பாரதியார் விழா
பகுதி 2 · 2 / 3
இவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஆங்கிலத்தை அறவே எடுத்துவிட்டால் தமிழ்தான் இன்றைக்கு ஆட்சி மொழியாக இருக்க முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டிலே இருக்கும் பிள்ளைகள் பதவிகள் பெறவேண்டுமே யானால், உத்தியோகம் பெற வேண்டுமேயானால், ஆட்சி மொழியாக இந்தி மொழியை அல்லது நம்முடைய போராட்டத்தின் காரணமாக இருக்கின்ற ஆங்கில மொழியை இரண்டில் ஒன்றைக் கற்றுத் தீர வேண்டியிருக்கிறது.
எனவேதான் நாம் ஒரு மொழிக் கொள்கையை வகுத்திருக்கிறோம். இந்தியாவிலே அரசியல் சட்ட அட்டவணையிலே இருக்கின்ற ஆட்சி மொழிகள் அத்தனையும், தேசிய மொழிகள் அத்தனையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும்; எல்லா மொழிகளாலும் அந்தத் தகுதியைப் பெற முடியுமா என்று கேட்டால், எல்லா மொழிகளும் பிறகு ஆட்சி மொழிகளாகட்டும்; அதுவரையிலே எல்லாத் தகுதியையும் பெற்ற தமிழ் - ஆட்சி மொழியாகட்டும் என்று கூறுகிறோம்.
அப்படி ஒரு நிலையை அகில இந்திய அளவிலே - மத்திய அளவிலே ஏற்படுத்தினால் தான் இங்கே நாம் தமிழை இன்னும் வேகமாக ஆட்சி மொழியாக ஆக்குவதிலே பொருள் இருக்க முடியும். அர்த்தம் இருக்க முடியும்.
அதற்காக ஏதோ அந்தக் கொள்கையிலே நாம் விட்டுக் கொடுத்து விட்டோம் என்றோ, தமிழ் கட்டாயமாக ஆக்கப்படாமல் போய்விடும் என்றோ யாரும் கருத்து தேவையில்லை. தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் தமிழுக்காக என்றே ஒரு தனி அமைச்சகமே, தனி அமைச்சரே இன்றைக்கு
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த அமைச்சகத்தின் சார்பில் தமிழ் வளர்ச்சி, பண்பாடு இவைகள் மாத்திரமல்லாமல், தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கான அந்த சூழ்நிலையும் படிப்படியாக உறுதியாக இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை நான் திரு.மகாலிங்கம் அவர்களுடைய முறையீட்டிற்கு விளக்கமாக அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆண்டாள் பிரியதரிசினி ஒரு கோரிக்கை வைத்தார். ஆண்டாளின் கோரிக்கை அரங்கநாதனிடம் எடுபட்டதோ இல்லையோ, (கைத்தட்டல்) இங்கே எடுபடுகிறது அம்மணி என்று ஆண்டாளுக்குச் சொல்லிக் கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்) பாரதி விருது இளங்கவிஞர்களுக்கெல்லாம் தரப்பட வேண்டுமென்று கேட்டார். இங்கே ஆண்டாள் அவர்களும், மதிவண்ணன் அவர்களும் பாடிய கவிதைகளைக் கேட்டபோது ஆமாம், பாரதி விருது நிச்சயமாக அறிவிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.
(பலத்த கைத்தட்டல்) எனவே தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் மூலமாக அந்தப் பணியை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்கள் நிறைவேற்றுவதற்கு இந்த அவையிலேயே ஆணை பிறப்பிக்கிறேன் (பலத்த கைத்தட்டல்).
பாரதியைப் பற்றி திராவிட இயக்கத்திலே உள்ள நாங்கள் பேசுவது சில நேரத்திலே சில பேருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்டு. அப்படிப்பார்த்தால் கல்கி ராஜேந்திரன் இன்றைக்கு பாரதியை பாராட்டுகிறார் என்றால், அவருடைய தந்தையார் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு காலத்திலே பாரதியை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை கூட இருந்தது. அதுதான் பாரதிக்குப் பெருமை. ஏற்றுக் கொள்ளாதவர்கள்
எல்லாம் இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறார்களே, அதுதான் பாரதிக்குப் பெருமை. (கைத்தட்டல்).
திராவிடர் இயக்கம் ஒரு காலத்தில் பாரதியை ஏற்றுக் கொள்ளவில்லைதான். ஆனால், திராவிடர் இயக்கம் இன்றைக்கு பாரதியை ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு உங்கள் முன் வந்து நிற்கிறதென்றால் அது பாரதி பெற்ற பெருமை. பாரதியின் சிறப்பு. பாரதியின் பாட்டுக்குள்ள வலிமை; அவருடைய கருத்துக்கு உள்ள பலம் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் தீரவேண்டும்.
பாரதி கடவுள்களைப் பற்றி பாடினார். பராசக்தியைப் பற்றி, கண்ணனைப் பற்றிப் பாடினார் என்பதையெல்லாம் வைத்துக் கொண்டு திராவிடர் இயக்கம் அல்லது சுயமரியாதை இயக்கம் அவரைப் புறந்தள்ளிவிட முடியாது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எத்தனையோ சுயமரியாதைக் கருத்துக்களை பாடல்களாக தந்திருக்கிறார் என்றாலுங்கூட, அவர் தொடக்கத்திலே பாடியது சுப்பிரமணிய துதி அமுது தான். பாரதிதாசன் சுப்பிரமணிய துதி அமுது பாடினார் என்பதற்காக அவர் பாடியுள்ள பகுத்தறிவுக் கருத்துக்களை எல்லாம் தள்ளிவிட முடியாது. அவர் கதர்பாட்டு, ராட்டைப் பாட்டு பாடினார் என்பதற்காக அவருடைய புரட்சிக் கருத்துக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.
அதைப்போல பாரதியார் கடவுள் பாட்டுப் பாடினார். பராசக்தி பாட்டுப் பாடினார் என்றாலும், அதிலே பொதிந்து கிடக்கும் கருத்துக்களையெல்லாம் எண்ணிப் பார்த்த காரணத்தால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தன்னுடைய இயற்பெயரை பாரதிக்கு தாசன் என்று
மாற்றிக் கொண்ட புரட்சிக்கவிஞர், பாரதியைப் பற்றி பாடும் போது;
“மக்கள் தொகுதி எக்குறை யாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த தோனைச் சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம். ஜாரின் கொடுமை தாங்கா உருசியம் (ரஷ்யா) ஏறு லெனினை ஈன்றே தீரும்! செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே எல்லா மக்களும் என்ற பிரான்சில் குடிகள் குடிகட் கெனக் கவி குவிக்க விக்டர் யூகோ மேவினான் அன்றோ? தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமை திறவாமல் இருந்த நிலையில் தமிழகம், தமிழருக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.”
என்று பாடுகின்ற பாரதிதாசன் மேலும் சொல்கிறார்;
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேன், சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு! நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்! திறம்பாட வந்த மறவன்; புதிய
அறம்பாட வந்த அறிஞன்; நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்! என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்! தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்”
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாரதியின் புகழைப் பாடுகின்றார்.
பாரதியார் காலத்திலே இளமைக் காலந்தொட்டு அவரோடு பழகி வாழ்ந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் பாரதியைப் பற்றி எழுதிய கட்டுரையிலே குறிப்பிடுகிறார்:
“பாரதியார் தமது ஏழாவது வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விளையாட்டாக விரைந்து கவனம் செய்வதைக் கண்ட வித்துவான்கள் அவரது தந்தையாரைப் புகழ்ந்துரைப்பதை நான் நேரில் அறிவேன். அந்த வயதில் எளிதில் பாடல் எழுதி தமிழ் வாணர்கள் மெச்சும்படி காட்டிய திறமையை நேரில் கண்ட பொழுதுதான்; கேவலம் படிப்பினால் பாவன்மை வராது; கவிஞன், பிறப்பிலேயே அமைய வேண்டும் என்று அறிந்தேன்.”
என்று சோமசுந்தர பாரதியார் குறிப்பிடுகிறார்.
பாரதியின் பூர்வீகம் எட்டையபுரம் என்று, நாம் எட்டையபுரத்திலே உள்ள அவருடைய வீட்டைக் கூட அரசின் நினைவகமாக ஆக்கியிருக்கிறோம். ஆனால் அவருடைய பாட்டனார், தகப்பனார் பிறந்த ஊர் சீவலப்
பேரி, நெல்லை மாவட்டத்திலே உள்ள சீவலப்பேரி! பாரதி எப்படி வீரமாகப் பாடினான் என்பதற்கு சீவலப்பேரி என்ற அந்தப் பெயரை எண்ணிக் கொண்டாலே உங்களுக்கு அது புரியும். ஏதோ படத்தை வைத்துக் கொண்டு நான் இதைக் குறிப்பிடவில்லை. சீவலப்பேரி, புலித்தேவன் போன்ற மாபெரும் வீரர்கள் எல்லாம் உலவிய மண். அங்கே பிறந்த அவருடைய பாட்டனார், தகப்பனார் அதன் பிறகு அவர்கள் குடியேறிய இடம் எட்டையபுரம். எட்டைய புரத்திலே பாரதி வறுமையில் வாழினார்.
அவருடைய தந்தையார் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரு நல்ல பதவியிலே இருந்த போதிலும்கூட வறுமை அவர்களை எப்படியோ வந்து கவ்விக் கொண்டது. தந்தையாருடைய முதல் துணைவியார், பாரதியின் தாயார், லெட்சுமி அவர்கள் மறைந்து விடுகிறார்கள். பிறகு பாரதியின் தந்தை வள்ளியம்மை என்ற ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.
எனக்கு இதிலே ஒரு சிறிய சந்தேகம். அந்தநாள் சமூகத்திலே வள்ளியம்மை என்ற ஒரு பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது கூட பாரதியாரின் தந்தையே புரட்சிக்காரராக மாறி வள்ளியம்மை என்ற பெண்ணை மணந்து கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது.
இருந்தாலும் மிக வறுமையான ஒரு குடும்பத்தில்தான் தன் சிற்றன்னை வள்ளியம்மாள் அவர்களுடைய அன்பான அரவணைப்பில் வளர்ந்து சோமசுந்தர பாரதி போன்ற இளமைப் பருவத்து நண்பர்களையெல்லாம் பெற்று அவர் காசி இந்துக் கல்லூரியிலே படித்த காலத்தில் அங்குள்ள மாணவர்கள் எல்லாம் மீசை வளர்ப்பது பழக்கம். பாரதியார் மாணவனாக இருந்த
போது வாரந்தோறும் மீசையை மழித்துக் கொண்டு வகுப்புக்குச் செல்வார். அந்த மாணவர்கள் பாரதியைப் பார்த்துக் கேட்டார்கள். “நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டிலே யாராவது இறந்துவிட்டால் மீசையை மழித்துக் கொள்வோம். நீ வாரந்தோறும் மீசையை மழித்துக் கொள்கிறாயே, வாரந்தோறும் உங்கள் வீட்டில் யாராவது இறந்து விடுகிறார்களா?”
என்று கேட்டார்களாம். அதைக் கேட்ட பாரதி துணுக்குற்று அன்று முதல் வளர்த்த மீசைதான் அந்த அழகான மீசை. ஆணித்தரமான மீசை, அவருடைய கவிக்கு மேலும் வீரத்தை ஊட்டுகின்ற மீசை - பாரதியாருடைய அந்த மீசை என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்புக் கூறிக் கொண்டிருக்கிறது.
பாரதியார் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுடைய கவிதைகளை எல்லாம் முரசங்களாக யாத்துத் தந்தார் என்றாலுங்கூட அது இன்றைக்கு எங்கள் மீது தொடர்ந்து ஒரு பழி கூறப்பட்டு வருகிறதே, என்ன இருந்தாலும் கருணாநிதி தியாகிகளைப் பற்றி வரலாறு எழுதினாலும், தியாகிகளை மதித்தாலும் அவர்களுக்காக விழா எடுத்தாலும், அவர்களுக்காக நினைவுச் சின்னங்களை அமைத்தாலும் ஒரு காலத்திலே வெள்ளைக்காரர்களை வரவேற்றவர்கள்தானே என்ற ஒரு பழி எங்கள் மீது என்றைக்கும் உண்டு.
ஆனால் எங்களுடைய பாரம்பரிய இயக்கமான திராவிட இயக்கத்தினுடைய தொன்மையான இயக்கமான நீதிக்கட்சி - தென்னிந்திய நல உரிமைச்சங்கம் - ஜஸ்டிஸ் கட்சி - இந்தக் கட்சி வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் அவருடைய ஆட்சியையும் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டு எதிர்ப்பையும் காட்டிக் கொண்டு - அதே நேரத்தில் சமுதாய விடுதலைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருந்தது.
அதைத்தான் ம.பொ.சி. ‘விடுதலைப் போராட்டம்’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார். “நாங்கள் எல்லாம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்த போது திராவிடர் இயக்கம் சமுதாய விடுதலைக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு தேவைப்படுவது சமுதாய விடுதலை என்பதால், அதுவும் தேவைப்பட்ட ஒரு இயக்கமாக இருந்தது” என்று சொல்கிறார்.
