உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பாரதியும் புதுமைப் பெண்களும்

பகுதி 1 · 1 / 4

பாரதியும் புதுமைப் பெண்களும்

இந்தக் கல்லூரிக்கு நீங்கள் அழைக்கின்ற நேரமெல்லாம் வரக்கூடியவன் என்ற முறையில், இந்தத் தடவையும் உங்களுடைய அழைப்பைத் தட்டாமல் இந்த விழாவிலே கலந்துகொள்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன்.

பாரதி மன்றத்தினுடைய தொடக்க விழா - இந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டுமென்று நம்முடைய மாணவ நண்பர்கள் இந்தத் தொகுதியினுடைய சட்டப் பேரவை உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் வாயிலாக என்னை அணுகினார்கள்.

சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவரை எப்படியும் இது போன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணியோ என்னவோ அவரைப் பயன்படுத்தினார்கள் என்று கருதுகிறேன்.

அவரை அழைக்காமலேயே என்னிடத்தில் வந்து மாணவ நண்பர்கள் இந்த விழாவிலே கலந்து கொள்ள வருமாறு கேட்டிருந்தாலும் நான் வந்திருப்பேன். இதில் இருந்து நல்லதம்பியை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நீங்கள் முடிவு கட்டிக்கொள்ளக் கூடாது.

எனக்கும் உங்களுக்கும் இடையிலே உள்ள அன்புத் தொடர்பு அவ்வளவு ஆழமானது என்பதை எடுத்துக் காட்டத்தான் நான் இதைச் சொன்னேன்.

விழாவின் தலைவர் அவர்கள் தமிழிலே ஆற்றிய உரையை நாமெல்லாம் கேட்டோம். தமிழிலே உரையாற்ற வேண்டும் என்பதிலே அவருக்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, அதிலே அவருக்கு இருந்த ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன்.

ஒரு காலத்திலே தமிழர்கள் கூடியிருக்கின்ற அவையில் ஆங்கிலத்திலே பேசுவதுதான் தங்களுக்குப் பெருமை என்றும், அப்படி பேசினால்தான் தங்களைப் பெரியவர்கள் - திறமையானவர்கள் - செல்வாக்கு உள்ளவர்கள் என்று கருதுவார்கள் என்றும் எண்ணி இருந்த நிலை இருந்தது. அது இன்றைக்குத் தலைகீழாக மாறி என்னதான் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாலும் கூட தமிழ் மன்ற விழாக்களில் தமிழிலே பேசினால்தான் பெருமை என்கிற அளவிற்கு நிலைமை மாற்றம் அடைந்து இருக்கிறது என்றால், உங்களுடைய பாரதி மன்றத்தினுடைய பொன்மொழியாக நீங்கள் வெளியிட்டிருக்கின்ற அந்த வாசகங்கள்தான் அதற்குக் காரணம்.

“சிந்துகின்ற செங்குருதி செந்தமிழுக்கென்றால் - இந்தச் செந்தமிழ் நாடே சிவப்பாகட்டும்.”

என்கிற அந்த வரிகளை நீங்கள் இந்தத் தாளிலே குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

‘செந்தமிழ் நாடே சிவப்பாகட்டும்.’ எப்போது? ‘சிந்துகின்ற செங்குருதி செந்தமிழுக்கென்றால்.’

செந்தமிழுக்காக நம்முடைய செங்குருதியைச் சிந்துகின்றோம் என்றால் அந்த ஒரு நற்காரியத்திற்காக இந்த நாடே சிவப்பாக மாறட்டும் என்று சொல்லுகின்ற வீர உணர்வும், தியாக உள்ளமும் இன்றைக்கு இளைஞர்

களிடையே ஏற்பட்டு இருப்பதை எண்ணி எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

செந்தமிழைக் காப்பதற்காக - வளர்ப்பதற்காக - பிற மொழி ஆதிக்கத்திலே இருந்து மீட்பதற்காக - இந்த மாநிலத்தை சிவப்பாக ஆக்கியது மாத்திரமல்ல; தங்களுடைய தேக்கு மரத் தேகங்களையே கரிக்கட்டைகளாக ஆக்கிக் கொண்டு எட்டுப் பேர் தீக்குளித்துச் செத்தார்கள் என்றால் அப்படி மொழிக்காகச் செத்தது என்பது உலக வரலாற்றில் இந்தத் தமிழகத்திலே தானே தவிர வேறு எங்கும் இல்லை என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அப்படிப்பட்ட தமிழகத்து இளைஞர்களாகிய நீங்கள் கிறித்துவக் கல்லூரியிலே அமைத்து இருக்கின்ற இந்தப் பாரதி மன்றத்தினுடைய வீர வாசகமாக, ‘சிந்துகின்ற செங்குருதி செந்தமிழுக்கென்றால், - இந்தச் செந்தமிழ் நாடே சிவப்பாகட்டும்’ என்று கூறியிருக்கின்ற வாசகங்கள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

சிவப்பு எதை எதைக் குறிக்கிறது?

சிவப்பு புரட்சியைக் குறிக்கிறது. உண்மையான புரட்சியை.

சீனத்திலே ஆட்சி மாற்றத்தையும் கொடுத்து, கலாச்சார மறுமலர்ச்சியையும் சீனச் சிவப்புக் குறித்தது.

சோவியத் ரஷ்யாவிலே சிவப்பு, முதலாளி வர்க்கத்துடைய முதுகெலும்பை ஒடித்து, தொழிலாளி வர்க்கத்துடைய கொடியை முகில்முட்டப் பறக்கவிட்டது.

தமிழகத்திலே சிவப்பு - முழுமை பெறவில்லை; பாதி வளர்ச்சியிலேதான் இருக்கிறது. அது முழுமை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நாமெல்லாம் இருளை அகற்ற முனைந்து, தமிழகத்திலே இருளும் இருக்கிறது என்பதைக் காட்ட இருளையும், அதையும் மீறி சிவப்பு

வர வேண்டும் - முழுமையாக புரட்சி தோன்ற வேண்டும் என்பதற்காக அடையாளச் சின்னங்களாக வைத்திருக்கின்றோம்.

அப்படிப்பட்ட சிவப்பு வளர - ரத்தம் சிந்தவும் - குருதி கொட்டவும் தயாராக இருக்கிறோம் என்கிற வீரம் மிகுத்த இளைஞர்கள் இந்தக் கல்லூரியிலே இந்த மன்றத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதற் பதிப்பு : மே 2000