39 வயதில் 20 அல்லது 25 ஆண்டுகளுக்குத்தான் எழுத்துத் துறையிலே ஈடுபட்டிருக்க முடியும். 20 அல்லது 25 ஆண்டுகளிலே எழுத்துத் துறையிலே ஈடுபட்ட பாரதி நூற்றுக்கணக்கான கவிதைகளை எப்படி இயற்றி முடித்து என்று எண்ணி வியப்படைகிறோம்.
பாரதியாரைப் பற்றி எத்தனை ஏடுகள் எழுதினாலும், எத்தனை பேர் பாரதியாரைப் பற்றி கவிதை வரிகளைத் தீட்டினாலும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாரதியாரைப் பற்றி எழுதிய கவிதை வரிகளுக்கு ஈடாக - ஒப்பாக - நிகராக - யாரும் இதுவரையிலே எழுதவில்லை.
“நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு மணக்க வந்த கற்பூரச் சொற்கோ”
என்று புரட்சிக் கவிஞர் - பாரதியாரைப் பற்றி பாடிய அந்தக் கவிதை வரிகள் என்றைக்கும் நம்முடைய நெஞ்சிலே பதிந்திருக்கக் கூடிய வரிகள்.
அப்படிப்பட்ட பாரதி புதுமைப் பெண்களைப் பற்றி பாடியது மாத்திரமல்ல. இன்று இந்தத் தலைப்பிலே நான் பேசவேண்டும் என்று தெரிந்த பிறகு பாரதியாருடைய கதைகள் என்ற ஒரு பெரிய புத்தகத்தை நான் படித்தேன்.
அந்த உரைநடைக் கட்டுரை - அதைக் கதை என்றும் சொல்லலாம்; கட்டுரை என்றும் சொல்லலாம். அதிலே எப்படிப்பட்ட அழுத்தம் திருத்தமான சீர்திருத்தக் கருத்துக்களை அவர் வைத்திருக்கிறார் என்பதற்கு அவர் கையாண்டு இருக்கின்ற இரண்டொரு வாக்கியங்களை மாத்திரம் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பார்ப்பனர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு குடும்பம், பாரதியினுடைய கதைகளில், நான் கூட யாரும் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் பிராமணர் என்று சொன்னாலும்கூட, பாரதி துணிச்சலோடு பார்ப்பனர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு அக்கிரகாரத்தில் பூகம்பம் ஏற்பட்டு அந்த அக்கிரகாரத்திலே உள்ள வீடுகள் எல்லாம் அந்தப் பூகம்பத்திலே அழிந்து ஒழிய, ஒரு வீட்டிலே தாழ்வாரத்திலும் கூடத்திலும் படுத்திருந்தவர்கள் எல்லாம் பூகம்ப அதிர்ச்சியால் வீடு இடிந்து விழுந்து இறந்துவிட, அந்த நேரத்திலே பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு பெண்ணும், அந்தப் பெண்ணுக்கு அருகாமையிலே விதவையாக இருக்கின்ற இன்னொரு பெண்ணும் மிச்சப்படுகிறார்கள்.
அந்தப் பெண், குழந்தையும் பெற்று விடுகிறாள். குழந்தை பெற்ற அந்தப் பெண் பூகம்ப அதிர்ச்சியினால் ஏற்பட்ட வேதனையில் அவளும் இறந்து விடுகிறாள். இறந்து போகின்ற நேரத்தில் பக்கத்திலே இருக்கின்ற விதவைப் பெண்ணை - விசாலாட்சி என்கிற அந்தப் பெண்ணை பார்த்து அவள் சொல்லுகிறாள்:
